மதி இறுக்கம் (Autism)


 இக்காலத்தில் சில குழந்தைகள் ஆடிசம் எனப்படும் மதி இறுக்க நோயால் பீடிக்கப்பட்டு இருப்பது அதிகமாகவே காணப்படுகிறது. இதனால் தாங்க இயலாத துன்பத்தில் வாழும் பெற்றோர்களை நினைத்தால் வேதனை தருகிறது.
இந்த மதி இறுக்கம் என்றால் என்ன?
 குழந்தைகளின் மூளை நரம்புகளில் ஏற்படும் பலவிதமான, புரிந்து கொள்ள முடியாத, சிக்கலான, அசாதரணமான, ஒழுங்கற்ற அமைப்புகளினால், கிடைக்கும் சமிக்ஞைகள் மிகவும் குளறுபடியாகி, மதியைக் குழப்பிக் கெடுத்துக் கலங்கச் செய்வதனால் விளைவதுதான் மதி இறுக்க நோய்
இந்நோய் இருந்தால் குழந்தைகளின் 2-3 வயதிலேயே தெரியத் தொடக்கிவிடும். அவர்களின் மூளை விடயங்களைப் பகுத்தறியும் ஆற்றல் குறைபாடு தோன்றத் தொடங்கும்இதனால் குழந்தைகளுக்குச் சமூக விடயங்களில் அக்கறையீனம், மற்றயவர்களுடன் கருத்துப் பரிமாறல்களில் சங்கடம், கட்டுப்படுத்தபட்ட செயல்திறன்கள், ஒன்றையே திரும்பத் திரும்பச் செய்யும் சுபாவம் என்பன ஏற்படும். சிலர் தம் பெயர்தானும் அறியாதிருப்பர். பிறரை நேர்கொண்டு பாரார். சமூக நன்மை, தீமைகள் பற்றி அறியார். சந்தோச, துக்க வேறுபாடுகள் அறியார். அதட்டல், கொஞ்சுதல் உணர்வு வித்தியாசங்கள் புரியார். மாற்றார் உணர்வுகளைப் அறிய மாட்டார். ஒரு சிலருக்கு வலிப்பு வியாதியும் இடைக்கிடை வரலாம்.
இது வலுவாகப் பரம்பரை மரபணு மூலம் வருவது என்று காணப்பட்டாலும், அதைவிட பிறப்பின்போது நடந்த குறைகள், அளவுக்கு மீறிய தாது பொருட்களின் சேர்க்கை, கிருமி நாசினிகளின் சுவாசம், நோய்த்தடுப்பு மருந்துகளின் ஒவ்வாமை என வேறுபல காரணிகளாலும் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் தர்க்கிக்கிறார்கள்.
 இந்நோய் வந்தால் தற்போதைய மருத்துவ அறிவோடு முற்றாகக் குணப்படுத்துவது சிரமமான காரியமாய் இருந்தாலும், வைத்தியர்களின் கண்காணிப்பில் வழங்கக்கூடிய சில வகையான உட்ற்சிகிச்சை, மனோவைத்தியம், உணவு மாற்றம், நடத்தைமுறைப் பரிபாலனம், மன அழுத்த, வலிப்பு நிவாரண மாத்திரைகள், குணவியல் சீர்திருத்தம் என்பன மூலமாகக் குறிப்பிடத்தக்க அளவு நிவாரணம் கிடைப்பது கண்டுகொள்ளப்பட்டுள்ளது.
எதுவும் வருமுன் காப்பது எப்பவுமே சுலபமான வழி என்பதால், குழந்தையின் நடவடிக்கைகளைப் பிறந்ததில் இருந்து கண்காணிப்பது மிகவும் அவசியமாகும். இக்கண்காணிப்பில், பின்வரும் செய்கைகளில் ஏதாவது ஒன்று தோன்றுகிறதா என்று கவனிக்க வேண்டும்
* சக வயதினருடன் நட்புக்கொள்ள இயலாமை.
* பேச்சு வராது கஷ்டப் படுத்தல்.
* பிறருடன் கதையைத் தொடங்க, தொடர, கதைக்க முடியாமை.
* விளையாட்டுப் பொருட்களில் கற்பனைத் திறனைக் காட்டாமை.
* சமூக விடயங்களில் அக்கறை கொள்ளாமை.
* ஒரே விடயத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லல்/செய்தல்.
* கருத்தற்ற சொற்களைப் பாவித்துக் கதைத்தல்.
* விடயமே இல்லாத ஒன்றைப் பெரிது படுத்திக் கதைத்தல்.
* ஒன்றும் இல்லாத ஒன்றை முக்கியம் கொடுத்து நோக்கல்.
* ஒரே பொருளோடு/விடயத்தோடு மிகவும் மும்முரமாய் இருத்தல்.
* ஒரு வழிமுறை சொல்லிக் கொடுத்தால் அதைப் பின்பற்ற இயலாமை.
* தேவையற்ற விடயத்தில் அதிக சந்தோசம்/ஆத்திரம் வருதல்.
இங்கே கூறப்பட்ட அறிகுறிகள் ஏதாவது காணப்பட்டால் உடனேயே மருத்துவ உதவியை நாடவேண்டும். மருத்துவர்கள் இவர்களுக்காக மிகவும் கவனமாகக் கட்டமைப்புச் செய்யப்பட்ட திறமைமிகு தீவிர பயிற்சி மூலம், குழந்தைகளுக்குச் சமூக ஈடுபாடு மற்றும் பேசும் திறன் ஆற்றல்களை, அவரவர் நடத்தைகளைத்  தனித்தனி ஆராய்ந்து அதற்கேற்ப அளித்து  ஓரளவுக்குக் முன்னேற்றத்தைக் கொணருவார்கள். அத்தோடு, அவர்களுடன் பழகும் குடும்பத்தினருக்குத் தேவையான அறிவுரைகள் கூறும் வகுப்புகளையும் நடத்தி உதவுவார்கள்.
இந்நோய் மூளை நரம்புகளின் பல பாகங்களிலும் ஏற்படும் சிக்கலான குறைபாடுகள் காரணமாக் ஏற்படுவதால், இக்குறைபாடுகள் எல்லாவற்றையும் பகுத்தறிந்து முற்றாகச் சிகிச்சை வழங்கும் அளவுக்கு இன்னமும் மருத்துவ ஆராய்ச்சி எட்டவில்லை. வரும் 50-100 வருடங்களுக்குள் கட்டாயம் இந்தக் கொடிய நோய்தனை ஒழிக்க ஒரு வழி  பிறக்கும் என்று நம்பலாம்.
- தொகுத்தவர்: செல்வத்துரை சந்திரகாசன்

