தமிழரின் உணவு பழக்கங்கள்/பகுதி:18

               [பண்டைய சங்க தமிழரின் உணவு பழக்கங்கள் தொடர்கிறது]        
[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
கரிகால் வளவன் எனப்படும் சோழ மன்னனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்ட,248 அடிகளைக் கொண்ட, பொருநராற்றுப்படையில்,அடிகள்:102 – 108,எப்படி பண்டைய தமிழன் இறைச்சியை இரும்பு கம்பி ஒன்றில் கோத்து வாட்டினான் என்பதை  [சங்க கால கேபாப்?]சுட்டிக்காட்டுவதுடன் பலவகையான மாவுப் பலகாரங்களையும் மேலும் குறிப்பிடுகிறது. 
"பதன் அறிந்து
துராஅய் துற்றிய துருவை அம் புழுக்கின்
பராஅரை வேவை பருகு எனத்தண்டி
காழின் சுட்ட கோழ் ஊன் கொழுங்குறை
ஊழின் ஊழின் வாய் வெய்து ஒற்றி
அவை அவை முனிகுவம் எனினே சுவைய
வேறு பல் உருவின் விரகு தந்து இரீஇ."


அதாவது கயிறுபோல் திரிக்கப்பட்ட அருகம்புல்கட்டை தின்னகொடுத்து கொழுக்க வைக்கபட்ட செம்மறி ஆட்டின் பருத்த மேல்தொடை இறைச்சியையும், இரும்புக் கம்பியில் கோர்த்துச்சுடபட்ட இறைச்சிதுண்டுகளையும் (கேபாப்?) உண்னசொல்லி பலமுறை
வலியுறுத்திக்கொடுத்தான் கரிகாலன்.அதன் சூடு தாங்கமுடியாது வாயின் வலப்புறமும்,இடப்புறமும் மாற்றி,மாற்றி கறித்துண்டுகளை மாற்றி உண்டார்கள்.அதன்பின் சோற்றில் நிரம்ப கறித்துண்டுகளை போட்டு கொடுத்தான் கரிகாலன்.இனி வேண்டாம் என மறுக்கையில்,இனிமையுடைய வெவ்வேறு பலவடிவினையுடைய பணியாரம் கொண்டுவந்து அவற்றைத் தின்னும்படி எங்களையிருத்தினான் என்கிறது.அதுமட்டும் அல்ல,அது விருந்தோம்பும் முறையையும் அடிகள் 74-78 மூலம் விளக்குகிறது."கேளிர்போல கேள் கொளல் வேண்டி வேளாண் வாயில் வேட்பக் கூறி,கண்ணில் காண நண்ணுவழி இரீஈ பருகு அன்ன அருகா நோக்கமொடு" (பொருநராற்றுப்படை,74-78), அதாவது,விருந்தினரிடம் நண்பனைப்போல உறவு கொண்டு,இனிய சொற்களைக் கூறி,கண்ணில் காணும்படி தனக்கு நெருக்கமாக இருக்கச் செய்து,கன்று ஈன்ற பசு கன்றிடம் காட்டும் அன்பு போல விருந்தினரிடம் அன்பு காட்டி எலும்பே குளிரும்படியான அன்பால் நெகிழச் செய்யதான் என்கிறது இந்த அடிகள். 

மேலும் உபநிடதம்,"பிரபஞ்சத்தில் இருப்பது எல்லாம் உணவே.நாம் சிலவற்றை உண்ணுகிறோம்.சில எம்மை உண்ணுகின்றன" என்று அறிவுபூர்வமாக சொல்லுகிறது. அத்துடன் புலால் உண்ணுதலையும்,கள்[ஒரு வகை மது] உண்பதையும் சங்ககாலச் சான்றோர்கள் கூட கடிந்துரைக்கவில்லை.ஆனால்,தமிழர்கள் அல்லது திராவிடர்கள் மத்தியில் பிராமணிய இந்து மதம்,சமணம்,புத்த மதம் போன்றவை பெரும் பிரபல்யம் பெற்ற போது "கொல்லாமை" , "புலால் உண்ணாமை"  மற்றும் கள்ளுண்ணாமை அங்கு வரவேற்கப்பட்டது.

