தை மாதம் ஒரு சிறப்பான மாதம்!:பகுதி- 03‏

[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
"ஏற்றுக உலையே! ஆக்குக சோறே!
கள்ளும் குறைபடல் ஓம்புக;
ஒள்ளிழைப் பாடுவல் விறலியர்
கோதையும் புனைக "
-புறநானூறு 172[ கி மு 500 ஆம் ஆண்டை சேர்ந்தது இந்த புறநானுறு ] 
 "உலையை ஏற்றுக; சோற்றை ஆக்குக; கள்ளையும் நிறைய உண்டாக்குக;அழகாக செய்யப்பட்ட அணிகலன்களை அணிந்த,பாடுவதில் சிறந்த,விறலியர் மாலைகளைச் சூடுக; "
 அதாவது "உலையை ஏற்றுக;சோற்றை ஆக்குக"என்பது பொதுவாகக் கூறப்பட்ட பொங்கலிடும் முறையாகும்.
 புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும்
பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து''
(சிலப். 5:68-69)

எனும் இளங்கோவடிகளின் வாக்கால் அறிகிறோம்.-கி பி 100/200 ஆம் ஆண்டை சேர்ந்தது இந்த சிலப்பதிகாரம் 

ஆனால் இடைக்காலத்தில் தமிழ்ப் புலவராகிய திருத்தக்க தேவர்,வண்டுகள் மொய்க்கும் மலர் மாலைகளை அணிந்த மகளிர் இடும் பாங்கினை படம் பிடித்துக் காட்டியுள்ளார்.
 மதுக்குலாம் அலங்கல் மாலை
மங்கையர் வளர்த்த செந்தீப்
புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்''
(சீவக. சிந். 1821)-கி பி 900 ஆம் ஆண்டை சேர்ந்தது இந்த சீவக சிந்தாமணி 
 இதனால், செந்தீ மூட்டிப் புதுப் பானையில் இனிய பாலொடு கலந்த சோற்றைப் பொங்கலாகப் பொங்கிடும் பாவையரின் பழக்கம் புலப்படுத்தப்படுகிறது.கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு அளவில் நடைபெற்ற பொங்கல் இடும் முறையாக இதனை நாம் கருதலாம்?

பூமி ஒரு முறை கதிரவனைச் சுற்றிவரும் காலமே ஓர் ஆண்டாகும்.இச்சுழற்சியில் ஒருபாதிக் காலம் கதிரவன் வடதிசை நோக்கியும் மறுபகுதிக் காலம் தென்திசை நோக்கியும் செல்வதாகக் காணப்படுகிறது.இதனால் ஓராண்டில் சூரியனின் பயணம், வடசெலவு(உத்ராயணம்) என்றும் தென்செலவு(தட்சனாயணம்) என்றும் சொல்லப்படும். தை முதல் ஆனி வரை ஆறு மாதம் வடசெலவும் ஆடி முதல் மார்கழி வரை தென்செலவுமாகும்.அந்த வகையில்,கதிரவன் வட செலவைத்[பயணம்] தையில் தான் தொடங்குகிறது.மகர ரேகைக்கு வந்து வடக்கு நோக்கி சூரியன் திரும்புவதை தான் மகர சங்கராந்தி (tropic of capricorn, tropos means to turn) என்கிறார்கள்.அதுவே தமிழகத்தில் பொங்கல் எனப்படுகிறது.

எனவே சூரியனின் அடிப்படையில் காலண்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளது என்றால் சூரியனின் துவக்க பயணத்தின் அடிப்படையில் ஒன்று ஜூனில் இருக்க வேண்டும் ,அல்லது ஜனவரி 14 இல் புத்தாண்டு வர வேண்டும் அல்லவா?

இனி ஈராயிரம் அண்டுகளுக்கும் முற்பட்ட சங்க  இலக்கியங்களில் காணப்பெறும் சான்றுகள் சில வற்றை பார்ப்போம்.
 "மாயோன் மேய காடு உறை உலகமும்,
சேயோன் மேய மை வரை உலகமும்,
....
காரும் மாலையும் = முல்லை    
குறிஞ்சி = கூதிர், யாமம் என்மனார் புலவர்!"
[தொல்காப்பியம்]
 ஆக, கார் காலம் தான், திணைகளுள் முதல் காலமாகக் குறிக்கிறது தொல்காப்பியம்!
* முதல் திணை = முல்லை! * முதற் காலம் = மழைக் காலம்![இங்கு, என்மனார் புலவர், என மொழிப என ஆசிரியர் கூறியிருப்பதால், இந்தக் காலப் பகுப்பு தொல்காப்பிய விதி அல்ல- தமிழர் மரபு என்பது புரியும்.]
இதற்கு உரை எழுதிய உச்சிமேல் புலவர்கொள் நச்சினார்க்கினியர் கால உரிமை எய்திய ஞாயிற்றுக்கு உரிய சிங்க ஓரை முதலாக, தண்மதிக்கு உரிய கற்கடக ஓரை ஈறாக வந்து முடியுந்துணை ஓர் யாண்டாம் என்கிறார்

பகுதி: 04 அடுத்த வாரம்தொடரும்


4 comments:

 1. அதாவது பொங்கல் 2000 ம் ஆன்டுகளுக்கு முற்பட்ட விழா என்கிறீர்கள்.அத்துடன் முடிவு தை தான் தமிழரின் முதல் மாதம் என்று கூற போகிறீர்களாக்கும்

  ReplyDelete
  Replies
  1. கந்தையா தில்லைவிநாயகலிங்கம்Thursday, January 09, 2014

   உங்கள் ஊகத்திற்கு நன்றிகள்!

   Delete
 2. சிவாஸ்Sunday, January 05, 2014


  நாம் அறியாத,மறந்த விடயங்களை நாம் அறியக் கூடியதாக உங்கள் ஆக்கம் உள்ளது.நன்றி.

  ReplyDelete
 3. கந்தையா தில்லைவிநாயகலிங்கம்Thursday, January 09, 2014

  தைப் பொங்களை தொடர்ந்து ஒரு நீண்ட கட்டுரையை பகுதி பகுதியாக "தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?]" என்ற தலைப்பில் அலசுவோம் என்று எண்ணுகிறேன்.இது குறைந்தது 25 பகுதிகளாக அமையலாம்? குமரிக் கண்டம்,சுமேரிய,சிந்து சம வெளி நாகரிகம், ஆபிரிக்க -இவைகளைப்பற்றி ஒவ்வொரு கோணத்திலும் எமது அறிவிக்கு எட்டிய அளவிலும், இதுவரை கிடைக்கப் பெற்ற சான்றுகள் அடிப்படையிலும் ,உலக/தமிழ் அறிஞர்கள்,ஆய்வாளர்களின் கருத்துக்கள் அடிப்படையிலும் அலசுவோம் என்று யோசிக்கிறேன்.உங்கள் ஆதரவு தான் என்னை மேலும் மேலும் எழுத தூண்டுகிறது.அதுமட்டும் அல்ல என்னாலும் எழுத முடியும் என்ற ஒரு நம்பிக்கையை வளர்த்த உங்களுக்கும் தீபத்திற்கும் எனது நன்றிகள்.உங்கள் அபிப்பிராயம்,கருத்து என்றும் வரவேற்கத்தக்கது.‌

  அன்புடன்,
  கந்தையா தில்லை

  ReplyDelete