சிந்தனைஒளி


யாருக்காவது குழிதோண்டப் போகிறாயா?
 இரண்டாகத் தோண்டு. உனக்கும் சேர்த்து.
சந்தத்தை நம்பி கவிதை இருக்கலாம்,
தந்தத்தை நம்பி யானைஇருக்கலாம்,
சொந்தத்தை நம்பி நீ இருக்காதே,
பந்தத்தை நம்பி மதிப்பை இழக்காதே.
விட்டுக் கொடுங்கள்; விருப்பங்கள் நிறைவேறும்.
தட்டிக் கொடுங்கள்; தவறுகள் குறையும்.
மனம் விட்டுப் பேசுங்கள்; அன்பு பெருகும்.

ஒளிர்வு-(35),- புரட்டாதி 2013:-


உண்மைகள்உரைக்கப்படும்தளம்-தீபம், மூடநம்பிக்கைகளின்முடிவிடம்.

மனநல மருத்துவர் சந்தானம்

'கண்ணா லட்டு திண்ண ஆசையா' என்ற மாபெரும் வெற்றிப் படத்திற்குப் பிறகு அதே கூட்டணி தற்போது மற்றொரு படத்தில் இணைந்துள்ளது. கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்த சேது, சந்தானம், விஷாகா, விடிவி கணேஷ் என இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் தான் 'வாலிப ராஜா'.


கே.வி.ஆனந்திடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ள சாய்கோகுல் ராம்நாத் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் சந்தானம் மனநல மருத்துவராக நடிக்கிறார். விஷாக மனநல மருத்துவம் படிக்கும் மாணவியாக நடிக்கிறார். சேது டிசைனராக நடிக்கிறார். இவர்களுடன் மும்பை நடிகை நுஷ்ரத்தும் நடிக்கிறார்.


வாலிப ராஜா என்பது இப்படத்தில் சந்தானத்தின் கதாபாத்திரப் பெயர். மனநல துறையில் சென்னையில் பிரபலமான மருத்துவராக, படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் சந்தானம் இப்படத்தில் நடித்துள்ளதால், அவருடைய கதாபாத்திர பெயரையே படத்தின் டைடிலாகவும் இயக்குநர் தேர்வு செய்துவிட்டாராம்.

படம் பற்றி கூறிய இயக்குநர் சாய்கோகுல் ராம்நாத், "வாலிப ராஜா என்கிற பெயரை வைத்து இது வாலிபம், கிளுகிளுப்பு சார்ந்த கதை என்று யாரும் யூகம் செய்து விட வேண்டாம். இது ஒரு முழு நீளகுடும்பச் சித்திரம். அதாவது ஃபேமிலி எண்டெர்டய்னர்." என்றவர், இப்படம் குடும்பத்துடன் வந்து பார்க்கும்படியான கலகலப்பான படமாகவும் இருக்கும் என்று உத்தரவாதத்தையும் கொடுக்கிறார்.


தற்போது சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் பாதிப்படத்தை முடித்திருக்கும் இயக்குநர் மீதிப்படத்தை முடிப்பதற்காக, தனது வாலிப ராஜா குழுவினருடன் மதுரை மற்றும் குற்றாலத்திற்குச் செல்ல திட்டமிட்டுள்ளார்.

"அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு": ஒரு விளக்கம்

  April 13 தீபத்தில் ஒரு பெண் எப்போது பார்த்தாலும், வேண்டியது வேண்டாதது எல்லாத்துக்கும் நாணப்பட வேண்டும் என்றும், பயந்துகொண்டே இருக்க வேண்டும் என்றும், முட்டாளாகத் திரிய வேண்டும் என்று நம் முன்னோர்கள்  சொன்னார்கள் என குறிப்பிட்டு ஒரு கட்டுரை எழுதப்பட்டுள்ளதை கவனித்தேன்.அது தொடர்பாக  நான் ஆராய்ந்த போது எனக்கு மேலும் கிடைத்த தகவலை/விளக்கத்தை  கிழே தருகிறேன்.

போர்ச்சூழல் நிரம்பிய பழைய காலச் சங்க சமூகத்தில்,தொல்காப்பியர், களவியலில் ,அதாவது திருமணத்துக்கு முன்னுள்ள காதல் கட்டத்தில்,

96) "அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல்
நிச்சமும் பெண்பாற் குரிய என்ப." என்கிறார் .


இது களவியலுக்கு மட்டும்  தான்! ஒரு காதல் சுவைக்கு என்றும் சொல்லலாம்.

அச்சம் என்றால் பயம்.'மடம் என்றால் முட்டால்,நாணம் என்றால் வெட்கம்,பயிர்ப்பு என்றால் அசுத்தம் - அருவருப்பு,அல்லது கூச்சம்.

இப்ப ஒரு "காதல் களவியலில்" காட்சி ஒன்றை பார்ப்போம்.தலைவன் தலைவி [அல்லது கணவன், மனைவி] இரண்டு பேர் தனிமையில்  இருக்கிறார்கள் என வைப்போம்.

"ஐயோ, இப்பவா! யாராயினும் வருங்கள் ... வேண்டாம்". அச்சம்.இது ஒரு  பொய் அச்சம். இது ஒரு வகை.அடுத்தது சமையலறையில் கரப்பான் பூச்சியைப் பார்த்தால் விளக்குமாறால் ஒரு  போடு போடும் அதே தலைவி,இப்ப காதல் களவியலில் அதே கரப்பான் பூச்சியைப் பார்த்ததும் "ஐயோ! கரப்பான்".. என அலறுவது --பயப்படுவது--ஒரு மழலை மாதிரி பிதற்றி கண்ணைப் பொத்திக்கொள்வது மற்றொரு வகை. 

இப்படி ஒரு காதல் களவியல் சம்பவத்தில்: "சரி போதும்-- அலட்ட வேண்டாம்-- இனி காணும்-- எனக்கும் எல்லாம் தெரியும்" என்று கூற  மாட்டார்கள். தெரிந்திருந்தாலும் தெரியாதது  போல பண்ணும் பாவனை. அது தான் இந்த பொய்  மடம்.

இன்னும் கொஞ்சம் போக,"சீ போங்கோ .. கொஞ்சமாவது வெட்கம் இருக்கா பாரு..". இது பொய் நாணம்."எனக்கு இது பிடித்துத்தான் இருக்கிறது" என்று சொல்லும் ஒரு நாணம்.

இந்த மூன்றும் பொதுவாக காதலுக்கு சுவை சேர்க்கின்றன.தன் தலைவன்  அல்லாத வேறு ஒரு  ஆடவன்/அந்நியன் கெட்ட  எண்ணத்துடன் தொடும்போது உண்டாகும் இயல்பான அருவருப்புணர்ச்சி பயிர்ப்பு  ஆகும்.இந்த உணர்ச்சி பொதுவானது அதாவது ஆணுக்கும் உண்டு என கொள்ளலாம். அதாவது   இவையை கலவியல் கவர்ச்சி என்று கூட சொல்லலாம்.அவ்வளவுதான்.   

இது தான் தொல்காப்பியம் களவியலில் சொல்வது!இது பொதுவாக சொல்லப்படவில்லை என்பதையும் காண்க. தமிழ் சொல்வது இதைத்தான் !இந்த நாலு குணமும் பெண்ணுக்கு வேண்டும் என்றால் எப்போது வேண்டும்? இதை சரியாக புரிய வேண்டாமோ?இது சொல்லப்பட்ட "இடம் பொருள் காலம்" அறிய வேண்டும் .அதை விட்டு 
பொருளைச் சிதைத்து, மாற்றி என்னென்னவோ பொருளெல்லாம் சொல்லி வைத்தனர். 'மண்ணுக்குள்ளே சில மூடர் நல்ல மாதர் அறிவைக் கெடுத்தார்' என்று ஏன் பாரதி கூறினான்? 

பண்டைக்காலத் தமிழரின் அக வாழ்க்கையின் அம்சங்களைத், தன்னைப் பிரிந்து வேற்றூர் சென்ற தலைவனின் வருகைக்காகப் பார்த்திருக்கும் தலைவியின் ஏக்கத்தினூடாகக் கார்காலப் பின்னணியில் எடுத்துக்கூறுகின்ற நூல் கார் நாற்பது.அதில் ஒரு பாடல் இப்படி சொல்கிறது.

"கடல் நீர் முகந்த கமம் சூல் எழிலிஇடம் என ஆங்கே குறி செய்தேம் பேதைமடமொழி எவ்வம் கெட"குட மலை ஆகத்துக் கொள் அப்பு இறைக்கும்

பல நாள்களுக்குமுன்னால் நான் ஊரில் இருந்து கிளம்பிய நேரம், மடப்பத்தை உடைய வார்த்தைகளைப் பேசுகிற என் காதலி என்னைப் பிரிவதை எண்ணி மிகவும் வருந்தினாள். அவளுடைய வருத்தத்தைப் போக்குவதற்காக, ‘மேற்கு மலைமீது மழை பெய்யும்போது நான் திரும்பிவிடுவேன்’ என்று வாக்குறுதி சொல்லி வந்தேன்.இப்போது, அந்த நேரம் வந்துவிட்டது. நாம் சீக்கிரமாக ஊர் திரும்பவேண்டும். தேரை வேகமாக ஓட்டு!என்கிறான்.அது என்ன "மடமொழி"?"மடம்"தான் இங்கேயும் வருகிறது.ஒரு காதல் சுவை!

இதே மாதிரி அந்த சங்க காலத்தில் குறுந்தொகை 135:"வினையே ஆடவர்க் குயிரே" என்று கூறுகிறது.அதாவது ஆண்மக்களுக்குத் தொழில்தான் உயிர் என்பது இதன் பொருள். 

அதாவது "அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு"  என்பது  காதலின் போது மட்டுமே! வாழ்க்கை முழுக்க  இல்லை என்பதை புரிய வேண்டும். 

இதே சங்க காலத்தில் காதல் களவியல் அற்ற சில சம்பவத்தை பார்ப்போம்.

ஒரு நாள், காவற் பெண்டு என்பவரின் இல்லத்திற்கு வந்த ஒருவர் ,அவர் மகன் எங்கு உளன் என்று கேட்டார்.அதற்கு,காவற் பெண்டு "இதோ என் வயிற்றைப் பார்,என தன்  வயிற்றைக் காட்டி,அவனைப் பெற்ற வயிறு இது.புலி இருந்து சென்ற குகை இது".அவள் அச்சம் கொள்ளவில்லை?முட்டாளாக பேசவில்லை?நாணம் கூட பட வில்லை?வீரமாக முழங்கினாள்!

இன்னும் ஒருத்தி போர்ப் பறை கேட்டுத் தன்மகனை-ஒரே மகனை இளம் பிள்ளையை அழைத்துக் கையில் வேலைக் கொடுத்துக் களத்திற்கு அனுப்பினாள் என அவளின் மாண்பினைப் படம்பிடித்துக் காட்டுகிறது. “புறங்காட்டினான் மகன் என்பது உண்மையானால் அவனுக்குப் பாலூட்டிய மார்பினை அறுப்பேன்” எனச் சூளுரைத்தாள் மற்றும் ஒருத்தி.இங்கு ஒரு வீரத் தாயை காண்கிறோம்.ஆகவே எங்கு சொல்லப்பட்டது ,எந்த சூழலில் சொல்லப்பட்டது,ஏன் சொல்லப்பட்டது என்பதை அறிந்து பொருள் கொள்வது மிகவும் சிறந்தது.

குறிப்பு:"வீரத்தை சேர்ப்பது தாய் முலைப் பாலடா" என்றான் பாரதி "கருவினில் வளரும் மழலையின் உடலில் தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை" என்றான்  கண்ணதாசன்.அப்படிப்பட்ட  வீரத் தாயைப் பற்றியும்  அவள் பால் ஊட்டி வளர்த்த புறநானுற்று  மா வீரர்களைப் பற்றியும்  5 பகுதிகளாக ஒரு கட்டுரை  விரைவில் சமர்ப்பிக்க உள்ளேன் 
[-கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

இறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும் பகுதி 05"A":‏

Death & Its Beliefs of Tamils
[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்/
 Compiled by: Kandiah Thillaivinayagalingam]

பண்டைய இலக்கியத்தில் மரணம்"
[புறநானூறு & நாலடியார்]

 " ஓர்ந்தஉள் அகத்தே நிறைந்தொளிர் கின்ற 
          ஒருவனே உலகியல் அதிலே 
     மாந்தர்கள் இறப்பைக் குறித்திடும் பறையின் 
          வல்லொலி கேட்டபோ தெல்லாம் 
     காந்திஎன் உள்ளம் கலங்கிய கலக்கம் 
          கடவுள்நீ யேஅறிந் திடுவாய் 
     ஏந்தும்இவ் வுலகில் இறப்பெனில் எந்தாய் 
          என்னுளம் நடுங்குவ தியல்பே."
   [திருவருட்பா3428.]

மெய்ம்மை பொய்ம்மைகள் பகுத்துணர்ந்த பெருமக்கள் உள்ளத்தே ஒளி நிறைந்து விளங்குகின்ற ஒருவனாகிய பெருமானே!உலக வாழ்வில் மக்களின் சாவைக் குறிக்கும் பறை மேளத்தின் வன்மையான ஓசையைக் கேட்ட போதெல்லாம் என் மனம் வெதும்பிக் கலங்கிய கலக்கத்தைக் கடவுளாகிய நீ நன்கு அறிவாய்;உயர்ந்த இவ்வுலகில் சாக்காடு என்றால் என் உள்ளம் நடுங்குவது இயற்கையாம்-வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் (அக்டோபர் 5, 1823 - ஜனவரி 23, 1873) இப்படி கூறுகிறார் 

"களிறே கதவு எறியாச் சிவந்து உராஅய்
நுதி மழுங்கிய வெண் கோட்டான்
உயிர் உண்ணும் கூற்றுப் போன்றன;"
[புறநானூறு 4/மரணத்தின் தமிழ் கடவுளை-கூற்றுவன்,காலன்,மறலி என சங்க இலக்கியத்தில் கூறுவர்]

யானைகள்,மதிற்கதவுகளை வெகுண்டு மோதியதால் அவற்றின் வெண்ணிறமான தந்தங்கள் மழுங்கின.அந்த யானைகள் உயிரைக் கொல்லும் கூற்றுவனைப் போல் காட்சி அளிக்கின்றன என்கிறார் இரண்டாயிரம் ஆண்டுகளிற்கு முற்பட்ட ஒரு சங்க புலவன்.

இரண்டு பாட்டிலும் ஒரு பயத்தை,கலக்கத்தை காண்கிறோம்.அந்த குழப்பமே இன்றைய நூற்றாண்டு கவிஞரை [கண்ணதாசனை] "காற்றொன்றை இந்தக் கட்டையிலே விட்டுவைத்த கூற்றுவனைக் காணாமல் குழப்பம் அகல்வதில்லை" என்று  சொல்லவைத்ததோ? 

புறநானூறு 192,இல் கணியன் பூங்குன்றன் "சாதலும் புதுவது அன்றே; வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே;" என்று கூறுகிறான்.அதாவது சாதலும் புதி தன்று,கருவிற்றோன்றிய நாளே தொடங்கியுள்ளது என்கிறான். 

அது மட்டும் அல்ல புறநானூறு 214 இல் கோப்பெருஞ் சோழன் ஒருவேளை மாறி மாறி பிறவாமல் போய்விட்டாலும்[மறு பிறப்பு என்று ஒன்று இல்லாமல் இருந்தாலும்],இமயமலையின் ஓங்கிய சிகரம் போல்,நம் புகழை நிலை நிறுத்த பழியற்ற தன் உடலோடு சேர நின்று இறத்தல் சிறந்தது என்று இங்கு ஆலோசனை வழங்குகிறார்.

"மாறிப் பிறவார் ஆயினும், இமையத்துக்
கோடுயர்ந் தன்ன தம்மிசை நட்டுத்,
தீதில் யாக்கையடு மாய்தல் தவத் தலையே"

ஆனால் பதிணென் சித்தர்களில் ஒருவரான சிவவாக்கியார் அடித்துச் சொல்கிறார்.மறுபிறப்பு என்று ஒன்று இல்லை இல்லைவே என்று. 

"கறந்தபால் முலைப்புகா, கடைந்தவெண்ணெய் மோர் புகா,
உடைந்து போன சங்கின் ஓசை உயிர்களும் உட்புகா,
விரிந்தபூ உதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம்புகா, 
இறந்தவர் பின் பிறப்பதில்லை,இல்லை,இல்லை இல்லையே!"  

இனி சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நானூறு தனிப்பாடல்களின் தொகுப்பான நாலடியாரில் சில பாடலை பார்ப்போம்  

"நட்புநார் அற்றன நல்லாரும் அஃகினார்
அற்புத் தளையும் அவிழ்ந்தன;-உட்காணாய்;
வாழ்தலின் ஊதியம் என்னுண்டாம்? வந்ததே
ஆழ்கலத் தன்ன கலி" [நாலடியார் 12]

இங்கு “உற்ற நண்பர்களின் தொடர்பு அற்றுபோகும்,மகிழ்ச்சியூட்டினாரும் குறைந்து போவர்,ஆய்ந்து பார்த்தால் வாழ்வின் அர்த்தம் இருக்காது,அமைதியான ஆழ் கடலில் மூழ்கும் கலம் ஏற்படுத்தும் முனகல் போன்றது மரணத்தின் அழு குரல்” என்று சொல்கிறது.மேலும் இன்னும் ஒரு பாட்டில்,வாழ்வு எவ்வளவு நிலை இல்லாதது? என்று சொல்கிறது  
"நின்றன நின்றன நில்லா எனஉணர்ந்து
ஒன்றின ஒன்றின வல்லே செயின்செய்க;
சென்றன சென்றன வாழ்நாள் செறுத்துடன்
வந்தது வந்தது கூற்று." [நாலடியார் 4]

“வாழ்க்கையில் எதை நிலையானது என்று நினைத்து மனம் அலை பாய்கின்றதோ அது நிலையற்றது.செய்ய வேண்டியது ஒரே காரியம் என்றாலும்,அதை விரைந்து செம்மையாக முடியுங்கள்,மரணம் எப்போது வேண்டுமானாலும் வரலாம்,வாழ் நாள் அறுதியில் முடிந்து விடும்”.(ஏனெனில்) வாழ்நாட்கள் விரைந்து போய்க்கொண்டே யிருக்கின்றன . கூற்றுவன் வந்துகொண்டேயிருக்கிறான்].மரணம் எதன் பொருட்டும், யார் பொருட்டும் நில்லாது என்கிறார் . 

கம்பராமாயணத்தில் "நீர்கோல வாழ்வை நச்சேன், தார்கோல மேனி மைந்தா" என கூறப்படுகிறது.அதாவது நறுமண பூக்களை மாலையாக அனிந்த அண்ணா,நீரின் மீதிட்ட கோலத்தை போன்றது வாழ்கை,இவ்வுயிர்ரை காக்க முனையேன்.ராமனுடன் போர் புரிந்து உயிர் விடவே என் விருப்பம் என்பான்
கும்பகருணன்.

அது மட்டும் அல்ல தமிழர்களின் திருக்குறளில் நிலையாமை குறித்து 34வது அதிகாரத்தில் மிகவும் சிறப்பாக கூறப்படுகின்றது. 

பகுதி 05 "B":"பண்டைய இலக்கியத்தில் மரணம்"[திருக்குறள்]அடுத்தவாரம் தொடரும் 

ஜி.பி.எஸ் ன் எதிர்கால வரவுகள்...


இன்று ஜி.பி.எஸின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது எனலாம்.
ஜி.பி.எஸ். (Global Positioning System) என்றழைக்கபடும் சாதனங்கள், சாட்டலைட்டின் உதவியுடன், நம்மை வழி நடத்தும் சாதனங்களாக அறிமுகப்படுத்தப்பட்டன. அப்போது அவை தொழில் நுட்பத்தில் புதியதொரு புரட்சியையும், சாதனையையும் ஏற்படுத்தியதாக அறியப்பட்டன.
அதன் பின்னர், பெரிய பளிச் என்ற திரைகளுடன், ஸ்மார்ட் போன்கள் வந்தன. ஜி.பி.எஸ். சாதன வசதிகளைக் குறைந்த விலையில் தரும் சாதனங்களாக இவை அமைந்தன. இவை இயக்குவதற்கு எளிதானதாகவும், ஜி.பி.எஸ். சாதனங்களைக் காட்டிலும் விலை குறைவாகவும் இருந்தமையால், மக்கள் ஜிபிஎஸ் வசதி கொண்ட ஸ்மார்ட் போன்களையே அதிகம் நாடினார்கள்.
இதனாலேயே, ஜிபிஎஸ் சாதனங்களை வடிவமைத்த நிறுவனங்கள், நவீன தொழில் நுட்ப அடிப்படையில், கூடுதல் வசதிகளுடன் புதிய சாதனங்களைத் தரத் தொடங்கி உள்ளனர். அவற்றை இங்கு பார்க்கலாம்.

இணைப்பின்றி கூகுள் மேப்ஸ் :
ஸ்மார்ட் போனில் ஜிபிஎஸ் வசதிகளைப் பெற மொபைல் இணைப்பு பெற்றிருக்க வேண்டும். ஆனால் அண்மையில் கூகுள் அறிவித்தபடி, கூகுள் மேப்ஸ் டேட்டாவினை ஸ்டோர் செய்து வைத்துப் பயன்படுத்தும். இதனால் எந்த இடத்திலும் இணைப்பு எதுவுமின்றி நாம் ஜிபிஎஸ் வசதிகளைப் பெறலாம்.

ஜிபிஎஸ் வசதியுடன் கேம்கார்டர்:
ஜி.பி.எஸ். மூலம் ஜியோடேக்கிங் வசதி, அதாவது எந்த இடத்தில் நீங்கள் படம் எடுக்கிறீர்கள் என்ற தகவலைப் பதியும் வசதி, கிடைக்கிறது. இப்போது வந்திருக்கும் தொழில் நுட்ப வசதி மூலம், ஜிபிஎஸ் வசதி கொண்ட கேமராவினை ஹெல்மெட் அல்லது உங்கள் சைக்கிளில் இணைத்து, படம் எடுத்து, பின்னர் அதனை கம்ப்யூட்டரில் இணைத்து, இடத்தைக் குறிப்பிட்டு இணைக்கலாம்.

காருக்கான பிளாக் பாக்ஸ்:
தனியாகச் செயல்படும் ஜிபிஎஸ் சாதனங்கள், இனி அது இணைக்கப்பட்டுள்ள வாகனம், எங்கெல்லாம் செல்கிறது என்பதைப் பதிவு செய்து வைத்திடும். இதன் மூலம் ஒரு வாகனம் தற்போது எங்கிருக்கிறது என்பதனை அறிந்து கொள்ளலாம்.

ஜிபிஎஸ் ஜாம்மர்:
உங்களுடைய வாகனம் ஒரு ஜிபிஎஸ் சாதனத்தால் அறியப்படுவதனைத் தடுக்கும் ஜிபிஎஸ் ஜாம்மர்கள் சந்தைக்கு வர இருக்கின்றன. இதனை உங்கள் காரில் இணைத்துவிட்டால், எந்த சாட்டலைட்டும் உங்கள் கார் நடமாட்டத்தினைக் கண்டறிய முடியாது.

மிகச் சிறிய ஜிபிஎஸ் சாதனம்:
வரும் காலத்தில், ஜிபிஎஸ் சாதனத்தை வைத்திட, அதிக இடம் ஒரு வாகனத்தில் தேவைப்படாது. பின்னால் உள்ளதைக் காட்டும் கண்ணாடியில் நான்கு அங்குலம் இருந்தால் போதும்; இதனைப் பொருத்திவிடலாம். உங்கள் மொபைல் போனுக்கான புளுடூத் இணைப்பும் இதில் கிடைக்கும்.
ஜி.பி.எஸ். தரும் வசதிகள் அடுத்த ஆண்டில் இன்னும் பலவாறாய் அதிகரிக்க இருக்கின்றன. இதனால், நம் நண்பர்கள் உலகம் இன்னும் சிறியதாக மாறி, அனைவரும் ஒருவருக்கொருவர் இணைப்பில் இருக்க இந்த சாதனங்கள் உதவும்.

மாற்று உறுப்பு அறுவை சிகிச்சை விடைபெறுகிறது


மேட்ரிட், ஸ்பெயின் : மாற்று கல்லீரல், மாற்று இருதயம்  என்று மாற்று உறுப்புகள் பொருத்தும் அறுவை சிகிச்சைகள் இனி பழையதாகி விடும். எந்த உறுப்பை இழந்தாலும் சம்பந்தப்பட்டவர் உடலிலேயே ‘ஸ்டெம் செல்’ எடுத்து, சம்பந்தப்பட்ட உறுப்பை உருவாக்கி பொருத்தும் நவீன எளிய சிகிச்சைகள் வரும் காலம் நெருங்கி விட்டது. 
  ஸ்பெயின் நாட்டில் மேட்ரிட் நகரில் உள்ள தேசிய புற்றுநோய் சிகிச்சை ஆராய்ச்சி மைய தலைவர் மேனுவல் செர்ரானோ தலைமையிலான மருத்துவ நிபுணர்  குழு இந்த நவீன சிகிச்சைக்கான ஆராய்ச்சியில் வெற்றி கண்டுள்ளது. 
இது குறித்து செர்ரானோ கூறியதாவது: ஸ்டெம் செல் என்பது நம் உடலில் உள்ளவை தான். கரு உருவாகும் போதே இந்த செல்கள் உருவாகின்றன. இவை தான் கை, கால், தசை, எலும்புகள், ரத்தக்குழாய்கள் என்று பல்வேறு உறுப்புகளாக மாறி செயல்படுகின்றன.  உறுப்புகள் பழுது பட்டால், அதற்கு  மற்றவர்களிடம்தான்  தானமாக பெற வேண்டும்.கல்லீரல் போன்ற மாற்று உறுப்புகள் மற்றவர்களிடம் இருந்து பெறுவது என்பது அரிதான செயல். 
யார் உதவியையும் நாடாமல் இருக்க ஸ்டெம் செல் தொழில்நுட்பம் தான் சிறந்தது. இது மாற்று உறுப்பு அறுவைசிகிச்சைக்கு மாற்றாக வரப்போவது உறுதி. குறிப்பாக புற்றுநோய் செல்களை நீக்கி, புதிய செல்களை வளர்த்துக்கொள்ள ஸ்டெம் செல் தொழில்நுட்பம் மிகுந்த பலன்  அளிக்கும் என்பது உண்மை என்றார். 
எக்ஸ்ட்ரா தகவல் 
நம் உடலுக்கு மிக முக்கியமானது உயிரணு. இது தான் செல் எனப்படுகிறது. இதில் இருந்து தான் எல்லா உறுப்புகளும் உருவாகின்றன.

இறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும்{பகுதி 04 "B":"}

Death & Its Beliefs of Tamils:
[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்/ 
Compiled by: Kandiah Thillaivinayagalingam]

மரணம் குறித்த சொற்கள்[11 to 25]"


[11]மாண்டார்

"யாண்டுபல வாக , நரையில ஆகுதல்
யாங்கு ஆகியர்?’ என வினவுதிர் ஆயின்,
மாண்டஎன் மனைவியோடு, மக்களும் நிரம்பினர்;
யான்கண் டனையர்என் இளையரும்; வேந்தனும்
அல்லவை செய்யான், காக்க; அதன்தலை
ஆன்றுஅவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர் யான் வாழும் ஊரே."
புறநானூறு Purananuru 191

பிசிராந்தையர் என்ற சங்க புலவன் ஒருவன் தன் நரையின்மைக்குச் சொன்ன காரணங்களுள் ஒன்று ‘மாண்ட மனைவி’. அதன் பொருள்  மாட்சிமை கொண்டது  எனப்படும். மாண்ட என்னும் சொல்லை இறந்த என்று தவறாகவே புரிந்துகொள்ளுமளவு அச்சொல் இப்ப பழக்கத்தில் வந்து விட்டது.  

[12]காலகதி அடைந்தார்

காலத்தின் கதி அடைதல்; ஒருவர் வயதாகி மரணம் அடைந்தார் என்பதைக்
குறிக்கும் மங்கலப் பயன்பாடு.வயதான மனித ஜீவனின் இயற்கையான இறப்பைக் குறிக்கப் பத்திரிகைகள் முன்பு பயன்படுத்தி வந்த சொல் காலகதி.
அதாவது காலத்தின் கதி என்பது இயற்கையான மரணத்தை அல்லது மூப்பு இறப்பை குறிக்கிறது. 

[13]காலமானார்

இங்கே,ஏறக்குறைய காலமானார் என்ற சொல்லின் முந்தைய வடிவமாகக்கூடக் ‘காலத்தினடை’ என்ற பொருள் தரும் காலகதி என்ற சொல்லைக் கருதலாம்.மேலும் இறந்தார் என்பதன் இடக்கரடக்கல்[euphemism] காலமானார் என்பதாகும் 

நாகரிகம்  கருதி,மற்றவர் முன் கூறத்தகாத சொல்லை அல்லது சொற்றொடரை வேறொரு சொல் அல்லது சொற்றொடர் கொண்டு வெளிப்படுத்துதல் இடக்கரடக்கல் எனப்படும்.“இடக்கர்” என்பதற்கு சொல்லக்கூடாத சொல் என்று பொருள். அமங்கள நிகழ்வை மங்களப்படுத்திக்கூறுவதும் இடக்கரடக்கலாகவே கொள்ளப்படும்.

[14]மடிந்தார்

மடி என்பதன் வினைச்சொல்:துணி அல்லது காகிதத்தைப் போன்ற பொருளை மடக்கி சிறிதாக்குதல் அல்லது இறந்து போதல் ஆகும் 

[15]துஞ்சல்

"துஞ்சல் பிறப்பறுப்பான் தூய புகழ்பாடிப் புஞ்சமார் வெள்வளையீர் பொன்னூசல் ஆடாமோ."[திருப்பொன்னூசல் - திருவாசகம் 332]
இங்கு "துஞ்சல் பிறப்பு அறுப்பான்" - இறப்பு பிறப்புகளை அறுப்பவனுமாகிய என்று பொருள் படுகிறது.பண்டைய இலக்கியத்தில் இறப்பு துஞ்சல் என்று வழங்கப்பட்டது.இறப்பை நீண்ட தூக்கமாகக் கருதியதால் துயிலுதல் என்ற பொருளுடைய துஞ்சல் வந்திருக்க கூடும்.துயில் = ஆழ்ந்த அசைவில்லாத நிலை.துஞ்சல் என்பது துயிலின் நீட்டமே ஆகும் 

[16]கண் மூடினார்

கண் மூடினார் என்ற வழக்கும் ஏறக்குறைய தூக்கம் என்பதன் தொடர்பில் உருவாகியிருக்கக்கூடும்.

