பகுதி 05/இறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும் :

Death & Its Beliefs of Tamil

 "மதமும் மரணமும்"[சைவ மதம்  / இந்து மதம்]:

 


உலகின் மிக பழமையான மதமான, சைவ / இந்து மதத்தின் படி, மரணம் என்பது இயற்கையானது. முற் பிறப்பிலே செய்த பாவ, புண்ணியத்தின் படி அல்லது அதன் கர்மாவின் படி, தொடர்ந்து உயிர் வாழ பல பிறப்புக்களை அல்லது மறுபிறப்புகளை ஒரு ஆன்மா [soul] எடுக்கும்.

ஒரு மனிதனை அவனுக்குள் இருந்து இயங்க வைப்பது ஆன்மா என்கிற இந்த இறைசக்தி (அல்லது சக்தி / ஆற்றல்) ஆகும். சக்தி கொள்கை என்ன சொல்கிறது தெரியுமா ? சக்தியாகிய ஆற்றல் என்பது அழிவற்றது. அது வேறு ஒரு ஆற்றலாக உருமாறுமே அன்றி அழிவு என்பது ஆற்றலுக்கு என்றுமே கிடையாது என்கிறது ["Energy can neither be created nor destroyed"].

 

உடலினின்று செயல் பட முடியாத ஒரு நிலைக்கு நோயினால் உடல் மிகவும் தளர்ந்து விடும் போது அல்லது ஏதாவது காரணத்தால் உடல் முறிந்து விடும் போது அல்லது விபத்தில் சிக்கிக் கொள்ளும் போது அல்லது குடித்துவிட்டு கல்லீரலை அழித்துக் கொள்ளும் போது அல்லது காதல் தோல்வியால் இதயம் முறிந்து போகும் போது அல்லது மிகவும் வயதாகி விட்டதால் உடல் தளர்ந்து விடும் போது, உயிரை தக்கவைத்துக் கொள்ள, இந்த உடலால் முடியாது போனால்,

ஆன்மா பிரிந்து சென்று, வேறு ஒரு தகுதியான உடலைத் தேர்ந்தெடுத்து, மீண்டும் வாழ்க்கைச் சுழற்சியை ஆரம்பிக்கிறது. இப்படி பல சுழற்சியின் பின், இறுதியில் வீடுபேறு என்னும் மோட்சத்தை, அதாவது மறுபிறவி இல்லாத நிலையினை, அடைகிறது என்கிறது இந்து சமயம். இன்றைய இந்து சமயத்தின் கிளை நெறிகளில் ஒன்றாக உள்வாங்கப் பட்ட  சைவம், எல்லா மதமும் சம்மதம் [எம்மதமும் சம்மதம்!] என்கிறது!. நீர், மழைத்துளியாக விழுந்து, வெள்ளமாக பெருகி, நதியில் கலந்து, கடலில் சங்கமித்து, ஆவியாகி மீண்டும் மழைத்துளியாக நீர் பூமியில் விழுகிறது. ஆத்மாவின் பிறப்பும் அப்படித்தான். நன்றாக படிக்காத பிள்ளையை ஒரே வகுப்பில் முழு நிலை அல்லது நிறைவு வரும் வரை உட்கார வைக்கிறார்கள். அப்படியே ஆத்மாவும் முழு நிலையை அல்லது பரிபூரண நிலையை அடையும் வரை மீண்டும் மீண்டும் பிறப்பு எடுக்கிறது. நமது சைவ நூல்கள் (சாஸ்திரங்கள்) ஆத்மா பிறக்கவும் இல்லை, இறக்கவும் இல்லை. எப்பொழுதும் இருந்து கொண்டேயிருக்கிறது என்று சொல்கிறது. அதாவது பிறப்பு, இறப்பு என்ற சக்கரம் சுழன்று கொண்டேயிருக்கிறது. அது ஒரு ஜீவன் கடவுளிடம் ஐக்கியமாகும் வரை நடைபெறுகிறது. இந்த உண்மையை மாணிக்க வாசகர்  சிவபுராணத்தில் அழகாக பாடுகிறார்.

