காது மந்தமானவர்களை அணுகுவது எப்படி?


"அப்பா இப்ப முந்தி மாதிரி இல்லை. ஒதுங்கி ஒதுங்கிப் போறார். முந்தி மாதிரி எங்களோடை அதிகம் கதைக்கிறதில்லை. தனக்கு ஒண்டும் இல்லை எண்டுட்டார். உங்களிட்டை வர மாட்டன் எண்டும் சொல்லிப் போட்டார். நான் தான் நட்டுப் பிடிச்சுக் கூட்டிக் கொண்டு வந்தனான்" என்றாள் மகள் மிகுந்த மன வேதனையுடன்.

அப்பா முகத்தில் சலனமில்லை. விட்டேத்தியாக என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்கு வயது 70 இருக்கும். மன விரக்தியாக இருக்குமோ என எண்ணிய நான்ஜயாவுக்கு என்ன பிரச்சனைஎன்றேன்.

ஜயா மறுமொழி கூறவில்லை ஆனால் எனது முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தேன்.

"
ஜயாக்கு காது கேக்கிறது கொஞ்சம் குறைவோ" என்று கேட்டபோது,

"
அப்படித் தெரியல்லை எங்களோடை வடிவாக் கதைக்கிறார்தானே" என்றாள்.

மேசையில் உள்ள பொருளை எடுப்பது போல மறு பக்கம் முகத்தைத் திரும்பிக்  கொண்டுஜயா உங்களுக்கு எத்தனை வயசுஎன்று கேட்டேன். மறுமொழி வரவில்லை. சந்தேகம் நிருபணம் ஆகியது.

காது மந்தமாவது என்பது வயதானவர்களைப் பாதிக்கும் ஒரு முக்கியமானதும் பரவலானதும் ஆன பிரச்சனையாகும்.


·         65 வயதுக்கு மேற்பட்டவர்களில் 15- 40 சதவிகிதத்தினரும்
·         75 வயதுக்கு மேற்பட்டவர்களில் 50 சதவிகிதத்தினரும்
·         85 வயதுக்கு மேற்பட்டவர்களில் 80 சதவிகிதத்தினரும் செவிப் புலன் குறைபாட்டால் பாதிக்கப்படுகிறார்கள்.

எனவே வயதாகும் போது காது மந்தமாவது என்பது நியதி போலவே இருக்கிறதே அன்றி விதிவிலக்காக அல்ல என்று சொல்லலாம் போலிருக்கிறது.

இது மிக மெது மெதுவாகவே ஏற்படுகின்ற பாதிப்பு என்பதால் பலரும் ஆரம்ப கட்டங்களில் தமக்கு இக்குறைபாடு உள்ளதை தாமாகவே உணர்ந்து கொள்வதில்லை.

முகத்துக்கு நேர் முகம் பார்த்துப் பேசும்போது அவர்கள் புரிந்து கொள்வதால் உறவினர்களும் உணர்ந்து கொள்ளத் தாமதமாகலாம்.

செவிப்புலன்
செவிப்புலன் என்பது நாம் எமது சூழலுடன் தொடர்பாடுவதற்கு மிக முக்கியமான உணர் திறனாகும்.

·         இதன் இழப்பானது மனித வாழ்வின் முழுமையை, அந்த வாழ்பனுபவத்தின் பூரணத்துவத்தையே சிதைத்துவிடும்
·         செவிப்புலன் இழப்பானது மூளையின் செயல் வீச்சைக் குறைக்கறது
·         ஆரோக்கியமான உணர்வுகளை மரக்க வைக்கிறது
·         மனநலத்தைப் பாதிக்கிறது
·         கற்றலை முடக்குகிறது
·         தொழில் வாய்ப்பைச் சிதைக்கிறது எனப் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது

பாதிப்புகள்


·         வயதானவர்களின் காது மந்தமாகும் போது மற்றவர்களுடன் வழமை போலப் புரிந்து பேசி உறவாட முடியாமல் தடுமாறுகிறார்கள்
·         தனிமைப்படுகிறார்கள்
·         வழமையான நடவடிக்கைகளைக் குறைத்துக் கொள்கிறார்கள்
·         இவற்றால் ஏக்கத்திற்கும் மனவிரக்திக்கும் ஆளாகுகிறார்கள்.
·         இதனால் இவர்கள் உறவினர்களிடமிருந்தும் நண்பர்களிடமிருந்தும் தாமாகவே ஒதுங்கிக் கொள்கிறார்கள்
இது தான் அப் பெண்மணியின் அப்பாவுக்கு நடந்தது.
காது மந்தமாதல் இரண்டு வகையானது.