[17]போய்ச் சேர்ந்தாரு/போய்ட்டாரு

போய்ச் சேர்ந்தாரு, போய்ட்டாரு போன்றவை சொர்க்கம், நரகம் போன்ற மத நம்பிக்கைகளின் அடிப்படையில் உருவான பண்பாட்டு சொற்களாகும் 

[18]மண்டயப் போட்டாரு
[19]தவறிட்டாரு 
[20]டிக்கெட் வாங்கிட்டாரு 
[21]உயிர் நீத்தார்
[22]பிரிந்துவிட்டார்
[23]ஆவி நீத்தார்
[24]முடிவெய்தினார்
[25]இயற்கை எய்தினார்

என்னும் மதச் சார்பற்ற சொற்கள் மூலமாகவும்  இரங்கல் குறிப்புகளை எழுதலாம் பயன்படுத்தும் மக்களின் பண்பாட்டுத் தரத்தையும் ஒருவாறு உணர்த்திவிடுவன இவை.மனித இறப்பால் பூமிக்குப் பயன்தானே! பாரம் குறைகிறது மற்றும் நிலம் வாழ் நுண் உயிர்க்கு இறந்த உடல் உணவாகப் பயன்படுகிறது.அதனால்தானோ என்னவோ ‘பூமி லாபம்’ என்ற சொல்கூடப் பழந்தமிழில் மரணத்தையே குறித்தது என்கிறார்கள் .

நாம் மேலே கூறியவாறு ஆன்மத்துறை சாராத உலக வாழ்க்கை ஒரு தற்காலிகமானதே.நிறைந்த துயர்மிகுந்ததும், மகிழ்ச்சியற்றதும்  மாறக்கூடியதும் ஆகும்.நேற்று மாதிரி இன்று இருப்பதில்லை.இன்று மாதிரி நாளை இருக்கப்போவதில்லை.வாழ்க்கை  என்பது ஒரு மாயை,ஒரு பரம ரகசியம்.அடுத்தது என்ன நடக்கும் என்று எமக்கு தெரியா.இந்த நிலையற்ற வாழ்க்கையில்  நாம் சம்பாதித்த எமது விவேகம் அல்லது மெய்யறிவு  ஒன்றே எமது வாழ்விற்கு ஒரு கருத்தை/மதிப்பை கொடுக்கிறது.ஆகவே  முடிவான உண்மையை அறியும் தேடுதலை கைவிட வேண்டாம்.ஏனென்றால் உண்மையை அறிந்தவுடன்,உங்கள் வாழ்க்கை ஒரு கருத்துள்ளதாக மாறுகிறது.ஆகவே இந்த நிலையற்ற வாழ்க்கையில் நிலையான உண்மையை தேடி அறிதலில் ஒரு தவறும் இல்லை.இது சும்மா நேரத்திற்கு நேரம் குடித்து,சாப்பிட்டு,உறங்குவதை விட எவ்வளவோ மேல்! 

அதன் ஒரு படியாக எமது பண்டைய இலக்கியம் என்ன கூறுகிறது என அடுத்த பகுதியில் பார்ப்போமா ?

 அடுத்தவாரம் -பகுதி 05:"பண்டைய இலக்கியத்தில் மரணம்" தொடரும் 

நல்லோரின் நட்பைப் பெறுவது எப்படி?

மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வேண்டும் என்றால் நேர்மறையாக சிந்திக்கும் ஆற்றல் இருக்க வேண்டும்.
எல்லா காரியங்களிலும் குறை கூறுகிற ஒருவரால் எந்த இனிமையான சூழ்நிலையையும் மகிழ்ந்து அனுபவிக்க முடியாது.

ஆசை

நேர்மறையான நபராக மாறுவதற்கு முதலில் தேவைப்படுவது, நேர்மறையான எண்ணம்.
நேர்மறை என்பது ஒரு நறுமணம் போன்றது, நேர்மறையாக இருந்தால் அறிமுகம் இல்லாதவர்களும் கனிவாக நடந்து கொள்வார்கள், உடன்பணியாளர்கள் பாராட்டுவார்கள், சுலபமாக உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

புதிய முயற்சிகள்

தினசரி வாழ்க்கை சம்பவங்களை பார்த்து, அவற்றை நேர்மறையாக எவ்வாறு கையாள்வது என்பதை குறித்து யோசிக்க வேண்டும்.

ஒவ்வொரு நாளையும் இனிய நாளாக மாற்ற, ஐந்து வழிகளை யோசிக்கவும்.

முக பாவணைகளை வைத்து காரியங்களை அறிந்து கொள்ள கற்றுக் கொள்ளலாம். மற்றவரை நம்புகிற தன்மை நேர்மையை வெளிப்படுத்தும்.

பேச்சு மற்றும் உடல் பாவணை

தினசரி பயன்படுத்தும் வார்த்தைகளில் நேர்மறையாக இருக்கவும். நட்பு உடையவராகவும், எளிதில் அணுகக்கூடியவராகவும் காணப்படும்படி உடல் பாவனைகளை பயன்படுத்த வேண்டும்.

ஒருவர் வியக்கத்தக்கவாறு இருந்தால் அவரை பார்த்து வியக்கவும், நகைச்சுவைகளுக்கு சிரிக்கவும், ஒருவர் புதிதாக செய்தால் அவரை பாராட்டவும், ஒரு காரியத்தை குறித்து மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அவர்களே சொல்ல அனுமதிக்கவும்.

செயல்பாடுகள்

எப்போதும் செயல்பாடற்று ஆழ்ந்த சிந்தனையோடே இருக்கக்கூடாது. பிறருடனோ அல்லது தனியாகவோ நேர்மறையான செயல்பாடுகளை செய்ய வேண்டும்.

நல்ல நகைச்சுவையை பகிர்ந்துகொள்ளவும், இனிமையான ஒரு சம்பவத்தை விவரிக்கவும், விளையாட்டுகளில் பங்கெடுத்துக் கொள்ளவும், வேலை நேரத்திற்கு பிறகு மாலையில் நன்றாக ஓடவும்,

நல்ல ஆரோக்கியமான உடல் உறவை பெற்றிடுங்கள் இவற்றின் மூலமாக நேர்மறை ஆற்றல் அதிகரிப்பதை காணலாம்.

எதையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவும்

வாழ்க்கை தினந்தோறும் பல அதிர்ச்சிகளை கொடுக்கும். அதன் தாக்கத்தை குறைத்து, தோல்களை குலுக்கி அவற்றை உதரிச் செல்ல வேண்டும்.

சில காரியங்களை மாற்ற முடியாது என்பதை உணர்ந்து கொண்டால் மற்றவர்களுடன் எளிதாக நடந்துகொள்ளலாம்.

ஒரு குறிப்பேட்டை பராமரிக்கவும்

நாளின் எல்லா நிகழ்வுகளையும் எழுதி வைப்பதற்கு பதிலாக, நேர்மறையான காரியங்களை மாத்திரம் தேர்ந்தெடுத்து அவற்றை குறித்து வைக்கவும்.

சிறிய காரியங்களில் நேர்மறையான காரியங்களை பார்க்கும் போது, எதிர்மறையான சிந்தனைகளுக்கு இடம் இருக்காது.

எவருக்கு?எது? அநாகரிகம்.


சம்பிறதாயம் என்பது(சம்பு + பிறம் + தாயம்) நாம் பிறந் ததை தொடர்ந்து, தாய் வழியாக வாழ்ந்து வரும் பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் என்பவற்றையே சம்பிரதாயம் என பொருள்படும். இதற்கிணங்க ஒவ்வொரு நாட்டு மக் களும் வெவ்வேறு வகையான சம்பிறதாயங்களை கொண் டுள்ளனர். இவ்வாறு உலகில் சில நாட்டு மக்கள அநாகரிகமாகக் கருதும் சில பழக்க வழக்கங்களை பார்போ மேயானால்,

ஆபிரிக்க நாடுகளுக்கு செல்லும் போது மேலே கையைத் தூக்கி அசைப்பது அநாகரிகமாகக் கருதப்படுகின்றது.

சீனாவில் கடிகாரத்தை பரிசாகக் கொடுத்தல் அநாகரிகமாகக் கருதப்படுகின்றது. ஏனெனில் அது அவர்களுக்கு மரணச்சின்னம் ஆகும்

கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் கையுறை அணிந்து கொண்டு கைலாகு கொடுப்பதை அநாகரிகமாகக் கருதுகின்றார்கள்.

எகிப்து நாட்டில் வெங்காயத்தை கொடுப்பதை அநாகரிகமாகக் கருதுகின்றார்கள்.

என்ன வேலை செய்கின்றீர்கள்? என்று இத்தாலி நாட்டில் கேள்வி கேட்பது அநாகரிகமாகக் கருதப்படுகின்றது.

படுக்கை மெத்தையில் தொப்பியை வைப்பது அர்ஜென்டினாவில் அநாகரிகமாகக் கருதப்படுகின்ற்து.

ஜப்பான் நாட்டில் குனியாமல் வணக்கம் சொல்லுதல் அநாகரிகமாகக் கருதப் படுகின்றது.

சிவப்பு மையில் பெயர் எழுதுவதை கொரியாக்காரர்கள் அநாகரிகமாகக் கருது கின்றார்கள்.

அறிமுகமாகாத பெண்களுக்கு உதவி செய்தலை பிலிப்பைன்சில் அநாகரிகமாகக் கருதுகின்றார்கள்.ஏனெனில் அது நம் ஆசையை வெளிப்படுத்துவதாக அங்கே எடுத்துக் கொள்ளப்படுகின்றது.

தாய்லாந்தில் தலையில் கைவைத்து வாழ்த்துவதை அநாகரிகமாகக் கருதுகின்றார்கள்.

பகுதி 04 "A"-இறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும் :‏

Death & Its Beliefs of Tamils:
[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்/
 Compiled by: Kandiah Thillaivinayagalingam]

 "மரணம் குறித்த சொற்கள்[1 to 10]" 


மரண பயமும் மரணத்திற்குப் பின் என்ன? என்பது பற்றிய அச்சமும் மனிதனை ஆட்டிப்படைத்தன.சமயங்கள் அதற்குப் பதில் சொல்ல முயன்றன.சமயம் அளித்த விளக்கங்களைத் தான் புரிந்துகொண்ட அளவிலும் ஏற்றுக்கொண்ட அளவிலும் மரணத்தை ஒருவாறு எதிர்கொண்டான் மனிதன்.மலர்வதாகவும் உதிர்வதாகவும் பிறப்பு,இறப்பைக் குறித்தத்துடன் அவன் பயன்படுத்திய வார்த்தைகள் அவன் புரிந்து கொண்ட அளவை நமக்குச் சொல்கின்றன.மரணத்திற்குப் பின் என்ன என்ற கேள்விக்கு மனிதன் புரிந்துகொண்ட பதில்களின் அடிப்படையில்தான் மரணம் குறித்த சொற்கள் அவர்களுக்கிடையில் அமைந்தன.அந்தப் புரிதலை அவனது சமய நம்பிக்கைகள் அல்லது அவநம்பிக்கைகள் உருவாக்கின எனலாம்.அது பண்பாட்டு உருவம் கொள்ளும்போது பல்கிப் பெருகும் சொற்களாயின.அந்த வார்த்தைகளில்,25 சொற்களை கிழே பார்ப்போம்.