 

"புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்

செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்

மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்"

 

இங்கு,மாணிக்கவாசகர் தாம் இயற்றிய சிவபுராணத்தில் புல்லாய், பூடாய், புழுவாய், மரமாய், மிருகமாய், பறவையாய், பாம்பாய், கல்லாய், மனிதராய், பேயாய், கணங்களாய், அசுரராய், முனி வராய் , தேவராய் இவ்வுலகில் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் என்று கூறுகின்றார். ஆகவே மரணம் என்பது ஒரு பெருந்துன்பம் [great calamity] அல்ல. ஒரு முடிவும் அல்ல. உதாரணமாக, மகாபாரதத்தில், மிகவும் கலங்கி, தவிக்கும் அருச்சுனனை பார்த்து கண்ணன் கூறுகிறான்:  ' ஓ ! அர்ஜுனா, உன் துயரம் நியாயம் அற்றது. போர்க்களத்தில் வெற்றி, தோல்வி சகஜம்.மரணம் என்பது ஒரு நியதி ... உடல் தான் மரணமடையும், ஆன்மா அழியாதது.' என்கிறான். மேலும் இல்வாழ்க்கையில், வினைப் பயன்களுக்கு ஏற்ப மக்கள் வாழ்ந்து மடிகிறார்கள். இளமை, மூப்பு போல, இறப்பும் நிச்சயமானது. மரணம் என்பது உடலை துறப்பதே  ... ஆன்மா என்றும் இருப்பது! மரணத்திற்குப் பின் ஆன்மா புதிய உடலைப் பெறுகிறது என்கிறான் கண்ணன். அதாவது மரணத்தால் தனது செல்வழியை சரிபடுத்தி மீண்டும் இவ்வுலகில் திரும்பி வந்து தனது பயணத்தை தொடர்கிறது எனலாம் .

 

அப்பர் என அழைக்கப்பட்ட கி.பி ஏழாம் நூற்றாண்டை சேர்ந்த திருநாவுக்கரசு நாயனார் கூறுகிறார் "நாங்கள் நல்ல மனிட பிறவியை எடுத்துள்ளோம். அதை நாம் மதிப்போம்" என்று ."பிறவி பாவமானது அல்ல". "இது கடவுளால் தந்த கொடை." , "இந்த அருமையான மானிட பிறப்பை, நாம் சரியாக பயன்படுத்த வேண்டும். அதற்கு இந்த பிறவி தந்ததிற்கான [எடுத்ததிற்கான], அவரின் நோக்கத்தை நாம் அறியவேண்டும்" என்று மேலும் கூறுகிறார்.

 

இடைக்காலத்தில் ஏற்பட்ட சமண சாக்கிய சமயங்கள் மக்களிடையே மறுபிறவி, கர்மாக் கொள்கைகளைப் பரப்பின. உதாரணமாக, மாதவி தன் மகள் மணிமேகலையைப் பத்தினித்தெய்வம் கண்ணகியின் மகள் என்று தன் தோழி வயந்தமாலைக்குக் கூறி, அவளை அறவண அடிகளிடம் அடைக்கலப்படுத்துகிறாள். அப்போது பிறந்தவர்க்குப் பெருந்துன்பம், பிறவாதவர்க்குப் பேரின்பம், பற்றால் பிறவி வரும் என்று அடிகள், தனது அருளுரையை .

 

"பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்

பிறவார் உறுவது பெரும்பேர் இன்பம் 

பற்றின் வருவது முன்னது பின்னது

அற்றோர் உறுவது அறிகென்று அருளி"

(மணிமேகலை, ஊர் அலர் உரைத்த காதை)

 

என வழங்குகிறார். மேலும் உதயகுமரன் இறந்ததற்காகப் புலம்பும் மணிமேகலை, உலகில் பிறந்தோர்கள் இறத்தலும் இறந்தோர்கள் பிறத்தலும், உறங்குவதும் உறங்கி விழிப்பதும் போல்வதாக உள்ளதால், நல்ல அறங்களைச் செய்கின்றவர்கள் இன்ப மெய்தற்குரிய மேலுலகங்களை யெய்துதலும்தீவினைகளை இயற்றுகின்றவர் பொறுத்தற்குரிய துன்பத்தைச் செய்யும் நிரயத்தை [நரகத்தை] அடைதலும், உண்மை என்று உணர்தலினால் அறிஞர்கள் அவற்றை நீக்கினர் என

