சிறையில்....


சிறைப்பட்டிருக்கும் இந்தியத் தெய்வங்கள்
புராண வரலாற்றில் அசுரர்கள் தாம் பெற்ற வரங்களின் மூலம் பலமுறை பலமுள்ளவர்களாக மாறித் தேவர்களை எல்லாம் சிறைப்படுத்திச் சித்திரவதை செய்து வந்ததாகவும், அவ்வப்போது சிவன் மிகப்பலம் கொண்ட தெய்வங்களைப் படைத்தும், விஷ்ணு பல்வேறு அவதாரங்களை எடுத்தும் அவ்வசுரர்களை வென்று தேவர்களை மீட்டனர் என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால், தற்போது இந்தியாவில் உள்ள அதிகமான கோவில்களில் உள்ள தெய்வங்கள் மனிதனால் சிறை வைக்கப்பட்டுள்ளனர். பார்த்துப் பரிதாபப் படவேண்டி இருக்கின்றது. கோவிலின் வெளியில் நின்று பார்த்தால் மூலஸ்தானம் தெரியாதபடி, பல மறைப்புகளும், இரும்புக் கம்பித் தடைகள் குறுக்கும் நெறுக்குமாக  அமைக்கப்பட்டு பகதர்கள் பார்வையிலிருந்து தெய்வம் மறைக்கப்பட்டு இருக்கிறார்.
ஆகம விதிப்படி, பக்தர்கள் கோவிலில் முதலில் கோபுரத்தை வணங்கிப் பின்னர் பலிபீடத்துக்கு முன் வீழ்ந்து வணகியபின், விநாயகரைத் துதித்து திருக்கோவில் திருச்சுற்றினை 3 , 5 , 7 அல்லது  9  முறை வலம்வர  வேண்டும். ஆனால், இந்தக் கோவில்களில் பலிபீடத்துக்கு முன்பாகவே தடுப்புக் கம்பிகளால் மறிக்கப்பட்டு, அடைக்கப்பட்டுள்ள பாதைகளினூடாக இறைவனைத் தரிசிக்க வருவோர் செலுத்தப்பட்டு, பக்கக் கதவுகளால் அவரவர் கொடுத்த பணத்திற்கேற்ப மகா மண்டபத்தின் உள்ளேயோ அல்லது அர்த்த மணடபத்தின் உள்ளேயோ அனுப்பப்பட்டு, அரை வினாடியே கடவுளைக் காட்டி, அடுத்த பக்கத்திற்கு விரட்டப்பட்டு இன்னொருதிசையில் வெளியே தள்ளப்படுகிறார்கள். இன்னும் கூடுதல் பணம் செலுத்தியவர்களைக் கருவறை அல்லது அந்தராளம் வரைக்கும் கொண்டு செல்கிறார்கள். - இன்னும் அதிகப் பணம் கொடுத்தால் கடவுளையே தூக்கித் தந்துவிடுவார்களோ என்னவோ!- சகலரும் பக்கத்தால் நுழைந்து பின்புறத்தால் வெளியேற்றப் படுவதாலும், உள் வீதிக்குக் குறுக்கே அடைப்புகள், மறைப்புகள் போடப்பட்டு இருப்பதாலும் வீதியைச் சுற்றுவது என்பது முடியாத விடயம். அத்தோடு, பலிபீடத்திற்கும் தெய்வத்திற்கும் குறுக்கே நடப்பது மகா குற்றம். ஆனால், இந்த விதியினை எல்லோருமே மீறிச்செல்ல உந்தப்படுகிறார்கள்.
இவ்வாறு கடவுளை ஒழித்து வைத்து, காட்சிப்பொருளாக்கி, அவரைத் தரிசிப்பதை ஒரு வியாபாரமாக்கி, வேண்டி வரும் பக்தர்களின் நம்பிக்கையை ஒரு மூலதனமாக்கி, ஒருவரின் செல்வநிலைக்குத் தக்கதான வழிபாட்டு முறைகளுடன், பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன்னேயே இக்கோவில்கள் நடத்தப்படுகின்றன.
கடவுள்மார் மனிதனால் இப்படிச் சிறை வைக்கப்பட்டிருக்கின்ற காரணத்தாலேயோ என்னவோ நாட்டில் பஞ்சம், வறுமை, பட்டினி எல்லாம் தலை விரித்தாடுகின்றது என்றும் கூறலாம்! இத்தெய்வங்களைச்  சிறைமீட்க வேறு எந்தத் தெய்வத்தை வணங்கலாம்? ஒன்றும் புரியவில்லை!
ஆக்கம்:-செல்வத்துரை சந்திரகாசன்

0 comments:

Post a Comment