தமிழரின் உணவு பழக்கங்கள்/பகுதி:13

[பண்டைய சங்க தமிழரின் உணவு பழக்கங்கள்]
[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
தென் இந்தியாவின் ஆரம்ப குடிமக்கள்-திராவிடர்கள்,சைவ உணவு உண்பவர்களாக இருக்கவில்லை.அவன் ஆரம்ப காலத்திலிருந்தே அசைவ உணவுப் பிரியனாக இருந்திருக்கிறான்."இரும் புலி துறந்த ஏற்று மான் உணங்கல்,நெறி செல் வம்பலர் உவந்தனர் ஆங்கண்,ஒலி கழை நெல்லின் அரிசியொடு ஓராங்கு,ஆன் நிலைப் பள்ளி அளை செய்து அட்ட வால் நிணம் உருக்கிய வாஅல் வெண் சோறு,புகர் அரைத் தேக்கின் அகல் இலை மாந்தும்" என அகநானூறு 107,வரிகள்,5-10 கூறுகிறது. அதாவது ஆண் மானினை பெரும் புலி ஒன்று கொன்று தின்றது.எஞ்சிய இறைச்சி பாறையில் காய்ந்து கிடைகின்றது.அவ்வழியே சென்ற மக்கள் அந்த இறைச்சி துண்டை கண்டு மகிழ்ந்தனர். அந்த காய்ந்த ஊனையும் முங்கில் நெல்லின் அரிசியையும் தயிரையும் சேர்த்து வெண்சோறாக்கி,அதை தேக்கின் இலையில் வைத்து உண்டனர் என்கிறது இந்த சங்க பாடல்.அது மட்டும் அல்ல,இறைச்சியை எண்ணெயில் பொரிக்கும் பழக்கமும் அந்த ஆரம்ப காலத்திலேயே, அதாவது சங்க காலத்திலேயே இருந்துள்ளது.கொதிக்கும் எண்ணெயில் இறைச்சி பொரிக்கும் போது,அங்கு எழும் ஓசை நீர் நிறைந்த பொய்கையில் மழைத்துளி விழுவது போல் இருந்தது எனப் புறநானூறு,386 "நெடு நீர நிறை கயத்துப் படு மாரித் துளி போல,நெய் துள்ளிய வறை முகக்கவும்"என கூறுகிறது.மேலும் இறைச்சியை இரும்புக் கழியில் சுட்டுத் தின்னும் வழக்கமும் அங்கு இருந்தது என்பதை அதே பாடலில் "சூடு கிழித்து வாடு ஊன் மிசையவு" என்ற வரி மூலமும்,மேலும் பொருநர் 105, அகம் 169. மூலமும் அறிகிறோம்.எப்படியாயினும்,அங்கு அரிசியே [சோறு] அவர்களின் பிரதான உணவாக இருந்துள்ளது.இன்று 'சாதம்’ என தமிழ் நாட்டில் பொதுவாக வழங்கப்படும் அரிசிச் சோறு,பொது வழக்கில் சோறு என்றே
வழங்கப்பட்டிருக்கிறது. "சோறு வாக்கிய கொழுங் கஞ்சி,யாறு போலப் பரந்து ஒழுகி,"என வருணிக்கிறது பட்டினப் பாலை,வரி 44-45.இலங்கையில் இன்னும் சோறு என்றே அழைக்கப்படுவதையும் கவனிக்க.அத்துடன் ஆட்டுக்கடா, மான்,கோழி,உடும்பு,பன்றி போன்ற இறைச்சியையும் மற்றும்,மீன்,நண்டு,போன்ற கடல் உணவையும்,நெய்,மற்றும் பல வாசனைத் திரவியங்களுடன் சேர்த்து சமைக்கப்பட்டன.மாம்பழங்கள்,பலாப்பழம்,கரும்பு,தேன்,போன்றவை அவர்களின் உணவிற்கு தித்திப்பை கொடுத்தன.மேலும் அவர்களின் நாளாந்த உணவாக,கிழங்கு வகைகள்,மூங்கில் குழல்களில் (குழாய்களில்) பதப்படுத்தப்பட்ட எருமைத் தயிர்,தேன்கூடு போன்ற இனிப்பு கேக்குகள், தேங்காய், சர்க்கரை முதலியன உள்ளீடாகவுள்ள மாப்பண்ட வேவல், ஊறுகாய், போன்றவை இருந்தன.மாங்காயில் நல்லமிளகு கலந்து கறிவேப்பிலை தாளித்து ஊறுகாய் ஆக்கும் வழக்கம் பற்றி பெரும் பாணாற்றுப்படை,வரிகள்,309-10,"கஞ்சக நறுமுறி அளைஇ பைந்துணர்,நெடுமரக் கொக்கின் நறுவடி விதிர்த்த" என கூறும். கள்ளு அங்கு தாராளமாக கிடைத்தன.அதை எல்லோரும் பொதுவாக குடித்தார்கள்.“துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.” (குறள் 926) என்று கூறுகிறார் வள்ளுவர்.அதாவது,உறங்கினவர் இறந்தவரை விட வேறுபட்டவர் அல்லர்,அவ்வாறே கள்ளுண்பவரும் அறிவு மயங்குதலால் நஞ்சு உண்பவரே ஆவர் என்கிறார்.என்றாலும் நாம் சங்க இலக்கியத்தை பார்க்கும் போது,அங்கு மது பானம் பண்டைய தமிழர் வாழ்வில்,ஆண் பெண் இரு பாலாரிடமும்,ஒரு முக்கிய பங்கு வகுத்ததை காண முடிகிறது. துணை உணவாக மது புலவர்களுக்கு வழங்கி அரசனும் சேர்ந்து உண்டு மகிழ்ந்ததை,புகழ்பெற்ற சங்க புலவர் ஒளவையார்,தனது புறநானுறு 235
இல்,"சிறியகட் பெறினே, எமக்கீயும் மன்னே; பெரியகட் பெறினே யாம்பாடத் தான்மகிழ்ந்து உண்ணும் மன்னே;" என்று எடுத்து உரைக்கிறார்.அதாவது, சிறிதளவு கள்ளைப் பெற்றால் அதியமான நெடுமான் அஞ்சி அதை எமக்குத் தருவான்; பெருமளவு கள்ளைப் பெற்றால் எமக்கு அளித்து நாம் பாட அதைக் கேட்டு மகிழ்ந்து அவனும் உண்பான் என்கிறார் ஒளவையார். மேலும் அகநானுறு 336:"தெண் கள் தேறல் மாந்தி மகளிர் நுண் செயல் அம் குடம் இரீஇப் பண்பின் மகிழ்நன் பரத்தைமை பாடி அவிழ் இணர்க் காஞ்சி நீழல் குரவை அயரும்" என கூறுவதையும் காண்க,அதாவது,தெளிந்த கள்ளினைக் குடித்து,பெண்கள்,நுண்ணிய தொழில் நலம் வாய்ந்த அழகிய குடத்தினை வைத்துவிட்டு,தம் கணவரது நற்பண் பில்லாத பரத்தைமைகளைப் பாடி,விரிந்த பூங்கொத்துக்களை உடைய காஞ்சி மரத்தின்(Trewia nudiflora) நீழலில் குரவை[கைகோத்து ஆடப்படும்] ஆடுதலைச் செய்யும் மகளிர் என்கிறது.

தமிழர் நிலத்திணைகள் என்பவை பண்டைத் தமிழர் தமது இயற்கைச் சூழலுக்கு ஏற்ப வாழ்ந்த நிலங்களாகும்.இவையை சங்க பாடல் முல்லை,குறிஞ்சி,மருதம்,பாலை, நெய்தல் என ஐந்திணையாக பிரிக்கிறது.இவ்வாறு இயற்கையாக அமைந்த வெவ்வேறு சூழ்நிலைகளில் வசித்த அக்காலத்துத் தமிழ் மக்களுடைய வாழ்க்கையும் வெவ்வேறு வகையாக இருந்தன.அதாவது,அவர்களுடைய தொழிலும் உணவும் உடையும் பண்பாடும் திணைக்கு திணை வெவ்வேறாக இருந்தன.பண்ட மாற்றமும்,பயண வசதியும் ஏற்பட்ட பின்னர்தான் அனைவரும் அனைத்து உணவு வகைகளையும் சாப்பிடும் வாய்ப்பு ஏற்பட்டது.அதுவரை அந்த அந்த மண்ணின் மைந்தர்க்கு அந்த மண்ணில் கிடைக்கும் உயிர்களே உணவு.கடலின் அருகே வாழ்பவனுக்கு மீன்தான் பிரதான உணவு.அப்படியே மற்றவையும்.இந்த 5 திணைகளில் எல்லாம் உழைக்கும் மக்களை காட்சிப் படுத்தப்பட்டு அவர்களுக்கான உணவு முறை அந்த உழைப்புக்கும் சூழலிற்கும் ஏற்ப இருக்கும்.முல்லை நிலத்து இடையர்,பசுக்களையும் ஆடுகளையும் எருமைகளையும் வளர்த்தார்கள்.