எந்த ஊர் போனாலும் நம்ம ஊர் போலாகுமா...:மாதகல்

Maathakalமாதகல் இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமப் பிரிவில், சண்டிலிப்பாய்ப் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஒரு ஊர் ஆகும். யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடக்குக் கரையோரமாக அமைந்துள்ள இவ்வூரின் வடக்கு எல்லையில் கடலும், கிழக்கு எல்லையில் மாரீசன்கூடல், பெரியவிளான் ஆகிய ஊர்களும், தெற்கில் பண்டத்தரிப்பும், மேற்கில் சில்லாலையும் உள்ளன. இவ்வூர் மாதகல் கிழக்கு, மாதகல் தெற்கு, மாதகல் மேற்கு என மூன்று கிராம அலுவலர் பிரிவுகளுக்குள் அடங்குகிறது.
பசுமையான நெல் வயல்கள், தலையாட்டும் பனந்தோப்பு, அழகிய தென்னை மரங்கள் என பசுமைத்தாயின் அரவணைப்பு மாத்திரம் அன்றி கடல் அன்னையின் அரவணைப்பும் இந்த கிராமத்திற்கு உண்டு. இந்த கிராமத்து மக்கள் இந்து மற்றும் கத்தோலிக்க மதங்களை பின்பற்றுபவர்களாக உள்ளதோடு விவசாயம் மற்றும் கடற்றொழில் என்பன அவர்களுடைய பிரதான தொழில்களாக விளங்குகின்றன.
மாதகலுக்கு பெருமை சேர்த்தவர்களில் சிற்றம்பலப்புலவர் முன்னோடி ஆவார். இவர் ஏறக்குறைய இருநூறு வருடங்களுக்கு முன்னே வேளான் குலத்திலே பிறந்தார். வேதாரணீயஞ்சென்று பஞ்சலக்கணக் கணபதி ஐயரென்னும் பெயருடைய சைவக்குருவினிடம் இலக்கண இலக்கியங் கற்று மீளத் தம்மூரில் வந்திருந்தவர். இவரிடம் கற்றவர்கள் இருபாலை சேனாதிராய முதலியார், அராலி அருணாசலம் பிள்ளை முதலியோர் என்பர். இவர் கண்டியரசன்மேல், கிள்ளைவிடு தூது என்று ஒரு பிரபந்தம் பாடி அதை அரங்கேற்றற்காகக் சென்ற பொழுது வழியில் அவ்வரசன் ஆங்கிலேயரால் அகப்படுத்தப் பட்டான் என்ற சொற்கேட்டுத் தம்மூர்க்குத் திரும்பினர் என்பர்.

அடுத்து மாதகலுக்கு பெருமை தேடித் தந்தவர் மயில்வாகனப்புலவர்.அவர் யாழ்ப்பாணத்தை ஒல்லாந்தர் ஆட்சி செய்த காலத்தில் மாதகலில் பிறந்தார். இவருடைய தந்தையார் பெயர் சுப்பிரமணயம் எனவும், தாயார் பெயர் சிதம்பரம் எனவும் கூறுவர். சிற்றம்பலப்புலவரின், சகோதரியார் புதல்வரே மயில்வாகனப் புலவர். இவர் இளமையிலே தம்மாமனாரிடம் கல்விகற்று சிறந்த பாண்டித்தியமடையலானார். இவர் வையா எனும் புலவர் மரபிலே உதித்தவர்.யாழ்ப்பாண வைபவமாலை என்னும் யாழ்ப்பாணச் சரித்திர நூலை இவர் இயற்றியதாகத் தெரிகிறது.

இயற்கை அன்னையின் ஆசீர்வாதம் பெற்ற ஊராக மாதகல் விளங்குவதோடு கல்வித்துறையிலும் சிறந்து விளங்குகிறது. இந்த ஊரை தாய் நிலமாகக் கொண்ட பலர் மருத்துவம், தகவல் தொழில்நுட்பம், பொறியியல், சட்டம் மற்றும் கணக்கியல்களில் இலங்கையில் மாத்திரமன்றி வெளிநாடுகளிலும் சிறந்து விளங்குகிறார்கள்.

0 comments:

Post a Comment