[1]செத்தார்[செத்த-Lifeless/Death] 

"செத்தார் பெறும்பய னாவதி யாதெனில்
செத்துநீர் சேர்வது சித்தினைக் கூடிடில்
செத்தார் இருந்தார் செகத்தில் திரிமலம்
செத்தார் சிவமாய திண்சித்தர் தாமே."
[திருமூலரின் திருமந்திரம், 1907)

"திரிமலம் செத்தார்"என்ற தொடரை ஆணவம்,கன்மம்,மாயை ஆகிய மும்மலங்களை செற்றார்/அழித்தார்/வெறுத்தார் அல்லது மும்மலங்களும் கெடப்பெற்றோரே என்று விளக்கம் தரப்படுகிறது.மேலும் குறள் 1245 இப்படி கூறுகிறது:
  
"செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம் உற்றால் உறாஅ தவர் நெஞ்சே"

அதாவது"செற்றார் எனக்கை விடல்உண்டோ?"-நம்மை வெறுத்து விட்டார்[செற்றார்-வெறுத்தார்/பகைவர்] என நினைத்து அவர் மீது கொண்ட காதலைக் கைவிட்டு விட முடியுமா?என வினாவுகிறது. 

ஆகவே "செற்றார்" என்பதன் பிந்தைய வடிவமே "செத்தார்" என்பதாக இருக்கலாம்?

[2]இறைவனடி சேர்ந்தார்


இறைவனடி என்பது கடவுளின் திருவடிகளை ஆகும்,"இறைவனடி முறைமுறையின் ஏத்துமவர் தீத்தொழில்கள் இல்லர்மிகவே" என்கிறது திருமுறை 3.73.6 .அதாவது திருஞானசம்பந்தர் "இறைவனின் திருவடிகளை நாடொறும் முறைமையோடு போற்றி வணங்குபவர்கள் துன்புறும் வினைகளிலிருந்து முற்றிலும் நீங்கியவராவர்" என்கிறார் அப்படி பட்ட திருவடிகளை சேர்ந்தார் என்பதே பொருளாகும். 

எனினும் அவர் அவர் நம்பிக்கைகளை பொருத்து இறைவனடி சேர்வதிலும் வேறுபாடுகள் இருக்கின்றன.சிவலோக பதவியைச் சைவர்களும் வைகுண்ட பதவியை வைணவர்களும் அடைகிறார்கள் என நம்புகிரார்கள்.அப்படியே மற்ற சமயத்தவர்களும். 

[3]இறந்தார்   
[4]மறைந்தார் அல்லது மறைந்துவிட்டார்


இப்படி குறிப்பிடுவோர் மத அடையாளங்களைத் தவிர்க்க நினைப்போர் ஆவார்.பிறப்பின் இறுதி நிலை இறப்பு என்பது இறந்தார் என்போரின் கருத்து ஆகும்.அது போல இவ்வுலகில் தோற்றம் காட்டியவர் இப்போது கண்ணுக்குத் தெரியவில்லை என்பது மறைந்தார் என்று சொல்பவர்களின் எண்ணம் ஆகும் 

[5]தேக வியோகமானார்[தேகத்தைத் துறந்தார்]

வியோகம் என்னும் சம்ஸ்கிருதச் சொல்லுக்குப் பிரிதல்,விடுதல் என்று பொருள்.தேகம் என்ற சொல் உடல், மேனி,சரீரம்,காயம் என்று பொருள் படும் ஆகவே அவர் தனது இந்த உடலை இழந்து விட்டார் என பொருள் படும்.அதாவது அவர் உயர் சாகவில்லை.அவரின் உயர் மீண்டும் மறுபிறப்பு எடுத்து இன்னும் ஒரு உடலில் தங்கும் என்பதே அதன் உள் பொருளாகும். 

[6]முத்தியடைந்தார்

பிறவா பேரின்ப நிலையான முக்தி அடைதலே சித்த நிலை எனப்படுகிறது.கர்ம வினையால் பிறந்து,இறந்து, மீண்டும் மீண்டும் உழன்று கொண்டிருக்கும் உயிர்கள்,இந்தப் பிரபஞ்சச் சக்கரத்தினின்று விடுதலை பெறுதலை ‘முக்தி’ என்கிறோம்.விடுதலை என்பதால் அந்த நிலைக்கு வீடு என்னும் பெயர் ஏற்பட்டது.வீடு பேறு, முக்தி, மோக்ஷம் இவை எல்லாமே விடுதலை என்னும் பொருள் கொண்டவை ஆகும்.

[7]சமாதியடைந்தார்

"சமாதி"-பூரண நிலை என்னும் முடிவுநிலை.சமாதி = சமம் + ஆதி = அதாவது ஆதியும் அந்தமுமாய் சொல்லப்படுகிற இறை நிலைக்கு சமனான ஒன்றுமற்ற அல்லது வெறுமையான மனநிலையில் இருப்பதே சமாதி எனப்படும்.

"சமாதி செய்வார்க்குத் தகும் பல யோகம்
சமாதிகள் வேண்டா இறையுடன் ஏகில்
சமாதி தானில்லை தான் அவனாகில்
சமாதியில் எட்டெட்டுச் சித்தியும் எய்துமே." [மூன்றாம் தந்திரம்-9] 

சமாதியும் முக்தியும் சமய நம்பிக்கையின் அடிப்படையில் பிறந்த சொற்களே.

[8]சித்தியடைந்தார்.

சித்தி என்பதன் பொருள் கைகூடுதல் ஆகும்.அதன் இன்னும் ஒரு பொருள் மோட்சம் ஆகும்."சித்தியும் சித்தி தரும் தெய்வம் ஆகித் திகழும் பரா சக்தியும்"[அபிராமி அந்தாதி]- எல்லா நலன்களும் கிடைக்கும் சித்தியும்,அப்படி எல்லா சித்திகளையும் தரும் தெய்வமாக விளங்குகின்ற பராசக்தியும்-என்கிறது  

[9]அமரரானார்
அமரரானார் என்பதன் நேர்ப் பொருள் மேல்உலக வாசி[வானோர்] ஆனார் என்பதே.(சாகாதவர் என்னும் பொருள் உடைய)
[10] மலரடி சேர்ந்தார்

" கூண்டுகள் திறந்து வைத்த பறவைகள் போல்
  குதுகலத்துடன் உந்தன் மலரடி வருகிறோம்"
[மலரடி வணங்குவோம்/திரு.அல்போன்ஸ்]

"மலர்மிசை நடந்தோன் மலர் அடி" -(சிலப். 10, 204), அதாவது தாமரைப் பூவின்மீதே நடந்தவனாகிய அக்கடவுளுடைய மலர்போன்ற அழகிய திருவடிகளை என்கிறது சிலப்பதிகாரம். 

முக்தி அடைந்தார், சமாதி ஆனார்,சித்தி அடைந்தார்,இறைவன் மலரடி சேர்ந்தார்,அமரரானார், எனச் சமயப் பெரியவர்களின் இறப்பை பொதுவாக  குறிக்கிறார்கள்.

பகுதி 04"B": "மரணம் குறித்த சொற்கள்[11 to 25]"அடுத்த வாரம் தொடரும் 

கடவுள் தண்டிப்பாரா?


இமயமலையில் யாத்திரையாக பிரம்மச்சாரிகளோடு சென்றிருந்தபோது, ஒரு பிரம்மச்சாரி என்னிடம் கேட்டார், “கடவுள் தண்டிப்பாரா?” என்று.”தண்டிப்பவர் கடவுளாய் இருக்க முடியாது” எனச் சொன்னோம்.உடனே அவர் கேட்டார், “அப்படியானால் கெடுதல்கள் செய்பவர்களுக்குத் தண்டனைகளே கிடையாதா? அவர்கள் எப்படி வேண்டுமானாலும் வாழலாமா?”அவரக்கு இந்தக் கதையைத்தான் பதிலாகச் சென்னோம்…குருகுல மாணவன் சிறுவன் ஆனந்தன், தன் குருவோடு முதல் முறையாக இமயமலை யாத்திரைக்கு வந்திருந்தான்.வானுயர, பிரம்மாண்டமாய் நிற்கும் மலைகளுக்கு நடவே எறும்பு போல, தான் இருப்பதைப் பார்த்து பிரம்மித்தான்.கீழே இருக்கும் தன் நண்பனை அழைப்பதற்காக “வாடா” என்றான்.சப்தமாய் மலையிலிருந்து “வாடா” என்று குரல் எதிரொலித்தது.தன்னை, “யார் வாடா” என்று கூப்பிட்டது என்பதை தெரிந்து கொள்ள, “யாரது?” என்றான்.”யாரது?” என்று மலையும் திரும்பக் கேட்டது.சிறுவன் கொஞ்சம் பயத்தோடு, “நீங்க யாரு?” என்றான். உடனே மலையும் அதேக் கேள்வியைத் திரும்பக் கேட்க, பயந்து, ஓடிப் போய் குருவைப் பார்த்து நடந்ததைச் சொன்னான்.குரு சிரித்தபடியே சொன்னார்…”இதுதான் இயற்கை, இதுதான் வாழ்க்கை.நீ என்ன செய்கிறாயோ அதுவே உன் வாழ்வில் எதிரொலிக்கும். வாழ்வை மதித்தால், வாழ்வும் உன்னை மதிக்கும். அலட்சியத்தோடு, இறுமாப்போடு வாழ்ந்தாலும், வாழ்வும் அப்படித்தான் உன்னை நடத்தும்,” என்று மலை எதிரொலிப்பு தத்துவத்தை, வாழ்வு தத்துவத்தோடு புரிய வைத்தார்.அதேப்போலத்தான், கெடுதல் கூட செய்ய வேண்டாம்.வாழ்வை எதிர்த்தாலே போதும், வாழ்வு அவரை எதிர்க்கும்.வாழ்வை வரவேற்றால்,அவரை….வாழ்வு வரவேற்கும்.எனவே இந்த நிமிடம் வாழ்வைக் களிப்போடு, உற்சாகத்தோடு அணுக ஆரம்பியுங்கள்.வாழ்வும் அதையே உங்களுக்குத் தர ஆரம்பிக்கும். வாழ்க்கை உங்களை நிர்ணயிப்பதில்லை. நீங்கள்தான் வாழ்வை நிர்ணயிக்கின்றீர்கள். கடவுள் நம்மைத் தண்டிப்பதில்லை, நாம்தான் நம்மையே தண்டித்துக் கொள்கிறோம்.பிரபஞ்சத்தை நோக்கிய உங்களின் அணுகுமுறையைத் தான் வாழ்க்கை எனும் எதிரொலிப்பாய் வாழ்கிறீர்கள்.இனிமையாய் அணுகுங்கள்.இனிமையாய் எல்லாம் அமையும்.இது வாக்கல்ல,என் வாழ்வில் நான் கண்ட அனுபவம்.வாழ்வை இனிமையாய் அணுகுவதும், நம்மை அதற்கென தயார் செய்வதும் ஜீவன் முக்த வாழ்வை வெளிப்படுத்த வைக்கும்.
நன்றி : ஜீவன் முக்திபரமஹம்ஸ நித்யானந்தரின் அமுதமொழிகள்

நீங்கள் அப்பாவாவதற்கு உகந்த வயது எது?

எனது பாட்டா அப்பாவாகும்போது வயது 18 வயது மட்டுமே. எனது அப்பா 23 வயதில் அப்பாவானார். அப்பாவாகும்போது எனக்கு 32 வயதாகிவிட்டது. இன்றைய இளைஞர்களுக்கு இன்னமும் அதிக காலம் தேவைப்படுகிறது.

நல்ல கல்வி, போதிய வருவாயுள்ள வேலை, புதிய மணவாழ்வில் சற்றுக் காலம் தொல்லையின்றி உல்லாச வாழ்வு. இவற்றையெல்லாம் முடித்துக் கொண்டு குழந்தை பெறுவதையிட்டு சிந்திக்கத் தொடங்குவதற்கு காலதாமதமாகி விடுகிறது இன்றைய இளைஞர்களுக்கு. 

வயது அதிகரிப்பும் அப்பாவாதலும்

மேலும் முதிர்ந்த வயதில் அப்பாவாகும் பலர் மேலை நாடுகளில் இருக்கிறார்கள். வேலைப் பளு, இரண்டாவது தரம் மூன்றாவது தரம் என மணம்முடித்தல் போன்ற காரணங்களால் அங்கு தந்தையாவது தாமதமாகிறது பலருக்கு. 

இருந்போதும் இன்னமும் பெரும்பாலானவர்கள் 20 முதல் 34 வயதிலேயே அங்கும் அப்பாவாகிறார்கள். ஆனால் 1980 ற்கும் 2002 ற்கும் இடைப்பட்ட காலத்தில் முதிர்ந்தவர்கள் அப்பாவாகும் தொகை அதிகரிக்க ஆரம்பித்தது. 40 - 44 வயதிற்கும் இடையில் 32 சதவிகிதத்தாலும், 45 - 49 வயதிற்கும் இடையில் 21 சதவிகிதத்தாலும், 50 - 54 வயதிற்கும் இடையில் 9 சதவிகிதத்தாலும் அதிகரிப்பதாக அமெரிக்க National Vital Statistics Report கூறுகிறது. புதிய தரவுகள் மேலும் அதிகரித்திருக்கும் என நம்பலாம். 

என் பாட்டா செய்தது சரியா அல்லது இன்றைய தலைமுறையினர் செய்வது சரியா?

நவீன விஞ்ஞான ஆய்வுகள் பாட்டாக்களின் பக்கம் நிற்கிறது.
40 வயதுகளை எட்டும் ஒரு மனிதனது விந்துவின் தரமானது 20 வயதுகளில் இருந்ததைத் போலிருப்பதில்லை. 

அவர்களது மரபணுக்களில் பிறழ்வுகள் (genetic mutations) ஏற்படுகின்றன. இவை அவரது வாரிசுகளைச் சென்றடையப் போகின்றது என்பதையிட்டு விஞ்ஞானிகள் எச்சரிக்கிறார்கள்.

ஐஸ்லண்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இன்னமும் சற்று விபரமாகச் சொல்கிறார்கள். Autism or Schizophrenia ஆகிய பாதிப்புள்ள குழந்தைகள் உருவாவதற்கு 40 வயதுடைய ஒருவர் தன்னிலும் ½ மடங்கு வயதுடையவரைவிட இரண்டு மடங்கு அதிகமாக காரணமாகிறார்கள் என்கிறது.

 மற்றொரு நோயான மனப் பிறழ்வு(Schizophrenia)ஏற்படுவதற்கும் ஓட்டிசம் போலவே, வயது அதிகமான தந்தையர் காரணமாக இருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். சூழல். பரம்பரை அம்சங்களும் காரணமாகலாம். மாயத் தோற்றங்கள், மாய ஒலிகள் உள்ளடங்க எண்ணம், செயல்களில் தெளிவற்ற தன்மையுடைய  மனக்கோளாறு இதுவாகும். 

பதின்மங்களில் அல்லது கட்டிளம் பருவத்தின் ஆரம்பத்திலேயே இதன் அறிகுறிகள் வெளிப்பட ஆரம்பிக்கும். முற்றிலும் குணப்படுத்த முடியாத போதும் நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கூடிய மருந்துகள் தற்போது உள்ளன.

இதனால் முன்னைய காலங்களில் தனக்குத்தானே பேசிச் கொண்டு அழுக்கு நிறைந்த உடைகளுடனும், குளித்து மாதக்காக நாற்றத்துடனும் வீதிகளில் 'விசரன்' என்ற பெயரோடு அலைந்து திரிபவர்களைக் காண்பது குறைந்து போயிற்று. 

நோயாளியை மட்டுமின்றி குடும்பத்தையும் சமூகத்தையும் அதிகளவில் பாதிக்கிற நோயாக இதுவும் இருக்கிறது.

அப்பாக்கள் இப்பொழுதுதான் இத்தகைய பிரச்சனைக்கு முகம் கொடுக்கிறார்கள். ஆனால் பெண்கள் பல காலமாகவே இளவயதில் தாய்மை எய்தாமைக்காக குற்றம் சாட்டப்படுகிறார்கள். காலம் தாழ்த்தி தாய்மை எய்தினால் Down syndrome போன்ற குறைபாடுகள் உள்ள குழந்தைகள் உருவாகலாம் என்பது பலகாலமாக அறியப்பட்ட செய்தியாகும். 
பெற்றோராகும் வயததை; தீர்மானிப்பதில் சமூகத்தின் தாக்கங்கள்
இருந்தபோதும் இன்றைய சூழலில் பெண்கள் பிந்திய பதின்மங்களிலோ, 20களின் ஆரம்பங்களிலோ குழந்தை பெறுவது சாத்தியமற்றுப் போகிறது. ஏனெனில் இன்றைய பல பெண்களும்  பொருளாதார ரீதியில் தமது காலில் நிற்பதையே விரும்புகிறார்கள். கல்வியை முடித்து தொழில் தேட 30 வயதைத் தாண்டிவிடுகிறது.

'நேர காலத்தோடு பிள்ளையைப் பெறு இல்லையேல் குறைபாடுடைய குழந்தை கிடைக்கலாம்' என பெண்கள் மீது ஆண்கள் சுமத்திய அதே குற்றச்சாட்டை இன்று பெண்கள் ஆண்கள் மீது திருப்பியடிக்க முடிகிறது.

குற்றச்சாட்டுகளைப் புறந்தள்ளிவிட்டு உயிரியல் ரீதியாகச் சிந்தித்தால் ஆண்களும் சரி பெண்களும் சரி பிள்ளை பெறுவதை ஒரு தசாப்த காலம் முன்தள்ள வேண்டிய நிலையில் இருக்கிறது. மேலைநாடுகளில் இது பெண்களில் முப்பதுகளின் பிற்கூறும், ஆண்களில் 40க்கு மேலுமாகி விடுகிறது.

இருந்தபோதும் காலக் கடிகாரத்தின் டிக் டிக் ஓசை பெண்களையே அதிகமாக விரட்டித் தொலைக்கிறது. இதனால் பெண்களே அதிக மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். இது அவர்களது கருத்தங்கும் ஆற்றலுடன் (fertility) சம்பந்தப்பட்டது. 30வயதின் எல்லையை அண்மித்து 40வயதை தாண்டும்போது அவர்களது கருத்தரிக்கும் ஆற்றல் நலிவடையத் தொடங்குகிறது.
ஆண்களின் முகத்தில் அடி

ஆனால் ஆண்கள் நிலை அவ்வாறில்லை. ஒரு குழந்தைக்கு அப்பனாகும் நேரத்தை அவனே தீர்மானிக்கக் கூடியவனாக இருக்கிறான். அல்லது சூழலின் பாதிப்புகளால் அது நிகழலாம். ஆனால் உயிரியல் நியதியாக (biological determinism ) ஒருபோதும் இருப்பதில்லை. உதாரணங்கள் Rupert Murdoch had a child at 72, Saul Bellow at 84, Les Colley, an Australian miner, at 92.

'தன்னால் எப்பொழுதும் முடியும்' என இறுமாந்திருந்த ஆண்களுக்கு விஞ்ஞான உண்மைகள் முகத்தில் அடிப்பது போலானது என்பதில் சந்தேகம் இல்லை. 
அப்படியில்லாவிடினும் அவனது மனச்சாட்சியை உலுப்பக் கூடியதாகவே இருக்கிறது. 'குழந்தைக்கு அப்பனாகும் காலத்தைத் தான்  தள்ளிப்போடுதல் தன்னளவில் சௌகரியமானபோதும் அது தனக்குப் பிறக்கப்போகும் குழந்தையின் உடல்நலத்தை அதன் வாழ்நாள் முழுவதும் பாதிக்கலாம்'  என்ற எண்ணம் மனித இனத்தின் சரித்திரத்தில் முதல் முதலாக அவன் முன் எழுந்து நிற்கிறது. 
வயதான பெண்கள் அனைவரும் இப்பிரச்சனைக்கு ஏற்கனவே முகம் கொடுத்துக் கொண்டிருப்பது தெரிந்த விடயமே. அவர்கள் தமது வசதிகளுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப விட்டுக் கொடுப்புகளுடன் சமாளிக்கத் தெரிந்திருக்கிறார்கள்.