ஆட்டுக்கறி,உடும்புக்கறி ஆகியவற்றை சமைத்தும்,குச்சியில் கோர்த்து சுட்டும் உண்டனர்.விருந்தினர் வந்தால்,தினையும் பாலும் சேர்த்து சமைத்த சோறு பரிமாறினர்.மற்றும் சோளம்,அவரை,துவரை,தயிர்,மோர்,நெய் போன்றவற்றையும் உண்டு மகிழ்ந்தனர்.மருதத்தில்,வாழ்ந்த விவசாயிகள்,நெல்லு,கரும்பு,மற்றும் காய்கறி முதலான உணவுப் பொருள்களையும் பயிரிட்டார்கள்.முல்லை மலர் போன்ற முனை முறியா அரிசி சோறு,கோழி பொரியல் ஆகியவற்றை வாழை இலை,ஆம்பல் இலையில் வைத்து உண்டனர்.மற்றும் கஞ்சி,தேன்,பால்,நெய் போன்றவற்றுடன் சேர்த்து பலவகை பதார்த்தங்கள்,மாம்பழம்,பலாப்பழம்,வாழைப்பழம்,கரும்பு போன்றவற்றையும் உணவிற்கு பாவித்தனர்.உலகத்திலே எல்லாத் தேசங்களிலும் மக்கள் நாகரிகம் பெற்ற இடம் ஆற்றங்கரைகளிலும் ஏரிக் கரைகளிலுந்தான் என்று வரலாறு கூறுகிறது.இது உண்மையே.தமிழ்நாட்டிலும் மக்கள் நாகரிகம் பெற்று வளர்ந்த இடம் ஆற்றங்கரைகளும் ஏரிக்கரைகளுமே.ஆகவே,இந்த மருத நிலத்து மக்கள் கட்டிடங்களையும் மாளிகைகளையும் அரண்மனைகளையும் அமைத்துக் கொண்டு நாகரிகமாகவும் நன்றாகவும் வாழ்ந்தார்கள்.நெய்தல் நிலம்,ஒரு மணல் நிலம் ஆகையினால் இங்கே நெல்,கேழ்வரகு
முதலான தானியங்கள் விளையவில்லை.ஆகவே நெய்தல் நிலத்து மக்கள் கட்டுமரங்களிலும் படகுகளிலும் கடலில் வெகு தூரம் போய் வலைவீசி மீன் பிடித்தார்கள்.கடலில் சுறா,இறால்,திருக்கை முதலான மீன் வகைகள் அவர்களுக்கு உணவாக அங்கு கிடைத்தன.அவற்றைப் பிடித்துவந்து, தேவைக்கு அதிகமானவற்றை,அயல் ஊர்களில் பண்டமாற்று செய்து,அதற்குப் பதிலாக தானியங்களைப் பெற்றார்கள்.மேலும் இவர்கள் அகன்ற வாயை உடைய  ஜாடிகளில் வைக்கப்பட்டிருந்த அரிசி கஞ்சி அல்லது வடிசாறையும் கள்ளையும் குடித்தார்கள்.குறிஞ்சி நில குறவர்,மலைகளிலும் மலைச் சாரல்களிலும் நிலத்தை ஏரினால் உழாமல் மண்வெட்டியால் கொத்திக் கிளறி ஐவன நெல்லையும்,தினையையும் அரிசியையும்,மற்றும் பழங்கள்,காய்கறி பயிர் செய்தார்கள். மலையுச்சியிலுள்ள பாறைகளில் மலைத்தேன் கிடைத்தது.வள்ளிக் கிழங்கு பயிராயிற்று.பலா மரங்களிலே பலாப்பழங்கள் கிடைத்தன.மற்றும் ஆட்டுக்கடா இறைச்சியும் அரிசியில் அல்லது தினை யரிசியிலிருந்து வடிக்கப்பட்ட ஒரு வகை கள்ளையும் குடித்தனர்.அத்துடன் தேனை மூங்கிற் குழாய்களில் ஊற்றிப் பதப்படுத்தி ஒருவகை மதுவை உண்டாக்கினார்கள்.பாலை நில வேடுவர்,சிவப்பு அரிசியும் வேட்டையாடிய விலங்குகளையும் பொதுவாக உண்டனர். இவர்கள் சிலவேளை கடன்வாங்கி "கள்" குடித்தும் உள்ளனர் என்பதை சங்க பாடல் மூலம் அறிகிறோம்.
பகுதி:14 தொடரும்…............................................................................................................................... 





0 comments:

Post a Comment