தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?]/பகுதி 18‏

[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

பொதுவாக சுமேரியன் ஆன்மீக விடயங்களில் கவனம் செலுத்தினார்கள்.ஒவ்வொரு நகரமும் குறைந்தது ஒரு கடவுளை வழிபாட்டிற்கு வைத்திருந்தார்கள். உதாரணமாக நன்னா[Nanna] கடவுளை ஊர் நகரம் வைத்திருந்தது .தெய்வத்தின் கோபத்தை தவிற்பதற்கு ஒழுங்காக தாரளமாக காணிக்கை செலுத்தினார்கள்.சிலவேளை தேவைக்கு அதிக மாகவே கொடுத்தார்கள்.உதாரணமாக  ஷ்தார்[Ishtar/சுமேரியன் கடவுள் "ஈனன்னா"வின் மறுபடிவம் ஆகும்] ஆலயம் அங்கு வணங்கும் பெண் பக்தர்களிடம் அவர்களின் கன்னிமையையே[virginity] 
வற்புறுத்தியது. கிரேக்க  வரலாற்றின் தந்தை ஹெரோடோட்டஸ்[Herodotus,கி மு 490-425] தனது குறிப்பில் ஒரு பெண் கல்யாணம் செய்யும் முன், ஆலயத்தில் தேவதாசியாக கடமையாற்ற நிர்பந்திக்கபட்டார்கள் என குறிப்பிடுகிறார்.இது
அவர்கள் ஒரு சற்புருஷனின் கவனத்தை தங்கள் மேல் இழுக்கும் வரை தொடரும் என்கிறார்.அந்த சற்புருஷன் தனது சம்மதத்தை தான் விரும்பும் அந்த பெண்ணுக்கு நாணயங்களையோ ஆபரணங்களையோ சுண்டி ஏறிவதால்[கொடுப்பதால்] வெளிபடுத்துகிறார் என்கிறார்.இதனால் அழகிய பெண்கள் சில நாட்களிலேயே தமது  தேவதாசி கடமையை முடித்து வெளியேறி விடுவார்கள் என்றும் எளிய ஆடம்பரமில்லாத பெண் வருடக் கணக்காக காத்திருக்க வேண்டி வரும் என்றும் ஆகவே இது ஒரு நியாயமற்ற முறை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கன்னிப் பெண் ஒருவரை ஆண்டவனுக்கு பணி செய்ய கோயிலுக்கு கொடுக்கும் வழக்கம் பண்டைய தென் இந்தியாவிலும் அன்று இருந்தது.தொல்காப்பியம்,எட்டுத்தொகை,பத்துபாட்டு, போன்ற சங்க இலக்கியங்களில் தேவதாசி பாரம்பரியம் இருந்ததிற்கான மேற்கோள்கள் காணப்படுகின்றன.அங்கு பல விதமான தேவதாசிகளை குறிப்பிடுகிறார்கள்.உதாரணமாக "கொண்டிமகளிர்"
,"விறலியர்","கூத்தியர்", "பரத்தையர்" ஆகும்.நமது பண்டைத் தமிழ்க் கலாசாரத்தில் பரம்பரையாகப் பொட்டுக் கட்டி இறைவனுக்கு நேர்ந்து விட்ட யுவதிகளைதேவரடியாள்’[தேவிடிச்சி] என்பர். இதே முறை சிலவித்தியாசங்களுடன் வடஇந்தியாவில்தேவதாசிஎன்றழைக்கப்படும்.சங்க இலக்கியம் தேவதாசிகளின் கதைகளை செய்யுள் வடிவில் விவரிகிறது. சீத்தலைச் சாத்தனாரின் மணிமேகலை,இளங்கோ அடிகளின் சிலப்பதிகாரம் போன்றவை தேவதாசிகளின் வாழ்க்கையை விளக்கமாக விவரிகிறது. அதாவது சங்கப்பாடல்களில் வரும் பரத்தையும், சிலப்பதிகாரம் கூறும் மாதவியும் இவ்வினமே. இவர்கள் பிரதானமாக ஆடும் கலையையும், பின் நிதானமாகக்கூடும் கலையையும் கைகொண்டிருந்ததார்கள்.

"பொய்கை ஆம்பல் அணி நிறக் கொழு முகை
வண்டு வாய் திறக்கும் தண் துறை ஊரனொடு
இருப்பின் இரு மருங்கினமே கிடப்பின்
வில்லக விரலில் பொருந்தியவன்
நல் அகம் சேரின் ஒரு மருங்கினமே."

[குறுந்தொகை 370"பரத்தை தலைவனைப் புறம்போகாவாறு பிணித்துக் கொண்டாள்என்று தலைவி கூறியதாக அறிந்த பரத்தை  கூறினது"]

பொய்கையிலிருக்கும் ஆம்பல் மலரானது, வண்டுகளின் வருகையை
உணர்ந்து தன் இதழைத் திறக்கும். இத்தகைய குளிர்ச்சியான நிலத்தின் தலைவனோடு சேராது தனித்திருந்தால் தான் நானும் தலைவனும் இரு வடிவினை உடையவர்களாக[தனித்தனியே ஈருடம்பினே மாகி] இருப்போம். நாங்கள் இருவரும் சேர்ந்து அணைந்திருந்தால்[கிடப்பின் ஈருடலாயினும் ஓருடல்போல் ஒன்றியும்] வில்லோடு சேர்ந்த விரல் போல ஒருவராகத் தான் காட்சியளிப்போம்.அவன் பிரிந்து தனது மனை சேரின் யாம் தனித்து எம் உடலாகிய ஓருடலினேமாகியும் இருப்பேம். இங்ஙனம் இருத்தல் அவனது ஒழுகலாற்றிற்கேற்ப அமைவதேயன்றி யாமாக வலிந்து மேற்கொள்வதன்று. தலைவனை எம்பால் இருத்திக் கொள்ளும் இயல்பிலேம்என்று பரத்தை கூறினாள்.

லியோனாட் வூல்லே 1930 ஆண்டு ஊர் நகரத்தில் அகழ்வாராய்ச்சி செய்தபோது ,ஒரு கொடிய மர்மத்தை அம்பலப்படுத்தினார்.ஊர் நகரத்தின் அரசனோ அல்லது இராணியோ இறக்கும் போது, பல பணியாளர்கள் அடுத்த பிறவியிலும் அவர்களுக்கு பணி செய்யவென அவர்களை தொடர்ந்து அங்கு,அந்த கல்லறையில் விஷம் அருந்தி  தமது உயிரை விடுகிறார்கள் என்பதே.

இதே போன்ற எண்ணங்களை சங்க இலக்கியத்திலும் காண்கிறோம். இங்கு சங்க கால மகளிர் இம்மை மட்டுமின்றி மறுமையிலும்,அதாவது  அடுத்த பிறவியிலும் தத்தம் கணவருடனேயே உடனுறைந்து வாழ விரும்பினர் என்ற மனநிலையை குறுந்தொகை-49 போன்றவற்றால் காண்கிறோம்.

இம்மை மாறி மறுமை யாயினும்
நீயா கியரென் கணவனை
யானா கியர்நின் நெஞ்சுநேர் பவளே’ (அம்மூவனார், குறுந்தொகை-49.)

இம்மை மாறி = இந்த பிறவி போய்,மறுமை யாயினும் = மறு பிறவி வந்தாலும்,நீயா கியரென் கணவனை = நீயே என் கணவராக வர வேண்டும்,யானா கியர் = யான் + ஆகியர் = நானே,நின் னெஞ்சுநேர் பவளே.= நின் நெஞ்சு நேர்பவளே = உன் மனதில் இருப்பவளே.

சுமேரியர்கள் தமக்கிடையில் ஒரு பொது மொழி, பண்பாடு இருந்தும்,தங்களுக்கிடையில் சமாதானத்தில் வாழ கற்றுக் கொள்ளவில்லை.அதாவது,ஒற்றுமை அங்கு சுமேரியருக்கிடையில் நிரந்தரமாக நிகழவில்லை.முதல் ஒரு நகரத்தின் அரசன் மற்ற நகரத்தின் அரசர்களை வென்று எல்லா நாட்டிற்கும் அரசனாவான். அதன் பின் இன்னும் ஒரு நாட்டின் அரசன் அப்படியே செய்வான்.இப்படி மாறி  மாறி நடைபெறும்.

சுமேரிய அரசர்கள் தமக்கிடையில் ஒற்றுமை இன்றி தங்களுக்குள் போர் புரிந்தது மட்டும் இன்றி, இதனால் அவர்கள் பலம் இழந்து எப்படி தங்களை சுற்றியிருந்த செமிட்டிய மக்களிடம் தோற்று கி மு 2000 ஆண்டளவில் முற்றாக அங்கிருந்து மறைந்தார்களோ,அப்படித்தான் சங்க காலத்திலும் இந்த ஒற்றுமையின்மை தொடர்ந்தது என்பதை சங்க பாடல்கள் மூலம் அறிகிறோம்.என்றாலும்  313 B.C,யில் மூவேந்தர்களும் ஒரு ஒற்றுமைக்கான உடன்படிக்கை ஒன்றில் ஒப்பம் இட்டார்கள் என Dr.மதிவாணன்[author Dr.Mathivanan] கூறுகிறார்.இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், கருங்கை ஒள் வாட் பெரும் பெயர் வழுதி , 70 ஆவது பாண்டியனாகிய தேவ பாண்டியன் ஆகிய மூவரும் கையொப்பம் இட்ட அந்த ஒற்றுமை ஒப்பந்தம் ஆக 113 வருடமே நிலைத்து இருந்தது எனவும் .அது,அந்த ஒற்றுமை  வட இந்தியர்களின் தாக்குதல்களில் இருந்து தமிழகத்தை அசைக்க முடியாத குன்றாய் நின்று காப்பற்றியது எனவும் மேலும் கூறுகிறார்.ஆனால் அதன் பின்பு அது,அந்த ஒற்றுமை இன்றுவரை தமிழர்களிடம் நிகழவில்லை.

இப்ப நாம் காரிக் கண்ணனார் என்ற இன்னும் ஒரு சங்க புலவர் கண்ட காட்சியை பார்ப்போமா ?

ஒருசமயம், சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனும் பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் ஒருங்கே இருந்தனர். அதைக் கண்ட புலவர் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பெருமகிழ்ச்சி அடைந்தார். சோழனும் பாண்டியனும் ஒருங்கே இருந்ததைப் பலராமனும் திருமாலும் ஒருங்கே இருப்பதற்கு ஒப்பிட்டு, “அவர்கள் தொடர்ந்து ஒற்றுமையாக இருந்தால் இவ்வுலகம் அவர்கள் கையகப்படுவது உறுதி" என்று இப்பாடலில் கூறுகிறார்.
"நீயே, தண்புனற் காவிரிக் கிழவனை; இவளே,
முழுமுதல் தொலைந்த கோளி ஆலத்துக்
......................................................
ஒருவீர் ஒருவீர்க்கு ஆற்றுதிர்; இருவீரும்
உடனிலை திரியீர் ஆயின், இமிழ்திரைப்
பெளவம் உடுத்தஇப் பயங்கெழு மாநிலம்
கையகப் படுவது பொய்யா காதே;
..........................................................
நெடுநீர்க் கெண்டையொடு பொறித்த
குடுமிய ஆக, பிறர் குன்றுகெழு நாடே."
[புறநானூறு 58]
நீ குளிர்ந்த நீரையுடைய காவிரிக்குத் தலைவன்;இவன் முன்னோர் புகழைக் காப்பாற்றும் பஞ்சவர் ஏறு.
இன்னும் கேள். ’நீங்கள் ஒருவருக்கொருவர் உதவிடுவீர். இருவரும் இப்படி இணைந்திருந்தால் இந்த உலகம் முழுவதும் உங்கள் கையில் இருக்கும்.
பிறருடைய நாடுகளிலுள்ள குன்றுகளில், வளைந்த கோடுகளையுடைய புலிச் சின்னமும், பெரிய நீரில் வாழும் கயல்மீன் சின்னமும் பொறிக்கப்படுவதாகுக என்கிறார்..
பகுதி:19 அடுத்தவாரம் தொடரும்

0 comments:

Post a Comment