உன்னைச் சொல்லக் குற்றமில்லையா?


ந்த இளம் தம்பதி புதிதாக ஒரு இடத்திற்குக் குடி போனார்கள்.

அதிகாலை காபி குடித்தபடி ஜன்னல் வழியே இருவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைத்து விட்டு துணிகளை உலர்த்திக் கொண்டிருந்தாள்.

பார்த்துக் கொண்டே இருந்த மனைவி சொன்னாள். அந்தம்மாவிற்குத் துவைக்கவே தெரியவில்லை போல் இருக்கிறது. துணியில் அழுக்கே போகவில்லை பாருங்கள்

கணவனும் பார்த்தான். ஆனால் பதில் எதுவும்  சொல்லவில்லை. தினமும் அவர்கள் எழுந்து காபி குடிக்கும் நேரமும், பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைக்கும் நேரமும் ஒன்றாகவே இருந்ததால் மனைவி தினமும் அடுத்த வீட்டு சலவை சரியில்லாதது பற்றி தினமும் சொல்லிக் கொண்டேயிருந்தாள்.

திடீர் என்று ஒரு நாள் பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைத்து உலர வைத்த போது பளிச்சென்று சுத்தமாக உலர்வதைப் பார்த்த மனைவி சொன்னாள். அப்பாடா. இப்போது அந்தம்மாள் துவைக்கக் கற்றுக் கொண்டு விட்டாளா இல்லை நல்ல சோப்பை பயன்படுத்த ஆரம்பித்து விட்டாளா என்று தெரியவில்லை... இன்று தான் துணிகள் பளிச்சென்று சுத்தமாக இருக்கின்றன..”

கணவன் அமைதியாகச் சொன்னான். இன்றைக்கு அதிகாலையில் தான் நான் நம் வீட்டு ஜன்னல் கண்ணாடிகளைச் சுத்தம் செய்தேன்

இப்படித்தான் பல முறை நடக்கின்றன. நம் வீட்டுக் கண்ணாடி சுத்தமில்லாத போது அடுத்தவர் வீட்டுத் துணிகள் அழுக்குப் படிந்தே காட்சி அளிக்கின்றன. ஆனால் நாம் நம் வீட்டுக் கண்ணாடியை சந்தேகிப்பதே இல்லை.

ஒருவேளை அடுத்தவரிடம் உண்மையாகவே குறைகள் இருந்தாலும் கூட அவை உடனடியாக நம்மால் கவனிக்கப்படுகின்றன. அதற்கு ஏதாவது நியாயமான காரணம் இருக்கலாம் என்று கூட நம்மால் யோசிக்க முடிவதில்லை. நம் குறைகளுக்கோ காரணங்கள் மட்டும் தான் வலுவாக வைத்திருக்கிறோம். அந்தக் காரணங்கள் இல்லா விட்டால் நாம் பத்தரை மாற்றுத் தங்கம் தான்.

சோவின் யாருக்கும் வெட்கமில்லை’ படத்தில் ஒரு அழகான பாடல் உண்டு.
சுட்டும் விரலால் எதிரியைக்                                           

காட்டி குற்றம் கூறுகையில்
மற்றும் மூன்று விரல்கள்
உங்கள் மார்பினைக் காட்டுமடா.
மூடர்களே பிறர் குற்றத்தை
மறந்து முதுகைப் பாருங்கள்
முதுகில் இருக்கு ஆயிரம்
அழுக்கு, அதனைக் கழுவுங்கள் 

திருவள்ளுவரும் அழகாகச் சொல்வார்.

ஏதிலார் குற்றம் போல் தன்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு

அடுத்தவர் குறைகளைக் காண்பதில் உள்ள ஆர்வத்தை நாம் நம் குறைகளைக் காண்பதிலும் வைத்துக் கொண்டால் இந்த உலகில் தீமை இருக்க முடியுமா? அடுத்தவர்கள் குறைகளைக் காண்பதில் தான் நமக்கு எத்தனை அக்கறை? எத்தனை வேகம்? அந்த நேரத்தில் தான் நம் கவனிப்பு எத்தனை கூர்மை பெற்று விடுகிறது.  ஆனால் நம் விஷயம் என்று வரும் போது அதெல்லாம் காணாமல் போய் விடுகிறது. குறை கூறுபவர்கள் நோக்கத்தில் குறை காண ஆரம்பித்து விடுகிறோம். இப்படிப்பட்ட சுபாவம் நம்மிடம் இருக்கும் வரை நாம் குறைகளை நீக்கிக் கொள்ளவோ, திருந்தவோ வாய்ப்பே இல்லை.

அடுத்தவர் திருந்தி பெரிதாக நமக்கு எதுவும் ஆகப் போவதில்லை. மாறாக குறைகளை நீக்கிக் கொண்டு நாம் திருந்தினால் நம் வாழ்க்கையில் அடையும் பயன்கள் ஏராளமானவை. மேலும் நாம் நம் குறைகளை நீக்கிக் கொண்டு சிறப்பாக வாழும் போது அடுத்தவர்கள் நம்மைப் பார்த்து மாற உத்வேகத்தை ஏற்படுத்தும் வண்ணம் நல்ல உதாரணமாகவும் இருப்பதால், குறையுள்ள மற்றவர்களும் நல்வழிக்கு மாற வாய்ப்புண்டு.

எனவே விமரிசனம் தவிர்த்து நல்ல உதாரணமாக இருந்து வழிகாட்டுவோம்.!


-         நன்றி  என்.கணேசன்

0 comments:

Post a Comment