இறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும் பகுதி 05"A":‏

Death & Its Beliefs of Tamils
[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்/
 Compiled by: Kandiah Thillaivinayagalingam]

பண்டைய இலக்கியத்தில் மரணம்"
[புறநானூறு & நாலடியார்]

 " ஓர்ந்தஉள் அகத்தே நிறைந்தொளிர் கின்ற 
          ஒருவனே உலகியல் அதிலே 
     மாந்தர்கள் இறப்பைக் குறித்திடும் பறையின் 
          வல்லொலி கேட்டபோ தெல்லாம் 
     காந்திஎன் உள்ளம் கலங்கிய கலக்கம் 
          கடவுள்நீ யேஅறிந் திடுவாய் 
     ஏந்தும்இவ் வுலகில் இறப்பெனில் எந்தாய் 
          என்னுளம் நடுங்குவ தியல்பே."
   [திருவருட்பா3428.]

மெய்ம்மை பொய்ம்மைகள் பகுத்துணர்ந்த பெருமக்கள் உள்ளத்தே ஒளி நிறைந்து விளங்குகின்ற ஒருவனாகிய பெருமானே!உலக வாழ்வில் மக்களின் சாவைக் குறிக்கும் பறை மேளத்தின் வன்மையான ஓசையைக் கேட்ட போதெல்லாம் என் மனம் வெதும்பிக் கலங்கிய கலக்கத்தைக் கடவுளாகிய நீ நன்கு அறிவாய்;உயர்ந்த இவ்வுலகில் சாக்காடு என்றால் என் உள்ளம் நடுங்குவது இயற்கையாம்-வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் (அக்டோபர் 5, 1823 - ஜனவரி 23, 1873) இப்படி கூறுகிறார் 

"களிறே கதவு எறியாச் சிவந்து உராஅய்
நுதி மழுங்கிய வெண் கோட்டான்
உயிர் உண்ணும் கூற்றுப் போன்றன;"
[புறநானூறு 4/மரணத்தின் தமிழ் கடவுளை-கூற்றுவன்,காலன்,மறலி என சங்க இலக்கியத்தில் கூறுவர்]

யானைகள்,மதிற்கதவுகளை வெகுண்டு மோதியதால் அவற்றின் வெண்ணிறமான தந்தங்கள் மழுங்கின.அந்த யானைகள் உயிரைக் கொல்லும் கூற்றுவனைப் போல் காட்சி அளிக்கின்றன என்கிறார் இரண்டாயிரம் ஆண்டுகளிற்கு முற்பட்ட ஒரு சங்க புலவன்.

இரண்டு பாட்டிலும் ஒரு பயத்தை,கலக்கத்தை காண்கிறோம்.அந்த குழப்பமே இன்றைய நூற்றாண்டு கவிஞரை [கண்ணதாசனை] "காற்றொன்றை இந்தக் கட்டையிலே விட்டுவைத்த கூற்றுவனைக் காணாமல் குழப்பம் அகல்வதில்லை" என்று  சொல்லவைத்ததோ? 

புறநானூறு 192,இல் கணியன் பூங்குன்றன் "சாதலும் புதுவது அன்றே; வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே;" என்று கூறுகிறான்.அதாவது சாதலும் புதி தன்று,கருவிற்றோன்றிய நாளே தொடங்கியுள்ளது என்கிறான். 

அது மட்டும் அல்ல புறநானூறு 214 இல் கோப்பெருஞ் சோழன் ஒருவேளை மாறி மாறி பிறவாமல் போய்விட்டாலும்[மறு பிறப்பு என்று ஒன்று இல்லாமல் இருந்தாலும்],இமயமலையின் ஓங்கிய சிகரம் போல்,நம் புகழை நிலை நிறுத்த பழியற்ற தன் உடலோடு சேர நின்று இறத்தல் சிறந்தது என்று இங்கு ஆலோசனை வழங்குகிறார்.

