தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?] பகுதி:24

 [தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
 
கற்காலத்தில் மெசொப்பொத்தேமியாவில் வண்டல் சமவெளியில் மக்கள் முதல் குடியேறிய பொழுது அவர்களின் உடனடியான முக்கிய அக்கறை  நம்பகமான நன்னீர் கிடைக்கும் ஒரு இடத்தை கண்டு பிடிப்பதாகும்.இது பயிர்களுக்கு தண்ணீர் விடவும்  மிருகங்களும் தாமும் நன்னீர் குடிப்பதற்காகவும் ஆகும்.முதலாவதாக அவர்களுக்கு டைகரிஸ், யூப்ரடிஸ் ஆறுகளும்[Tigris and Euphrates rivers] அவைகளின் கிளையாறுகளும்[Upper and Lower Zab] அவர்களின் அந்த தேவைகளை வழங்கின.இதனால் தான் முன்னைய சுமேரியர்களினது கிராமமும் நகரமும் ஆறுகளை அண்டியும் அல்லது அவைகளுக்கு அருகிலும் கட்டப்பட்டன.அவை உயிருக்கு அத்திய அவசியமான தண்ணீரை கொடுத்தாலும் அந்த ஆறுகளை ,குறிப்பாக டைகரிஸ் ஆற்றை, முன்னறிந்து அதன் நிலையை கூறமுடியாததாகவும்  சில வேளைகளில் அழிக்கக் கூடிய கொடிய  வெள்ளத்தை உண்டாக்க கூடியதாகவும் இருந்தன.ஆற்றின் வெள்ளத்தை கட்டுப்படுத்த காலம் காலமாக அங்கு அணை கரையையும் அணையும்[ levees and dams] கட்ட முயற்சித்தார்கள்.ஆனால் தெற்கு மெசொப்பொத்தேமியாவின் மிக மென்மையான மண்ணால் கடப்பாட்ட இந்த தடைகள் இலகுவாக ஆற்று வெள்ளத்தால் அரிக்கப்பட்டு படிப்படியாக
விரைவாக சிதைக்கப்பட்டன.மேலும் நாளடைவில் மக்கள் தொகை கூட  சிலர் ஆற்றங்கரையில் இருந்து கிட்டிய தூரத்தில் அல்லது தூர இடங்களில்  குடியேற விரும்பினார்கள் . அதனால் இந்த புதிய குடியிருப்புகளுக்கு நீர் வழங்க வேண்டிய நிர்பந்தம் அவர்களுக்கு ஒரு பெரிய சவாலாக அமைந்த்தது.
இந்த நிலையில்,முன்னைய மெசொப்பொத்தேமியா  குடியிருப்பாளர்கள் ஆற்றில் இருந்து நேரடியாக நீர் எடுப்பதற்கு பதிலாக,வேறு நீர் வளங்களையும் விநியோகத்தையும் ஏற்படுத்தி மேற்கூறிய சாவால்களை சமாளிக்க கற்றுக்கொண்டார்கள்.அவை செயற்கை  கால்வாய்கள்,கிணறுகள், வாய்க்கால்கள் போன்றவை ஆகும்.தொல்பொருள் ஆய்வுகள்  6000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்த நீர்ப்பாசனங்களுக்கான சான்றுகளை ௮டையாளம் காட்டுகின்றன.பார்லி[வாற்கோதுமை] பயிர் வளர்ச்சிக்கு போதுமான இயற்கை மழை வீழ்ச்சி அற்ற அங்கு அப் பயிர் செய்யப்பட்டு உள்ளது மேலும்  இதை உறுதிபடுத்துகிறது.ஜூலை தொடங்கி டிசம்பர் வரை உண்டாகும் வெள்ள நீரை 40 தொடக்கம் 60 நாட்களுக்கு திசை திருப்பி வயலுக்கு விடுகிறார்கள்.பின் தக்க தருணத்தில் நீரை திரும்பவும் ஆற்றுக்கு வழி
திருப்பி விடுகிறார்கள்."உன்னுடைய வாய்க்கால் குப்பை , இடிபாடுகளால் அடைபடட்டும்"[May your canal become choked with debris!] என்ற பல முறை திருப்ப திருப்ப சபிக்கும் மெசொப்பொத்தேமியா சாபம் இதன் முக்கியத்தை காட்டுகிறது.ஆகையால் அதற்கு முதன்மை கொடுத்து மன்னர்களும் ஆட்சியாளர்களும்  வாய்க்கால்களை  தோண்டி பராமரித்தார்கள் . கால்வாய்கள் அமைப்பது ஒரு பெரிய வேலை என்பதால், ஹம்முராபி[Hammurabi] போன்ற மன்னர்கள் தமது பெருவாரியான குடி மக்களை[பிரஜைகளை ] அதில் ஈடுபடுத்தினார்கள். அங்கு இருக்கும் வாய்க்கால்களை புறக்கணிக்கும் மன்னர்கள்  பொதுமக்களால் வெறுக்கப்படுவதுடன் அரசுக்கு எதிரான எதிர்ப்புகளையும் கொந்தளிப்புகளையும் எதிர்நோக்க நேரிட்டது.
இப்படியான ஒரு நிலைப்பாட்டை சங்க இலக்கியத்திலும் காண்கிறோம்.உதாரணமாக புறநானூறு 18 இப்படி அறைகூவுகிறது.
"வித்தி வான் நோக்கும் புன்புலம் கண்ணகன்
வைப்புற்று ஆயினும் நண்ணி ஆளும்
இறைவன் தாட்கு உதவாதே அதனால்
அடு போர்ச் செழிய இகழாது வல்லே
நிலன் நெளி மருங்கின் நீர்நிலை பெருகத்
தட்டோர் அம்ம இவண் தட்டோரே
தள்ளாதோர் இவண் தள்ளாதோரே."

