இவர்கள் தமிழை மறந்த காரணம்?

தமிழ் நாட்டுத் தமிழரை சிட்னி வீதிகள், மைதானங்கள், பூங்காக்களில் சந்தித்தால், அவர்கள் பெரும்பாலும் தங்களுக்குள் ஆங்கிலத்திலேயே சம்பாஷிப்பதை நாளாந்தம் காண்கிறோம். எனக்கோ பெரிய ஆச்சரியம், எப்படி இவர்கள் தமது வீட்டு மொழியை அப்படி மறந்து போயினர் என்று! என்னுடன் கதைக்கும்போதும், நான் தமிழில் பேச, அவர்கள் பதில் ஆங்கிலத்தில்தான் இருக்கும். அது எப்படி இவர்களுக்கு ஆங்கிலம் அவ்வளவுக்கு இலகுவான மொழியானது என்பதற்கான காரணத்தை, சமீபத்தில் மகளைப் பார்க்க விடுமுறையில் வந்த தமிழ் நாட்டவர் ஒருவர் சொன்னபோது என்னால் சீரணிக்கவே முடியவில்லை.
அவர், என்னுடைய பணிவான வேண்டுகோளுக்கு இணங்க தமிழிலிலே என்னோடு கதைப்பதற்கு மிக, மிக முயற்சி எடுத்தார்என்னோடு கட்டாயம் தமிழில்தான் கதைக்கவேண்டும் என்று அடிக்கடி நினைவில் வைத்திருப்பதாகச் சொல்லியும் கொள்வார்.
அவர் தமிழ் மறந்ததற்கு காரணம் சொன்னார். அவர் தன் ஊர்ப் பள்ளியில் படிக்கும்போது தமிழில்தான் படித்தாராம். சென்னைக்கு பட்டப் படிப்புக்கு வந்தால் எல்லோரும் அங்கு (தமிழ் நாட்டில்) ஆங்கிலத்தில்தான் பேசினார்களாம். பின்னர் வேலைக்கு என்று போனால், அங்கும் (தமிழ் நாட்டில்) எல்லோரும் ஆங்கிலத்தில்தான் பேசினார்களாம். ஆதலால்தான் அப்படியே தமிழ் பேசாது மறந்து போய்விட்டதாம்.
அது எப்படி மறக்கும் என்று எனக்குப் புரியவில்லை.
நான் சொன்னேன்: வெள்ளைக்கார நாடுகளில் போய் வேலை செய்யும் நம்மவர் எல்லோருமே நம்மினத்தினர் கூடத்தான் வசிப்பார்கள்; பழகுவார்கள்; கதைப்பார்கள. வேலைத்தலத்திலும் எப்படியும் தேடித் பிடித்து நம்மினத்தவர்களுடந்தான் திரிவார்கள். வெள்ளைகளுடன் ஒரு வணக்கம் சொல்வதோடு கதை முடிந்துவிடும். ஏனென்றால், அவர்களினதும், எங்களினதும் கலாச்சாரம், ஈடுபாடுகள், ஆர்வங்கள், பொழுது போக்குகள், சொற் பிரயோகங்கள், நகைச்சுவை உணர்வுகள் எல்லாமே முற்றிலும் வேறுபட்டிருப்பதால்! ஓரிரு வார்த்தைகளுடன் அவர்களுடனான சம்பாஷனை முடிந்து விடுவதால் அவர்களின் மொழியையோ, அதன் உச்சரிப்பையோ, ஒலி அழுத்தத்தையோ ஒருபோதும் எங்களால் உள்வாங்கிப் பரீட்சியமாக்க முடியவே முடியாது! இது இப்படி இருக்க, தமிழ் நாட்டில் தமிழர் மத்தியில் எப்படி தமிழ் மறந்து போகும்?
அவர் கூறிய பல விடயங்களில் ஒன்றை மட்டும் உதாரணத்திற்காக தர விரும்புகின்றேன்.
அவர் எனக்காக தமிழில் சொன்னார்: 'ஈவினிங் கார்டினர் வந்து ப்ரின்ஜோல் என்னமாதிரிப் ப்ளான்ற் பண்ணிறது என்று காட்ட வாரார்' என்று.
அய்யய்யோ, இது மதுரைக்கு வந்த சோதனை!
எங்கள் மரக்கறியை நட்டுக்காட்ட அதை உண்டு அறியாத அந்நியன் வருகிறார்.
ப்ரின்ஜோல்! இவர்கள் இந்தியாவில், ஓர் ஆங்கிலேயர் வீட்டில் பிறந்து, வளர்ந்து, அவர்களுடன் சேர்ந்து ப்ரின்ஜோல் கறி வழக்கமாய்ச் சாப்பிட்டு இருந்தால்தான் (இவ்வளவுக்கும் அவர்கள் அதைச் சாப்பிடுவது இல்லை) கத்தரிக்காய் என்ற சொல் ஞாபகத்துக்கு வராது. அவன் ஆண்ட காலத்தில் ஓர் இந்தியனையும் வீட்டினுள் அண்ட விடுவதில்லையே! எப்படி இந்த ப்ரின்ஜோல் பழக்கமானது? கல்லூரி, வேலைத்தளங்களில் எல்லாமே ஆங்கிலம்தான் என்றால், 'என்ன அங்கெல்லாம் ப்ரின்ஜோல் கறி வைத்துப் பழக்கினார்களா' என்று கேட்டேன். அத்தோடு, கூவி விற்கும் மரக்கறிக் கூடைக்காரி, தள்ளு வண்டில்காரன், கடைக்காரன் ஆகியோர் கத்தரிக்காய் என்று தானே சொல்லி விற்று இருப்பர்? இப்படி இருக்க எப்படி...?
எந்த ஒரு மறக்கறியையோ, பழத்தையோ தமிழில் சொல்லாது அதற்கான ஆங்கில வார்த்தையை தேடிப்பிடித்து கதைப்பது நாகரீகமாகக் கருதுகின்றார்கள். இலக்கங்கள் எவருமே தமிழில் சொல்வது கிடையாது. அதை ஒரு இழிவாகக் கருதுகின்றார்கள்.
ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில், கஷ்டமான பாடம் எது என்று ஓர் 50 மாணவர்களிடம் கேட்டபோது பலர் தமிழ்தான் என்று கூறித் தலை நிமிர்ந்து நின்று பெருமை கொண்டார்கள். ஆங்கிலம் என்று ஒருவர்தானும் கூறித் தன் கௌரவத்தைத் தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை. அதற்கு, நடத்துனர் கேட்டார், 'அவ்வளவுக்கு எலோருக்கும் ஆங்கிலத்தில் பெரும் புலமையோ; அல்லது ஆங்கிலம் கஷ்டம் என்று கூறினால் அது ஒரு மானப் பிரச்சனையோ' என்று. அப்போதும், அவர்கள் தங்கள் மானத்தை எல்லோருமே காப்பாற்றிக் கொண்டார்கள், தமிழ்தான் கஷ்டம் என்று கூறி!
பெரும்பாலும் தமிழ் நாட்டுப் பெற்றோர்கள் ஆங்கில மூலக் கல்வியினைத்தான் தம் பிள்ளைகளுக்கு பாலர் வகுப்பிலிருந்து முனைவர் நிலை வரை அளிக்கின்றார்கள். மறந்துபோயும் பிள்ளைகள் தமிழில் ஒரு வார்த்தைதன்னும் - அப்பா, அம்மா உட்பட- பேசிவிடக்கூடாது; கேட்டுவிடக்கூடாது என்று மிகவும் ஜாக்கிரதையாக இருகின்றபடியால். வருங்காலத்தில் vegetable basket head இலை carry பண்ணும் old lady, "brinjal - drumstick - lady's finger - pumpkin - bitter gourd - snake gourd - bottle gourd - ash gourd - drum stick leave - red amaranth available!" என்று தான் கூவி விற்பாள் என்பதில் எள்ளளவு சந்தேகமும் இல்லை! ஏனென்றால் மரக்கறி விற்பவளும் ஆங்கிலப் பள்ளியின் படைப்பாய்தான் இருப்பாள் என்பதால்!
தமிழ் பரவி இருந்த நாடுகளில் எல்லாம் இப்போது தமிழ் முற்றாகவே அழிந்து விட்டது! ஆனால் தமிழ் நாட்டில்....?????????????????????????
ஆக்கம்:செல்வத்துரை ,சந்திரகாசன்.