இன்றைய சமையலில் அவ்வளவு பிரபலமற்ற அல்லது முற்றாகவே வழக்கொழிந்த சங்க கால சமையல்களான-ஈயல்[சிறகு முளைத்த கறையான்],மாதுளை விதைகளை வெண்ணெய்யில் பொரித்தல் [வறுத்தல்] போன்றவற்றை இனி பார்ப்போம்.அகநானுறு 394,நற்றிணை 59,புறநானுறு 119 போன்ற இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க பாடல்கள் மிக தெளிவாக தமிழர்கள் "மோரில் ஈயலை ஊறப்போட்டு புளிக்கறி சமைப்பது"போன்ற பழந்தமிழர் சமையல் வழிமுறைகளை எடுத்து காட்டுகிறது.அது மட்டும் அல்ல கொங்குநாட்டு பழங்குடிகளான,நீலகிரி,கோவை,ஈரோடு,நாமக்கல்,சேலம் ஆகிய மாவட்டங்களில் வாழும் இருளர்கள்,மலசர்கள் இன்னும் ஈயலை உட் கொள்ளுகிறார்கள்.சிறகு முளைத்துப் பறக்கும் கறையான் அல்லது ஈசல்,பொதுவாக குறைந்த ஆயுட்காலத்தை கொண்டவை என நம்பப்படுகிறது.புற்றில் இருந்து வெளிவருகிற ஈசல்களில் பெரும்பாலானவை பறவைகள்,தவளைகள்,பல்லி,ஓணான்,உடும்பு
போன்றவற்றுக்கு இரையாகிவிடுகின்றன.எஞ்சியவை இறகுகள் உதிர்ந்து கீழே விழுந்ததும்,ஜோடி ஜோடியாக ஈர மண்ணைத் துளைத்துக்கொண்டு உள்ளே புகுகின்றன.இப்படி இறகு உதிர்ந்து விழுகிற ஈசல்களைப் பார்த்துத்தான்,அவற்றுக்கு அற்ப ஆயுசு என்ற தவறான கருத்து பரவியிருக்கலாம்?உண்மையில்,இவ்வாறு மண்ணுக்குள் புகுந்த ஈசல்கள் புதிய கறையான் காலனியை உருவாக்குகின்றன என்பதே உண்மை.மழை பெய்து முடித்த மறுநாள் காலை பொதுவாக பெருவாரியான ஈசல்கள் கூட்டமாக மொய்த்துக் கொண்டிருக்கும்.அவ்வேளையில் அதை இந்த மலை வாழ் பழங்குடியினர் பிடிப்பார்கள்.இந்த ஈசல்களை பகலில் காயவைத்து,பின் வேறு சேர்மானங்களுடன்[கடலை மற்றும் உப்பு போன்றவற்றுடன்] வறுத்தும் அல்லது அதனுடன் பச்சரிசி,வெல்லம் போட்டு சமைத்தும் உண்பார்கள்.இனி அகநானுறை[394] விரிவாகப் பார்ப்போம்.

 "சிறு தலைத் துருவின் பழுப்பு உறு விளைதயிர்,
இதைப் புன வரகின் அவைப்பு மாண் அரிசியொடு,
கார் வாய்த்து ஒழிந்த ஈர் வாய்ப் புற்றத்து
ஈயல் பெய்து அட்ட இன் புளி வெஞ் சோறு
சேதான் வெண்ணெய் வெம் புறத்து உருக,
இளையர் அருந்த, பின்றை, நீயும்"-அகநானூறு - 394.

சிறிய தலையையுடைய செம்மறி ஆட்டினது பழுப்பு நிறம் போன்ற முற்றிய தயிரிலே,கொல்லையில் விளைந்த வரகின் குற்றிய அரிசியோடு,கார் காலத்து மழையில் நனைந்து ஈரமான வாயிலையுடைய புற்றிலிருந்து வெளிப்படுகின்ற ஈயலையும் சேர்த்துச் சமைத்த இனிதான சூடான புளியஞ்சோற்றினைப்,பசுவின் வெண்ணெயானது வெப்பம் காரணமாக உருகிக்கொண்டிருக்க,உன் ஏவலாளர் அருந்துவர் என்கிறது.

"சேதா நறுமோர் வெண்ணெயின் மாதுளத்து
உருப்புற பசுங்காய்ப் போழொடு கறி கலந்து
கஞ்சக நறுமுறி அளைஇ பைந்துணர்
நெடுமரக் கொக்கின் நறுவடி விதிர்த்த
தகைமாண் காடியின் வகைபடப் பெறுகுவிர்"-பெரும்பாணாற்றுப்படை(306-310)

அது போலவே,மாதுளம் பிஞ்சைப் பிளந்து,மிளகுப் பொடியும்,கறிவேப்பிலையின் நல்ல இலையையும் கலந்து நல்ல மோரிலிருந்து எடுத்த வெண்ணெயிலே வேகவைத்து எடுத்த பொரியலையும்,மாங்காய் ஊறுகாயுடன் உண்டு மகிழலாம் என்கிறது.
பகுதி :19 தொடரும்........                                                                           

0 comments:

Post a Comment