இறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும்:பகுதி/PART:01


"வந்தது தெரியும் போவது எங்கே 
வாசல் நமக்கே தெரியாது
வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் - இந்த
மண்ணில் நமக்கே இடமேது?
வாழ்க்கை என்பது வியாபாரம் - வரும்
ஜனனம் என்பது வரவாகும் - அதில்
மரணம் என்பது செலவாகும்
போனால் போகட்டும் போடா"
[பாலும் பழமும்/கவிஞர் கண்ணதாசன்]

மரணம் என்றால் துக்கம் தரும் ஒரு நிகழ்வு.மரணம் அடைந்த ஒருவர் திரும்பிவராத இடம் ஒன்றிக்கு செல்கிறார்.ஒருவரின் மரணம் அவருடைய நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் மிகுந்த துக்கத்தை அளிக்கின்றது.ஒருவரின் மரணம் அவரைச் சார்ந்து இருப்பவர்கள் அனைவருக்கும் சொல்ல முடியாத கஷ்டத்தை அளிக்கிறது. ஒருவன் செல்வந்தனாக இருந்தாலும் சரி,ஏழையாக இருந்தாலும் சரி,ஆணாக இருந்தாலும் சரி,பெண்ணாக இருந்தாலும் சரி,அழகாக இருந்தாலும் சரி,அழகற்றவனாக இருந்தாலும் சரி-அனைவரும் ஒரு நாள் இறந்தே ஆக வேண்டும்.இது இயற்கையின் நியதி.ஆக மரணம் என்பது யாருக்கும் பிடிக்காத ஒரு விடயம் [சம்பவம்].ஆனால் யாரும் அதிலிருந்து எப்பவும் தப்பிக்கவே முடியாது.


உணர்வு பூர்வமாகவும் ,அறிவுபூர்வமாகவும் நாம் ஒரு நாள் இறப்போம் என எமக்கு தெரிந்திருந்தாலும்,பொதுவாக நாம் எமது மரணத்தைப்பற்றி சிந்திப்பதில் எந்த  ஆர்வமற்றும் மனமின்றியும்,எதோ நாம் இந்த உலகில் சதாகாலமும் வாழ்வோம் போல வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.அதனால்  ஆன்மத்துறை சாராத பொருள் உடைமையிலும்,   புகழிலும்,மக்கள் செல்வாக்கிலும் புலனுகர்வு சார்ந்த மகிழ்ச்சியிலும் நாம்  திளைக்க,அதற்கு தலையாய முக்கியம் கொடுத்து,எமது நேரத்தையும் சக்தியையும் அதை அடைவதற்காக  செலவழிக்கிறோம். 

எனக்கு,எனது இருப்புக்கு என்ன நடக்கும் என்ற பயமும் அல்லது இடர்வகையில் தப்பி தொடர்ந்து வாழ்வோமா  என்ற பயமும்  தான் இயற்கையை பார்த்து மனிதன் பயந்ததற்கும் கடவுள் என்ற ஒன்று தோன்றியதற்க்கும் காரணமாய் விளங்கி இருக்க முடியும்.

மரணத்தைப்பற்றி ஆழமாக அலசும் போது ஒரு முக்கிய கேள்வி பிறக்கிறது.அதாவது "ஏன் உயிர்கள் முதற்கண் மரணமடைகின்றன? "என்று 

உண்மையாகவே,மரணம் ஒரு பெரிய  மர்மமாகவே உள்ளது.காலகாலமாக  ஒவ்வொரு முக்கிய சமயங்களும் தத்துவங்களும், ஆன்மீக கருத்துகளும்,இந்த மர்மத்தை கண்டுபிடிக்க முயன்றன.ஒவ்வொரு ஆணினதும் பெண்ணினதும் வாழ்வை தொட்டு,முழு மானிட சாதியையும் "தவிர்க்கமுடியாத  மாள்வு" என்ற ஒன்றின் கீழ் இணைத்த ஒன்றாகும்.இங்கு  பணக்காரனோ ஏழையோ ஒரே மாதிரியான முடிவை மரணத்தில் அடைகிறார்கள். கருப்பனோ வெள்ளையனோ இருவரும் எந்த வேறுபாடும் இன்றி பிணக்குழிக்குள் போகிறார்கள்.பெருஞ் செல்வாக்கும் சக்திமிக்கவர்களும்,எளிய அடக்கமுள்ளவர்களும் இந்த உலகத்தை கடைசியில் விட்டே போகிறார்கள்.  

"உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு"-[குறள்: 339]

இந்த நிலையற்ற வாழ்க்கையில்,உறங்குவது போன்றது சாவு;உறங்கி விழிப்பது போன்றது பிறப்பு.[சாக்காடு-இறப்பு/death].இந்த கருத்தையொட்டிய பாடல்களை,நாலடியார்,மணிமேகலை,சீவகசிந்தாமணி போன்றவற்றிலும் நாம் பார்க்கலாம்.

"இழித்தக்க செய்தொருவன் ஆர உணலின்
பழித்தக்க செய்யான் பசித்தல் தவறோ?
விழித்திமைக்கு மாத்திரை யன்றோ ஒருவன்
அழித்துப் பிறக்கும் பிறப்பு."-நாலடியார் 302

[நொடிப்பொழுதில்மாய்தற்குரிய இப்பிறவியின் பொருட்டு மானக்குறைவான இரத்தல் செயலைச் செய்து உயிர்பிழைத்தல் ஆகாது].இங்கும் “விழித்திமைக்கும் மாத்திரையன்றோ ஒருவன் அழித்துப் பிறக்கும் பிறப்பு”என்கிறது நாலடியார்.

"பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும்
உறங்கலும் விழித்தலும் போன்ற துண்மையின்
நல்லறஞ் செய்தோர் நல்லுல கடைதலும்
அல்லறஞ் செய்தோர் அருநர கடைதலும்
உண்டென உணர்தலின் உரவோர் களைந்தனர்".-ஆதிரை பிச்சை இட்ட காதை:84-90/மணிமேகலை

[இளமையும் உடம்பும் நிலையானவை அல்ல; செல்வமும் நிலையானது அல்ல; அறமே நிலைத்தது, என்றும் துணையாக இருப்பது என்பது,].இங்கும் “பிறந்தவர் சாதலும்,இறந்தவர் பிறத்தலும் உறங்கலும் விழித்தலும் போன்றது உண்மையின்” என்கிறது மணிமேகலை.மேலும்  சுந்தரர் தேவாரம்,“உறங்கி விழித்தாலொக்கும் இப்பிறவி” என்கிறது

உண்மையில் இறப்பு என்றால் என்ன?

(PART:02"மரணம்" என்றால் உண்மையில் என்ன?" -
தொடரும்)
[ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

0 comments:

Post a comment