இறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும்(பகுதி 05 "B"‏)

[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்/
 Compiled by: Kandiah Thillaivinayagalingam]

பண்டைய இலக்கியத்தில் மரணம்"[திருக்குறள்]


தமிழர்களின் திருக்குறளில் நிலையாமை குறித்து 34வது அதிகாரத்தில் மிகவும் சிறப்பாக கூறப்படுகின்றது.உதாரணமாக “நாள் என்பது, ஒவ்வொரு நாளாக வாழ் நாளின் உயிரை குறைக்கும் கருவி” என பொருள் படும் “நாளென ஒன்று போல் காட்டி உயிர் ஈரும் வாளது உணர்வார்ப் பெறின்"-குறள் 334 சிறப்பாக சொல்கிறது. 
அதாவது ,ஒவ்வொரு நாள் முடிவும் உங்களை வாழ்க்கையின் முடிவான இறப்பிற்கு கிட்ட கிட்ட கொண்டுபோகிறது .யமனின் வாள் போன்றது நாள் என்கிறது.இந்த வாளை பாவித்தே உங்களின் வாழ்வு காலம் அளக்கப்படுகிறதாம் .
அதாவது ஒரு நாள் முடியும் போது யமன் வாழ்வின் ஒரு பகுதியை வெட்டி எடுத்து விட்டு,இன்னும் இறப்பில் இருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறீர்கள் என அளக்கிறான் என்கிறது.இறப்பு மனிதனின் ஒவ்வொரு வாழ்வின் அடியையும் பின் தொடர்கிறது.என்றாலும் மனிதன் இந்த நிலையற்ற பொருட்களையும் தொடர்புகளையும் இன்னும் வைத்திருக்கிறான் . வாளின்  இறுதி பிரயோகத்தில்,அவனது வாழ்வு  எந்தவித அறிவிப்பும் இன்றி துடைத்து எறியப்படுகிறது.இறப்பின் பின் மனிதனை தொடர்வது அவன் செய்த நல்ல செயல்களின் சிறப்பு மட்டுமே என்று மேலும் கூறுகிறது.இதை உறுதி படுத்துவது போல பட்டினத்தார் இப்படி கூறுகிறார்:


"காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே" என்று   

"நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யாப் படும்"[335]

இறக்கும் தருவாயில் படுத்து இருக்கும் போது,கண் ஒன்றையும் பார்க்காது,காது ஒன்றையும் கேட்காது,எல்லா உறுப்புகளும் தளர்ந்து விடும்,நா வாய்க்குள் மாட்டிக்கொள்ளும்,கடைசி மூச்சு விக்கலாக வரும்-அந்த நேரத்தில் புகழ்த்தகுதியுடைய எந்த காரியமும் செய்ய முடியாது.அப்படி ஒரு துர்ப்பாக்கிய நிலை வரும்முன்,உடனடியாக நற்பண்புள்ள,நன்மார்க்க செயலை செய்து சிறப்பு பெறுவாயாக.நேரத்தை வீணாக்க வேண்டாம்.இறப்பு எந்த நேரமும் கதவை தட்டலாம் என்று திரு வள்ளுவர் ஆலோசனை கூறுகிறார்.  

இதை,இந்த ஆலோசனையை உறுதி படுத்துவது போல மகாபாரதத்தில் இப்படி ஒரு சம்பவம் சொல்லப்படுகிறது.ஒரு பிரமணன் பாண்டவர்களின் அரண்மனை வாசலில் வந்து உதவி கேட்டான்.தர்மன் ஒரு முக்கிய வேலை செய்ய வேண்டி இருந்ததால்,அடுத்த நாள் வந்து தருமத்தை பெறும்படி கூறுமாறு செய்தி அனுப்பினான்.பக்கத்தில் இருந்த பீமன் தனது மூத்த சகோதரனிடம் கேட்டான்:

அண்ணா,எனக்கு அதிசயமாக இருக்கிறது -நீங்கள் நாளை உயிருடன் கட்டாயம் இருப்பீர்கள் என்பது உறுதியா?

