ஆன்மீகம்:- காவி ஆடையில் பாவி மனங்கள்

உலகத்தில் உள்ள அநியாயங்களை பார்த்து வெறுப்படையும் மனிதன் மனசாந்திக்காகவும், ஒழுக்கமான வாழ்க்கை முறைக்காகவும் கடைசி புகலிடமாக ஆன்மிகத்தை தேர்ந்தெடுக்கிறான். நியாய சபையின் முன் நீதி கேட்க சென்றவனை தலைகீழாக கட்டி தொங்க விட்டு சாட்டையால் அடிப்பது போல் பல நேரங்களில் அமைதிக்காக சரணடையும் ஆன்மிக புகலிடம் கொலைக்களமாக மட்டுமல்ல அருவறுப்பான உளுத்த மேடையாகவும் இருப்பதை பார்த்து வெறுத்து போய் எல்லாவற்றின் மீதும் அவநம்பிக்கை கொள்ள ஆரம்பிக்கிறான்.

கடவுள் இல்லை, கடவுளை வணங்காதே என்று சொல்லுபவனும், நம்புபவனும் குற்றவாளி அல்ல. அவன் பாவப்பட்டவனும் அல்ல. ஏனெனில் அவன் தனக்குள் இறைவன் இல்லை என்பதனை ஒளிவு மறைவு இன்றி ஒத்துக் கொள்கிறான். கடவுள் இருக்கிறார் என்று சொல்லிக் கொண்டு அவரை மாயவாத கவர்ச்சி பொருளாக பயன்படுத்தி தமக்குத் தெரிந்த மாஜாஜாலா வித்தைகளை காட்டி,மற்றவர்களை ஏமாற்றி பிழைப்பு நடத்துபவன் அயோக்கியன் மட்டுமல்ல வாழ தகுதியற்றவனாகவும் இருக்கிறான்.ஆன்மிகத்தின் பெயரால் நடக்கும் அராஜகம் அட்டுழியம் ஒவ்வொரு மனிதனின் மனசாட்சியையும் இரும்பாக்கி ஒட்டுமொத்த சமுதாயத்திற்கு சீர்கேட்டை ஏற்படுத்தி விடும்.

பிரம்மாண்டமான ஆலயம் கட்டுவதும்,பெரும் செலவில் திருவிழாக்கள் செய்வதும் ஆன்மீகத்தின் நோக்கமல்ல. வியாபார நோக்கங்கள் அவை கொண்டிருக்கும்போது, அவை இறை பணியும் ஆகாது.மக்கள் பணியே இறைபணியாகும் என்பதனை மறந்து மக்கள் சேவை மகேசன் சேவை என்றவாசகம் ஆலயங்களிலிருந்து தூக்கி எறியப்பட்டு பல்லாண்டுகளாகி விட்டது. கல்வி கிடைக்காதவர்க்கு கல்வியும் மருந்து தேவைப்படுவர்க்கு மருந்தும், விளக்கு இல்லாத ஊருக்கு விளக்கும் கொடுக்க வேண்டியது தான் இன்றைய காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.சமூக சேவகர்கள் என்று கூறிக் கொள்ளும் சாமியர்களின் பலர் கூட நூறு ரூபாய் சேவை செய்வதற்க்கு ஆயிரம் ரூபாய்க்கு விழா எடுக்கிறார்கள்.இதனால் வாங்கும் நன்கொடைகள் விமர்சனத்திற்கு உட்பட்டுவிடுகிறது.(தொடரும்.....)
- குருதேவசித்தனன்தாஜி

0 comments:

Post a Comment