தற்கொலையா?-: அழ.பகீரதன்

உலகில் நிற்ப்பீர்


தற்துணிவு இலாதார் 
தற்கொலையில் தஞ்சமாவார் 
நற்புகழ் வேண்டியவர் 


விற்திறன் ஏதுமின்றி 
தன்னைத் தானழிக்கும் 
தன்மை பெற்றனரோ

பிரச்சனைக்குள் வாழ்வென்ற 
பிறர்மொழி கேளார் 
கரச்சலுக்குப் பயந்திவர் 
காலனுக்கே இரையாவர் 
கண்டுபொறுக்குதில்லை 
காணச் சகிக்குதில்லை

துன்பத்தை வென்று 
இன்பத்தை பெறுவதே 
இந்நிலத்து வாழ்வு 
இதையறியா மனிதர் 
அன்புற்றார் நெஞ்சம் 
அழவிட்டுச் செல்கிறார்

அளவிற்கு அதிக 
ஆசையினை வளர்த்து 
அடைய முடியா 
விடையை பெற்று 
ஆகாயத்தில் பறக்க 
ஆக்கினரோ பாதை

ஆக்கம் செய்தால் 
அடைதல் கூடும் 
அடைதல் முடியா 
ஆசைகள் எனில் 
ஒழித்து விடலன்றி 
ஒழிதல் அறிவீனம்

துணிவே துணையெனில் 
துயரம் ஏனெழும் 
பழிப்பவர் சொற்காய் 
பயனற்று வீழாதீர் 
சாவே பழிப்பு 
சற்று எழுமின் 

எடுப்பான வாழ்வகற்றி 
ஏற்றம் காணுமென்று 
ஆடம்பரம் தவிர்த்து 
அகிலத்தில் நிற்பீர் 
பற்றுமிக வாழ்வீர் 
நாடாதீர் அழிவையே

காதல் போயினால் 
சாதலே வழியென்று 
சாகிட துடியாதீர் 
காதலை இன்னோர் 
காரிகை மேல்கொண்டு 
களிப்பீர் உலகில்

இனியும் நீவிர் 
இறப்பிற் கென்று 
இட்டம் கொளாதீர் 
இன்றே துணிவை 
உள்ளகம் ஏற்று 
உலகில் நிற்பீர்!


( "எப்படி எனினும்...." கவிதைத் தொகுப்பிலிருந்து.) 

1 comments: