கல்யாண வீட்டிலிருந்து பறுவதம் பாட்டி.

அன்று சனிக்கிழமை.எமது தூரத்து உறவு ஒன்றின் திருமண அழைப்பினை ஏற்று எங்களோடு பறுவதம் பாட்டியும் அண்ணாமலைத் தாத்தாவும் கல்யாண வீட்டில் கலந்துகொண்டனர். வீட்டினிலேயே  பந்தலமைத்ததிலிருந்து  பலவகையான உணவுவகைகளையும் படைத்த வரையிலும்  அத்திருமணம் மிகவும் சிறப்பாக  நடந்தேறியது.
வீடு திரும்பும்வேளை காரில் இருந்த தாத்தா மிகவும் சிரமப்பட்டுக்கொண்டிருந்தார்.
பாட்டி ஆரம்பித்தார்.
''என்ன ஏதன் சுகமில்லையே?''
தாத்தா முக்கி முனகியபடியே,
''எக்கச்சக்கமாய் சாப்பிட்டுவிட்டன்.அதுதான் சரியான முட்டாய் கிடக்கு''
''ஏன்,கொஞ்சமாய் சாப்பிட்டு இருக்கலாமெல்லெ''
''எல்லாத்திலையும் கொஞ்சம் கொஞ்சமாய் எடுக்க அது கனக்கவாய் போயிற்று''
''நானும் கவனிச்சனான்.கோப்பையிலை மலைபோல கொண்டவந்து சாப்பிட்டனீ ங்கள்.வெட்கமாய் கிடந்துது.''
''அதுதான் பறுவதம் சொன்னனே.கொஞ்சம் கொஞ்சமாய்.....''
தாத்தாவை பேசவிடாமல் குறுக்கிட்டார் பாட்டி.'' என்ன சொல்லிறியள் .பத்து சாப்பாடு இருந்தால் அத்தனையும் ஒரு தரத்திலை எடுக்கவேணும் எண்டு சட்டமோ அல்லது எல்லாமே எடுக்கவேணும் எண்ட முறையோ இல்லையே.உங்களுக்கு விரும்பினதை எடுக்கச்சொல்லித் தானே சாப்பாட்டை வைக்கிறாங்கள்.சிலவற்றை முதல்லை சாப்பிட்டு பிறகு தேவையெண்டா திரும்பவும் எடுக்கலாம் தானே! ஏன் இப்பிடி அள்ளிக்கொண்டு வந்து எக்கச்சக்கமாய் மீதியை மேசையிலை விட்டு அநியாயம் ஆக்கிறியள்.இப்பிடிச் சாப்பிட்டு நீங்களுமெல்லே வருத்தத்தை சம்பாதிக்கிறியள்.  உங்களைப்போல ஆட்களாலகொண்டாட்டக்காரர்,கலியாண மண்டபக்காரர்   எல்லாருக்கும் எவ்வளவு சிரமம் தெரியுமே!.ஊரில ,உலகத்தில எவ்வளவு சனம் சாப்பாடு இல்லாம செத்துக் கொண்டு இருக்கிறாங்கள் தெரியுமே!''
''ஐயோ பறுவதம்! இனிமேல் நான் கவனமாய் இருப்பன்,கொஞ்சம் பேசாமல் இரு.'' என்று முனகிக்கொண்டே பேச்சினை முடித்துக்கொண்டார் தாத்தா.
பாட்டியின் பெருந்தன்மைகளை எண்ணியவாறே ஓடும் காரின் யன்னலூடு வெளியுலகத்தினை இரசித்துக்கொண்டிருந்தேன்.
      -ஆக்கம்:பேரன் செ.மனுவேந்தன் 

0 comments:

Post a Comment