அன்று சொன்னதும், இன்று கேட்பதும்!

எமது பண்டைய இலக்கிய, சரித்திரக் கதைகளிலே, மக்களை நல்வழியில் கொண்டு செல்லும் பெரும் நோக்குடன், ஏராளமான உதாரண கதா பாத்திரங்களை உருவாக்கி, அவர்களின் செய்கைகளும், உரைகளும் ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கவேண்டிய நற்பண்புகள் என்று அறிவுரைகள் கூறப்பட்டு வந்துள்ளன. இவை எல்லாவற்றையும் நம் ஆசிரியர்கள் கூற, நாமும் மறுப்பேதும் இன்றிச் செவிமடுத்து, வினாத்தாளில் சரியான விடையையும் எழுதி, முழு மதிப்பெண்ணையும் வாங்கிவிட்டோம்.
 என்றாலும், தற்கால பகுத்தாய்வு செய்யும் இளம் சமூகத்தினர், இக்கதைகள் பற்றித் துருவிக் கேட்கும் வினாக்களுக்கு திருப்தியான,தகுந்த பதில் கூறமுடியாது திணற வேண்டியுள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மைதான்.

அப்படியான ஒரு சில சம்பவங்களைப் பார்ப்போமா?

1. பாரி - கொடை வள்ளல்:

அன்று:
முல்லைக் கொடி படருவதற்காகத் தன தேரையே தானமாகக்  கொடுத்தான் பாரி!. அப்படிப்பட்ட கொடை வள்ளல் பாரி மன்னன்!
இன்று:  
 மூடனே! இந்த உக்கிப் போ மரம் எதற்கு? இங்கு, நாம் படர நின்ற 100 மரங்களை வெட்டித்தானே நீ இந்தத் தேரினைச் செய்தாய்? அவற்றை முதலில் நீ வெட்டாமலேயே  இருந்திருந்தால், உயிருள்ள மரங்கள் எல்லாம், காலம் காலமாக எத்தனை கொடிகள் படர வசதியாக இருந்திருக்கும்!

2. கர்ணன் – தர்மவான்:

அன்று:
கேட்டவர்களுக்கு இல்லை என்று கூறாமல் அள்ளி, அள்ளிப் பணம், பொருளென்று வாரி வழங்கினான்.
இன்று:
 உனக்கென்ன, நீ உழைத்த உன் பணமா? மக்கள் வரிப்பணத்தைத் துரியோதனன் கொடுக்க, நீ வாரி வழங்கிப் பெயர் வாங்குகின்றாய். இது வழித் தேங்காயை எடுத்துத் தெருப்பிள்ளையாருக்கு அடித்தது போல!

3. ஏகலைவன் - குரு பக்தி:

அன்று:
கீழ் ஜாதி என்பதால் துரோணர் விற்பயிற்சி
சொல்லிக்கொடுக்க மறுத்ததால், ஏகலைவன் அவரை மானசீகக் குருவாக எண்ணி, பயிற்சி செய்து மகா விற்பன்னன் ஆனான். பொறாமையடைந்த துரோணர், குரு தற்சனையாக  ஏகலைவனது கைக்கட்டை விரலைக் கேட்க, அதை அவன் வெட்டிக் கொடுத்தான். இதல்லவோ குரு பக்தி!
இன்று:
சாதி வெறி பிடித்த கிழவா! உனக்கு ஏன் குருதர்ச்சனை? துரோகியே, நீ என்ன, என்னுடன் வந்து அம்பெடுத்தாயா! நாண் ஏற்றினாயா? அல்லது அங்கு கொஞ்சி விளையாடும் எங்குலப் .......! . மானம் கெட்டவனே, பொறாமையால், சூட்சகமாக, அம்பெய்ய முக்கியமான என பெருவிரலையெ வெட்டித் தருமாறு கேட்கின்றாயே! ஓடிப்போய்விடு! இல்லையேல்....!

