"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]/"பகுதி:11


ஐவகை நிலம் 
கால்நடை மந்தை மேய்ப்பு கொண்ட ஒரு பண்பாடு புதிய கற்காலத்தில் [Neolithic] தென் இந்தியாவில் கிறிஸ்துக்கு முன் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்தன.கிறிஸ்துக்கு முன்,முதல் ஆயிரம் ஆண்டின் நடுப்பகுதியில், அங்கு மிகவும் நன்கு வளர்ந்த நாகரிகம் வெளிப்பட்டது.இது ஆரியரின் இந்து மதத்திற்கு முற்பட்ட சிவ பக்தர்களைக் கொண்ட[Saivaites] ஒரு பண்பாடாகும். இவை பற்றிய சில முன்னைய விவரங்களை,நாம் தமிழ் இலக்கண நூல் தொல்காப்பியத்திலும், பத்துப்பாட்டு,எடுத்தொகை போன்ற சங்க இலக்கியத்திலும், மற்றும் திருக்குறளிலும் காணலாம்.இவை எல்லாம் கிறிஸ்துக்கு முற்பட்டவையாகும். இன்று எமக்கு கிடைத்த நூல்களில் மிகவும் தொன்மையான பண்டைய நூலான தொல்காப்பியத்திலும், சுமேரியர்கள் போல,பல தெய்வங்கள் அங்கீகாரப்படுத்தப்பட்டுள்ளதை காண்கிறோம்.ஓர் இனத்தின் வாழ்க்கைமுறையும், நம்பிக்கைகளும்,குண நலன்களும், பண்பாட்டுக்  கூறுகளும் அந்த இனம் சார்ந்திடும் நிலத்தன்மை,தட்பவெட்ப நிலை ஆகியவற்றின் பின்னணியில்தான் அமையும்" என குரோஸ் ஹோட்ஜ் (Grose Hodge) எனும் நிலவியல் அறிஞர் குறிப்பிடுவார்.இக்கூற்று பண்டைத் தமிழர்களுக்கும் முற்றிலும் பொருந்தும்.ஐந்து வகை நிலப்பாகு பாட்டுடன் வாழ்ந்த நம் தமிழ் மக்களின் வாழ்க்கை, அவ்வாறே மாயோன் [திருமால்], சேயோன்[முருகன்], வேந்தன் [இந்திரன்],வருணன், கொற்றவை ஆகிய தெய்வங்களை கொண்ட ஒரு நிலப்பாகுபாடாக காணப்பட்டது.என்றாலும் பிற்காலச் சைவத்தின் பரம்பொருளாகிய சிவனைப் பற்றிய குறிப்போ அல்லது அவருக்கான நிலப்பாகுபாடோ அங்கு காணப்படவில்லை. இது எமக்கு ஆச்சரியமாக உள்ளது?. எது எப்படி யாயினும், சிவனைப் பற்றிய குறிப்புகளை தொல்காப்பியத்துக்குப் பிந்திய கடைச்சங்க இலக்கியங்களில்

கொற்றவை 
காணக்கூடியதாக இருக்கிறது.இங்கு சிவனை தலைமையான கடவுளாகவும் முருகனை மக்களால் கொண்டாட்டப்படும் கடவுளாகும் காண்கிறோம்.அது மட்டும் அல்ல,முருகனின் தலைமை பணி வேட்டையாடுதலும் தேன் சேகரிப்பும் ஆகும். அப்படியே மாயோனின் பணி கால்நடை வளர்ப்பும் பால் சம்பந்தமான பொருட்களுடன் கையாளுவதும் ஆகும் எனவும் அறிகிறோம். ஆகவே சங்கத் தமிழர்களின் வாழ்விலும் அவர்களின் மூதாதையர் சுமேரியன் போல, இயற்கையுடன் அமைந்த பல தெய்வ வழிபாட்டை காண்கிறோம்.இவை எந்த எந்த வரத்தை தெய்வங்களிடம் இருந்து கேட்கிறோம் என்பதை பொறுத்து இருந்தது. உதாரணமாக போரில் வெற்றியடைய கொற்றவையும் கால்நடை  நிறைய பால் தர திருமாலையும் வழிபட்டனர்.இப்படித்தான் பல தெய்வங்கள் பண்டைய தமிழர் நாட்டில் தோன்றின.மேலும்,கொற்றவை வழிபாடு பற்றிய விரிவான விளக்கங்கள் சிலப்பதிகாரத்து வேட்டுவ வரியுள் தான் முதன்முதலில் பதிவாகி உள்ளன.ஆறலைக் கள்வர்கள் என்று சுட்டப்படும் எயினர்கள் ஆநிரை கவர்ந்துவரக் கொற்றவையை வழி பட்டதாகவும் ஆநிரை கவர்தல் போரில் எயினர்க்கு வெற்றி தருபவள் கொற்றவை என்ற குறிப்பும் அங்கு காணப்படுகிறது.உதாரணமாக, சிலப்பதிகாரத்தில்,இரண்டாவது மதுரைக்காண்டத்தில்,வேட்டுவ வரியில்,