 

"பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும்

உறங்கலும் விழித்தலும் போன்ற துண்மையின்

நல்லறஞ் செய்வோர் நல்லுல கடைதலும்

அல்லறஞ் செய்வோர் அருநர கடைதலும்

உண்டென உணர்தலின் உரவோர் களைந்தனர்"

(மணிமேகலை, ஆதிரை பிச்சையிட்ட காதை)

 

என்று வாழ்க்கைச் சக்கரத்தைப் பற்றி இங்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இந்த கருத்தை முதன்மையாக வலியுறுத்தி அவர்கள் பரப்புரை [பிரசாரம்] செய்தனர். இச்சமயங்களைத் தழுவியவர்கள் மட்டுமில்லாது, எல்லோரையுமே பொதுவாக இந்தக் கொள்கைகள் கவர்ந்தன. அப்பர், ஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய தேவாரம் பாடிய மூவருடன் மற்றும் மணிவாசகர் பாடல்களில் இவற்றின் அழுத்தமான தாக்கத்தைக் காணலாம். இந்த நால்வரும் உடலை இழுக்கென்று கருதி, அதிலிருந்து விடுபட்டுப் பிறவா நிலை அடைவது தான் வாழ்க்கையின் குறிக்கோள் என்று கருதினர். உதாரணமாக, சுந்தரர் தனது தேவாரத்தில், மதத்தையுடைய யானையின்மீது ஏறி சிற்றரசர்கள் புடைசூழ உலாவருகின்ற பேரரசர்களே, நீவிர் இறந்தால், அப்போது உம்மோடு துணையாய் வருவார் இவர்களுள் ஒருவரும் இலர்; இறைவன் ஒருவனே அத்தகையனாய் உளன் ; இதனை உங்கள் மனத்தில் நன்கு பதிய வைத்துக் கொள்ளுங்கள் என

 

"மத்த யானை யேறி மன்னர் சூழவரு வீர்காள், செத்த போதில் ஆரும் இல்லை சிந்தையுள் வைம்மின்கள்"

 

என்று பாடுகிறார். மேலும் இன்னும் ஒரு பாடலில், மனிதனாக மட்டும் அல்ல, இவ்வுலகில் ஓர் உயிராக தோன்றி விட்டாலே, மரணம் என்பது நிச்சயம் என்று

 

"தோற்றம் உண்டேல் மரணம் உண்டு துயரமனை வாழ்க்கை, மாற்றம் உண்டேல் வஞ்சம் உண்டு நெஞ்சமனத் தீரே" 

 

என்று பாடுகிறார். ஆனால், “சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைய முடியும்” என்பது ஒரு பல மொழி, அது போல உடம்பு இல்லாமல் எந்த செயலையும் எம்மால் செய்ய முடியாது என்பது உண்மை, எனவே இன்றய காலகட்டத்தில் உடலினை பேணி பாதுகாப்பது என்பது அவசியமானது மட்டுமல்ல ஆரோக்கியமானதும் கூட. எனவே, திருமூலர் இதை வலியுறுத்தி,

 

உடம்பார் அழியில் உயிரார் அழிவர், திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்,உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே,உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த்தேனே.”

 

என்கிறார். அதாவது, உடல் அழிந்தால் உயிர் அழிவதுடன் அறிவும் வளராது எனவே உடலை வளர்க்கும் முறையை அறிந்து, உடலை வளர்த்து உயிரையும் வளர்த்தேன் என்கிறார். மேலும்

 

உடம்பினை முன்னம் இழுக்கென்றிருந்தேன், உடம்பினுக் குள்ளேயுறுபொருள் கண்டேன், உடம்புளே உத்தமன் கோயில்கொண்டான் என்று உடம்பினை யானிருந் தோம்புகின்றேனே.”

