கனடாவிலிருந்து ஒரு கடிதம்

அன்புள்ள அப்புவுக்கு,
நான் நலம்.அதுபோல் உங்கள் சுகமும் ஆகுக!
அப்பு உங்கள் கடிதம் கிடைத்தது.உறவுகள் சுகம் யாவும் அறிந்தேன்.மகிழ்ச்சி.
அப்பு,நான் கனடாவில் வந்து இறங்கிய நாளிலிருந்து
 நடப்பவை எல்லாம் உங்களுக்கு அவ்வப்போது கடிதத்தில்
எழுதியுள்ளேன். ஆனால் இப்போது எனக்கு நடக்கக் கூடாத 
சம்பவ மொன்று நடந்துவிட்டது.அதனையும் இங்கு எழுதுகிறேன்.மனதினை திடப்படுத்திக் கொள்ளுங்கள்.
இரு வருடங்களுக்கு முன்னர் கனடாவில் புதியவனாக
அகதியாக காலடி வைத்தவேளையில்,என்னைப் போல் ஒரு கனடாவுக்குப் புதியவனான ராசாவை   நண்பனாக கிடைக்கப் பெற்றேன்.இருவரும் இணைந்தே சிறிய வீடு வாடகைக்கு
எடுத்து வசித்தோம்.நானும்,அவனும் கனடாவில் அகதிநிலை
கோரி விண்ணப்பித்துவிட்டு காத்திருப்பவர்கள் என்ற வகையில்   இருவரும் நல்ல நண்பர்களாகிவிட்டோம்.இந்நிலையில் நாம் இருவரும் வீட்டில் சந்திக்கும் நேரங்களில் எமது பழைய அனுபவங்களை பகிர்ந்து
கொள்வது வழக்கம். இந்தச் சந்தர்ப்பங்களில் எல்லாம்நான்
ஏற்கனவே கனடாவுக்கு வரமுதல் சில வருடங்கள்வசித்த என்
சுவீடன்  அனுபவங்களையும்  கூறுவதுண்டு.
நான் ஆவலுடனும் ஏக்கத்துடனும் காத்திருந்த எனது அகதி
 நிலைக் கோரிக்கைக்கான வழக்குக் குரிய அறிவித்தல் கடிதம் இரண்டு வருடத்தின் பின்னரே எனக்கு அனுப்பியிருந்தார்கள்.
நானுன் அத்தேதியில் அதற்குரிய பத்திரங்களுடன் எனக்கு நீதி கிடக்கவேணும் என்று கடவுளையும் வேண்டிக்கொண்டு
சென்றேன்.
அங்கே வழக்கு ஆரம்பமானதும் நான் இலங்கை அல்லாது வேறு நாட்டிலிருந்து வந்தவனா என விசாரித்தார்கள்.ஏனெனில் நான் அப்படி வந்திருந்தால் எனது அகதிநிலை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதால் இங்கு யாரும் அதனைக் கூறுவதில்லை.அனால் நான் எதிர்பாராதது நடந்துவிட்டது.
அவர்கள் என்னிடம் ஒரு கடிதத்தினை நீட்டினார்கள்.அதில் நான் என் நண்பனென நம்பி ராசாவுடன் அலட்டிய எனது சுவீடன் அனுபவங்களெல்லாம் அழகாக எழுதபட்டிருந்தன.எனவே எனது அகதிநிலைக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு விட்டது. ஏன்,இப்படி செய்தாய் என ராசாவிடம் கேட்டேன்.என்னிடம் கடனாகக் காசு கேட்டபோது,நான் அந்த உதவியினை செய்யவில்லையாம்.அந்த ஆத்திரத்தில் அப்படி செய்தானாம் என்று சர்வசாதாரணமாகச் சொல்லிக்கொண்டான்.நானும் அவனை விட்டு வீடு மாறிவிட்டேன்.
அப்பு,இதற்காக நீங்கள் கலங்கவேண்டாம்.இங்கு இப்படி எத்தனை,எத்தனையோ நடக்கின்றன.ஏனோ தெரியவில்லை எம்மினத்தார் சிலர் எமினத்திற்கே எதிரியாகவுள்ளனர்!
இப்படியான எம்மவர்களின் செயற்பாடுகளே வெவ்வேறு துறைகளிலும் எம்மினத்தாரை பின்நோக்கி வீழ்த்திக் கொண்டுள்ளது.இவற்றினை அவர்கள் என்றைக்கும் உணரப்போவதில்லை.
அப்பு,இந்தப்பிரச்சனையை  நான் இங்கே சமாளித்துக் கொள்கிறேன்.உங்கள் சுகத்தினையும்,தேவைகளையும் தொடர்ந்து எழுதுங்கள்.
                                                      வேறு விடயமின்று
.                                                                                         இப்படிக்கு
.                                                                           அன்புள்ளமகன்
.                                                                                         .கழுகன்.

0 comments:

Post a Comment