"கலையமர் செல்வி கடனுணின் அல்லது
சிலையமர் வென்றி கொடுப்போ ளல்லள்" (வேட்டுவவரி,வரி 16-17)

"புள்ளும் வழிப்படரப் புல்லார் நிரை 
கருதிப் போகுங் காலைக்
கொள்ளும் கொடியெடுத்துக் கொற்றவையும் 
கொடுமரமுன் செல்லும் போலும்" (வேட்டுவவரி,வேறு,பாடல்,13)

காவல் தெய்வம்
மேலே காட்டப்பட்ட முதல் மேற்கோளில்,கொற்றவைக்குச் செய்யவேண்டிய நேர்த்திக் கடன்களைச் செலுத்தவில்லை யென்றால் அவள் உங்கள் வில்லுக்கு வெற்றியைத் தரமாட்டாள் என்றும் இரண்டாம் மேற்கோளில்,வீரர்கள் கையில் வில்லை ஏந்தி,பறவைகள் தம்மைத் தொடர்ந்துவர, பகைவரது ஆநிரையைக் கவரப் போகும்போது,தான் கைக்கொண்ட சிங்கக் கொடியினை எடுத்து உயர்த்திக் கொற்றவையும் அவன் வில்லின் முன்னே செல்வாள் போலும் என்று கூறுகிறது.

