பூஜைகள் செய்யப் புதிய யோசனைகள்!!!!!


சமீபகாலமாகப் பலவிதமான நிகழ்வுகளுக்கு இறைவன் கிருபையை வேண்டி விதம் விதமான பூஜைகளை, பூசகரைக் கொண்டு புரிவது நம்மின மக்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகின்றது. ஆரம்பத்தில் கல்யாண வைபவம், அந்திரட்டி, ஆட்டத்திரி எனச் சிலவற்றுக்கு மட்டுமே செய்யப்பட்டுவந்த பூசைக் கிரிகைகள், மக்களிடையை வசதியும், செல்வமும் பெருக, இப்பொழுது பெரும்பாலோர் புது மனை புகுதல், பூப்புனித நீராட்டுதல், குழந்தை பிறந்த துடக்கு கழித்தல் எனப் பலவிதமானவற்றை 'வெகு விமரிசையாக' பூசகரைப் பிடித்து, மந்திரம் ஓதிப் பெரிய விழாக்கள் ஆக்கிவிட்டார்கள்.,

இதனால் இப்பூசகர்கள் பாடு கொண்டாட்டமாகி விட்டது. ஏற்பட்ட மவுசினால், உண்மையில் இவர்களுக்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது. அதனால்தானோ என்னவோ, மேலை நாடுகளில், மற்றைய தொழில் புரிபவர்கள் போலல்லாது, கோவில்களில் வேலையும் அளித்து, அருகினிலே வீடும் கொடுத்து, தனிப்பட்ட வெளி வேலையும் செய்யலாம் என்ற அனுமதியும் வழங்கி இருக்கும் ஒரே ஒரு தொழில் இந்தப் பூசகர் வேலைதான் என்பது உண்மையிலும் உண்மை.

இவர்கள், மக்களின் கடவுள் நம்பிக்கையை பாவித்துப் பலவிதமான யுக்திகளின் மூலம் தங்கள் வருமானங்களைப் பெருக்கிக்கொண்டு போவதில் மிகவும் சாமர்த்தியர்கள். கடவுள் பயத்தினால் இவர்கள் சொல்வதற்கெல்லாம் ஆமாம் போடும் பெரும் கூட்டமே இருப்பதனால், இவர்கள் பல புதிய காரணங்களைக் காட்டி, இல்லாததுக்கெல்லாம் செல்லாத மந்திரங்களைச் { படுபிழையாகச் சொன்னாலும் புரியாத மொழிதானே }சொல்லி, பொல்லாத பூசைகள் செய்து முடித்து ஒரு பெரிய தொகையை வசூலித்துக் கொள்ளுவர்.

சமீபத்தில் ஒரு குடும்பம் தங்கள் புதிய வீட்டுக்கு ஒரு பூசகரை அழைத்துப் பூசை செய்து குடி புகுந்து, முடிவில் அவருக்கு அவர் உள்ளம் மகிழப் பெரும் தொகை ஒன்றைக் காணிக்கையாகச் செலுத்தினர். வெளியில் வந்தவர், நின்று வீட்டைப் பார்த்து அவர்களின் தலையில் ஒரு பெரிய ஐஸ் கட்டியை வைத்துச் சொன்னார், "உங்கள் வீடு நல்ல விசாலமாகவும் அழகாகவும் இருப்பதால் ஆட்களின் கண்ணூறு பட்டுவிடும். ஆதலால் இந்த  நாவூறுகளில் இருந்து பாதுகாக்க வேறொரு பூசை கட்டாயம் செய்யவேண்டும்" என்று. உடனே இந்த 'அலுகோசுகள்' இன்னொரு 'நல்ல' நாளில் கட்டணம் செலுத்தி, மேலுமொரு பூசைசெய்துகொண்டதால் இப்பொழுது எல்லா  நாவூறுகளில் இருந்தும் காப்பாற்றப்பட்டு நிம்மதியாக இருக்கின்றார்கள்.

தெரியாமல்தான் கேட்கிறேன்; வீடு குடிபுகும்போது செய்யும் பூசைகளே, இந்த வீட்டையும், இருப்பவர்களையும் கிரகங்களின் கெட்ட பார்வைகள், தீய சக்திகளின் கொடிய தாக்கங்கள், எதிர்மறையான அதிர்வுகள் முதலியவற்றில் இருந்து காப்பாற்றுவதற்குத்தானே செய்யப்படுகின்றன என்று சொல்லுகின்றார்கள். அப்படி என்றால், அந்தக் கணபதி ஹோமம், சங்கொலி, தேங்காய், வெற்றிலை, மாவிலை ஒன்றும் இவற்றில் இருந்து காப்பாற்றுவதற்காக இல்லையா? அடடே, யுத்தம், வெள்ளம், நில நடுக்கம் போன்றவற்றால் ஒரேசமயத்தில் தரைமட்டமாகும் வீடுகள் எல்லாம் இப்படியான கிரிகைகள் முறைப்படி செயயாதனால்தான் ஏற்பட்டதோ?

