பக்கத்துவீட்டில்












 பறுவதம்பாட்டி:: 
அன்று அதிகாலை நேரம். கதைத்துக் கொண்டிருந்த  தொலைபேசியினைப்ப் பொத்தென்று கீழே வைத்த பாட்டி   படபடப்புடன் பக்கத்து வீடு நோக்கி பறந்து சென்றாள்.நானும் என்னவோ ஏதோ என்று பின்னாலே சென்றேன்.அங்கே எங்களைப்போல் பலரும் வந்து கூடி இருந்தனர்.நடக்கக் கூடாதது நடந்துவிட்டது.பக்கத்து வீட்டுப் பங்கயத்து அம்மா பொசுக்கென்று மேல போய்விட்டாள்.மாமி வீட்டில் வசித்து வரும் அண்ணாமலைத் தாத்தாவும் இந்தச் சாக்கில் ஓடோடி வந்து பாட்டியைச் சந்தித்துக் கொண்டார்.
பாட்டியும் பங்கயத்தம்மாவும் நாம் இந்த வீட்டுக்கு வந்த காலத்திலிருந்தே நல்ல நண்பர்கள்.நாங்கள் பாடசாலை சென்றதும் இருவரும் இணைந்து ஒருமுறை நடைப் பயிற்சி செய்து வருவார்கள்.அந்தவேளையில் அவர்கள் இருவரும் பகிர்ந்துகொள்ளும் தகவல்கள் பலவிதம்.பங்கயத்தம்மாவின் சாவு பாட்டியைப் பொறுத்தவரையில் பேரிழப்புத்தான்.பாட்டியின் நெஞ்சினில் ஓடிக்கொண்டிருந்த பங்கயத்தம்மாவுடன் பேசிக் கழித்த நாட்களின் நினைவலைகள் அண்ணாமலைத் தாத்தாவின் தலையீட்டினால் தடைப்பட்டுக்கொண்டது.
"என்ன தனிய இருந்து யோசிக்கிறாய்."
பாட்டி தாத்தாவின் காதுக்குள் குசுகுசுக்கத் தொடங்கினாள்
"பாத்தியளே!வந்திருக்கிற சனங்களை".
தாத்தா புரியாமல் விழித்தார்.
"இந்த உறவுகளைப்பற்றித்தான்  பங்கயம் நெடுகச் சொல்லிக் கவலைப்படுவாள்.இந்த மனுசி எல்லா உறவுகளோடும் எவ்வளவு அன்பு பாசம் வைச்சிருந்தது.உயிரோட இருக்கும்போது வீட்டை வாருங்கோ ,வீட்டை வாருங்கோ என்று எத்தினை நாள் டெலிபோனிலை அழைச்சு வீட்டில ஆசையோடை காத்திருந்திருப்பாள்.ஒருநாள் கூடத் திரும்பிப் பார்க்காத ஆட்களெல்லாம் இப்ப கூட்டம் கூட்டமாக எல்லோ வந்துசேர்ந்து இருக்கினம்.
'இங்கை பார்!இந்த நாட்டில  நேரமேல்லோ ஒரு பெரிய பிரச்சனை".
  “இது நல்ல நொண்டிச்சாட்டு எண்டுதான் சொல்லவேணும்.இப்ப மட்டும் நேரம் வந்திட்டுதோ என்ன? இனி ஒரு கிழமைக்கு ஓடி ஓடி  நிமிடத்திற்கு நிமிடம் வந்து போவினம்.பிறகு ஒரு வருடத்திற்கு மாதம் மாதம் வந்து போவினம்.அப்புறம் வருடா வருடம் ஒருமுறைவந்து போவினம்.சொல்லாட்டி குறையும் சொல்லுவினம்.இதுக்கெல்லாம் நேரம் இருக்கு.உயிரோடு இருக்கும் போதுமட்டும் சொந்தம் கொண்டாடி அந்த உறவை சந்தோசப்படுத்த யாரும் தயாரில்லை.இது என்ன நியாயம் சொல்லோங்கோ பார்ப்போம்."
அக்கம்பக்கம் பார்த்தபடியே"பறுவதம்!இப்பிடித்தான் உலகம்.நாங்க இதுக்கு என்னதான் செய்யமுடியும்".
  நல்ல உலகம் தான்.உலகத்தில வாழ்ந்துகொண்டு இருக்கிற மனிசரை மனிசரென்று  மதியாயினம்.செத்தபிறகு குடும்பம் குடும்பமாய் மலர்வளையம் கொண்டுவந்து வைப்பினம்.பாராட்டுவினம்.இறந்தவர் பெருமையை அழகழ காகப் பேசுவினம்.அஞ்சலி செலுத்துவினம். கல்வெட்டுக்குக் கவிகவியாய் எழுதுவினம்.உயிரோடை இருக்கேக்கை அந்த சீவனை மகிழ்விக்க எண்ணாதவர்கள் எல்லாம் ஒரு மனிசர் செத்தபிறகு உதெல்லாம் யாருக்குச் செய்யினம்?உந்த அன்பை பங்கயம் வாழும்போது காட்டி இருக்கலாம்.மனுசி அந்த சந்தோசத்திலை இன்னும் கொஞ்சம் கூட நாளாவது உயிர் வாழ்ந்திருக்கும்.
 பாட்டியின் பக்கம் நியாத்தினை புரிந்துகொண்ட தாத்தாவும் மெல்லிய தலையசைவுடன் மௌனமானார்.
(பறுவதம்பாட்டி ..அங்கம் (05)கனடாவில் வெளிவரும்"தூறல்"மாதாந்த சஞ்சிகையில் ஜனவரி 2011 இதழில் வெளிவந்தது.)
.......ஆக்கம்:செல்லத்துரை மனுவேந்தன்.

0 comments:

Post a Comment