க..கவி...கவிதை


எப்படி நினைத்தேன்! ------>> இப்படி ஆனேன்!
(ஒரு நகைச்சுவைக் குதம்பம்)


கதிரோன் வருமுன் குறும் துயில் நீங்கி
மஞ்சள் கமழ தலைமேல் குளித்து
பலமுழக் கூந்தல் அழகாய் முடிந்து
நறுமண புஷ்பம் முடிமேல் சூட்டி
நீள்வர்ணச் சேலையில் மேனியைப் புகுத்தி
அழகு மயிலின் நளினமாய் அசைந்து
மங்கள சாந்துத் திலகமும் இட்டு
மின்னலோ என்னும் இடையையும் கொண்டு
அன்னமும் வெட்கும் நடையையும் கொண்டு
மெட்டிகள் ஓசை செவிப்புலன் புகவும்
அச்சம் கொண்ட குறு குறு விழியும்
காண்போர் வியக்கும் பெரியோர் பணிவும்
பிறர்பால் தோன்றும் பாங்கான நாணமும்
முழுமதி தோற்கும் வதனமும் கொண்டு
இல்லம் பெருக்கி நன்னீர் தெளித்து
பலவர்ண ஜால கோலங்கள் போட்டு
இறையைத் தொழுது மந்திரம் செபித்து
கண கணீர் எனவே மணியோசை எழுப்பி
நற்பல தினங்களில் விரதமும் காத்து
நித்தம் வணங்கும் இறைவனை வேண்டி
தீபமும் ஏற்றி கற்பூரம் காட்டி
புக்ககம் அக்ககம் சுபீட்சம் திகழ
வாழ்க்கைத் துணையின் ஆயுளை வேண்டி
காலம் தோறும் சௌக்கியம் கேட்டு
தன்னையே சூழ்ந்த பெரியோர் சிறியோர்
அவர்மனம் குளிர விருந்தும் ஓம்பி
பிறர் உயர்வதனால் தானும் மகிழ்ந்து
தன மக்கள் போல பிறர் தனை மதித்து
ஆணுக்கு என்ற வாழ்வுத் துணையாய்
அறிவுரை பகரும் மதி மந்திரியாய்
துன்பம் வருமுன் காக்கும் காவலனாய்
பாசம் கொட்டும் உற்ற தாயாய்
மக்கள் கல்வியில் உயர்ந்த ஆசானாய்
சிக்கனமாகச் சௌகரியம் காட்டும்
சொப்பன சுந்தரி சோபன நாயகி
புன்சிரிப்புடனும் மென் சுவையுடனும்
அன்புடன் கோப்பி கொண்டுவந்தருகில்
என்துயில் எழுப்பப் பாதம் வணங்கும்
இலக்கியக் காதலின் மோகன சௌந்தரி
அக்கணம் கிடைக்கும் என்றிருந்தேனே.


ஆனால்......ஆனால்......
.


இரவும் பகலும் அயராது தூங்கும்
கரவும் குறையும் நித்தம் சாடும்
அரைகுறை சீவிய கட்டை முடியும்
குளியா உடம்பில் வாசனைப் பொருளும்
அரையோ குறையோ குட்டை உடையும்
வெடிக்காக் குறையாய் இருக்கும் சட்டையும்
புரியா மொழியில் அரை குறைக் கதையும்
விளங்காப் பேய் போல் மனம் போன போக்கும்
ஆந்தையாட்டம் பெருவிழிக் கண்ணும்
சாந்தமே இல்லா பொட்டில்லா முகமும்
கடுக்காய் வெடிக்கும் மூஞ்சுறு முகமும்
சினத்தால் எரிக்கும் செந்நிற முழியும்
ஆன மட்டும் குப்பைகள் தின்று
பேழை வயிறும் பெரும் தொடை நடையும்
என் நபர் கண்டும் அச்சம் இன்றும்
எப்பொருள் கொண்டும் நாணம் அற்றும்
பெரியோர் சொல்லும் மதிப்பது மறந்து
எவர் முன்னாலும் பெரும் குரல் கொடுத்து
பெற்றோர் இருந்தும் பிற மனை அனுப்பி
முற்றாய் முழுதாய் உறவினைத் துறந்து
இறைவனை மறந்து முறைதனை இழந்து
பூசைகள் ஆரங்கள் யாவையும் விடுத்து
தனது சுகமே பெரிதெனக் கருதி
ஆனமட்டும் அங்கிங் அலைந்து
பிறர் உயர்வு கண்டு மன அழல் கொண்டு
எம்நிலை யாவும் தாள்வாய் நினைத்து
மற்றோர் மனை போல் பெரும் மனை கோரி
நாளொன்றுக்கு பட்டு ஒன்று உடுத்து
மோட்டார் ரதம் படகு போல் வேண்டி
கழுத்தோ தாங்கா நகைச் சுமை மாட்டி
அடுத்தார் பிள்ளை படிப்பது எல்லாம்
பந்தோ எதுவோ ஆடுவதெல்லாம்
உடம்பைச் சுற்றி சுழல்வது எல்லாம்
குஷ்தியிட்டு அடிப்பது எல்லாம்
தனது பிள்ளை செய்யலே என்று
மாரடித்துப் பெரும் குரல் இட்டு
சுத்தித் திரிந்து பூராயம் பேசி
சண்டையிட்டு அவலப்பட்டு
சின்னத்திரையின் வில்லத்தனங்கள்
அத்தனை குணமும் பெண்குணம் என்று
சுற்றார் மாற்றார் இல்லம் விரைந்து
குத்திக் குதறிக் சாணக்கியம் செய்து
பொல்லா இரவில் மனையுள் புகுந்து
நல்லாய்த் தூங்கும் கணவன் தலை மேல்
சொல்லால் உமிழ்ந்து மனச் சுமை அழுத்தும்
பொல்லா மனைவியை அடைந்தனன் நானே!
ஐயகோ----

4 comments:

 1. THIS POIM IS WRITTEN BY-
  SELVATHTHURAI,SANTHIRAGASAN
  ...........THEEBAM.COM

  ReplyDelete
 2. அருமை,அருமை.

  ReplyDelete
 3. Looks like panacea for very issues. Keep it up

  S.Siva

  ReplyDelete
 4. நானும் சொல்லத்தான் நினைக்கிறேன்.என்னிடம் தமிழ் இல்லைதான் பொழிந்திட !

  ReplyDelete