 

என்கிறார். அதாவது உடலினை இழுக்கென்றிருந்தேன், பிறகு அதனில் கடவுள் கோயில் கொண்டுள்ளார் என்பதைப் புரிந்து கொண்டு உடலை பாதுகாத்தேன் என்கிறார் சைவ சித்தாந்தம் தந்த திருமூலர். இந்த உலக வாழ்வு எந்த ஒரு நோக்கமும் இன்றி கடவுளால் ஏற்படுத்தி இருக்க முடியாது. எமக்கு இங்கு ஏற்படும் நல்லவையும் தீயவையும் காரணம் இன்றி நடைபெறாது. இந்த துயர்மிகுந்த / பரிதாபத்துக்குரிய உலகில் கடவுள் எம்மை காரணம் இன்றி வைத்திருக்கிறார் என்றால், நாம் எப்படி அவரை அருளிரக்க முடையவனே / மன்னிக்குமியல் புடையவனே ["Merciful"] என அழைப்போம் எனவும் சைவம் வினாவுகிறது.

 

மனிதன் இறந்த பிறகு எல்லோரும் கூடி அழுதுவிட்டுப் பின்பு அவனுக்குப் பிணமென்று பெயர்வைத்து, அதை எடுத்துப்போய் சுடுகாட்டிலே வைத்து எரித்துவிட்டு ஆற்றிலோ அல்லது குளத்திலோ மூழ்கி எழுந்து, அவனைப்பற்றிய நினைவை ஒழித்துவிடுகிறார்களாம் - திருமூலர் தமது திருமந்திரத்தில் இப்படி கூறுகிறார். இன்று கூட ஒருவர் இறந்துவிட்டால் அன்னாரின் பூதவுடல் மயானத்துக்கு எடுத்துச் சென்று தகனம் செய்யப்படும் என்று தான் சொல்கிறோம். அவரது பெயரைச் சொல்வதில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

 

"ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டு

பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்

சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு

நீரினில் மூழ்கி நினைப் பொழிந்தாரே!"

[திருமந்திரம்]

 

இன்னும் சற்று ஆராய்ந்த போது இந்த உலகத்தில் நல்லவராக வாழ்ந்தவரும் ஒரு நாள் மரணிக்கிறார். கெட்டவரும் மரணிக்கிறார். இறந்த பின்பு என்ன நடக்கிறது என்ற இந்த கேள்விக்கும் பதில் புரியாத புதிராகவே இருக்கிறது.

ஆகவே, பிறப்பு, இறப்பு - இந்த இரு விடயங்களும் எப்படி இந்து மதத்தின் பகவத் கீதையில் சொல்லியிருக்கிறது என்று பார்ப்போம்.

 

"தேஹினோ' ஸ்மின் யதா தேஹே ,கௌமாரம் யௌவனம் ஜரா,ததா தேஹான்தரப் ப்ராப்திர்,தீரஸ் தத்ர ந முஹ்யதி"

(பகவத் கீதை 2.13 ),

 

இதன் கருத்து  "உடல்பெற்ற ஆத்மா, சிறுவயதிலிருந்து இளமைக்கும், இளமையிலிருந்து முதுமைக்கும் மாறுவது போலவே மரணத்தின் போது வேறு உடலுக்கு மாறுகின்றது. தன்னை உணர்ந்த ஆத்மா, இது போன்ற மாற்றத்தால் திகைப்பதில்லை"

 

என்கிறது. மேலும் கண்ணன்,“என் மனசுக்கு பிடிச்ச அர்ஜுனா !"  என்று அழைத்து ,கவலையோட அழுதுக்கிட்டு உட்கார்ந்த அர்ஜுனனைப் பார்த்து ,

 

"ந ஜாயதே ம்ரியதே வா கதாசிந்,நாயம் பூத்வா பவிதா வா ந பூய:।,அஜோ நித்ய: ஷாஷ்வதோ அயம் புராணோ,ந ஹந்யதே ஹந்யமாநே ஷரீரே॥ 2.20,"

 