1 comments:

  1. கந்தையா தில்லைவிநாயகலிங்கம்Sunday, April 14, 2013

    மதி இறுக்க நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பேசுபவர்களின் கண்களை விட உதட்டு அசைவை கருத்தூன்றி பார்ப்பதாக இப்போது பொது உளவியல் அறிஞர்கள் கண்டு பிடித்துள்ளார்கள். பிறந்த ஆரோக்கியமான குழந்தை சில வாரங்களில் மற்றவர்களின் கண்களைப் பார்க்கத் துவங்கும். சமூக உறவுகளுக்கு கண்கள் தானே சாளரம். “உள்ளத்தின் கதவுகள் கண்களடா..”[திரைப்படம் : இரவும் பகலும்] என்பதுதானே கவிஞரின் வாக்கு.

    எவ்வளவுநேரம் சிசுக்கள் மற்றவர்களின் கண்களைப் பார்க்கின்றன என்பதை வைத்து அவர்கள் சமூகத்துடன் தொடர்பு கொள்ளும் திறனை அளந்து விடலாம். மற்றவர்களின் கண்களைப் பார்க்க மறுக்கும் சிசு மதி இறுக்க நோயால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம்.

    தாயின் கண்களின் மீது அல்லாமல் உதட்டு அசைவுகளின்மீது மழலையர்களின் பார்வை நிலைகுத்தி இருக்குமானால் அது மதி இறுக்க நோயின் தொடக்கமாக இருக்கலாம். இது பற்றிய ஆய்வுகள் தற்போது யேல் பல்கலைக்கழகத்தில் நடந்து வருகிறது.

    ReplyDelete