ஆரம்பத்தில் முருகன் உருவமில்லாத மலை கடவுளாக இருந்ததுடன் அவரை ஆவியாகவே/ சத்தியாகவே வழிபட்டார்கள்.பின் மரத்திலும் கல்லிலும், இறுதியாக மனித வடிவத்திலும் வழிபட்டார்கள்.சிந்துவெளி நாகரிகத்தில்,குறிப்பாக ஹரப்பா,மொகெஞ்சதாரோ நகரங்களில் இவர் 5000 வருடங்களுக்கு முன்பே "ஆமுவான்"["Ahmuvan"] என்ற மரக் கடவுளாக வழிபடப்பட்டுள்ளார்.அது மட்டும் அல்ல சிவனை "பசுபதி"யாகவும் அங்கு காண்கிறோம்.பசு=உயிரினங்கள் + பதி=தலைவன் = பசுபதி. அப்படியே பெரும் தாய் தெய்வத்தையும் அங்கு காண்கிறோம்.மேலும் பண்டைய தமிழரிடம் காவல் தெய்வங்களையும் காண்கிறோம்.உதாரணமாக அமைதியான அல்லது சாதுவான தெய்வமாக மாரி அம்மனையும் போர் தெய்வமாக ஐயனார் அல்லது கருப்பசாமியையும் காண்கிறோம்.பொதுவாக,கருப்பசாமி நீதிக்கான தெய்வமாகவும் ஐயனார் தமது கிராமத்தின் பாதுகாப்பு தெய்வமாகவும் வழிபட்டார்கள். தமிழில் மாரி என்பது மழையை குறிக்கிறது. அது போல அம்மன் என்பது தாயை குறிக்கிறது.என்றாலும் இங்கு தாய் பண்பை அல்லது இயல்பையே அது சுட்டிக்காட்டுகிறது எனலாம்.மேலும் பொதுவாக  "மழை", "கருவுறு தன்மை" ஆகிய செழிப்பு வேண்டியும் நோயை குணப்படுத்தவும் அவளை வழி
"ஆமுவான்"
பட்டார்கள்.பண்டைய தமிழர்கள் மத்தியில் நிலவிய தாய்த் தெய்வ வழிபாட்டு மரபு,அங்கு பெண்மைக்கு மதிப்புக்கொடுத்து போற்றிப் பாராட்டப்பட்டதை எடுத்துக்காட்டுகிறது.உதாரணமாக,சூலி,கொற்றி அல்லது கொற்றவை என்ற மாற்று பெயர்களையும் கொண்ட செல்வி என்ற தாய்த் தெய்வம் அல்லது பூர்வீகத் தாய்-காடுறை தெய்வமாக,மலையுறை தெய்வமாக,கடல் உறை தெய்வமாக,மொத்தத்தில் இயற்கை அன்னையாக,தொன்ம நாயகியாக,சங்க இலக்கியத்தில்-அகம் 345,370,குறுந்தொகை 218,கலித்தொகை 89 போன்ற பல பாடல்களில் காணப்படுகிறார்.மேலும் சங்க கால மதுரை கோயில்கள் பெரும்பாலும் தாய்த் தெய்வத்தை கொண்டிருந்ததுடன் அங்கு பெண் மத குருமாரும் இருந்துள்ளனர்.ஆண் பெண் படைப்பின் அடிப்படை நோக்கம் உயிர் உற்பத்தி என்பதை அறிந்த ஆதி கால மனிதன்,அப்படி தாய்மை அடைந்த பெண்களை பெருமைபடுத்தி மதித்தான். அன்று ஒரு இனக் குழுவாக வாழ்ந்த மனிதனை தாய்மையடைந்த பெண் அரவணைத்து வழிநடத்தி சென்றாள்.இதனால் அவள் போற்றப்பட்டு அவளை தெய்வமாக வழிபட்டான்.இதுவே கால போக்கில் மழையை மாரி அம்மனாகவும் நீரை கடல் அம்மாவாகவும் [உதாரணமாக காவேரி அன்னை],சிறு தெய்வ வழிபாட்டிற்கு வழிசமைத்தது எனலாம். எனினும் இடைப்பட்ட நிலையில் தோன்றிய பெரும்பாணாற்றுப்படையில் முருகனின் தாயாகவும்,பிந்திய இலக்கியமான திரு முருகாற்றுப் படையில், முருகனின் தாயாகவும் சிவனின் மனைவியாகவும் செல்வி என்னும் தொன்மம் படிமலர்ச்சி அடைந்துள்ளது. இது படிப்படியாக தந்தை வழி சமுகம் ஆரியர் வருகைக்கு பின் தோன்றியதை எடுத்து காட்டுகிறது. இதை மேலும் உறுதிப்படுத்துவது போல அங்கு சிவன்-பார்வதிக்கு எந்த மகளைப் பற்றிய செய்தியும் இல்லை. ஆனால் முருகனுக்கு வள்ளி தெய்வானை,பெருமாளுக்கு பூதேவி,சீதேவி என்று இரு மனைவிகளை ஏற்படுத்தி ஆணாதிக்க சிந்தனைக்கு மேலும் வலுவூட்டினான்.தொல்காப்பியர் காலம் போலவே சங்க காலத்தில் தமிழ் மக்களிடையே வேரூன்றி இருந்த வழிபாடு நடுகல் வணக்கமாகும்.இந்த பண்பாடு அதிகமாக  கி பி பதினோராம் நூற்றாண்டு வரை தொடர்ந்தது. போரில் துணிவு காட்டி வீரச் சாவு அடைந்த போர் வீரனின் நினைவாக நடுகல் எழுப்பப்பட்டன.இந்த வீரச் சாவு அடைந்த தலைவர்களை மற்றும் தியாகிகளை சங்க பாட்பால்கள் போற்றுகின்றன.உதாரணமாக மறக்குடி பிறந்த மக்கள், விழுப்புண்பட்டு வீழ்ந்த வீரனது பெயரும் பீடும்[பெருமையும் வலிமையையும்] எழுதி நட்ட கல்லைக் கடவுளாகக் கருதி வழிபடுதலன்றி நெல் சொரிந்து வழிபடும் தெய்வங்கள் வேறு இல்லை என்று புறம் 335 கூறுகிறது.

"ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு எறிந்து வீழ்ந்தெனக்
கல்லே பரவின் அல்லது
நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே."--புறநானூறு 335


நடுகல்
சங்க காலத்தில் தமிழர் சமயத்தில் கடைப்பிடிக்கப்பட்ட இன்னும் ஒரு சிறப்பியல்பு[அம்சம்] வெறியாட்டம் ஆகும். மனிதர் மேல் தெய்வம் ஏறி வருவதுண்டு என்ற நம்பிக்கையில் இருந்து உருவானதே இதுவாகும். தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே இந்த வெறியாட்டம் வழக்கில் இருந்துள்ளது.உதாரணமாக "வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன் வெறியாட்டு அயர்ந்த காந்தளும்" என தொல்காப்பியம்:பொருளதிகாரம்: பாடல் 60 கூறுகிறது.அதாவது ஆநிரைகளை மீட்க வந்த வீரர்களிடம் வெறியின் இயல்பறிந்த வலிமையான நுனியுள்ள வேலேந்திய வேலன் வெறியாட்டு ஆடி அதனால் அவனணிந்த காந்தள் மலர் மாலை கசங்கியது என்கிறது.பொதுவாக அவனுடைய உடம்பில் தெய்வ ஆற்றல் அல்லது மலையில் உறைந்த கடவுளான "முருகு" என்ற ஆவி வந்தபோது, அவன் ஆடினான். இன்னது நிகழும் என ஒன்றிரண்டு சொற்களால் பயனும் கூறினான். இந்த வெறியாட்டம் ஆண், பெண் இருபாலரும் ஆடினார். சங்க இலக்கியத்தில் காணப்படும்,வேலன் வெறியாடலின் மூலம் பெண்ணை அணங்கிய முருகனை ஆற்றுப் படுத்தும் சடங்கு, புராதன சமயம் சார்ந்தது ஆகும்.முருகு,பிற்காலத்தில் முருகன் எனக் உருவகஞ்செய்யப்பட்டார். சங்க காலத்தைப் பொற்காலம் என்று சொல்ல ஒரு காரணம் அங்கு மதச்சண்டைகளே இல்லை.அவன் வணக்கியது  திணை நிலங்கள்.அகம்-புறம் தான் அவனின் மதம்.உதாரணமாக,அகம் என்பதற்கு வீடு,உள்ளம்,மெய் என்ற அர்த்தங்களும் உண்டு. ஆகவே உள்ளத்தால்
லீலியோ கலிலி  வழக்கு 
ஒருத்தரை ஒருத்தர் விரும்பியவர்கள் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்வது அகம் என்பதுடன் அந்த குடும்பமே மெய்யும் ஆகிறது.‘உயர்திணை என்மனார் மக்கள் சுட்டே’ என்று தொல்காப்பியர் கூறுகிறார்.அதாவது எவன் மனிதன் என்று சுட்டிக்காட்டப் படுகின்றானோ அவன்தான் மனிதன் என்கிறார். உயர்வுக்கு எதிர்பதம் தாழ்வு. ‘தாழ்திணை’ என்றுதான் வைத்திருக்க வேண்டும். ஆனால் தொல்காப்பியர் அஃறிணை என்று வைத்தார்.உயர்வு அல்லாத மற்ற திணைகள் என்பது பொருள்.தாழ்ந்ததைக் கூட தாழ்ந்ததென சொல்லக்கூடாது என்ற தமிழ்ப் பாண்பாட்டின்,மதத்தின் விளைவு இதுவாகும். 
பண்டைய தமிழரின் கடவுளாரில் மிகவும் போற்றிப் பாராட்டி வணங்கிய தமிழரின் தெய்வமாக சேயோன்,முருகன் ஆதி காலம் தொடங்கி இருக்கிறார்.தமிழ் அகராதியில் சேய் =மகவு: சிவப்பு: இளமை என்று குறிக்கிறது.மேலும் புறநானுறு 56,முருகனை சேயோன் என்று அழைக்கிறது. இயற்கை வழிபாட்டின் படி,சேயோன் → முருகன் → குறிஞ்சிக் கடவுள் அல்லது குறிஞ்சி நிலத் தலைவன் ஆனான்!.ஆகவே,திருமால்/ முருகன் = இவர்கள் நிலத்தின் தலைமக்கள். இவர்கள் பூர்வகுடி-இயற்கை வடிவினர் ஆகும்?அது போல தொல்காப்பியர் குறிப்பிடும் மற்ற நிலத் தெய்வங்களும் [வேந்தன், வருணன், கொற்றவை]அந்த அந்த நிலங்களுக்குரிய வீரர் வீராங்கனை ஆக இருந்திருக்கலாம்?.என நாம் கருதலாம்.