4. கண்ணகி - கற்பரசி:

அன்று:
கண்ணகி கற்புக்கரசி என்பதால் அவள் சொன்ன வாக்கு அப்படியே பலித்தது! மதுராபுரி பற்றி எரிந்தது.
இன்று:
உந்தக் கற்பின் சக்தியால் அப்பாவிச் சனங்களை இனப்படுகொலை செய்யாமல், உன் கற்புக்கு முதன்மையான கோவலன் உயிரைக் காப்பாற்றி இருக்கலாமே!

5. நளாயினி - பத்தினிப் பெண்:

அன்று:
தனது நோயுள்ள முடக் கணவன், ஓர் அழகிய விலை மாதுவுடன்   கூட ஆசைப்பட்டார் என்று, அவனைக் கூடை ஒன்றில் வைத்துத் தலையில்  சுமந்து சென்று அவளிடம் கொண்டு போய் சேர்த்தாள், நளாயினி என்னும் பத்தினிப் பெண்!
இன்று:
அட, சீ!  அப்படி ஒருவனை உன் வீ ட்டில் இருக்கவே இடம் அளித்திருக்கக் கூடாது. இப்படிச் செய்த உன் அடிமைப் புத்திக்கு உன்னை முதலில் சுட்டுக் கொன்று இருக்கலாம்.

6. சீதை - பேரழகி:

அன்று:
சீதையைப் பிரிந்த இராமன் அவளின் சகல(!) அங்கங்களின் அழகான எடுப்புத் தோற்றங்களை, தன் தம்பிக்கு அக்கு வேறு ஆணி வேறாக வர்ணித்துக் கூறிக் கவலை கொண்டான்.
இன்று:
அட, விவஸ்தை கெட்டவனே, அதுவும் தம்பிக்கா? அவனை, அவன் புது மனைவியிடம் இருந்து 14 வருடம் பிரித்து வைத்துக்கொண்டு! சும்மா உன்பாட்டில் இருந்து யோசிக்க வேண்டியதுதானே!

7. தசரதர் - வாக்குத் தவறாதவர்:

அன்று:
அவரது 60,000 மனைவியரில் ஒருவருக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றித் தன் உயிரையே விட்டார்.
இன்று:
உனது 60,000 மனைவியர்களுக்கு எப்படியான வாக்குகளையும், நீதியையும் கணவன் என்ற ரீதியில் வழங்கி இருப்பாய்? உன் வாழ் நாளில் ஒரு மனைவியை, ஒரே ஒரு தரம் அரை மணித்தியாலம் வீதம், நாளுக்கு 6 மனைவியரிடம் போனால்தான் எல்லோரையும் பார்க்க (மட்டும்) முடிந்திருக்கும். நாங்கள் ஒன்றோடையே.....

8. திருக்குறள்  - ஒரு பொது மறை:
அன்று:
சிறியோர் முதல் பெரியோர் வரை எவரும் முழுமையாகப் பின்பற்ற வேண்டிய ஒரு பொது மறை திருக்குறள்.
இன்று:
சிறியோருக்குமா? எல்லாமுமா? அய்யய்யோ, திருக்குறளின் 20% மான குறள்கள் 'வயது வந்தவர்களுக்கு மட்டும்'. சின்னவங்கள், சின்னவள்களுடன் அவற்றை அப்படியே பின்பற்ற அனுமதிப்பீர்களா?

9. நந்தனார் - தெய்வ பக்தி:

அன்று:
கீழ் சாதியினராகிய நந்தனார் கோவிலின் வெளியில் நின்று இறைவனைக் கும்பிடும்போது, நந்தி மறைக்கின்றதே என்று இறைவனிடம் முறையிட, இறைவன் நந்தியை சற்றுத் தள்ளி உட்காரச் சொல்ல, அதுவும் தள்ளி அமர, நந்தனாரும் நேரே பார்த்துத் தரிசனம் செய்தார். என்னே இறை அருள்!
இன்று:
அடப் பாவமே!  இறைவனும் சாதி பிரிததுப் பார்ப்பவரா? பேசாமல் 'உள்ளே வா நந்தா' என்று தனது அருகே அழைத்திருக்கலாமே?