3 comments:

 1. நல்ல கருத்து. ஆசிரியரின் பிள்ளைகள் தமிழ் கதைப்பார்கள் என்பது சந்தேகமே?

  ReplyDelete
 2. பெயர் சொல்ல விரும்பா விரும்பியே! விடயத்தை வடிவாய் வாசித்து விளங்கினால் மட்டும் கதைக்கவும்! தமிழ் இருந்த நாடுகளில் எல்லாம் வேற்று மொழித் தாக்குதலினால் இப்போ தமிழ் இல்லை. எல்லா மேலை நாடுகளிலும் பிறமொழிச் சூழலில் வாழும் பிள்ளைகள் தமிழை மறுப்பதற்கான சாத்தியக்கூறுதான் அதிகம். கட்டுரையின் நோக்கமே வேறு. தமிழ்நாட்டிலேயே, அதுவும் வயது போனவர்கள்கூடத் தமிழ் மறந்து போனதற்கான காரணத்தைக் கூறும்போதுதான் நம்ப முடியவில்லை. சொந்த நாட்டிலேயே தமிழ் இல்லாமல் போய்விட்டதாம், மற்ற நாடுகளைப் பற்றி ஏன் பிதற்ற வேண்டும்?

  ReplyDelete
 3. மனுவேந்தன்Friday, May 22, 2015

  கனடாவிலும் இதே நிலைதான்.இதனைப்பற்றி 'தமிழர் நாம்' என்ற தலைப்பில் தீபத்தில் தொடர்ந்து வந்தது.ஆரம்பகால வாசகர்களுக்கு நினைவு இருக்கலாம்.எந்த இனத்திலும் காண முடியாத இப்படியான விசேட குணங்கள் தமிழரிடம் மட்டுமே காணலாம்.இப்படியெல்லாம் நடந்துகொண்டு ஏன் தான் போராட்டம் அது இது என்று மனிதப்பலி கொள்கிறார்கள் என்பது புரியாத புதிர்.

  ReplyDelete