அதாவது, ‘வயவேந்தே! நீ மறுமைப் பேறாகிய சொர்க்க இன்பம் வேண்டினும்,
இம்மையில் ஒரு பேரரசனாய்ப் புகழெய்த வேண்டினும், நாட்டில் நீர்நிலை பெருக அமைக்க வேண்டும்; வித்தி வானோக்கும் புன்புலம்- நெல் முதலான தானியங்களை விதைத்து மழை வருவாய் ஒன்றையே பார்த்திருக்கும் வானவாரித் தரிசு நிலம்-வேந்தன் முயற்சிக்கு வேண்டுவ உதவாது; ஆகவே நீர்நிலை பெருக அமைப்பாயாகஎன வற்புறுத்துகிறார்.

கால்வாய் தோண்டியதும் அந்த செயற்கை  கால்வாயிற்கூடாக  ஓடும் நீரின் அளவை கட்டுப்படுத்த ஆற்றம் கரையில்  ஒரு  மடைவாய்/ மதகு கதவு[sluice gate] அங்கு கட்டப்பட்டது.தேவை கருதி அந்த கதவை திறந்தோ அல்லது மூடியோ நீர் ஓட்டத்தின் அளவை கூட்டி அல்லது குறைக்கப் பட்டது.பயிர் வளரும் காலத்தில் ஒவ்வொரு விவசாயிக்கும் குறிக்கப் பட்ட அளவு நீரே கொடுக்கப்பட்டது.ஒரு விவசாயி தனது வயலுக்கு நீர் இறைக்கும் முறை வரும் போது, மதகு அதற்கு தக்கவாறு திறந்து, மூடி சரிப்படுத்தப்பட்டு  அந்த விவசாயினது வயல் பக்கமாக அமைந்த நீர்பாசன குழியில் நீர் விடப்பட்டது.பபிலோனியன் மன்னன் ஹம்முராபி[ Babylonian King Hammurabi] தான் முதன் முதல் சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட ஒரு நீர் சம்பந்தமான ஒழுங்குவிதிகளை ஏற்படுத்தினார்.அந்த முன்னைய விதி முறைகள் பின்வருவனவற்றை அடங்கி இருந்தது.] நீர் விநியோகம் வயலின் பரப்பு அளவின் வீதப்படி வழங்குதல் வயலின் பக்கமாக அமைந்த வாய்க்காலை பராமரிப்பது அந்த வயல் உரிமையாளரை சார்ந்தது.கால்வாயை  எல்லா பாவனையாளர்களும் அடங்கிய ஒரு கூட்டு நிர்வாகத்துக்குள் அமைத்தல் ஆகும்.