10. கற்பரசிகள் – சக்தியுள்ளவர்கள்:

அன்று:
கற்புடை மாந்தர் நினைத்தால் சூரியனையே உதிக்காமல் நிற்பாட்டலாம்.
நளாயினி, கண்ணகி, தமயந்தி, சீதை, போன்ற பல கற்புடை பெண்கள் வாழ்ந்தனர்.
இன்று:
அப்போ, அன்றிலிருந்து இன்று வரை எந்தவொரு கற்புடைய பெண்களும் வாழவில்லையா? நம் அம்மாக்கள், மனைவிமார், அக்காமார், தங்கைமார் எல்லோருமே கற்பில்லாதவர்களா? இல்லைத்தான் போலும்; இருந்திருந்தால் நாம் தினமும் சூரியன் இல்லாமல் இருட்டில்தான் வாழ வேண்டி வந்திருக்கும்.

11. அரிச்சந்திரன்  - சத்தியவான்:
அன்று:
தன சொல்லைக் காப்பதற்காக, தனது மனைவி, பிள்ளைகளையே அடிமையாக விற்றவன் அரிச்சந்திரன் என்னும் சத்தியவான்.
இன்று:
அட கடவுளே! மனிதரை அடிமையாக, பண்ட பாத்திரங்கள் போல  விற்றுப் பணம் பெறுவதும் ஒரு பிழைப்பா? ஓகோ, உன்னிடம் இருந்துதான் மனித அடிமை வியாபாரமே மேற்கில் தொடங்கியதோ?

12. சிபிச்சக்கரவர்த்தி - ஜீவகாருண்யன்:

அன்று:
வேடன் உணவுக்காகப் பிடித்து வைந்த்திருந்த புறாவின்  உயிரைத் தப்பவைப்பதற்காக, எடைக்கெடை தன் தொடையிலிருந்து பெரும், பெரும் துண்டங்களாக இறைச்சியை வெட்டிக் கொடுத்த ஜீவகாருண்யன்.
இன்று:
அட, மூளைகெட்ட அரசா! நான் என்ன நரமாமிசம் தின்னும் அளவுக்குக் கேவலமான பிறப்பு என்றா நினைத்துக் கொண்டாய்? நீயும், உன்ரை இறைச்சியும்! நீயே வைத்துக்கொள்!

13. கண்ணன் - லீலாவிநோதன்:

அன்று:
கண்ணனின் அழகிலும், லீலைகளிலும் மயங்கி எல்லாப் பெண்களும் அவன் பின்னே சென்றார்கள். அவன் ஒரு லீலாவிநோதன்!
இன்று:
அடடே! அதிஸ்டக்காரன்! இன்றுமட்டும் ஏன் இப்படி நாமும், எல்லாப் பெண்களுடனும் திரிந்து அனுபவிக்க இந்தச் சமுதாயம் விடுகின்றது இல்லை! சில வேளை நாம் அழகில்லையோ? லீலைகள் புரியத் தெரியாதவர்களோ? எதற்கும் ஒருமுறை முயற்சி செய்து பார்க்கலாம்!

இப்படியாக, தற்போது பதில் கூறமுடியாத ஏராளமான சம்பவங்கள் இருக்கத்தான் செய்கின்றன!

ஆக்கம்: செல்வத்துரை சந்திரகாசன்

1 comments:

  1. மாறுகின்ற உலகில் மனிதனும் தன் பழக்கவழக்கங்கள்,பண்பாடு
    ,உணர்வுகள் அனைத்திலும் மாற்றங்கள் உள்ள நிலையில் புதுமைகள் இணைக்கப்படா பழைய கதைகள் கேள்வித் தாக்குதல்களுக்கு உள்ளாக வேண்டியே வரும்.

    ReplyDelete