பகுதி 04 "A"-இறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும் :‏

Death & Its Beliefs of Tamils:
[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்/
 Compiled by: Kandiah Thillaivinayagalingam]

 "மரணம் குறித்த சொற்கள்[1 to 10]" 


மரண பயமும் மரணத்திற்குப் பின் என்ன? என்பது பற்றிய அச்சமும் மனிதனை ஆட்டிப்படைத்தன.சமயங்கள் அதற்குப் பதில் சொல்ல முயன்றன.சமயம் அளித்த விளக்கங்களைத் தான் புரிந்துகொண்ட அளவிலும் ஏற்றுக்கொண்ட அளவிலும் மரணத்தை ஒருவாறு எதிர்கொண்டான் மனிதன்.மலர்வதாகவும் உதிர்வதாகவும் பிறப்பு,இறப்பைக் குறித்தத்துடன் அவன் பயன்படுத்திய வார்த்தைகள் அவன் புரிந்து கொண்ட அளவை நமக்குச் சொல்கின்றன.மரணத்திற்குப் பின் என்ன என்ற கேள்விக்கு மனிதன் புரிந்துகொண்ட பதில்களின் அடிப்படையில்தான் மரணம் குறித்த சொற்கள் அவர்களுக்கிடையில் அமைந்தன.அந்தப் புரிதலை அவனது சமய நம்பிக்கைகள் அல்லது அவநம்பிக்கைகள் உருவாக்கின எனலாம்.அது பண்பாட்டு உருவம் கொள்ளும்போது பல்கிப் பெருகும் சொற்களாயின.அந்த வார்த்தைகளில்,25 சொற்களை கிழே பார்ப்போம்.

[1]செத்தார்[செத்த-Lifeless/Death] 

"செத்தார் பெறும்பய னாவதி யாதெனில்
செத்துநீர் சேர்வது சித்தினைக் கூடிடில்
செத்தார் இருந்தார் செகத்தில் திரிமலம்
செத்தார் சிவமாய திண்சித்தர் தாமே."
[திருமூலரின் திருமந்திரம், 1907)

"திரிமலம் செத்தார்"என்ற தொடரை ஆணவம்,கன்மம்,மாயை ஆகிய மும்மலங்களை செற்றார்/அழித்தார்/வெறுத்தார் அல்லது மும்மலங்களும் கெடப்பெற்றோரே என்று விளக்கம் தரப்படுகிறது.மேலும் குறள் 1245 இப்படி கூறுகிறது:
  
"செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம் உற்றால் உறாஅ தவர் நெஞ்சே"

அதாவது"செற்றார் எனக்கை விடல்உண்டோ?"-நம்மை வெறுத்து விட்டார்[செற்றார்-வெறுத்தார்/பகைவர்] என நினைத்து அவர் மீது கொண்ட காதலைக் கைவிட்டு விட முடியுமா?என வினாவுகிறது. 

ஆகவே "செற்றார்" என்பதன் பிந்தைய வடிவமே "செத்தார்" என்பதாக இருக்கலாம்?

[2]இறைவனடி சேர்ந்தார்


இறைவனடி என்பது கடவுளின் திருவடிகளை ஆகும்,"இறைவனடி முறைமுறையின் ஏத்துமவர் தீத்தொழில்கள் இல்லர்மிகவே" என்கிறது திருமுறை 3.73.6 .அதாவது திருஞானசம்பந்தர் "இறைவனின் திருவடிகளை நாடொறும் முறைமையோடு போற்றி வணங்குபவர்கள் துன்புறும் வினைகளிலிருந்து முற்றிலும் நீங்கியவராவர்" என்கிறார் அப்படி பட்ட திருவடிகளை சேர்ந்தார் என்பதே பொருளாகும். 

எனினும் அவர் அவர் நம்பிக்கைகளை பொருத்து இறைவனடி சேர்வதிலும் வேறுபாடுகள் இருக்கின்றன.சிவலோக பதவியைச் சைவர்களும் வைகுண்ட பதவியை வைணவர்களும் அடைகிறார்கள் என நம்புகிரார்கள்.அப்படியே மற்ற சமயத்தவர்களும். 

[3]இறந்தார்   
[4]மறைந்தார் அல்லது மறைந்துவிட்டார்


இப்படி குறிப்பிடுவோர் மத அடையாளங்களைத் தவிர்க்க நினைப்போர் ஆவார்.பிறப்பின் இறுதி நிலை இறப்பு என்பது இறந்தார் என்போரின் கருத்து ஆகும்.அது போல இவ்வுலகில் தோற்றம் காட்டியவர் இப்போது கண்ணுக்குத் தெரியவில்லை என்பது மறைந்தார் என்று சொல்பவர்களின் எண்ணம் ஆகும் 

[5]தேக வியோகமானார்[தேகத்தைத் துறந்தார்]

வியோகம் என்னும் சம்ஸ்கிருதச் சொல்லுக்குப் பிரிதல்,விடுதல் என்று பொருள்.தேகம் என்ற சொல் உடல், மேனி,சரீரம்,காயம் என்று பொருள் படும் ஆகவே அவர் தனது இந்த உடலை இழந்து விட்டார் என பொருள் படும்.அதாவது அவர் உயர் சாகவில்லை.அவரின் உயர் மீண்டும் மறுபிறப்பு எடுத்து இன்னும் ஒரு உடலில் தங்கும் என்பதே அதன் உள் பொருளாகும். 

[6]முத்தியடைந்தார்

பிறவா பேரின்ப நிலையான முக்தி அடைதலே சித்த நிலை எனப்படுகிறது.கர்ம வினையால் பிறந்து,இறந்து, மீண்டும் மீண்டும் உழன்று கொண்டிருக்கும் உயிர்கள்,இந்தப் பிரபஞ்சச் சக்கரத்தினின்று விடுதலை பெறுதலை ‘முக்தி’ என்கிறோம்.விடுதலை என்பதால் அந்த நிலைக்கு வீடு என்னும் பெயர் ஏற்பட்டது.வீடு பேறு, முக்தி, மோக்ஷம் இவை எல்லாமே விடுதலை என்னும் பொருள் கொண்டவை ஆகும்.

[7]சமாதியடைந்தார்

"சமாதி"-பூரண நிலை என்னும் முடிவுநிலை.சமாதி = சமம் + ஆதி = அதாவது ஆதியும் அந்தமுமாய் சொல்லப்படுகிற இறை நிலைக்கு சமனான ஒன்றுமற்ற அல்லது வெறுமையான மனநிலையில் இருப்பதே சமாதி எனப்படும்.

"சமாதி செய்வார்க்குத் தகும் பல யோகம்
சமாதிகள் வேண்டா இறையுடன் ஏகில்
சமாதி தானில்லை தான் அவனாகில்
சமாதியில் எட்டெட்டுச் சித்தியும் எய்துமே." [மூன்றாம் தந்திரம்-9] 

சமாதியும் முக்தியும் சமய நம்பிக்கையின் அடிப்படையில் பிறந்த சொற்களே.

[8]சித்தியடைந்தார்.

சித்தி என்பதன் பொருள் கைகூடுதல் ஆகும்.அதன் இன்னும் ஒரு பொருள் மோட்சம் ஆகும்."சித்தியும் சித்தி தரும் தெய்வம் ஆகித் திகழும் பரா சக்தியும்"[அபிராமி அந்தாதி]- எல்லா நலன்களும் கிடைக்கும் சித்தியும்,அப்படி எல்லா சித்திகளையும் தரும் தெய்வமாக விளங்குகின்ற பராசக்தியும்-என்கிறது  

[9]அமரரானார்
அமரரானார் என்பதன் நேர்ப் பொருள் மேல்உலக வாசி[வானோர்] ஆனார் என்பதே.(சாகாதவர் என்னும் பொருள் உடைய)
[10] மலரடி சேர்ந்தார்

" கூண்டுகள் திறந்து வைத்த பறவைகள் போல்
  குதுகலத்துடன் உந்தன் மலரடி வருகிறோம்"
[மலரடி வணங்குவோம்/திரு.அல்போன்ஸ்]

"மலர்மிசை நடந்தோன் மலர் அடி" -(சிலப். 10, 204), அதாவது தாமரைப் பூவின்மீதே நடந்தவனாகிய அக்கடவுளுடைய மலர்போன்ற அழகிய திருவடிகளை என்கிறது சிலப்பதிகாரம். 

முக்தி அடைந்தார், சமாதி ஆனார்,சித்தி அடைந்தார்,இறைவன் மலரடி சேர்ந்தார்,அமரரானார், எனச் சமயப் பெரியவர்களின் இறப்பை பொதுவாக  குறிக்கிறார்கள்.

பகுதி 04"B": "மரணம் குறித்த சொற்கள்[11 to 25]"அடுத்த வாரம் தொடரும் 

0 comments:

Post a comment