சென்னை ப்பட்டணம்

எந்த ஊரு போனாலும்..
இந்தியாவில் தில்லி, மும்பை, கல்கத்தா நகரங்களுக்கு அடுத்து பெரிய நகரம்.தென் இந்தியாவின் நுழைவு வாயில். தமிழ்நாட்டின் தலைநகர். இந்தியாவின் சிறந்த துறைமுக நகரங்களில் ஒன்று. 2000 ஆண்டுகள் பழமையானது. சிறந்த கலை, கலாசார மற்றும் பண்பாட்டு மையமாக விளங்குகிறது. உலகின் இரண்டாவது நீண்ட, அழகிய கடற்கரை (மெரினா) உள்ள நகரம். இந்திய நகரங்கள் மட்டுமல்லாமல் உலக நாடுகளுடனும் சிறந்த போக்குவரத்துத் தொடர்பு கொண்டது.
பரப்பளவு : 174 சதுர கிலோ மீட்டர்
மக்கள் தொகை : 70 லட்சம்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, உருது, ஆங்கிலம் பேசப்படும் மொழிகளாகும். தமிழ்த் திரைப்படத் துறையின் தாயகம்.
சென்னையின் பொருளாதாரம் பலத்தரப்பட்ட தொழில்களைச் சார்ந்தது. ஊர்தி, தகவல் தொழில்நுட்பம், வன்பொருள் தயாரிப்பு, மருத்துவம் போன்ற பல துறைகளைக் கொண்டது. தகவல் தொழில்நுட்பத் துறையில் நாட்டில் இரண்டாம் இடத்தில் உள்ளது.
கி.பி. 1ம் நூற்றாண்டு, முதலில் சிறிய கிராமமாக இருந்தது. 1639 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி அந்த இடத்தை விற்ற சென்னப்ப நாயக்கன் என்பவரின் நினைவாக கோட்டைக்கு வடக்கே உள்ள ஊர் சென்னப்பட்டினம் என்று அழைக்கப்பட்டது. பின்னர்  1639 ம் ஆண்டில் சென்னை நகரத்தோடு திருவல்லிக்கேணி, மைலாப்பூர், திருவொற்றியூர், திருவான்மியூர் ஆகிய பகுதிகள் இணைந்தன.
1956 ஆம் ஆண்டு இந்தியா மொழி வாரியாக மாநிலங்களைப் பிரித்த போது, சென்னை தமிழ் நாட்டின் ஒரு பகுதியாகி மாநிலத்தின் தலைநகரானது.
சென்னை நகரின் தொழிற்சாலைகளில் பெரும்பாலானவை வட சென்னையில் உள்ளன. மத்திய சென்னை, சென்னையின் முக்கியப் பகுதியாகும். தென் சென்னையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன.
சென்னையில் வருடந்தோறும் டிசம்பர் மாதம் முழுவதும் இசைத் திருவிழா இசை ஆர்வலர்களால் கொண்டாடப்படுகிறது. இம்மாதத்தில் தினந்தோறும் சென்னையின் பல இடங்களில் கர்நாடக சங்கீத கச்சேரிகள் நடத்தப்படுகின்றன. சென்னை அடையாறில் உள்ள கலாக்ஷேத்ராவில் உலகின் பல நாடுகளை சேர்ந்தவர்களும் வந்து பரதநாட்டியமும் மற்ற பாரம்பரியக் கலைகளும் பயின்று செல்கின்றனர்.
மற்ற இந்திய நகரங்களைப் போல சென்னையிலும் கிரிக்கெட்டே பிரபலமான விளையாட்டாகும். பல விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறுகின்றன. பல விளையாட்டு அரங்கங்கள் உள்ள சென்னையில் சேப்பாக்கம் கிரிக்கெட் அரங்கம் 50000 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய வசதி கொண்டது.
கிண்டியில் உள்ள உயிரியல் பூங்காவில் மான்கள், பாம்புகள், ஆமைகள் ஆகியவை உள்ளன. ஆளுனர் வசிக்கும் ராஜ் பவனிலும், அதை ஒட்டியுள்ள ஐ.ஐ.டி வளாகத்திலும் குரங்குகளும் மான்களும் துள்ளி விளையாடுவதைக் காணலாம். வண்டலூரிலுள்ள அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்காவில் சுமார் 80 மிருக வகைகள் உள்ளன. சென்னையின் தெற்கில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் முதலைப்பண்ணை உள்ளது. இங்கு முதலைகள், ஆமைகள், பாம்புகள் ஆகியவை வளர்க்கப்படுவதுடன் ஆராய்ச்சியும் நடைபெறுகிறது.

தொகுப்பு: ச.பரந்தாமன்

0 comments:

Post a Comment