அதனால்தான் சொல்கின்றேன், மனித குலம் பசி, பட்டினி, தோல்வி, அழிவு, விபத்து போன்றவற்றிலிருந்து காப்பாற்றப்படவேண்டும் என்றால் புதிய காரணிகள், புதிய பூசைகள், புதிய மந்திரங்கள், தேவையானவிடத்து புதிய கடவுள்களும் பிந்தாமல் கண்டுபிடிக்கப்பட வேண்டும். இதற்கு, என் சின்ன மூளைக்கு எட்டிய சில புதிய யோசனைகளைத் தர விரும்புகின்றேன். சொல்லப்படும் எல்லாவற்றிற்கும் கட்டாயமாக, ஐயரை அழைத்து, முறைப்படி பூசை செய்து முடிப்பிக்கவேண்டும்.
* இறந்த ஒவ்வொருவரும் உங்களைத் தொடர்ந்து ஆசீர்வதிக்க, அவரவர் பிறந்த நாளில் ஓர் 'ஆசி பூசை'.
*உறவாடா உறவுகள் உறவு வேண்டி ஒரு 'பந்த பூசை'
*இருக்கும் உறவினர் உதவி கோரி ஒரு 'சொந்த பூசை'
*பிள்ளைகள் ஒற்றுமையாக வாழ ஒரு 'பாச பூசை'
*பணக்காரருடன் பலமான பிணைப்பு நிலைக்க ஒரு 'பிணைபூசை'
* வீட்டினுள் பணம் கொட்ட, வருடா வருடம் ஒரு 'லட்சுமி பூசை
*அயல் வீட்டாருடன் நட்புடன் இருக்க ஒரு 'நட்பு பூசை'
*சாந்திமுகூர்த்த நேரம் ஆரம்பிக்கப் படுக்கையறையில் ஒரு'படுபூசை'
*கருத்தரித்தால் ஒரு 'கரு பூசை'
*கர்ப்பணிகளுக்கு ஒரு 'சிசு பூசை'
*பிள்ளை நல்ல நாளில் பிறக்க 'கிரக பூசை'
*பிள்ளை நல்லாய் பிறக்க 'நல பூசை'
*பிள்ளைகள் பெயர் வைக்கும்போதும்,பல்லு முளைக்க , சிரிக்க, உடம்பு பிரட்ட, தவழ , உணவு அருந்த, நடக்க, கதைக்கத் தொடங்கும்போதும் ஒரு 'வளர்ச்சி பூசை'(இவற்றுக் கெல்லாம் அடிக்கொருக்கால் வர பூசகருக்கு சிரமமெனில் ஒருவர் இறந்தபின் 12 மாதமாசிகத்தானும் சேர்த்துக் கொடுப்பதுபோல் அவருக்கு கொடுக்கவேண்டியதை சேர்த்துக் கொடுத்தால் பெரும் பேறாகும்).
*பிள்ளைகள் ஒவ்வொருவரும் பாடசாலை செல்லத் தொடங்கும்போதும், ஒவ்வொரு வகுப்பு மேலேறும்போதும் ஒரு 'பள்ளி பூசை'(மேற் கூறியதுபோல் 12 பூசையும் சேர்த்தும் செய்யலாம்).
* சிவராத்திரி, நவராத்திரி, தீபாவளி என்று எல்லா விஷேடங்களுக்கும்
முறையான 'விஷேட பூசைகள்'
*விசேட பரீட்சைகளில் பிள்ளைகள் அதி உயர் சித்தி அடைய ஒரு 'சித்தி பூசை.'.
*பல்கலைக்கழகம் நுழையமுன் ஒரு 'நுழை பூசை'
* படிப்பு முடித்து வேலை தொடங்கும்போது ஒரு 'வேலை பூசை
* வேலையில் பதவி உயர்வு கிடைக்க ஒரு 'உயர்ச்சி பூசை"
*ஒவ்வொருவரும் ஒரு கணனியோ, தொலைபேசியோ மற்றும் விளையாட்டுக் கருவியோ வேண்டும்போது அவை பழுதாகாமல் இருக்க ஒரு 'காவல் பூசை'
*கணணி வைரசினால் தாக்கப்பட்டுப் பழுதாகாமல் இருக்க ஒரு 'வைரஸ் பூசை'
*எந்தவொரு வண்டி வாங்கும்போதும் ஒரு 'வாகன பூசை'
* விமானம் ஏறுமுன் ஒரு 'காப்பு பூசை'
* விமானம் விட்டு இறங்கிய பின் ஒரு 'நன்றி பூசை'
*தெருவில் இறங்கி பாதுகாப்போடு நடப்பதற்கு வருடம் ஒருமுறை என்றாலும் ஒரு 'விபத்து பூசை'
*பிள்ளை வேண்டி ஒரு 'குழந்தை பூசை'
* பிள்ளைகள் போதுமென்று கண்டால் ஒரு 'போதும் பூசை'
* பிள்ளை பிறந்தால் ஒவ்வொரு மாசமும், பின்னர் ஒவ்வொரு வருஷமும் ஒரு 'சேம பூசை'.
* மன அழுத்தம் வராமல் இருக்க ஒரு 'அழுத்த பூசை'
*காதல் வராமக்காக்க ஒரு 'கட்டுபூசை'
* காய்ச்சல் வராமல் இருக்க ஒரு 'காய்ச்சல் பூசை'
* வயிற்றால் சுகமே போக ஒரு 'பேதி பூசை'
*இதேபோல 'இருமல் பூசை', 'தடிமன் பூசை' என்று பல.
*திருமண நினைவு நாளில் ' மண பூசை'
* (அவர்கள் கோபித்துக் கொண்டாலும்)மற்றைய சமய கடவுள்களின் அனுக்கிரகம் கிடைக்க 'ஜேசு பூசை', 'அல்லா பூசை' என்று பலவும்.


இப்படி, இப்படி இஷ்டப்படி பலவிதமான காரணங்களுக்கு உரிய பூசைகளை எல்லாம் முறைப்படி செய்துவந்தால், பூசகர் குடும்பம் எந்தவொரு கஷ்டமும் இன்றி வாழ்வதுபோல நீங்களும் வாழலாம்.

ஏன் நினையாப் பிராகாரமாக இடருக்குள் விழவேண்டும்? எதற்கும், மண்டையைப் போட்டுக் குழப்பிச் சரியோ பிழையோ, விடயம் இருக்கோ இல்லையோ, அல்லது உண்மையோ பொய்யோ என்று ஆழ, அமர இருந்து பகுத்தறிய முனையாமல், எல்லோரும் செய்கிறார்கள்தானே என்றுவிட்டுப் புதிய இத்தகைய பூசைகளையும் சேர்த்துச் செய்யுங்கோவன்! என்ன, வாழ்க்கையில் ஒருமுறைதானே!

என்றால்தானே அவர்களும் தொடர்ந்து பிழைக்கலாம்! (அவர்களும் பிழைத்தால் தானே)உங்களையும் வாழ வைக்கலாம்!

பூசைகள் பல செய்து ஆசைகள் பல தீர்ந்து பெருவாழ்வு வாழ்வீர்!

பி.கு.:
*எந்தவொரு பூசையும் சேர்த்து எல்லோருக்கும் என்று ஒன்றாகச் செய்தால் பலன் கிடைக்காது. தனித்தனியே செய்தல் வேண்டும்.
*செய்யும் பூசைகளும், பூசைகளின் பெயர்களும் தமிழில் சொல்லாது சம்ஸ்கிருத மொழியில் சொன்னால்தான் சக்தி பலம்.
* பூசகருக்கு எவ்வளவுக்கு, எவ்வளவு கூடுதல் கூலி கொடுத்து அவரைச் சந்தோசப் படுத்துகின்றீர்களோ அவ்வளவுக்கு, அவ்வளவு பலனும் பெருகும். இதில் கஞ்சத்தனம் பார்த்தால் தண்டிக்கப் படுவீர்கள்.
*கூலியைப் பணமாகவோ, அவர்கள் விரும்பும் பொருளாகவோ கொடுக்கலாம். லக்சரி ஸ்போர்ட்ஸ் கார் கொடுப்பது பெரும்பாலும் விரும்பத்தக்கது.

6 comments:

  1. சிரிப்பு வருகுது,சிரிப்பு வருகுது,வாசிக்க,வாசிக்க சிரிப்பு வருகுது.

    ReplyDelete
  2. அந்தக் காலத்தில் வீடு கட்டிய தச்சு ஆச்சாரியார்தான் வீட்டைக் குடி புகுவார்; ஐயர் அல்ல.
    அது சரி, என்ரை மனைவியார் சுமங்கலியாப் போய்ச் சேர்ந்துவிட வேண்டும் என்று வேண்டாத தெய்வம் இல்லை.
    அப்படி நடக்க எதாவது பூசைகள் இருக்கா ஒவ்வொரு மாதமும் செய்ய?

    ReplyDelete
    Replies
    1. அதற்குத்தானே இருக்கிறது சுமங்கலி பூசை.ஏனுங்கோ அவசரம்!

      Delete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  4. திருவனந்தபுரம்: சபரிமலை பக்தர்கள் பம்பை ஆற்றை மிகவும் புனிதமாக கருதுகின்றனர். இந்த ஆற்றில் குளித்து விட்டுதான் ஐயப்பனை தரிசிக்க செல்வார்கள். பல பக்தர்கள் குளித்த பின்னர் தாங்கள் அணிந்திருந்த ஆடைகள் மற்றும் பொருட்களை, பம்பை ஆற்றில் விட்டால் பாவங்கள் விலகும் என்று நம்புகிறார்கள். இதனால் நதி அசுத்தம் ஆகிறது. இதுதொடர்பாக கேரள உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. --இது பத்திரிகைச் செய்தி .இப்படி இடத்திற் கிடம் ,ஆளுக்கு ஆள் ஒவ்வொன்றை சொல்லி மக்களை மேலும் மூடரா க்கி வளர்ந்துகொண்டிருக்கிறது இந்து அஜாரகம்.

    ReplyDelete
    Replies
    1. ஏன், பம்பை ஆற்றில குதிச்சு செத்தா சொர்க்கலோகம் போகலாமாம்....!!

      Delete