உணவின் புதினம்



கேரட்: இயற்கையாகவே இனிப்புத் தன்மை உடைய கேரட்டை விரும்பாதவர்கள் எவரும் இல்லை எனலாம். இந்த கேரட்டை உணவில் எடுத்துக் கொள்பவர்களுக்கு கொழுப்புத் தொல்லையும், ஆண்மையின்மை பிரச்சனையும் நெருங்கவே நெருங்காது என்பது முழுக்க முழுக்க உண்மை.
 கேரட்டை சமைத்து உண்பதை விட, பச்சையாக சாப்பிடும் போது அதில் பெரும்பான்மையான சத்துக்கள் விரயம் ஆகாமல் நம்மை வந்து சேரும்.
 வைட்டமின் "" சத்து நிறைந்துள்ள காரணத்தால், இவை ஆரோக்கியமான கண்களுக்கும், சருமத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகின்றது.
 இதில் நிறைந்துள்ள பீட்டா கரோட்டீன் கொழுப்பை கரைக்கும் வல்லமை பெற்றது. தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றலாம் என்பது அறிவியல் பூர்வமான உண்மை.
 இவை இரத்தத்தைச் சுத்தப்படுத்தி, விருத்தியும் அடையச் செய்கின்றது. மேலும், குடல் புண்கள் வராமல் தடுக்கிறது. வாய் துர்நாற்றத்தை தடுக்கிறது.
 கேரட் சாற்றுடன், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் பித்த கோளாறுகள் நீங்கும்.
 பாதி வேகவைத்த முட்டையுடன், கேரட் மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை சக்தி அதிகரிக்கும்.
கத்தரிக்காய்:பிஞ்சு கத்தரிக்காய் சமைப்பதற்கு நல்லது.
முற்றிய கத்தரிக்காய் அதிகம் சாப்பிட்டால் சொறி சிரங்கைக் கொண்டு வரும்.இதில் தசைக்கும் இரத்தத்திற்கும் உரம் தருகிற வைட்டமின்கள் சிறிதளவு உள்ளன. இதனால் வாய்வு, பித்தம், கபம் போகும். அதனால் தான் பத்தியத்துக்கும் இக்காயைப் பயன்படுத்தச் சொல்கிறார்கள். அம்மை நோயால் பாதிக்கப்படுபவர்கள் இதை உண்டு நல்ல பயன் பெறலாம்.
 அவரைக்காய் : இதிலும் பல வகைகள் உண்டு. வெள்ளை அவரைப் பிஞ்சை நோயாளிகள் உண்ணும் காலத்தில் பத்திய உணவாக உண்ணலாம். இதைச் சமைத்து உண்டால் உடலை உரமாக்கும்; உணர்ச்சியைப் பெருக்கும். இது உடல் உஷ்ணம் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது மிகவும் ஏற்றது.
 வெண்டைக்காய் : இதன் சுபாவம் குளிர்ச்சி. இதனுடன் சீரகம் சேர்த்து சமைப்பது நல்லது. இது வறண்ட குடலைப் பதப்படுத்தும்; இதில் வைட்டமின்சி , ‘பி உயிர்ச்சத்துக்கள் உள்ளன. இதை உண்டுவந்தால் சிறுநீர் பெருகும். நாள்பட்ட கழிச்சல் நீங்கும். சூட்டைத் தணிக்கும். உஷ்ண இருமலைக் குணமாக்கும்.
 வெண்டைக்காய் உணவு விந்துவை கட்டிப் போகத்தின் உற்சாகத்தை உண்டாக்கும். நல்ல வெண்டைப் பிஞ்சுகள் இரண்டொன்றை பச்சையாகவே தினந்தோறும் வெறும் வயிற்றில் உண்டு வந்தால், மருந்து இல்லாமலேயே இந்திரிய நஷ்டம் சரிப்பட்டு விடும். உடம்பில் வாயுமிக்கவர்கள் இதை அதிகமாக உண்டால் வயிற்று வலியை ஏற்படுத்தி விடும்.
 புடலங்காய் :இது சற்று நீரோட்டமுள்ள காய். சூடு உடம்புக்கு ஏற்றது. உடம்பின் அழலையைப் போக்கும்; தேகம் தழைக்கும். இது எளிதில் ஜீரணமாகி நல்ல பசியை உண்டாக்கும். வாத, பித்த கபங்களால் ஏற்படும் திரிதோஷத்தைப் போக்கும். வயிற்றுப் பொருமல், வயிற்றுப் பூச்சி இவற்றை போக்கும். இதை உண்டால் உணர்ச்சி பெருகும்.
 கொத்தவரங்காய்: இது சிறுநீரைப் பெருக்கும். இதன் சுபாவம் சூடு. அதனால், இதைத் தொடர்ந்தாற்போல் உண்டால் சீதம் போகத் தொடங்கிவிடும். இது பித்தவாதக் கடுப்பு, கபம் இவற்றை உண்டாக்கும். அதனால் இது பத்தியத்திற்கு உதவாது.
 இதன் கெட்ட குணங்களைப் போக்க இத்துடன் தேங்காய், பருப்பு, இஞ்சி, சீரகம் இவற்றைச் சேர்த்து சமைக்க வேண்டும்.
 வாழைத்தண்டு : இது பித்தத்தைத் தணிக்கக் கூடியது. இதன் சுபாவம் சூடு என்றாலும் சிறு நீரைப் பெருக்கும். வாழைத்தண்டுப் பச்சடி உடம்பின் உஷ்ணத்தைப் போக்கும். வாத பித்தம், உஷ்ணம் முதலியவற்றைத் தணிக்கும், கபத்தை நீக்கும். இதை உண்டால், குடலில் சிக்கிய மயிர், தோல், நஞ்சு இவற்றை நீக்கும்.
 வாரத்திற்கு ஒரு முறையேனும் இதை உண்ணுவது நலம்.
 தேங்காய் : இது சமையலுக்கு மிகவும் பயன்படுகிறது. இதில், ‘பி வைட்டமின்கள் சிறிதளவு உண்டு. இது குடல் புண்ணையும் ஆற்றும். இதனால் தாது விளையும். தேங்காய் வழுக்கையில் கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் மூலச் சூட்டை மாற்றும்.
 சுரைக்காய்: இது உடல் சூட்டைத் தணிக்கும். இதன் சுபாவம் குளிர்ச்சி. இது சிறுநீரைப் பெருக்கும். உடலை உரமாக்கும். மலச் சுத்தியாகும். தாகத்தை அடக்க வல்லது.
 ஆனால் இது பித்த வாயுவை உண்டு பண்ணும். கடுஞ்சுரைக்காய் என்று ஒரு வகை உண்டு. இது குளுமை செய்வது. தாகத்தை அடக்கும். சீதளத்தையும், பித்தத்தையும் போக்கும். ஆனால் அஜீரணத்தை உண்டாக்கும். இதன் விதைகள் மேகத்தைப் போக்கும். வீரிய விருத்தியை ஏற்படுத்தும். இவ்விதைகளை சர்க்கரையுடன் சேர்த்து சில நாட்கள் உண்டு வந்தால் ஆண்மையைப்(இழந்தவர்கள்) பெறுவார்கள்.

0 comments:

Post a Comment