விளையாட்டு


198 ஓட்டங்களிற்கு அவுஸ்திரேலியாவிடம் சுருண்டது இலங்கை
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான முதலாவது ஒரு நாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 107 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 305 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
 பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 40 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 198 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது.
 இதன்படி அவுஸ்திரேலிய அணி 107 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
 போட்டியின் ஆட்ட நாயகனான 112 ஓட்டங்களைப் பெற்ற அவுஸ்திரேலிய அணியின் அறிமுக வீரர் ஹூகேஷ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
 இலங்கை அணி சார்பாக துடுப்பாட்டத்தில் தினேஷ் சந்திமால் 73 ஓட்டங்களையும், தில்ஷான் 51 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். ஏனைய வீரர்கள் யாரும் பிரகாசிக்கவில்லை. 
சறுக்கியது இந்திய அணி! *இங்கிலாந்து வெற்றி துவக்கம்
 ராஜ்கோட்: ராஜ்கோட்டில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்திடம் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. பவுலர்கள் ரன்களை வாரிவழங்கி ஏமாற்றினர். கடைசி ஓவர் வரை போராடியும் ஏமாற்றமே மிஞ்சியது.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி, ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நேற்று நடந்தது. "டாஸ்' வென்ற இங்கிலாந்து கேப்டன் அலெஸ்டர் குக், "பேட்டிங்' தேர்வு செய்தார்.
பெல் அபாரம்:
இங்கிலாந்து அணிக்கு அலெஸ்டர் குக், இயான் பெல் ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. இந்திய பந்துவீச்சை பதம்பார்த்த இவர்கள், பவுண்டரிகளாக விளாசினர். பொறுப்பாக ஆடிய குக், ஒருநாள் அரங்கில் தனது 14வது அரைசதத்தை பூர்த்தி செய்தார். முதல் விக்கெட்டுக்கு 158 ரன்கள் சேர்த்த போது, ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்ட பெல் (85 ரன்கள், ஒரு சிக்சர், 9 பவுண்டரி), ரகானேவின் துல்லிய "த்ரோ'வில் "ரன்-அவுட்' ஆனார். சிறிது நேரத்தில் ரெய்னா "சுழலில்' குக் (75) சிக்கினார்.
பீட்டர்சன் நம்பிக்கை:
பின் இணைந்த கெவின் பீட்டர்சன், இயான் மார்கன் ஜோடி ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டது. இஷாந்த் பந்தில் இரண்டு பவுண்டரி அடித்த பீட்டர்சன், அஷ்வின் "சுழலில்' ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார். மூன்றாவது விக்கெட்டுக்கு 76 ரன்கள் சேர்த்த போது, டிண்டா வேகத்தில் மார்கன் (41) அவுட்டானார். சிக்சருக்கு ஆசைப்பட்ட பீட்டர்சன் (44), டிண்டாவிடம் சரணடைந்தார்.
இரு ஓவரில் 38 ரன்:
கடைசி நேரத்தில் வந்த கீஸ்வெட்டர், சமித் படேல் அதிரடியாக ஆடினர். இந்திய பந்துவீச்சை வெளுத்து வாங்கிய இவர்கள், இஷாந்த் வீசிய 49வது ஓவரில் 20 ரன்கள் சேர்த்தனர். பின் புவனேஷ் குமார் வீசிய 50வது ஓவரில் 18 ரன்கள் எடுத்தனர். இந்த இரு ஓவரில் மட்டும் 38 ரன்கள் எடுக்கப்பட்டன. இங்கிலாந்து அணி 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 325 ரன்கள் குவித்தது. கீஸ்வெட்டர் (24), சமித் படேல் (44) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் டிண்டா 2, ரெய்னா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
நல்ல துவக்கம்:
கடின இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு அஜின்கியா ரகானே, கவுதம் காம்பிர் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. ஸ்டீவன் பின் ஓவரில் "ஹாட்ரிக்' பவுண்டரி அடித்த காம்பிர் அரைசதம் அடித்தார். முதல் விக்கெட்டுக்கு 96 ரன்கள் சேர்த்த போது ரகானே (47) அவுட்டானார். காம்பிர் 52 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த விராத் கோஹ்லி (15) ஏமாற்றினார்.
யுவராஜ் கலக்கல்:
பின் இணைந்த யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா ஜோடி அசத்தியது. பிரஸ்னன் ஓவரில் சிக்சர் அடித்த யுவராஜ் சிங், டெர்ன்பக், ஜோ ரூட் பந்தில் பவுண்டரிகளாக விளாசினார். அபாரமாக ஆடிய இவர் அரைசதம் அடித்தார். நான்காவது விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்த போது யுவராஜ் (61) அவுட்டானார். கேப்டன் தோனியுடன் இணைந்த ரெய்னா தன்பங்கிற்கு அரைசதம் அடித்தார். இவர், 50 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.
தோனி போராட்டம்:
தனிநபராக போராடிய தோனி, சிக்சர் மழை பொழிந்தார். டிரட்வெட் (1 சிக்சர்), சமித் படேல் (2), பிரஸ்னன் (1) ஆகியோரது பந்துவீச்சை சிக்சருக்கு பறக்கவிட்ட தோனி (32) முக்கியமான நேரத்தில் வெளியேற, ஆட்டத்தில் திருப்பம் ஏற்பட்டது. அடுத்து வந்த ரவிந்திர ஜடேஜா (7), அஷ்வின் (13), டிண்டா (3) நிலைக்கவில்லை. கடைசி ஓவரில் 18 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 8 ரன்கள் மட்டுமே எடுத்த இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 316 ரன்கள் எடுத்து, தோல்வி அடைந்தது.
புவனேஷ்வர் குமார் (20), இஷாந்த் சர்மா (7) அவுட்டாகாமல் இருந்தனர்.
இங்கிலாந்து சார்பில் 4 விக்கெட் கைப்பற்றிய டிரட்வெல், ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி, தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இரண்டாவது ஒருநாள் போட்டி கொச்சியில் வரும் 15ம் தேதி நடக்க உள்ளது.
150
நேற்று அதிரடியாக 4 சிக்சர் விளாசிய இந்திய கேப்டன் தோனி, ஒருநாள் போட்டி வரலாற்றில், தனது 150வது சிக்சரை பதிவு செய்தார். இதுவரை இவர், 215 போட்டியில் 150 "சிக்சர்' அடித்துள்ளார்.
34
சிறந்த துவக்கம் அளித்த இந்தியாவின் கவுதம் காம்பிர், ஒருநாள் போட்டியில் தனது 34வது அரைசதத்தை பதிவு செய்தார். இதுவரை இவர், 143 போட்டியில் 11 சதம், 34 அரைசதம் உட்பட 5163 ரன்கள் எடுத்துள்ளார்.
25
பொறுப்பாக ஆடிய இந்தியாவின் சுரேஷ் ரெய்னா, ஒருநாள் போட்டி அரங்கில் தனது 25வது அரைசதத்தை பூர்த்தி செய்தார். இதுவரை இவர், 155 போட்டியில் 3 சதம், 25 அரைசதம் உட்பட 3841 ரன்கள் எடுத்துள்ளார்.
50
அபாரமாக ஆடிய இந்தியாவின் யுவராஜ் சிங், ஒருநாள் போட்டியில் தனது 50வது அரைசதத்தை பதிவு செய்தார். இதுவரை இவர், 278 போட்டியில் 13 சதம், 50 அரைசதம் உட்பட 8146 ரன்கள் எடுத்துள்ளார்.
தோனி செய்தது சரியா
சமீபகாலமாக தோனியின் முடிவுகள் எல்லாமே தவறாகிறது. புஜாராவுக்கு வாய்ப்பு அளிக்காமல், ரவிந்திர ஜடேஜாவை நம்பி இறங்கினார். இவர் வழக்கம் போல பேட்டிங்கில் சொதப்பினார்.
* இங்கிலாந்துக்கு எதிரான இரண்டு "டுவென்டி-20' போட்டிகளில், இந்தியா சார்பில் அதிக விக்கெட் (6) வீழ்த்தியவர் யுவராஜ் சிங். இவருக்கு நேற்று ஒரு ஓவர் கூட பவுலிங் செய்ய வாய்ப்பு தரவில்லை.
 முதல் வெற்றி
இங்கிலாந்து அணி கடைசியாக 2006, ஏப்., 12ல் ஜாம்ஷெட்பூரில் நடந்த போட்டியில் இந்தியாவை வென்றது. இதன் பின் இங்கு பங்கேற்ற 13 போட்டிகளில் 12ல் தோற்றது. 2011 உலக கோப்பை தொடரில் ஒரு போட்டி "டை' ஆனது.
நீண்ட இடைவெளிக்குப் பின் (7 ஆண்டுகள்) நேற்று இங்கிலாந்து அணி, இந்திய மண்ணில் முதன்முறையாக ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றது

0 comments:

Post a Comment