லீலியோ கலிலி  வழக்கு
பிந்திய காலத்தில்  தான் சமயம் என்ற சொல் தமிழர்களிடம் பொதுவான வழக்காற்றில் வந்தது. அதுவரை அவர்களிடம் இருந்தது தர்மவழி அல்லது அறவழி மாத்திரமே.இது வன்முறையையோ அல்லது மற்றவர்களுக்கு தீங்கு இழைப்பதையோ போதிக்கவில்லை,இதனால்,இந்த அறவழி,மற்ற சில சமயத்தில் இருந்து வெளிப்படையாக, அப்பட்டமாக  மாறுபடுவதை காண்கிறோம். உதாரணமாக,சில மதம் தாம் அகிம்சையையே போதிப்பதாக கூறினாலும்,உண்மையில் தமது மதத்தை பரப்ப அதற்கு எதிர்மாறாக செயலாற்றுகிறார்கள். வேறு சில மதம்,வெளிப்படையாகவே தம் மதத்தை பின்பற்றாதவர்களை கொல்லலாம் என்கிறது.ஆனால் அறவழி அப்படி அல்ல.மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்கிறது. மேலும் அப்படியான எந்த தீங்கையோ வன்முறையையோ தம்மை பின்பற்றுபவர்களிடமோ அல்லது புற சமயத்தை பின்பற்றுபவர்களிடமோ அது அனுமதிக்கவில்லை. கத்தோலிக்க வரலாற்றில்,கலீலியோ கலிலி[Galileo Galilei]க்கு எதிரான வழக்கு விசாரணை மிக மோசமான மற்றும் இக்கட்டான தருணங்களாக கருதப்படுகிறது. நிக்கோலாஸ் கோப்பர்னிக்கசின் [Nicholas Copernicus] கோட்பாட்டிற்கு ஆதரவான கலீலியோவின் சூரிய மைய வானியல் கொள்கையும் [heliocentrism],அவர் அதற்கு ஆதரவாக முன்வைத்த வாதங்களும் அவரை  கத்தோலிக்கத்தின் திரிபுக் கொள்கை விசாரணையின் [‘இன்குயிசிஷனின்’/ Inquisition] கரங்களில் சிக்கவைத்தது. அவரின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டு போப் ஆண்டவரால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். ஆனால், இதற்கு எதிர்மாறான நிலையை 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட,சங்க இலக்கியத்தில் காண்கிறோம். அங்கு மக்கள் சடங்குகளுக்கு பின்னால் இருக்கும் காரணங்களை அல்லது தர்க்கங்களை கேள்வி கேட்க முடியும் என்பதை காண்கிறோம்.அது மட்டும் அல்ல அதை நையாண்டி செய்வதையும் காண்கிறோம்.அகநானூறு 22,குறுந்தொகை 263 -போன்ற கடவுளை ஏளனம், நையாண்டி செய்யும் கருத்துள்ள பல பாடல்கள் சங்க இலக்கியத்தில் பிரபலமாக,புகழ் பெற்றதாக இருகிறது.மேலும் இவை பண்டைய தமிழர் கலாச்சாரம்,பண்பாட்டு வளர்ச்சி பற்றிய ஆய்விற்கு மிகவும் முக்கியமாகிறது.அது மட்டும் அல்ல,இதனால்,அந்த காலத்தில் தமிழர் மத்தியில்,சமயச் சார்பற்ற,உலகியல் சார்ந்த சமுகம் இருந்ததாக ஊகிக்க முடிகிறது. மேலும் இது ஆரியரின் செல்வாக்கிற்கு உட்பட்ட பக்தி காலத்தில்[ கி.பி 700-இலிருந்து கி.பி 1200-வரையுள்ளகாலம்] கேள்விகள் ஒன்றும் இல்லாமல் கடவுளை நம்பியதற்கும் முரணாகும். அத்துடன் சங்க கால மக்கள் தெய்வத்துவம் அல்லது கடவுட்டன்மையை பற்றிய இரு மாறுபட்ட குணாதிசயங்களை அறிந்து இருந்தார்கள். ஒன்று அனைவற்றுக்கும் அப்பாற்பட்ட கடவுள்,மற்றது எல்லாவற்றையும் உள் இருந்து இயக்கும் இயவுள்[இய + உள்].`கட-வுள்’ அதாவது கடந்து செல் உன் உள்ளே அல்லது வெளி "கட" ந்தால் "உள்" அதாவது கடவுளைக்கோவிலுக்குச்சென்று தேடுவதைவிட,தன்னுள் தேடிக்கண்டு,தேறுவதே மெய்யறிவாகும் எனவும் கொள்ளளாம். 
[ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