இப்பொழுது ஆண்கள் அவர்களது பாதையைப் பின் பற்ற வேண்டியதுதான். 

மாற்றுச் சிந்தனைகள்

விஞ்ஞான முடிவுகள் வேறுவிதமாக இருந்தபோதும், தந்தையாகும் காலத்தை பின்போடுவதில் அனுகூலங்கள் இருக்கின்றனவா?

20 வயதில் இருந்ததைவிட 40 வயதாகும்போது மரபணுக்களில் பழுதுகள் ஏற்படக் கூடுமாயினும், ஆண்களின் வாழ்க்கை முறைகளில், பழக்கவழக்கங்களில், மற்றவர்களுடனான தொடர்பாடல் முறைகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. அவசரமும் பதற்றமும் அடங்கி அமைதி வருகிறது. கோபம் பொறாமை அடங்கிப் பொறுமை அதிகரிக்கின்றது. போட்டி வாழ்வின் வேகமும் அதீத எதிர்பார்ப்புகளும் தளர்கின்றன.

இம் மாற்றங்கள் ஆண்மை வீரியத்தின் தளர்முகத்தைக் குறிக்கின்றபோதும், நல்ல தந்தைக்கு வேண்டிய குணாதிசயங்களுக்கும் வழிவகுக்கின்றன. அவசரக் கோபங்கள் அடங்கிப் புரிந்துணர்வு வளர்வதால் குழந்தையை ஆதரவோடு அணைத்து வளர்க்க முடிகிறது. 

20களிலும் முப்பதிகளிலும் இருந்ததைவிட 40களை அணுகும்போது தந்தைதுவப் பண்புகள் மெருகேறுகின்றன.

பொது நலம் 

மற்றொரு விடயம் பொது நலம் சார்ந்தது.

நீங்கள் இளவயதில் தந்தையானால் உங்கள் வாரிசும் விரைவில் பெற்றோர்ஆவதற்கான சாத்தியம் அதிகம். நீங்கள் சற்றுக் காலம் தாழ்த்தி தந்தையானால் அவர்கள் பெற்றோராவது பிந்தும். சற்று விளக்கமாகச் சொன்னால். 

வயது 40 களில் இருக்கும் உங்களுக்கு மகன் ஆரம்பப் பள்ளியில் கற்கிறான் என வைப்போம், ஆனால் இன்றைய விஞ்ஞானிகள் சொல்வதுபோல நீங்கள் இளவயதிலேயே மணமுடித்திருந்தால் உங்கள் மகன் இப்பொழுது பிரசவ அறையில் மனைவிக்கு துணையாக நின்றிருப்பான். அதாவது உங்கள் குடும்பத்தில் அடுத்த தலைமுறையும் வந்திருக்கும். 

இன்று உலகில் சனத்தொகை பெருகும் வேகத்திற்கு உங்கள் பங்களிப்பும் இருந்திருக்கும். அந்த வகையிலும் பிந்திய வயதில் தந்தையாதல் சனத்தொகை வளர்வதை உலகளாவிய ரீதியில் கட்டுப்படுத்த முடியும்.

குழந்தையைப் பெறுவதிலும் வளர்ப்பதிலும் பழுதடைந்த மரபணுக்கள் என்பது தந்தையின் பங்களிப்பில் ஒரு சிறிய அம்சமே. இருந்தபோதும் மிகவும் முதிர்ந்த வயதில் தந்தையாவதும் நல்லதல்ல. ஏனெனில் குழந்தையின் தலையில் பழுதான மரபணுக்களைச் சுமத்துவது மாத்திரமின்றி வளர்தெடுப்பதிலும் வழிநடுத்துவதிலும் சிக்கல்கள் ஏற்படும். 

நோயும் பிணியும் ஏன் மரணமும் கூட தந்தையின் பங்களிப்பை தடுத்து நிறுத்தலாம். 

விஞ்ஞானமா? சமூகக் கடப்பாடுகளா?என்ற எதிர் முரணான தேர்வுகளுக்கு இடையில் மனிதன் சிக்கி நிற்கிறான். 

தெளிவான விடையில்லை.

பகுத்தறிவின் துணையோடு தனக்கு ஏற்ற தெரிவைத் தானே தேர்ந்தெடுக்கத்தான் இன்றைய நிலையில் முடியும்.


வியாபாரிமூலை:-எந்த ஊர் போனாலும்….….. நம்ம ஊர் போலாகுமா!!!இலங்கைத்தீவின் வடமுனையாக விளங்கும் பருத்தித்துறையிலிருந்து மேற்காக காங்கேசன்துறை நோக்கி நீளும் கடற்கரையோர வீதியில் ஒரு கிலோமீற்றர் தூரம் சென்று மாலிசந்தி நோக்கி கிளைவிடும் தார்வீதியில் திரும்ப வருவது வியாபாரிமூலையெனும் அமைதியான கிராமம்.

கடற்கரையிலிருந்து வீரபத்திரர் கோவில் வளைவு வரை வீதியின் இருமருங்கும் கிளைவிடும் சிறு சிறு ஒழுங்கைகளும் வீதிகளும், அங்கு வசிக்கும் அனைவருக்குமிடையிலான உறவுமுறைகளும், வியாபாரிமூலையெனும் கிராமத்தினை ஒருங்கிணைக்கும். ஆலய மணியோசைகள் துயிலெழுப்பும், உப்புக்காற்று இதமாய் வீசும்.

கிராமத்தின் ஒவ்வொரு குறிச்சியும் (சிறு பகுதிகளும்) தனித்துவமான பெயர்களைக்கொண்டது. வெள்ளையற்றணி, சிப்பிமணலடி, பெயர்ந்த ஆலடி, விராவளை, சின்னக்கிளானை, பெரியகிளானை, வாரியார்வளவு, கம்பளியப்பான், பலாப்பத்தை என்று பல்வேறுபட்ட காரணப்பெயர்களுடன் நீளும் குறிச்சிகளின் பட்டியல். அநேகமாக குடும்பப்பெயர்களுடன் குறிச்சிகளின் பெயர்களும் சேர்ந்தே பலரையும் இனங்காண உதவும்.

சில பத்தாண்டுகளிற்கு முன்னர் ஒரே பெயரை பலருக்கும் வைத்ததால் ஏற்பட்ட குழப்பங்கள் இவ்வாறே தீர்க்கப்பட்டன. இதேபோல ஒருவருக்கு இரண்டு (அதற்குமேலும் கூட) பெயர்களுமிருக்கும். தந்தைவழி உறவுகளை திருப்திப்படுத்த ஒரு பெயரும் தாய்வழி உறவுகளை திருப்திப்படுத்த ஒரு பெயரும் என்று பெயர்களை வைத்து எல்லாரையும் திருப்திப்படுத்தினார்கள். அதனால் ஏற்பட்ட பல்வேறு சிக்கல்களிற்காக சத்தியக்கடதாசிகளிற்காக பலரும் அலைந்தது வேறு கதை.

குறிச்சிப்பெயர்களை விட அடைமொழிகளும், பட்டப்பெயர்களும் கூட பலரை குறிப்பிட உதவின. ஜப்பான் (குறுகிய காலத்தில் வியாபாரத்தில் முன்னேறியவர்), சக்கடத்தார், மனேச்சர், சவுடால், ஹொல்டோன் (hold-on), முயல், அதாவது (எப்பொழுதும் அதாவதுஎன்று கதைக்கத்தொடங்கும்) போன்ற அடைமொழிகளும் கருமுனி, குறுமுனி, சருகுமுனி போன்ற பட்டப்பெயர்களும் பிரபலமாக இருந்தன.

பதினைந்து அடி உயரமான கோட்டைச்சுவர் போன்ற கற்சுவர்களுடனும் மிகப்பெரிய வாயிற்கதவுகளுடனும் பளிங்குக்கல் பதித்த தரைகளுடனும் எஞ்சியிருக்கும் சில சுண்ணாம்புக் கட்டடங்கள் கூட்டுக்குடும்பங்களாக வாழ்ந்த கிராமத்தின் பணக்கார குடும்பங்களின் கதைகள் சொல்லும். இலங்கைத்தீவின் வடமுனையிலிருந்து தென்முனைவரை வியாபாரத்தில் முத்திரை பதித்த அந்தக் குடும்பங்கள் தேடிய செல்வத்தின் அளவு அந்த வீடுகளில் காணப்படும் தரையுடன் சேர்த்துக்கட்டப்பட்ட பெரிய இரும்புப்பெட்டகங்களில் தெரியும். இப்படியாக வியாபரிகளின் கையோங்கியிருந்த கிராமத்திற்கு வியாபரிமூலையென்ற பெயர் வைத்ததில் ஆச்சரியப்பட ஏதுமில்லை.

இன்றைக்கு 50 ஆண்டுகளிற்கு முன்னர், பெற்றோர்கள் தங்கள் ஆண்பிள்ளைகளை சிறுவயதில் வியாபாரம் செய்யும் உறவினர்களுடன் அனுப்பிவிடுவார்கள். அவர்கள் வியாபார நுணுக்கங்கள் பழகும்வரை நீண்டகாலம் ஊதியமில்லாது வேலைசெய்வார்கள். பின்னர் அந்த முதலாளி (உறவினர்) மற்றும் பெற்றோரின் உதவியுடன் சொந்தமாக வியாபாரம் செய்யத் தொடங்கிவிடுவார்கள். இப்படி அநுபவத்துடன் வியாபாரம் தொடங்குவதால் அநேகம் பேர் தங்கள் தொழிலில் நட்டமடைவதில்லை. இன்றுகூட சில குடும்பங்களில் இந்தவழக்கம் தொடர்கிறது.

வியாபாரம் செய்பவர்கள் தவிர்ந்த ஏனையோர் விவசாயம் செய்பவர்களாக இருந்தார்கள். ஊரின் வடக்காக கடற்கரையோரமாக இருந்த வளங்குறைந்த தோட்டநிலங்களில் உழைப்பை உரமாகவும் வியர்வையை நீராகவும் பாய்ச்சி குரக்கன், தினை, மரவள்ளி, காய்கறிகள் என்று பயிர்செய்தார்கள். துலா ஓடி நீரிறைத்த அந்த நாட்களின் எச்சங்களாக ஆடுகால்களிற்கு நடப்பட்ட சில பூவரச மரங்கள் இன்றும் அந்த தோட்டக்கிணறுகளிற்கருகில் தனித்து நிற்கின்றன. விஞ்ஞானத்தைப் பாடமாகப் படிக்காத அந்தக்காலத்திலும் மழைநீரை சேமிக்கக் குளங்கள் இருந்தன. கடலிற்கருகில் இருப்பதால் கடல்நீர் உட்புகுவதைத்தடுக்க (நிலத்தடி நன்னீருடன் கலப்பதைத் தடுக்க) ஒற்றுமையாக சரியான நேர இடைவெளியில் நீரிறைத்தார்கள். மழைபெய்த அளவிற்கேற்ப பயிர்நட்டார்கள்.

