கடவுள் ஒருவன் தேவையா?

ண்டைய காலங்களில், அரசர்கள் தங்கள் மக்களின் அன்றாட நடவடிக்கைகளை முழுநேரமும் சரிவரக் கண்காணிக்க முடியாமல் திணறினர். இதனால், சட்டமும், ஒழுங்கும் சீர்கெட்டுப் போயின. இதனைச் சரி செய்வதற்கு சரியான மார்க்கம் இன்றித் தவித்தனர்.

அவ்வேளைகளில், ஆங்காங்கே சிலர் தோன்றி மக்களை நல்வழிப்படுத்தும் நோக்கத்துடன் பல நன்னெறி மார்க்கங்களை உதிர்த்தனர். இதை மக்களிடையே கொண்டு சென்று சேர்ப்பதற்காக, அவர்களைப் பயம் கொள்ளப் பண்ணும் உபாயமாகக் 'கடவுள்' என்று ஒருவரை உருவாக்கி, தானே கடவுள் தூதன் அல்லது தானே கடவுள் என்றும் பிரகடனப்படுத்தினர். பிழை செய்பவர்களை இந்தக் கடவுள் 24/7 மணிநேரமும் அவதானித்து, அதற்கேற்றவாறு தண்டனையும் (பெருபாலும் இறந்த பின்னர்தான்!) கொடுத்து வருத்துவார் என்று போதித்தார்கள். இதனால் பயம் கொண்ட, யோசிக்கத் தெரியாத மக்கள் இலகுவில் இந்தப் போதனைகளில் வசியப்பட்டு, குற்றச் செயல்கள் செய்ய அஞ்சினார்கள். இப்படியான உபாயம் மிக நன்றாகவே வேலை செய்ததால் அவர்கள் விதம், விதமான மதங்களை, வேறுபட்ட கடவுள் பெயர்களுடன் உருவாக்கினார்கள்.

இத்தகைய கட்டமைப்பும், செயற்பாடும் அரசன்மாருக்கு மிகவும் சாதகமான  நிலையை ஏற்படுத்தியதால், அவர்களே முன்னின்று பல வணக்க ஸ்தலங்களை அமைத்து இப்படியான விளையாட்டுகளை ஊக்கப்படுத்தி மக்களை கடவுட்பய, மத மயக்கத்திலேயே வைத்திருந்தார்கள். இந்த முறையானது அவர்களுக்கு மிகவும் எளிதாகவும், நிர்வாக வசதியாகவும் இருந்தது. மக்களின் இத்தகைய குருட்டு நம்பிக்கை பல காலமாக நல்ல ஒரு சமுதாயத்தையே உருவாக்கியது.

ஆனால், தற்காலத்தில் சட்டம், ஒழுங்கு என்பன மிகவும் கட்டுப்பாட்டுடன் அமுல் நடத்தப்படுகிறதே! ஏன்தான் இன்னமும் கடவுளைப் பூச்சாண்டி காட்டிப் பயமுறுத்தும் இந்த காலாவதியான நாடகம் எல்லாம்? நாம் நம் வாழ்க்கையில் செய்ய வேண்டிய நல்லவை எவை, கெட்டவை எவை என்று சொல்லித் தருவதற்கு இன்னொருவர் எதற்கு? நல்லதையும் கெட்டதையும் பகுத்தறியவே இயலாத அளவுக்கு நாம் என்ன படு மூடர்களா?