பகுதி 12தொடரும் 


2 comments:

  1. உங்கள் தொடர் ஆக்கம் அருமையிலும் அருமை .தொடர்ந்து தாருங்கள். இதேபோன்று பிள்ளையார் வணக்கமும் தமிழர் மத்தியில் எப்படி ஊடுருவியது என்பதனை அறிய தாருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. கந்தையா தில்லைவிநாயகலிங்கம்Sunday, August 07, 2016

      கிருஸ்துக்குப் பின் 4 ஆம்- 5ஆம் நூற்றாண்டிலேயே தான்,குப்தா காலத்தில்,பிள்ளையார்.ஓர் அளவு அடையாளம் காணக்கூடிய அளவிற்கு வளர தொடங்கினார்.நாகை மாவட்டத்தில் இருக்கும் திருசெங்காட்டாங்குடி என்ற ஊரில் முன்பு வாழ்ந்த பல்லவ மன்னரின் படைத்தளபதியான பரஞ்சோதி[இவரே பிற்காலத்தில் சிறுத்தொண்டராவார் ],கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் ,வாதாபியில் போரில் வெற்றிப்பெற்றதன் நினைவாக அங்கிருந்து கணபதியை [பிள்ளையாரை] சோழநாட்டுக்கு எடுத்து வந்து, தமிழ் நாட்டிற்கு முறையாக அறிமுகபடுத்தப்பட்டார் என வரலாறு கூறுகிறது. எனவே,முறையான கணபதி வழிபாடு பல்லவர் காலத்தில் தான் ஏற்பட்டிருக்கிறது.

      ஆகவே,சங்ககாலத்தில் பிள்ளையாரே இல்லாத போது பிள்ளையார் சுழி மட்டும் வந்தது எப்படி என்று நீங்கள் கேட்கலாம்?சங்க காலத்திலும் அதற்கு பின்பும் கூட பனை ஓலையில் தான் எழுதினார்கள்.அப்படி பனை ஓலையில் ஒழுங்காக எழுத எழுத்தாணி கூராக இருக்கவேண்டும்.எனினும் கூராக இருக்கும் எழுத்தாணியைக் கொண்டு அதிகம் உலராத ஓலையில் எழுத முடியாது.அதனால் எழுதுவதற்கு முன் ஓலை பதமாக இருக்கிறதா என்பதை சோதித்துப் பார்க்க வேண்டிய கட்டாயம் இருந்தது.எனவே சும்மா வட்டமிட்டு சுழித்து பின் நீட்டி பார்த்து இருப்பார்கள் என நாம் இலகுவாக நம்பலாம்.அது சரியாக ஒழுங்காக அமையும் இடத்து ,அதன் பின் அதில் அதன் கீழ் எழுத தொடக்கி இருப்பார்கள்.நாளடைவில் அது ஒரு பழக்கமாக மாறியிருக்கலாம்.அந்த கிறுக்கலுக்கு,பின்னர் அறிமுகமாகிய பிள்ளையாரின் உருவத்தின் தாக்கத்தால்,பிள்ளையார் சுழி என்று பெயர் இட்டு இருக்கலாம் என்று நம்புகிறேன்.

      Delete