நாம் தமிழர் -புலத்தின் புதினங்கள்:(02)

திரைகடல் ஓடித் திரவியம் தேடினோர் பலர்-அத்
திரவியத்தினால் திசைமாறி யழிந்தனர் சிலர்.
*உயிரினைக் காக்க அகதியாக ஓடி வந்தோர் பலர்,
உயர் மானத்தை இழந்து உருக்குலைந்தனர் சிலர்.
*பண்பாடு மறவாது பழமைகள் பேணியோர்  பலர்,
தன் போக்கில் வாழ்ந்து அடையாளம் இழந்தனர் சிலர்.
*வாழும் நிலத்தினில் பாழும்  வாழ்க்கை யிதுவென ஏசிக் கொண்டனர்  பலர்,நாளும்  பொழுதும்  நல்லவுயர் வசதி வாழ்வினிலே மகிழ்ந்து கொண்டனர் சிலர்.
*நட்புடன் நெருங்கி நற்ரோரில்   நனைந்து நலம் பெற்றனர் பலர்,
சினத்தினை நெஞ்சில் நிறுத்தி தம் மனத்தினை உடைத்து,
வாழ்வினை வெற்றிடம் ஆக்கினர் சிலர்.
*போட்டிகளினுடு     பொருளாதாரத்தை
பெருக்கிக் கொண்டனர் பலர் -அப்பொருளா தாரத்தினுடு  பொறாமைகளினால்  பொசுங்கிப்போனவர் சிலர்.
*உடன்பட்டு க்கடன் கொடுத்து தவித்தனர் பலர்,
கடன்பட்டுக் காலத்தைக் களிப்புடன்  கழித்தனர்  சிலர்.
*அடைவு வைத்துச் சீட்டுக் கட்டி அழிந்து போனவர் பலர்,
சீட்டுக் கடையை மூடி ஊர்க்காசுடனே   ஒளிந்து போனவர் சிலர்.
*புலம் பெயர்ந்து வந்து புதுமைகள் படைத்தனர் பலர்-அப்
புதுமைகளினால் புண்ணாகிப்போனவர் சிலர்.
*தங்க நகைகளுக்கு அடிமையான நங்கையர் பலர்-அந்
நகைகளைத் தாங்கும் தாங்கிகளாயினர் சிலர்.
*பெற்றவரோடு வாழ்ந்து பெருமை பெற்றனர்  பலர்-
அவர்களை முதியோர் இல்லத்துள் முடக்கி வைத்தனர் சிலர்.
*பிள்ளைகளைப்  பெற்று  பொத்தி  வளர்த்தனர்   பலர் -அப்
பிள்ளைகளாலேயே  உதறி  எறியப்பட்டனர்  சிலர்.
*துளித் துளியாய் துட்டினை சேர்த்து சொத்தினைச் சேர்த்தனர் பலர்-சேர்த்த பணத்தினை ஒருநாளில் கொண்டாட்டத்தில் கொட்டியே திண்டாட்டம் கொண்டனர் சிலர்.
*காப்புறுதி கட்டிக் களைத்தனர் பலர்-அதனையே
 பெரும் பணமாகப் பெற்று பிழைத்தனர் சிலர்.
*திறமைத் தனத்தால் வருமானத்திற் கேற்ப வீடு வாங்கி வசதியாக வாழ்ந்தவர் பலர்,பொறாமைத் தனத்தால் பெரும் வீடு வாங்கி வீதிக்கு  வந்தனர் சிலர்.
*வாகனம் ஓட வசதி பெற்றனர் பலர்-அதனை
வீட்டின் முன் நிறுத்தியே வடிவு பார்த்தனர் சிலர்.
*ஊருடன்    ஒற்றுமை உணர்ந்து ஒன்றுகூடி வாழ்ந்தனர் பலர்,
யாருடனும் தொடர்பிலாது என்றும் ஓடி மறைந்து தாழ்ந்தனர் சிலர்.
 *ஊருக்கு உழைப்பவராய் பணத்தினைச் சேர்த்து ப்பேரினைப் பெருக்கியவர் பலர்-அப்பணத்தை   தம் பையில் திணித்து தம் சொத்தினை பெருக்கியவர் சிலர். 
                                         கனடியப் புலத்திலிருந்து-செ.ம

1 comments:

  1. vinothiny pathmanathan dkTuesday, July 19, 2011

    superb. great job sir

    ReplyDelete