தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?]பகுதி:15‏

[தொகுத்தது:கந்தையா  தில்லைவிநாயகலிங்கம்]
நீர்பாசனம் என்பது நிலத்திற்கு நீர் வழங்கும் ஒரு முறை. தமது வேளாண்மையை முன்னேற்ற சுமேரியர்கள் வாய்க்கால் முறையை பாவித்தார்கள்
உலகத்தில் மனிதனுடைய முதல் நாகரிகம் தோன்றிய இடம் என்று அழைக்கப்படுவது மெசெப் பொத்தோமியா[மேசொபோடமியா], இப்போதைய ஈராக் ஆகும். சுமேர் மக்களை,அதாவது சுமேரியனை
சிலவேளை  திடீர் நாகரிகம் என கூறுவர். மேசொபோடமியாவில் உள்ள டைகரிஸ், யூப்ரடிஸ் என்னும் இரு ஆறுகளுக்கும்[Tigris and Euphrates rivers]இடைப் பட்ட பகுதியில் கிறிஸ்துக்கு முன் கிட்டத்தட்ட 4000 வருட அளவில் திடீர் என உண்டாகிய நாகரிகம் என்பதால் ஆகும்.  5000 வருடங்களுக்கு முன் சுமேரியர்களே உலகின் முதல் எழுத்து வடிவத்தை உண்டாக்கியவர்கள் என நம்பப்படுகிறது.இந்த எழுத்து வடிவம் ஆப்பு எழுத்து[Cuneiform script/
மெசெப்பொத்தோமியா கல்வி
கூனிபோம் எழுத்துக்கள் முக் கோண வடிவம் கொண்டவை ஆகும்.]வடிவம் ஆகும்.அவர்களே முற்காலத்திய  நகர்  சார்ந்த நாகரிகத்தை தெற்கு மேசொபோடமியாவில் அமைத்தவர்கள். இங்குதான் கிறிஸ்துக்கு முன் 3500 க்கும் 3000 வருடங்களுக்கும் இடையில் விவசாய குடியிருப்பாளர்களான இவர்கள் இந்த நகர் சார்ந்த
பண்டைய மெசெப்பொத்தோமியா
அமைப்பை நிறுவினார்கள். இதில் மிகவும் சிறந்து விளங்கியது ஊர் என்ற நகரமாகும். ஆனால் குழப்பமூட்டும் ஒரு கேள்விக்கு அதாவது அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? என்பதற்கு நாம் விடை தேட  வேண்டி உள்ளது. அப்போது தான் இந்த சுமேரியர்களைப் பற்றிய   மர்மம் தீர்க்கப் படும்.அவர்களுக்கு என்று ஒரு மொழி இருந்தது. ஆனால் அது அவர்களை
பண்டைய மெசெப்பொத்தோமியா
சுற்றிய பகுதி எதன் உடனும் ஒத்து போக வில்லை. அவர்கள் கிழக்கில் இருந்து வந்தவர்கள் என நம்பப்படுகிறது .ஆனால் கடல் வழியாகவோ தரை வழியாகவோ என தெரியாது. என்றாலும் சில உண்மைகள் அவர்கள் எங்கு இருந்து வந்தார்கள் என்பதை காட்டும்.உதாரணமாக சுமேரியன் கடவுள்
அடிக்கடி குன்றில் நிற்பது போலவே எடுத்துச் சொல்லப்படுகிறது.இதை தமிழ் கடவுள் முருகனுடன் ஒப்பிடலாம்.மேலும் அவர்களுடைய முன்னைய கட்டிடங்கள் மரக் கட்டைகளை அடிப் படையாக கொண்டவை.ஆகவே மரங்கள் செறிந்து இருக்கும் ஓர் இடத்தில் இருந்து வந்திருக்க வேண்டும்.

ஊர் நகரத்தின் மாதிரி.ஊரில் உள்ள அரச சுடுகாட்டில் இருந்து எடுக்கப்பட்ட கைவினை கலைப்பொருள் இதுவாகும்
தொல்பொருளியலின்படி,அவர்கள்[சுமேரியர்கள்] தங்களை கறுத்த தலையினர் என அழைத்ததுடன், அவர்கள் நாடோடியினர் எனவும் எங்கு இருந்து வந்தார்கள் என சரியாக இன்னும் அடையாளம் காணப்படாதவர்கள் எனவும் அறியப்படுகிறது.அவர்கள் மேசொபோடமியாவில் இருந்த இரண்டு ஆறுகளுக்கு, அதாவது  யூபிரிடிஸ் டைகிரிஸ் ஆறுகளுக்கு [the Tigris and the Euphrates] இடையிலும் அருகிலும் குடியேறி சகல கூறுகளையும் கொண்ட சிறப்புடைய நாகரிகத்தை மேம்படுத்தினார்கள். அவர்கள் வேளாண்மையை  ஒரு ஒழுங்கு முறை படுத்தி, நீர்ப் பாசனத்தை விருத்தி செய்து, முதலாவது சக்கரத்தையும் குயவர் பயன் படுத்தும் சக்கரத்தையும் செய்து ஒரு தொழில்நுட்ப முன்னேற்றம் அடைந்தார்கள்.அது மட்டும் அல்ல ஒரு வித குடியாட்சி நிலை நாட்டி,கிறிஸ்துக்கு முன் 4000 ஆண்டளவில் நகரங்கள் அமைத்தார்கள்.பேராசிரியர் சாமுவேல் நோவா கிராமர்[Professor Kramer] அவர்களது வாழ் நாள் உழைப்பால் சுமேரியர்கள் நல்லதோர் கவிதைகளும் இலக்கியங்களும் எழுதியது தெரிய வந்தது. எப்படியாயினும் அவர்களும் அவர்களை வென்று அங்கு வாழ்ந்தவர்களும் அதாவது  பாபிலோன்அசிரிய மக்கள் போன்றோர்களும்[Babylon and Assyria] அந்த நாகரிகத்தை,நகரத்தை கைவிட்டு தீடீரென மறைந்து போனார்கள். அவை அந்த நாகரிகம் 2000 ஆண்டுகளுக்கு முன் மண்ணுக்குள் மூடப்பட்டு விட்டது.

சுமேரியன் படம் எழுத்துகளுடன் எழுத ஆரம்பித்தான்.அங்கு ஒவ்வொரு  உருவடிவமும் ஒரு முழு சொல்லை குறித்தது. உதாரணமாக,டு[du] என்ற சொல்,பாதத்தின் படம்  மூலம் குறிக்கப்பட்டது. ஆனால் பாதத்தின் படம் மேலும்  நில்,போ,வா,கொண்டு வா, போன்றவற்றையும் குறிக்கலாம்.ஒரு வினைச் சொல்லை தெரிவிக்க ,இரண்டோ அல்லது அதற்கு மேற்பட்ட சின்னம்/குறியீடு ஒன்றாக போடப்பட்டன . உதாரணமாக,ஒரு தலை கிண்ணத்திற்கு பக்கத்தில் இருந்தால் அது தின்/சாப்பிடு என்பதை குறிக்கும்.சுமேரு எழுத்து மிகவும் சிக்கலானது.அதனால் ஒரு சில எழுத்தாளர்தான் அதில் தேர்ச்சியடைந்தார்கள்.கிட்டத்தட்ட  250 பேர் அளவில் இருக்கலாம் என மதிக்கப்பட்டுள்ளது. இவர்களை சுமேரிய அறிஞர்கள்[sumerologist] என அழைப்பர்.

சுமேரியன் தனது நிலத்தை/நாட்டை "கி .என் .கிர்" என அழைத்தார்கள். இதன் பொருள் ஒளிமயமான கடவுளின் நாடு ஆகும்["Land of the Lords of Brightness,"]. சுமேரிய மொழியில் சமயத்தை  குறிக்கும் சொல் கிடையாது.ஏனென்றால் அங்கு ஆலயத்தின் வழிபாடு குடும்ப வாழ்வின் அடிப்படையாக இருக்கிறது.இயற்கை வழிபாடே அங்கு காணப்படுகிறதுஎன்றாலும் நாளடைவில் மனித உருவம் இந்த இயற்கை சக்தியுடன் இணைந்து விட்டது.பண்டைய சுமேரியன் தனது பல நேரங்களை கடவுளுக்கு அற்பனித்தார்கள்.இது, இந்த அற்பனிப்புவழிபாட்டாலும் தியாகம்/பலியாலும் கையாளப்பட்டது.ஆலயம் பல நோக்கத்திற்க்காகவும் பாவிக்கப்பட்டது. முக்கிய மானவை வழிபாடும் கல்வியும் ஆகும்.ஒவ்வொரு ஆலயமும் கல்வி நிலையம் வைத்திருந்தன. அங்கு மாணவர்கள் கணிதமும் எழுத்தும் படித்தார்கள். சுமேரியரின் ஆசிரியர் உம்மை[ummia] என அழைக்கப்பட்டார்.ஒரு துணை/ஒருதார மணம் அங்கு நிலவியது.என்றாலும் காமக்கிழத்தி/வைப்பாட்டி பொறுத்துக் கொள்ளப்பட்டது.பொதுவாக குடுப்பத்தின் மூத்தவர் மணவாழ்க்கையை ஏற்பாடு செய்தனர்.மேலும்  சுமேரியரின் வீடுகள் பொதுவாக ஓர் அடுக்கு வீடு.இது சுட்ட  அல்லது சூரிய ஒளியில் காய்ந்த களிமண்-செங்கல்லால் கட்டப்பட்டது.இது நவீன வீட்டிற்கு உரிய எல்லா வசதியையும் கொண்டுள்ளது.மேலும் செல்வந்தர்கள்  ஈரடுக்கு வீடு கட்டி வாழ்ந்தார்கள்.இசை அவர்களின் வாழ்க்கையுடன் ஒட்டியிருந்தது.அது மட்டும் அல்ல கடவுளுக்கு அர்ப்பணிக்கும் கவிதைகளும் பாடல்களும் தாராளமாக  காணப்பட்டன.

மேலும்  ஈராக்கில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டபோது 1889 ஆம் ஆண்டு உலகின் முதல் காதல் கடிதத்தை கவிதை வடிவில் கண்டு பிடித்தார்கள். ஆயினும் பல  வருடங்களுக்கு பின்புதான் Philadelphia பல்கலைக்கழக பேராசிரியரான Noah Kramer  இதன் மொழிபெயர்ப்பை ஆங்கிலத்தில் தந்தார் .இக்காதல் கணவனுக்காக  முதல் இரவில் சுமேரிய ஆப்பு வடிவத்தில் எழுதியது.இது ஷு-சின் அரசனுக்கு உரைக்கப்பட்டது இந்த காதல் கடித கவிதை அற்புதமான அர்த்தங்களை கொண்டு உள்ளது.மேலும் இதுவே உலகின் மிகப்  பழைய காதல் பாட்டும் ஆகும் . இது 2030 BC அளவில் ஊர் என்ற நகரத்தில், 4000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது.இதனை என்னால் இயன்றவரை தமிழில் மொழி பெயர்த்து கிழே தருகிறேன் உங்களுக்கு இது  சங்க கால காதல் பாடல்களை ஒரு வேளை நினைவூட்டலாம்?அதனால் இரண்டு முதல் இரவு பாடல்களையும் இதனுடன் சேர்த்து[சிலப்பதிகாரம் ,அகநானுறு] கிழே தருகிறேன்.  

"அன்பு மணாளனே! என் பிரியமான தோழனே !!

உன் கவர்ச்சி இனிமையானது, தேன் போல் இனிமையானது
ஆண்மையுள்ள சிங்கமே, என் இதயத்திற்கினிய காதலனே,
உன் வசீகரம் இனிமையானது, அமுதம் போல் இனிமையானது

நீ என்னை வயப்படுத்தி விட்டாய்,எனவே 
எனது சுய விருப்பத்தில் நான் உன்னிடம் வருவேன்
ஆண்மையுள்ள வீரனே! பள்ளி அறைக்குள் என்னை
உன்னுடன் கொண்டு போ
நீ என்னை மயக்கி விட்டாய்,எனவே 
எனது  கட்டற்ற துணிவில் நான் உன்னிடம் வருவேன்
காதல் தோழனேபடுக்கையறைக்குள் என்னை
உன்னுடன் தூக்கி  போ

மணாளனே! உனக்கு என்னை இன்பம் கொடுக்க விடு
என்  மதிப்புள்ள காதற் கண்மணியே! உனக்கு என்னை தேன் தர  விடு
தேன் சொட்டும் பள்ளியறையில் உனது கவர்ச்சியை
மீண்டும் மீண்டும் நாம் அனுபவிப்போம்,இனிய இன்பமே
இளைஞனே!உனக்கு என்னை  மகிழ்வு கொடுக்க விடு
என் அரிதான காதலனே! உனக்கு என்னை அமிர்தம் ஊட்ட  விடு 

வீரனே! நீ என்னை  கவர்கிறாய்,எனவே 
என் தாயிடம் கூறு நான் என்னையே தருவேன்
என் தந்தையிடம் கேள் அவர் பரிசாய் தருவார்
உன் ஆன்மாவை எங்கே மகிழ்ச்சி படுத்துவது என்பது எனக்கு தெரியும்
மணாளனே! விடியும் வரை எமது வீட்டில் உறங்கு
உனது இதயத்திற்கு எங்கே இன்பம் கொட்டுவது  என்பது எனக்கு தெரியும்
இளைஞனே! விடியும் வரை எமது வீட்டில் உறங்கு

வீரனே!நீ என்னை விரும்புவதால்,
நீயே எனக்கு இனியவை செய்வாய் என்றால்
எனது எஜமானே!கடவுளே!!பாதுகாவலனே!!!  
"என்லில்" கடவுளின் இதயத்தை  மகிழ்ச்சிபடுத்தும்
எனது  "ஷு-சின்அரசனே!
உனது இன்ப ஊற்றை நீயே கையாளுவாய் ஆயின்,
தேன் போல் இனிய அந்த இடத்தை நீயே பற்றுவாய் ஆயின்,
அளவு சாடியின் மூடி போல
அங்கே உன் கையை எனக்காக மூடு[வை]
 மரச் சீவல் சாடியின் மூடி போல
அங்கே உன் கையை  எனக்காக விரி[பரப்பு ]" 

குறிப்பு :ஷு சின்' :கி.மு 2037-2029 ஆண்டுகளில் ஆண்ட சுமேரிய அரசர். என்லில்:மழை மற்றும் காற்று கடவுள்"

சிலப்பதிகாரம் கோவலன் கண்ணகி முதல் இரவு:“காதல் மொழிகள்
"மாசு அறு பொன்னே! வலம்புரி முத்தே!
காசு அறு விரையே! கரும்பே! தேனே!
அரும் பெறல் பாவாய்! ஆர் உயிர் மருந்தே!
பெருங்குடி வாணிகன் பெரு மட மகளே!
மலையிடைப் பிறவா மணியே என்கோ?
அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ?
யாழிடைப் பிறவா? இசையே என்கோ?
தாழ் இருங் கூந்தல் தையால்! நின்னைஒ-என்று
உலவாக் கட்டுரை பல பாராட்டி,
தயங்கு இணர்க் கோதைதன்னொடு தருக்கி,"

[குற்றம் இல்லாத[24 கரட்?] பொன்னே, வலம்புரி முத்தே, குறை இல்லாத மணம் நிறைந்த பொருளே, கரும்பே, தேனே, சுலபத்தில் கிடைக்காத பெண்ணே, என் உயிரைப் பிடித்துவைத்திருக்கும் மருந்தே, பெரும் வணிகனாகிய மாநாயகன் பெற்ற மகளே!உன்னை நான் எப்படிப் பாராட்டுவேன்? மலையில் பிறக்காத மணியே என்பேனா? கடலில் பிறக்காத அமுதமே என்பேனா? யாழில் பிறக்காத இசையே என்பேனா? ..........]

முதல் இரவு -அகநானுறு  136
"தமர் நமக்கு ஈத்த தலைநாள் இரவின்,
உவர் நீங்கு கற்பின் எம் உயிர் உடம்படுவி!
முருங்காக் கலிங்கம் முழுவதும் வளைஇ,
பெரும் புழுக்குற்ற நின் பிறைநுதற் பொறி வியர்
உறு வளி ஆற்றச் சிறு வரை திறஎன
ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின்,
உறை கழி வாளின் உருவு பெயர்ந்து இமைப்ப,
மறை திறன் அறியாள்ஆகி, ஒய்யென
நாணினள் இறைஞ்சியோளே பேணி,
பரூஉப் பகை ஆம்பற் குரூஉத் தொடை நீவி,
சுரும்பு இமிர் ஆய்மலர் வேய்ந்த
இரும் பல் கூந்தல் இருள் மறை ஔதத்தே."

[இவளை நன்கொடையாக வழங்கி, ஏற்படுத்திக் குடுத்த, “தலை நாள் இரவில்(முதல் இரவில்), என் உயிருக்கு உடம்பாக அமைந்த இவள் உடல் முழுதும் உடையால் போர்த்தி இருப்பதால்..  ஒரே புழுக்கமா இருக்கு அவளுக்கு !அவள்  நெற்றி இப்படி வேர்க்குதேகொஞ்சம் காற்று வரட்டும் என எண்ணி ,அவள் அழகை பார்க்கும் ஆவலுடன்,ஆடையை திறவாய் எனச் சொல்லி,ஆர்வம் ததும்பும் நெஞ்சோடு, துணியை  நான் கவர. அய்யோ..உறையில் இருந்து உருவிய வாளைப் போல,அவளின் அழகு விளங்கும் உடல் ஆடையில் இருந்து நீங்கியது.அவள் தன் வடிவம் மறைக்க அறியாதவள் ஆனாள். வெட்கப்பட்டாள்(ஒய்யாரம்?) ஏய், என்னை விடுடா-ன்னு இறைஞ்சுகிறாள்;வண்டுகள் மொய்க்கும்ஆம்பல் மாலையைக் கழட்டி வச்சிட்டு; கூந்தலையே இருட்டாக்கி, அந்த இருட்டில் தன்னை, மறைத்தற்குரிய உறுப்புகளை மறைத்து மறைச்சிக்கிட்டு  வெட்கப்பட்டு வரா….]

பகுதி:16 அடுத்த வாரம் தொடரும்

0 comments:

Post a Comment