"மாறிப் பிறவார் ஆயினும், இமையத்துக்
கோடுயர்ந் தன்ன தம்மிசை நட்டுத்,
தீதில் யாக்கையடு மாய்தல் தவத் தலையே"

ஆனால் பதிணென் சித்தர்களில் ஒருவரான சிவவாக்கியார் அடித்துச் சொல்கிறார்.மறுபிறப்பு என்று ஒன்று இல்லை இல்லைவே என்று. 

"கறந்தபால் முலைப்புகா, கடைந்தவெண்ணெய் மோர் புகா,
உடைந்து போன சங்கின் ஓசை உயிர்களும் உட்புகா,
விரிந்தபூ உதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம்புகா, 
இறந்தவர் பின் பிறப்பதில்லை,இல்லை,இல்லை இல்லையே!"  

இனி சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நானூறு தனிப்பாடல்களின் தொகுப்பான நாலடியாரில் சில பாடலை பார்ப்போம்  

"நட்புநார் அற்றன நல்லாரும் அஃகினார்
அற்புத் தளையும் அவிழ்ந்தன;-உட்காணாய்;
வாழ்தலின் ஊதியம் என்னுண்டாம்? வந்ததே
ஆழ்கலத் தன்ன கலி" [நாலடியார் 12]

இங்கு “உற்ற நண்பர்களின் தொடர்பு அற்றுபோகும்,மகிழ்ச்சியூட்டினாரும் குறைந்து போவர்,ஆய்ந்து பார்த்தால் வாழ்வின் அர்த்தம் இருக்காது,அமைதியான ஆழ் கடலில் மூழ்கும் கலம் ஏற்படுத்தும் முனகல் போன்றது மரணத்தின் அழு குரல்” என்று சொல்கிறது.மேலும் இன்னும் ஒரு பாட்டில்,வாழ்வு எவ்வளவு நிலை இல்லாதது? என்று சொல்கிறது  
"நின்றன நின்றன நில்லா எனஉணர்ந்து
ஒன்றின ஒன்றின வல்லே செயின்செய்க;
சென்றன சென்றன வாழ்நாள் செறுத்துடன்
வந்தது வந்தது கூற்று." [நாலடியார் 4]

“வாழ்க்கையில் எதை நிலையானது என்று நினைத்து மனம் அலை பாய்கின்றதோ அது நிலையற்றது.செய்ய வேண்டியது ஒரே காரியம் என்றாலும்,அதை விரைந்து செம்மையாக முடியுங்கள்,மரணம் எப்போது வேண்டுமானாலும் வரலாம்,வாழ் நாள் அறுதியில் முடிந்து விடும்”.(ஏனெனில்) வாழ்நாட்கள் விரைந்து போய்க்கொண்டே யிருக்கின்றன . கூற்றுவன் வந்துகொண்டேயிருக்கிறான்].மரணம் எதன் பொருட்டும், யார் பொருட்டும் நில்லாது என்கிறார் . 

கம்பராமாயணத்தில் "நீர்கோல வாழ்வை நச்சேன், தார்கோல மேனி மைந்தா" என கூறப்படுகிறது.அதாவது நறுமண பூக்களை மாலையாக அனிந்த அண்ணா,நீரின் மீதிட்ட கோலத்தை போன்றது வாழ்கை,இவ்வுயிர்ரை காக்க முனையேன்.ராமனுடன் போர் புரிந்து உயிர் விடவே என் விருப்பம் என்பான்
கும்பகருணன்.

அது மட்டும் அல்ல தமிழர்களின் திருக்குறளில் நிலையாமை குறித்து 34வது அதிகாரத்தில் மிகவும் சிறப்பாக கூறப்படுகின்றது. 

பகுதி 05 "B":"பண்டைய இலக்கியத்தில் மரணம்"[திருக்குறள்]அடுத்தவாரம் தொடரும் 

2 comments: