ஆலயங்களுக்கும் ஒரு அளவுகோல் தேவை;மீள்பார்வை

இங்கு கனடாவில் வாழும் இந்து மக்களின் ஆன்மிகத் தேவையிலும் பார்க்க, அதிகமாகவே கனடாவில் இந்து ஆலயங்கள் இருப்பதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. கனடாவில் உற்பத்தி இடம்பெறும் தொழிற்சாலைகளாக இருந்த பல கட்டடங்கள் இன்று ஆலயங்களாகவும் தேவாலயங்களாகவும் பள்ளிவாசல்களாகவும் ஆகியுள்ளன. கனடாவினதும் ஒன்றாரியோ மாகாணத்தினதும் பல தவறான பொருளாதாரக் கொள்கைகளால் பல உற்பத்தி தொழிற்சாலைகள் மூடப்பட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதே இதற்கு காரணம் என்று பலரும் சுட்டிக் காட்டியுள்ளனர்.இந்த விடயம் தொடர்பாக கனடா உதயன் ஆசிரிய பீடமும், பல தடவைகள் இங்குள்ள பல அரசியல் தலைவர்களிடம் கேள்விகள் எழுப்பியும் அதற்கு தகுந்த பதில்கள் அவர்களிடமிருந்து கிடைக்கவில்லை என்பதையும் நாம் இந்தப் பக்கத்தில் குறிப்பிட விரும்புகின்றோம். இது இவ்வாறிருக்க கனடாவில் உள்ள இந்து ஆலயங்களால் மக்களுக்கு அதிக பலன்கள் கிட்டவில்லை என்று கூறமுடியாது. பல ஆலயங்கள் ஆலய வழிபாடு மற்றும் ஆன்மிக விடயங்களுக்கு அப்பால் சமூக சேவைகளையும் பொதுக்கல்விச் சேவைகளையும் ஆற்றிவருகின்றன.

பல ஆலயங்கள் இங்குள்ள நமது மூத்தோர்களுக்கு நிம்மதியை அளிக்கும் நிழல்தரும் மரங்களாக செயற்படுகின்றன. வருடம் ஒரு தடவை ஆலயங்களில் நடைபெறும் திருவிழாக்கள் எமது மக்களுக்கு புத்துணர்வையும் சமயப்பற்றை ஏற்படுத்தும் உற்சவங்களாக த்pகழ்கின்றன. அங்கு இடம்பெறும் சமய கிரியைகள் மற்றும் சமய வரலாற்று நிகழ்வுகள் நமது மக்களுக்கு நமது முன்னைய கால வரலாற்றைக் கூறும் தகவல் திரட்டுக்களாக தெரிகின்றன. எனினும் ஆங்காங்கே சில ஆலயங்களில் இடம்பெறும் சமய நிகழ்ச்சிகளிலிருந்து வேறுபடும் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நமது மக்கள் சில வேளைகளில் திசைமாறிச் சென்று அர்த்தமற்ற கலைபடைப்புக்களை ரசிக்க வேண்டியவர்களாக மாற்றிவிடுகின்றது.

இதன் காரணமாக புனிதம் பாதுகாக்கப்பட வேண்டிய ஆலய வீதிகள் அசுத்தமடையச் செய்கின்றன. ஆலய வீதிகளில் ஏற்பாடு செய்யப்படும் சில களியாட்ட நிகழ்ச்சிகளால் ஆலயங்கள் தங்கள் கடமைகளிலிருந்தும் ஒழுங்கு என்ற அம்சத்திலிருந்தும் விலகிச் செல்ல வேண்டி எற்படுகின்றது. அங்கு கூடும் மக்கள் தாங்கள் எந்த இடத்தில் வந்து குவிந்திருக்கின்றோம் என்பதை மறந்து விரும்பத்தகாத விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாக, தாங்கள் அறியாமலே மாறிவிடுகின்றார். உதாரணமாக சில நாட்களுக்கு முன்னர் இங்குள்ள ஆலய வீதியொன்றில் எற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு இசை மற்றும் நடன நிகழ்ச்சியில் சினிமாவின் மேலாதிக்கம்

அதிகரித்த நிலையில் பல இளைஞர் யுவதிகள் சேர்ந்து குத்தாட்டம் போடுவதைக் கண்டு பல அன்பர் முகம் கறுத்துப்போய் நின்றதை எங்களோடு பகிர்ந்து கொண்டனர் பலர். எனவே இங்குள்ள ஆலயங்கள் தங்கள் அளவுகோல்களை தாங்களாகவே தீர்மானிக்க வேண்டும். மேற்படி அளவுகோல்கள் அங்கு இடம்பெறுகின்ற திருவிழாக்கள் மற்றும் கலை நிகழ்வுகள் போன்றவைக்கும் பொதுவானதாக அமையவேண்டும் என்பதே கனடா உதயனின் அவாவும் அக்கறையும்.

0 comments:

Post a Comment