தருமனுக்கு தனது முட்டாள்தனம் விளங்கி விட்டது.உடனடியாக பிராமணனின் தேவையை தருமன் கவனித்தான் 

ஒவ்வொன்றும் மற்றதை விட சிறந்தது.ஆயினும்,எவரையும் பயம் கொள்ள வைத்த குறள்:

"நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் 
பெருமை உடைத்துஇவ் வுலகு".-குறள் 336

“நேற்று வரை உன்னுடன்,உண்டு,பேசி,சிரித்து,சண்டையிட்டு,மகிழ்ந்திருந்த நெருங்கிய நண்பன் இன்று இல்லை, இனி ஒருபோதும் பேசவோ,சண்டையிடவோ போவதில்லை,இதோ உன் முன் மவுனமாக,மரணமாய்,கிடத்தப்பட்டுள்ளான், இந்த உலகு,இத்தகைய சிறப்பு உடையது” எனச்சொன்ன இந்த குறள்.

எவ்வளவு கொடுமையான புகழ் இது? நாம் ஒவ்வொருவரும் நெருங்கிய ஒருவரின் மரணத்தை சந்தித்திருப்போம், அப்போதெல்லாம் நம் மனம்,இன்றைய தினமும் நேற்றையை போலவோ,நேற்று முன்தினம் போலவோ இருந்திருக்க கூடாதா? என்று கட்டாயம் புலம்பி இருக்கும்.

நீ விரும்பும் இந்த உலகில் எது மிகவும் பெரியது?ஒவ்வொரு நாளும் மக்கள் இறக்கிறார்கள்.ஒவ்வொரு நாளும் ஒருவர் ஒருவரை மரணத்தால் இழக்கிறார்.வாழ்வு நிலையற்று இருக்கும் போது,நிலையற்ற பொருட்களை,நல்ல செயல்களை செய்யாமல்,வைத்திருப்பதால் என்ன பயன்?இறந்த பின் என்னத்தை கொண்டு போகப்போகிறாய்?

மீண்டும் மகாபாரத்தத்தில் ஒரு சம்பவத்தை பார்ப்போம், யக்கர்/யக்ஷகர் ஒருவனின் கேள்வி ஒன்றிற்கு தருமன் இப்படி பதில் அளிக்கிறான் .

யக்கர்:இந்த உலகில் மிகவும்.வியப்படையச் செய்வது எது ?

தருமர்:ஒவ்வொரு நாளும் மக்கள் மரிணிக்கிறார்கள்.அப்படி இருந்த போதிலும்,உயிருடன் இருக்கும் இந்த மனிதன் தான் சாகப்போவதில்லை என நினைக்கிறான்.இது தான் இந்த உலகின் திகைக்கவைத்த ஒன்று என்கிறான் 

ஆமாம் ”நேற்று வரை உயிரோடு இருந்தான்,ஆனால் இன்று இல்லையே”என்று சொல்லுவதைப் போன்று நிலையற்றை தன்மை உடையது இந்த உலகம்.

இறுதியாக திருநாவுக்கரசர் தேவாரம் ஒன்றை பார்ப்போம்:

"நடலை வாழ்வுகொண்டு என் செய்திர் நாணிலீர் 
சுடலை சேர்வது சொற்பிரமாணமே 
கடலின் நஞ்சமுது உண்டவர் கைவிட்டால் 
உடலினார் கிடந்து ஊர் முனி பண்டமே."
5.90.4 
உடலைப் பேணுதலிலேயே காலத்தை வீணாக்காதீர்.இவ்வுடலானது ஒரு நாள் உயிர் பிரிந்த பொழுது ஊரார் பிணம் என்று சொல்லி வெறுக்கத்தக்க பொருளாகக் கிடக்கும் என்கிறது.

பகுதி 06: "முடிவுரை"அடுத்தவாரம் தொடரும் 

0 comments:

Post a comment