பண்டைய தமிழரின் சமயம்-பகுதி 04[The religion of the ancient Tamils] : கி .பி 600 ஆண்டுகளுக்கு பின்

சிவ வணக்கம் ஆரியருக்கு முற்பட்ட இந்தியாவிலேயே தோன்றியதாகச்
சிலஅறிஞர்கள் கருதுகிறார்கள். சிந்து வெளியில் கண்டெடுக்கபட்ட சிவலிங்கவடிவங்கள் இதற்குச் சான்றாக இருப்பதாகவும் அவர்கள் கருதுவர்.

தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு போன்ற சங்கத் தமிழ் இலக்கிய நூல்களிலும், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற நூல்களிலும் சிவன் அல்லது சைவம் என்ற சொற்கள் நேரடியாகப் பயன்படுத்தப்படாவிட்டாலும், சிவன் தொடர்பான செய்திகள் ஆங்காங்கே உள்ளன. திருக்குறளிலும் கூட சைவ சித்தாந்தக் கருத்துக்களை ஒத்த கருத்துக்கள் காணப்படுகின்றன. இவ்வாறு சிவ வணக்கத்துக்குரிய சான்றுகள் ஆரியருக்கு முற்பட்ட காலங்களிலிருந்தே கிடைத்து வந்தாலும், சைவ சித்தாந்தம் ஒரு தத்துவப் பிரிவாக உருவானது கி.பி. ஐந்தாம் நூற்றாண்டளவிலேயே என்று கருதப்படுகின்றது. இக்காலப் பகுதியில் வாழ்ந்த திருமூலரால் எழுதப்பட்டதும், சைவ சித்தாந்தத்தின் சாரம் என்றும் கருதப்படும் திருமந்திரம் என்னும் நூலிலேயே சைவ சித்தாந்தம் என்ற சொற்பயன்பாடு முதல் முதலில் காணப்படுகின்றது. "சித்தாந்தம்" என்ற சொல் முதல் தடவையாக திருமூலர் என்ற மாமுனியால் எழுதப்பட்ட திருமந்திரம், செய்யுள் வரி-1421 யில் காணப்படுகிறது
 
"கற்பன கற்றுக் கலைமன்னு மெய்யோகம்
முற்பத ஞான முறைமுறை நண்ணியே
சொற்பத மேவித் துரிசற்று மேலான
தற்பரங் கண்டுளோர் சைவசித் தாந்தரே."


நான் யார்? கடவுள்  இருக்கிறாரா?கடவுள், உயிர்,அண்டம்,இவைகளின் இயல்பு என்ன ?உலகத்துடனும் ,கடவுளுடனும் எனது தொடர்பு என்ன ?ஒருவரால் கட்டுப் படுத்த முடியாத ஒரு சம்பவம் ,எம் வாழ்வில் நிகழ்வதற்கு காரணம் என்னஎந்த தத்துவ அமைப்பிலும் இப்படியான கேள்விகள் அடிக்கடி எழுகின்றன .சைவ சித்தாந்தம் இவைகளுக்கு  எளிதில் நம்பத் தக்க , வாத வகையில் நேர்மையாக விடையையும்  காரணத்தையும் கொடுக்கிறது .

மக்களின் சுதந்திரம் ,விடுதலை,உரிமை போன்றவற்றில் தலையிடுவதையும் ,இயற்கைக்கு  எதிராக  செயல்படுவதையும்  இந்த தத்துவம்  ஆலோசனை கூறவில்லை .மூட நம்பிக்கையிற்கும் ,கண்மூடித்தனமான விசுவாசத்திற்கும்  இங்கு  இடமில்லை .கடவுளினதும்  மதத்தினதும்   பெயரால்  மக்களை  இது பிரிக்கவோ  அல்லது  கூறு செய்யவோ இல்லை. சைவ சமயத்தையும் தத்துவத்தையும்  நிறுவியவர்களும்  அதை பிரச்சாரம் செய்தவர்களும்  பரந்த நோக்குடையவர்களாகவும்   மேன்மை பொருந்திய இதயம்  படைத்தவர்களாகவும் இருந்தார்கள்.

"அன்பே  சிவம்","தென்னாடுடைய  சிவனே  போற்றி ; என்னாட்டவர்க்கும்  இறைவ  போற்றி" என்று அது எங்களுக்கு போதிக்கிறது.அதாவது ஆண்டவனும் அன்பும் வேறு வேறு  இல்லை .இரண்டும் ஒன்றே! இந்த முதுமொழி,தமிழ் இலக்கியத்திலும்  சமுதாய எண்ணங்களிலும் பொசிந்து  புகுந்து எல்லா இடங்களிலும் பரவி இருப்பதுடன் இது அன்பே கடவுளை அடையும் மார்க்கம் என்ற தற்கால சிந்தனையில் இருந்து வேறுபடுகிறது அதாவது அன்புதான் கடவுள் என்று இது போதிக்கிறது .

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே,வாழ்வைப் பற்றிய  எமது சைவ நோக்கம் உலகளாவியன. "யாதும் ஊரே, யாவரும் கேளீர்"என புறநானுறு கூறுகின்றது.இந்த கூற்று,நியூ யோர்க்கில் உள்ள   .நா சபையின் நுழைவாயிலில்  பொன்னால்  பொறிக்கும் அளவிற்கு இன்று தகுதியாகி உள்ளது   "ஒன்றே  குலம்  ஒருவனே  தேவன்"என்று எம்மை அது வழி காட்டுகின்றது. அறம் ,பொருள் ,இன்பம் & வீடு[வாழ்வில் நிறைவு அடைதல் ] என்ற நான்கு வழி பாதையை திருக்குறள்,தேவையற்ற சடங்குகளையும் கண்மூடித்தனமான நம்பிக்கைகளையும் தவிர்த்து  எடுத்துக்காடுகிறது. தமிழ் சைவ  பாரம்பரியத்தின் படி ஒரு வாழ்க்கைத் தத்துவ நூல் அறம் பொருள் இன்பம் வீடு என்ற நான்கு பிரிவுகளை உள்ளடக்கி இருத்தல் வேண்டும் வள்ளுவர் வீடு பற்றிக்கூறாமல் விடுத்துள்ளார் அறம் பொருள் இன்பம் என்பன பற்றி கூறியவர் இந்த மூன்று கட்டங்களையும் தாண்டிச் செல்பவன் தானாகவே வாழ்வில் நிறைவு அடைவான் என்று அவர் கூறாமல் விளங்கவைத்துள்ளார் போலும்.


வையத்து வாழ்வாங்கு வாழ்வோம் உலகத்து இயற்கையை அறிந்து வெல்வோம், புகழுடன் தோன்றுவோம் என்பதே குறிக்கோள்.எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அன்றி வேறொன்றும் அறியேன் என்று திரும்ப திரும்ப சைவ சமயம் எதிர் ஒலிக்கிறது .

1 comments:

  1. அருமையான ஆய்வு.தொடரட்டும்.

    ReplyDelete