இதன் மூலம்  நாம் அறிவது என்னவென்றால் இந்த நாகரிகங்கள் எல்லாம் நீர்பாசனத்தை முழுமையாக அங்கீகரித்ததுடன் அதற்கு உச்ச முக்கியத்தையும் கொடுத்துள்ளது என்பதாகும்.இதுநீரின்றி அமையாது உலகுஎன்ற வள்ளுவரின் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வாக்கையும் சிலப்பதிகாரம் படைத்த இளங்கோவடிகளின்  "மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் " என்றதையும் மேலும் உறுதி படுத்துகிறது.இவ்வாறு நீரின் இன்றியமையாமையையும்  சிறப்பினையும் நாம் இங்கு காண்கிறோம்.

அது மட்டும் அல்ல அதே  இளங்கோவடிகள் அன்றைய மக்களுக்கு நீரினை அள்ளிக் கொடுத்த காவேரியை புகழ்ந்து,வாழ்த்தி இப்படி பாடுகிறார்.

"உழவர் ஓதை, மதகோதை,
உடைநீர் ஓதை தண்பதங் கொள்
விழவர் ஓதை, சிறந்தார்ப்ப
நடந்தாய் வாழி காவிரி!"
[சிலப்பதிகாரம்/புகார்க் காண்டம்கானல் வரி]

அதாவது, உழவரின் ஏர் ஓட்டும் ஓசை, மதகிலே நீர் வழியும் ஓசை, வரப்புகளை உடைத்து பாயும் நீரோசை, புதுப்புனலாடி கொண்டாடும் மக்களின் மகிழ்ச்சி ஆராவார ஓசைஎன இரு மருங்கும் ஒலிக்க.. அந்த ஓசையோடு நடக்கும் காவிரிப் பெண்ணே! நடந்தாய் வாழி காவேரி! என்கிறார் .

பன்னிரண்டாம் திருமுறையில் திருக்குறிப்புத்தொண்ட நாயனார் புராணத்தில் 23 ம் பாடலும் நீரின் சிறப்பை இப்படி கூறுகிறது.

"அனைய வாகிய நதிபரந்
   தகன்பணை மருங்கில்
கனைநெ டும்புனல் நிறைந்துதிண்
   கரைப்பொரும் குளங்கள்
புனையி ருங்கடி மதகுவாய்
   திறந்திடப் புறம்போய்
வினைஞர் ஆர்ப்பொலி யெடுப்பநீர்
    வழங்குவ வியன்கால்."

அதாவது அவ்வாறாகிய பாலியாற்று நீர் பரந்து, அகன்ற வயல்களின் பக்கலில் இரைந்து பெருகவரும் திண்மையான பெரிய குளக்கரையில், அங்குள்ள சிறந்த அழகுபடுத்தப்பட்ட காவல் மதகுகள் வாய்திறந்திட, வெளியே சென்று பெருகும் தன்மை கண்டு, அவ் விடமுள்ள வீரராய உழவர்கள் தம் மகிழ்வால் ஒலிசெய, பெருவாய்க் கால்கள், நீர் பெருகி வரும் என்கிறது.
பகுதி 25 அடுத்தவாரம் தொடரும்

0 comments:

Post a Comment