அதாவது, ஆத்மாவுக்கு பிறப்பு இறப்பு கிடையாது ! ஒரு சமயம் இருந்து அப்புறம் அழிஞ்சு போவது இல்லை இந்த ஆத்மா! உடல் அழியும் போது ஆத்மா அழிவதில்லை ! என்று கூறுகிறான். சொர்க்கம் மற்றும் நரகம் பற்றி எல்லா மதங்களிலும் கூறப்படுகிறது. அது போல, சைவ சமயமும் சொர்க்கம் மற்றும் நரகம் என்பது நாம் செய்யும் நன்மை தீமையினை பொறுத்தே கிடைக்கின்றதாக கூறுகிறது. தனது உடலில் இருந்து லிங்கம், விபூதி, மோதிரம், கடிகாரம் என பொருட்களை வரவழைத்து பக்தர்களுக்கு கொடுத்தவரும் "நான் 96 வயதில் இந்த அவதாரத்தை முடித்துக் கொள்வேன்" என்று பக்தர்களுக்கு உறுதிபட ஆருடம்  கூறிய வரும், அதன் பின் எட்டு ஆண்டுகளின் பின், ‘கர்நாடக மாநிலம், மாண்டியா நகரில் பரத்வாஜா கோத்ரத்தில் பிரேம சத்ய சாய்பாபாவாக எனது அடுத்த பிறவி இருக்கும்’ என்று ஆருடம்  கூறிய வரும்,  ‘நான்தான் சாய்பாபா. ஷீரடி சாய்பாபா வின் அவதாரம்’ என தனது இன்றைய வாழ்க்கையை கூறிய வரும், அப்படியான அவரும் வெறும் மனிதப் பிறவிதான் என்பதை குறிக்கும் வகையில் 85 வயதிலேயே அவருக்கு தெரியாமலே மரணமானார், இதில் இருந்து நாம் அறிவது என்ன? மரணமானது நாம் கருவில் உருவாகிய கணத்தில் இருந்தே எம்மை நோக்கி நடக்க ஆரம்பிக்கிறது. அது எம்மை எப்போ வந்தடைகிறது என்பதை எவராலும் ஊகிக்க முடியாது என்பதாகும்.

 

மேலும் பட்டினத்தார் "காயமே இது பொய்யடா காற்றடைந்த பையடா" என்றும், சுந்தரமூர்த்தி நாயனார், உலகீர், பசிநோயை உண்டாக்குகின்ற உடம்பு நிலைத்திருத்தல் என்பது பொய் ; இது மண்ணாய் மறைந்தொழிவதே மெய் ; ஆதலின், இல்லாது ஒழிய வேண்டுவது பிறவியாகிய கடலே ; என 

 

"வாழ்வாவது மாயம்மிது

    மண்ணாவது திண்ணம்

பாழ்போவது பிறவிக்கடல்

    பசிநோய்செய்த பறிதான்"

 

என்று பாடுகிறார். என்றாலும் இன்று ஆஸ்பத்திரிகளில் கூட்டம். ஆலயங்களில் கூட்டம். சோதிடர்களிடமும் கூட்டம், சுவாமிகளின் ஆச்சிரமத்திலும் கூட்டம். எல்லா கூட்டத்தினரின் நோக்கமும், மரணத்தை தள்ளி வைத்து விட்டு, நிம்மதியாக நீண்ட நாள் வாழ வேண்டும் என்பது ஆகும்!

 

மரண பயமும் மரணத்திற்குப் பின் என்ன? என்பது பற்றிய அச்சமும் மனிதனை ஆட்டிப்படைத்தன. சமயங்கள் அதற்குப் பதில் சொல்ல முயன்றன. சமயம் அளித்த விளக்கங்களைத் தான் புரிந்து கொண்ட அளவிலும் ஏற்றுக்கொண்ட அளவிலும் மரணத்தை ஒருவாறு எதிர்கொண்டான் மனிதன். மலர்வதாகவும் உதிர்வதாகவும் பிறப்பு, இறப்பைக் குறித்தத்துடன், அவன் பயன் படுத்திய வார்த்தைகள் அவன் புரிந்து கொண்ட அளவை  நமக்குச் சொல்கின்றன. மரணத்திற்குப் பின் என்ன என்ற கேள்விக்கு மனிதன் புரிந்துகொண்ட பதில்களின் அடிப்படையில்தான் மரணம் குறித்த சொற்கள் அவர்களுக்கிடையில் அமைந்தன. அந்தப் புரிதலை அவனது சமய நம்பிக்கைகள் அல்லது அவநம்பிக்கைகள் உருவாக்கின எனலாம். அது பண்பாட்டு உருவம் கொள்ளும் போது பல்கிப் பெருகும் சொற்களாயின. அந்த வார்த்தைகளில், தெரிந்து எடுக்கப்பட்ட  25 சொற்களை அடுத்த பகுதியில் பார்ப்போம்.