இது என் சொந்த நம்பிக்கை; நீ ஏன் தலை இடவேண்டும் என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள். இது எந்த விதத்தில் 'சொந்த' மாகும்? நாலு சுவருக்குள் இருந்து அமைதியாகச் செய்தால்தான் அது சொந்த விடயம். கதவைத் திறந்துவிட்டால் அது குடும்ப விடயம். வெளியில் வந்து செய்தால் அது ஊரின் விடயம். பொது இடங்களில் செய்தால் அது சமூகம், நாடு, உலகம்  சம்பத்தப்பட்ட விடயம். இதனால், தற்சமயம் நனமையிலும் பார்க்க தீமைதான் உலகெங்கும் தலை விரித்தாடுகிறது. கடவுளின் பெயரால் குண்டு வெடிப்பு, கட்டிடத் தகர்ப்பு, உயிர்க்கொலை, கொள்ளை, ஏமாற்று வியாபாரம் என்று  சொல்லமுடியாத அளவுக்கு அட்டூழியங்கள் பெருகிக்கொண்டே  போகின்றன.

அந்தக் காலங்களில் மதங்களினால் மக்கள் ஒன்றிணைக்கப் பட்டார்கள். அது அப்போது நன்றாகவே செயற்பட்டது. ஆனால் இன்றோ இவற்றால் மக்கள் மதம் பிடித்துத் திரிகிறார்கள். இரவும் பகலும் இறைவனைத் தொழும் பாடல்; மிகுதி நேரங்களில் பிறமதங்கள்பால் வசை பாடல். எங்கள் கடவுளே பெரிது என்று கொக்கரித்துக் கொண்டு மற்றைய மதத்தினரைக் கொல்வதையும், மதமாற்றம் செய்வதையும், வழிபாட்டுத் தலங்களை இடித்துத் தள்ளுவதையும் இவர்கள் கடவுளும், அவர்கள் கடவுளும் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறார்கள்.  

மதங்களுக்கு முன்னுரிமை கொடுத்து அரசு நடத்தும் நாடுகள் ஒன்றுமே நிம்மதியாக இருப்பதாகத் தெரியவில்லை. அன்று மதங்களைப் பரப்பியவர்களே, அவற்றை ஒருபக்கம் மூட்டை கட்டி வைத்தபின்னர்தான் தங்கள் நாடுகளை ஸ்திரமான, நிம்மதியான, முன்னேற்றம் அடைந்த நாடுகாளாக அபிவிருத்தியாக்கி இருக்கிறார்கள். அவர்களால் திணிக்கப்பட்ட மூன்றாம் உலக நாட்டு மக்கள்தான் இப்போது இம்மதங்களைத் தலைமேல் வைத்துக் கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள். இப்படி மதம் பிடித்த நாட்டினர், கடவுள்தான் எல்லாம் தருவார் என்று நம்பி, எந்நேரமும் வணங்கிக்கொண்டு, வாழ்வு முன்னேற்றத்திற்கு ஒரு முயற்ச்சியும் எடுக்காமல் இன்னமும் அடிமட்டத் தரத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்தகைய நாடுகளில் அன்றாடம் ஏற்படும் பெரும் அழிவுகளை, மனித கொலைகளை, பெரும் பட்டினிப் பஞ்ச சாவுகளை அவர்கள் பெரிது என்று சொல்லிக்கொண்டிருக்கும் அவர்களின் கடவுளும் சும்மா பார்த்துக் கொண்டிருப்பது அவர்களுக்குத் தெரியவில்லையா?

இவற்றிலிருந்து என்ன தெரிகின்றது? தற்போதைய காலகட்டத்தில் கடவுள் என்று ஒன்று இருப்பதோ அல்லது இல்லாமல் போவதோ உலக நடப்புகளை மாற்றி அமைக்கப் போவது இல்லை. தனி மனிதன் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு மறு விளைவு இருக்கும் என்பதே உண்மை. இந்த விளைவை அடைவதற்கு இன்னொருவரோ அல்லது கடவுளோ வந்து மூக்கை நுழைக்க முடியாது. முழுக்க முழுக்க ஒருவன் செயலுக்கும், விளைவுக்கும் அவனே -அவன் மட்டுமே- காரணமாவான்.

ஆகவே கடவுள் கிருபையின்றி நலமுடன் வாழ்வோமாக!
ஆக்கம்:செல்வதுரை,சந்திரகாசன்

0 comments:

Post a Comment