1.  முதலாவது ஒலியானது சூழலிருந்து காதுத் துவாரம் வழியாக செவிப்பறைக் குருத்தெலும்புகள் எனக் கடத்தப்படுதலில் உள்ள கோளாறாகும். செவிப்பறை பாதிப்படைதல், துவாரமடைதல், குருத்தெலும்புகள்; இறுகுதல் போன்றவற்றால் இது நேரலாம்
2.  இரண்டாவது வகை நரம்பு மண்டலம் சம்பந்தப்பட்டது. ஒலியை உணர்தல், அதனைப் பாகுபடுத்தி விளங்கிக் கொள்ளல் ஆகியவவை பாதிப்புறுவதால் ஏற்படுவது

வயதானவர்களின் காது மந்தமாகும் போது
·         இது மூப்படைவதின் ஒரு கட்டமேயாகும். ஒருவர் முகத்திற்கு நேரே பேசும் போது விளங்கிக் கொள்ளும் வயேதிபர், பலர் கலகல எனப் பேசும் போது புரிந்து கொள்ளச் சிரமப்படுவது ஒலியை பாகுபடுத்தி விளங்க முடியாதிருப்பதாலேயே
·         புறச் சத்தங்கள் அதிகமாக உள்ள இடங்களிலும் ஒலி எதிரொலிக்கும் இடங்களிலும் அவர்களால் கேட்க முடிவதில்லை
·         அதே போல விரைவாகப் பேசுவோரின் உரையாடல்களையும், புதியவர்களின் பேச்சுக்களையும் அவர்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை.
வயதானவர்களின் காது கேளாமையைக் முழுமையாகக் குணப்படுத்தக் கூடிய சிகிச்சைகள் எதுவும் கிடையாது என்பது உண்மைதான்.
ஆயினும் அவர்களின் குறைபாட்டைத் தணிப்பதற்கு பல வழி முறைகள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்த உதவுவது உறவினர்களின் கடமையாகும்

காது கேட்கும் கருவிகள்
காது கேட்கும் கருவிகள் பலன் தரக் கூடும். ஆயினும் 10-15 சத விகிதமானவர்களே அக் கருவிகளைத் தொடர்ந்து உபயோகிக்கிறார்கள்.

·         இதற்குக் காரணம் அது இயற்கையான காதுக்கு மாற்றீடு அல்ல
·         அத்துடன் கூட்டமான இடங்களில் புறச் சத்தங்களும் குழப்பக் கூடும். அத் தருணங்களில் இரண்டு காதுக்குமே கருவியை உபயோகிப்பது பிரயோசனமாயிருக்கும்
·         ஸ்பீக்கர் போன், ஒலி அதிகரித்த தொலைக் காட்சிப் பெட்டி, ஒலியுடன் ஒளியையும் உமிழும் அழைப்பு மணி போன்ற பாவனைப் பொருட்கள் அவர்களைச் சூழலுக்குள் திருப்தியோடு அணைந்து இயங்க உதவக் கூடும்.

காது மந்தமானவர்களுடன் பேசும் போது நீங்கள் அவதானிக்க வேண்டியவை.

·         முகத்தை வேறு பக்கம் பார்த்துக் கொண்டு பேசாதீர்கள். அவர்களுக்கு உங்கள் முகம் தெளிவாகத் தெரியும் படியான இடத்தில் இருந்து பேசுங்கள்
·         குரலை உயர்த்திப் பேசாதீர்கள். சாதாரண குரலில் பேசுங்கள்
·         விரைவாகப் பேசாதீர்கள். ஆறுதலாகவும் தெளிவாகவும் பேசுங்கள்
·         உங்கள் உதடுகள் வாசிக்கப்படக் கூடியவாறு பேசுங்கள்
·         நீங்கள் பேசுவது அவருக்குப் புரியாவிட்டால் குரலை உயர்த்தி மீண்டும் மீண்டும் அதையே சொல்வதை விடுத்து வேறு சொற்களால் சொல்லுங்கள்.
·         கூட்டமான இடங்களில் வைத்துப் பேசாதீர்கள். ஒதுக்குப் புறமாக சத்தம் சந்தடி குறைந்த இடத்திற்கு கூட்டிச் சென்று உரையாடுங்கள.
·         காது கேட்கும் கருவி உபயோகிப்பவராயின் அது சரியாக வேலை செய்கிறதா என்பதையும், உரிய இடத்தில் சரியாகப் பொருத்தப்பட்டிருக்கிறதா என்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள்.
·         முகம், கண்கள், கைகள் ஆகியவற்றை பயன்படுத்தி சைகை மொழிகளுடன் பேசுங்கள்
·         உங்கள் பேச்சைப் புரிந்து கொள்ள முயற்சித்து அது முடியாததால் அவர் சோர்ந்து விட்டதை அவதானித்தால் உங்கள் உரையாடலை வேறு ஒரு தருணத்திற்கு ஒத்தி வையுங்கள்.

காது கேளமைக்குக் காரணங்கள்

ஆயினும் மூப்படைதல் மட்டுமே காது கேளாமைக்கு ஒரே காரணம் என்றும் சொல்லிவிட முடியாது.

·         தொழில் ரீதியாகவோ(உதா- இயந்திர ஓசைகள்), பொது வாழ்வின் போதோ கடுமையான ஒலிகளுக்கு நீண்ட காலம் முகங் கொடுக்க நேர்வது, செவிடாவதைத் துரிதப்படுத்தக் கூடும்
·         பல வகை மருந்துகள்
·         காதுக் குடுமி
·         பரம்பரையாக விரைவில் காது மந்தமாதல்
·         நடுக் காது நோய்கள் போன்றவையும் காரணமாகலாம்
எனவே  நீங்களாக முடிவெடுக்காமல் வைத்திய ஆலோசனை பெறுவது நல்லது.

நன்றி:Muruganandan M.K.

0 comments:

Post a Comment