வீதிகளில் ஆவுரோஞ்சிக்கற்களும் (ஆடு, மாடுகள் தங்கள் உடம்புகளை உரசிக்கொள்ள), சுமைதாங்கிகற்களும் (தலையில் சுமையுடன் செல்பவர்கள் அவற்றை இறக்கிவைத்து இளைப்பாற), குடிநீர்ப்பானைகளும் இருந்தன.
அறிவுப்பசிக்கு விருந்திடும் வியாபாரிமூலை கலைமணி சனசமூக நிலையம் ஊரின் மத்தியில் பெரும் பணிபுரிகிறது.

ஆன்மிகம் வளர்க்க ஊரின் நான்கு திசைகளிலும் கோயில்களும் அவற்றுடன் ஒன்றிவாழும் பண்புமிருந்தன. கோயில்களில் சைவக்குருக்கள் பூசைகள் செய்தனர். வேற்றூர்களில் வியாபாரம் செய்பவர்கள் கோவில் திருவிழாக்காலங்களில் ஊர்திரும்புவர். இயற்கை கற்பூரம் விளைந்த சித்தி விநாயகர் ஆலயமும், விரபத்திரர் ஆலயமும், சித்திராபௌர்ணமியில் இராப்பொங்கல் நடக்கும் நாச்சிமார் கோவிலும், அருளம்பல சுவாமிகளின் (மகாகவி பாரதியாரின் குரு) சமாதியும், காலனித்துவ ஆட்சியில் கல்விக்காக மதம்மாறுவதைத் தடுக்க ஆரம்பித்த சைவப்பிரகாச வித்தியாசாலையும் ஊர்மக்களின் ஆன்மீக ஈடுபாட்டிற்கு சான்றுகளாயுள்ளன.

மகாகவி சுப்பிரமணிய பாரதியார்
 "கோவிந்த சாமிபுகழ் சிறிது சொன்னேன்;
குவலயத்தின் விழிபோன்ற யாழ்ப்பா ணத்தான்,.....
என்று ஆரம்பித்துப் பாடிய கவியொறில்  அவர் கூறும் யாழ்ப்பாணத்தான், வியாபாரிமூலையைச் சேர்ந்த மோனம் அருளம்பலம் சித்தர் என்பது எம் மண்ணிற்கு பெருமை சேர்க்கிறது.

ஆயுர்வேத மருத்துவத்தில் சிறந்த பாம்புப் பரியாரியாரும் (விசக்கடிக்கு சிறந்த மருத்துவம் செய்ததால் ஏற்பட்ட பெயர்), எலும்பு முறிவுற்றவர்களை ஒட்டகப்புலத்திற்கு ஏற்றிச்செல்ல மாட்டுவண்டிக்காரரும் இருந்தார்கள்.

இப்படி சுயநிறைவுடனும் வளமாகவும் மக்கள் வாழ்ந்த கிராமம் வியாபாரிமூலை. இன்றும்கூட வியாபாரிமூலையான் என்று பெருமையாக என்று எங்களூரார் தங்களைச் சொல்லிக்கொள்வார்கள்.

–  வியாபாரி

இறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும்/Death & Its Beliefs of Tamil,பகுதி/PART:03"B"s:[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்Compiled by: Kandiah Thillaivinayagalingam]

"மதமும் மரணமும்""RELIGION & DEATH"[இந்து மதம்]
உலகின் மிக  பழமையான  மதமான  இந்து மதத்தின் படி,மரணம் என்பது இயற்கையானது.அது  முற் பிறப்பிலே செய்த பாவ,புண்ணியத்தின் படி அல்லது அதன் கர்மாவின் படி,தொடர்ந்து உயிர் வாழ  பல பிறப்புகள்,மறுபிறப்புகள் எடுக்கும்.மனிதனை அவனுக்குள் இருந்து இயங்க வைப்பது ஆன்மா என்கிற இறைசக்தியாகிய எனர்ஜி என்பது இந்து தத்துவம்.சக்தி கொள்கை என்ன சொல்கிறது? சக்தியாகிய ஆற்றல் என்பது அழிவற்றது. அது வேறு ஒரு ஆற்றலாக உருமாறுமே அன்றி அழிவு என்பது ஆற்றலுக்குக் கிடையாது."Energy can neither be created nor destroyed".ஆன்மா இனி அந்த உடலினின்று செயல்பட முடியாத நிலைக்கு உடல் பழுதடையும் போது பிரிந்து செல்லும் ஆன்மா மீண்டும் வேறு தகுதியான உடலைத் தேர்ந்தெடுத்து மீண்டும் வாழ்க்கைச் சுழற்சி நடக்கிறது என்கிறது.இறுதியில் வீடுபேறு என்னும் மோட்சம் அதாவது மறுபிறவி இல்லாத நிலையினை அடைகிறது என்கிறது இந்து சமயம்.இந்து சமயம் எல்லா மதமும் சம்மதம்[எம்மதமும் சம்மதம்!] என்கிறது!
           "புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
     பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
     கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
     வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
     செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
     எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
     மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்"
     [மாணிக்க வாசகர் அருளிய சிவபுராணம்]
ஆகவே மரணம் என்பது ஒரு பெருந்துன்பம்[great calamity] அல்ல.ஒரு முடிவும் அல்ல.அதாவது மரணத்தால் தனது செல்வழியை  சரிபடுத்தி  மீண்டும் இவ்வுலகில் திரும்பி வந்து தனது பயணத்தை தொடர்கிறது. 

அப்பர் என அழைக்கப்பட்ட கி.பி ஏழாம் நூற்றாண்டை சேர்ந்த திருநாவுக்கரசு நாயனார் கூறுகிறார் "நாங்கள் நல்ல மனிடபிறவியை எடுத்துள்ளோம்.அதை நாம் மதிப்போம்" என்று ."பிறவி பாவமானது அல்ல"."இது கடவுளால் தந்த கொடை." "இந்த அருமையான மானிட பிறப்பை ,நாம் சரியாக பயன்படுத்த வேண்டும்.அதற்கு இந்த பிறவி தந்ததிற்கான[எடுத்ததிற்கான],அவரின் நோக்கத்தை நாம் அறியவேண்டும்" என்று மேலும் கூறுகிறார். 

இந்த உலக வாழ்வு எந்த ஒரு நோக்கமும் இன்றி கடவுளால் ஏற்படுத்தி இருக்க முடியாது.எமக்கு இங்கு ஏற்படும் நல்லவையும் தீயவையும் காரணம் இன்றி நடைபெறாது.இந்த துயர்மிகுந்த/பரிதாபத்துக்குரிய உலகில் கடவுள் எம்மை காரணம் இன்றி  வைத்திருக்கிறார் என்றால்,நாம் எப்படி அவரை அருளிரக்கமுடையவனே /மன்னிக்குமியல் புடையவனே["Merciful"] என அழைப்போம் என வினாவுகிறார். 

மனிதன் இறந்த பிறகு எல்லோரும் கூடி அழுதுவிட்டுப் பின்பு அவனுக்குப் பிணமென்று பெயர்வைத்து,அதை எடு

த்துப்போய் சுடுகாட்டிலே வைத்து எரித்துவிட்டு ஆற்றிலோ அல்லது குளத்திலோ மூழ்கி எழுந்து அவனைப்பற்றிய நினைவை ஒழித்துவிடுகிறார்களாம்-திருமூலர் தமது திருமந்திரத்தில் இப்படி கூறுகிறார். இன்று கூட ஒருவர் இறந்துவிட்டால் அன்னாரின் பூதவுடல் மயானத்துக்கு எடுத்துச் சென்று தகனம் செய்யப்படும் என்று தான் சொல்கிறோம்.அவரது பெயரைச் சொல்வதில்லை.   
"ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டு 
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச் 
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு 
நீரினில் மூழ்கி நினைப் பொழிந்தாரே!"
[திருமந்திரம்]

மேலும் சித்தர்கள் "காயமே இது பொய்யடா காற்றடைந்த பையடா[பட்டினத்தார்]  என்றும் "வாழ்வாவது மாயம் மண்ணாவது திண்ணம் என  பாடியிருக்கிறார்கள்.
ஆஸ்பத்திரிகளில் கூட்டம். ஆலயங்களில் கூட்டம். ஜோதிடர்களிடமும் கூட்டம்.எல்லா கூட்டத்தினரின் நோக்கமும், மரணத்தை தள்ளிவைத்துவிட்டு, நிம்மதியாக நீண்ட நாள் வாழ வேண்டும் என்பது.!

மரண பயமும் மரணத்திற்குப் பின் என்ன? என்பது பற்றிய அச்சமும் மனிதனை ஆட்டிப்படைத்தன. சமயங்கள் அதற்குப் பதில் சொல்ல முயன்றன. சமயம் அளித்த விளக்கங்களைத் தான் புரிந்துகொண்ட அளவிலும் ஏற்றுக்கொண்ட அளவிலும் மரணத்தை ஒருவாறு எதிர்கொண்டான் மனிதன்.மலர்வதாகவும் உதிர்வதாகவும் பிறப்பு, இறப்பைக் குறித்தத்துடன்  அவன் பயன்படுத்திய  வார்த்தைகள் அவன் புரிந்து கொண்ட அளவை  நமக்குச் சொல்கின்றன.மரணத்திற்குப் பின் என்ன என்ற கேள்விக்கு மனிதன் புரிந்துகொண்ட பதில்களின் அடிப்படையில்தான் மரணம் குறித்த சொற்கள் அவர்களுக்கிடையில் அமைந்தன. அந்தப் புரிதலை அவனது சமய நம்பிக்கைகள் அல்லது அவநம்பிக்கைகள் உருவாக்கின எனலாம் . அது பண்பாட்டு உருவம் கொள்ளும்போது பல்கிப் பெருகும் சொற்களாயின.அந்த வார்த்தைகளில், 25   சொற்களை கீழே பார்ப்போம் 

பகுதி/PART:04"மரணம் குறித்த சொற்கள்""The words used to define/describe death"அடுத்தவாரம் தொடரும்