 

(கந்தையா தில்லைவிநாயகலிங்கம்)

பகுதி: 06 "மரணம் குறித்த சொற்கள்"  தொடரும்

 ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக👉 Theebam.com: [பகுதி:01] இறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும்:-:


2 comments:

  1. "புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
    பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
    கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
    வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்.............
    புல்லில் ஆரம்பித்து தேவரில் முடியும் இப் பிறவிகளின் இடையில் அதுவும் மனிதருக்குப்பின் பேய்,கணங்கள் வருவதும்,அவர்கள் கூடாதவர் என்று கூறும்[நல்]அசுரர் வருவதும் புரியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. கந்தையா தில்லைவிநாயகலிங்கம்Friday, September 27, 2013

      "புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க்[devil /ghost] கணங்களாய்[angels] வல் அசுரர் ஆகி [Powerful giants] முனிவராய்த் [ascetics] தேவராய்ச்[celestials]........."
      [கணம்= கூட்டம்,தேவகணம், அசுரகணம்]

      புல்லில் இருந்து மனிதன் வரை கூறிய அனைத்தும் பூமியில் அதாவது மண்ணில்/நீரில் வாழ்பவை.அதாவது சின்னசிறு பாக்டீரியாவில் ஆரம்பித்து,இந்த பூமியில் சிந்தனை உயிரியாக இன்று மலர்ந்திருப்பது மனிதன்.ஆவிகள்,பேய்கள் உள்ளனவா,இல்லையா? சிலருக்கு அவை உண்டு என்று நம்பிக்கை.சிலருக்கு இல்லை என்பது கருத்து.அதைப்பற்றி "தமிழரின் மூட நம்பிக்கைகள்: பகுதி-10" இல் பார்ப்போம்.இப்போதைக்கு அவை உண்டு என்று நம்புவர்களின் கருத்துப் படி,இயற்கைக்கு புறம்பாக , தற்கொலை, கொலை,அல்லது விபத்து மூலம் திடிரென மரணிக்கும், முக்கியமாக இளம் வயதினரின் ஆவியாக உலாவுவதாக நம்புகின்றனர்.அவைகள் நிறைவேறப்பெறாத அவாக்களை கொண்ட பேயாகும் எனவும் நம்புகின்றனர்.ஆகவே பேய் மனிதனுக்கு பிறகே வருகிறது.அவையும் இந்த பூமியில் தான் இருக்கின்றன.அதன் பின்,மாணிக்கவாசகரின் நம்பிக்கையின் படி,மூவுலகிலும் [விண்ணுலகம்,மண்ணுலகம், பாதாளவுலகம்,] போய் வரக்கூடிய கணங்கள்[சிவகணங்கள் ,பூதகணங்கள் ],அசுரர்கள்,முனிவர்கள் தேவர்கள் கூறப்படுகின்றன.ஆகவே தான் இந்த ஒழுங்கு என நான் நம்புகிறேன்.உதாரணமாக கூர்மாவதார கதையை எடுத்தால், "தேவலோகத்துப் பெண்ணான சித்தவித்யாதர மகள் என்பவள் கலைமகள் கொடுத்த மலர் மாலையைத் தனது வீணையில் சுற்றிக் கொண்டு பிரம்ம லோகம் வழியாக வரும்போது, துர்வாச முனிவரைச் சந்தித்தாள். அவரை வணங்கிய அவள்,தன்னிடமுள்ள மாலையை அவரிடம் கொடுத்தாள்.மாலையைப் பெற்றுக் கொண்ட முனிவர்,அந்த மாலையுடன் தேவலோகம் நோக்கிச் சென்றார்........தேவேந்திரன் தன் செல்வம் அனைத்தையும் இழந்தான்.யானை மதம்பிடித்து ஓடியது. இதனை அறிந்த அசுரர்கள் தேவேந்திரனின் கோட்டைக்குள் புகுந்து போர்புரியலானார்கள். ." அதாவது தேவர் ,முனிவர்,அசுரர் ஆகியோர் விண்ணுலகத்தில் இருப்பதை இது காட்டுகிறது.ஆகவே இதை நம்புபவர்களின் ஒழுங்கே இதுவாகும்.

      Delete