"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா?ராமனை தெய்வமாக்க வேண்டுமா?"[பகுதி :01]

தீபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்களை,புராணக் கதைகளின் வழியாகக் கூறுகின்றனர்.அதில் இரு கதைகள் முக்கியமானவை. முதலாவது இராமாயணம். இராமர்,இலங்கை அரசன் இராவணனை அழித்து விட்டு,தனது பதினான்கு ஆண்டுகள் வனவாசத்தையும் முடித்து விட்டு,மனைவி சீதையுடனும் சகோதரன் இலட்சுமணனுடனும் அயோத்தி திரும்பிய நாளை,அயோத்தி மக்கள் ஊரெங்கும் விளக்கேற்றிக் கொண்டாடி மகிழ்ந்தனர் என்றும் பின் இந்நாளே தீபாவளியாக கொண்டாடப் படுவதாக கூறுகின்றனர்.மகாவம்சத்திற்கு முன் இலங்கையை ஆண்ட மன்னர்களில்  இவன் நாலாவது ஆகும்.இராவணனுக்கு முன் இலங்கையை மனு,தாரக,பாலி [Manu,Tharaka,and Bali] ஆண்டார்கள்.மற்றது நரகாசுரன் என்ற அசுரன் கொல்லப்பட்ட நாள் ஆகும்.நரகாசுரன் பூமாதேவியின் பிள்ளை.காமரூப நாட்டின் மன்னன்.படைப்புக் கடவுளான பிரமாவை நோக்கி கடும் தவம் செய்து பல வரங்களைப் பெறுகிறான்.அதன் பின் தேவர்களை அவன் துன்புறுத்துகிறான்.துன்பத்தைப் பொறுக்க முடியாத தேவர்கள் வைகுண்டத்தில் திருமாலிடம் சென்று முறையிடுகிறார்கள்.திருமால் வழக்கம் போல் தேவர்களைக் காக்க திருவுள்ளம் கொள்கிறார்.நரகாசுரன் உடன் நடந்த சண்டையில் திருமால்[கிருஷ்ணர்] காயமடைந்து மயங்கடைந்தது போல நடித்தார்.தனது கணவரின் நிலை கண்டு கடும் கோபம் கொண்ட  அவரது மூன்றாவது மனைவி சத்யபாமா? நரகாசுரனை எதிர்த்து போர்செய்து அவனை அழித்தார்.நரகாசுரன் இறந்ததும் மக்கள் தீபமேற்றி அதனைக் கொண்டாடினார்கள்.அதுவே பின் தீபாவளியாக கொண்டாடப் படுவதாக நம்புகின்றனர்.இதில் ஒற்றுமை என்னவென்றால் ராவணன்,நரகாசுரன் இருவரையும் அசுரர்கள் என இந்த புராண கதைகளில் கூறப்பட்டுள்ளது. சுரர் என்றால் குடிப்பவர் அல்லது கடவுள் என்று பொருள்.அசுரர் என்றால் குடியாதவர் அல்லது கடவுள் அல்லாதவர்,அல்லது கடவுளின் எதிரி என்று பொருள்.ஆரியர் சோமபானம் குடித்ததாக இருக்கு வேதம் சொல்கிறது.சோமச் செடியை அவர்கள் தெய்வமாகமே கும்பிட்டார்கள். அசுரர்கள் பொதுவாகவே மேம்பட்ட,முற்போக்குக் கலாச்சாரத்தைக் கொண்டு இருந்தவர்களாகச் சித்தரிக்கப்பட்டுள்ளனர்.இந்தியாவிற்குள் நுழைந்த ஆரியர்கள்,அங்கு முன்பே சிந்து வெளி நாகரிகம் அமைத்துவாழ்ந்த பழங்குடியினரான திராவிடர்களை[தமிழர்களை] வென்று தெற்கிற்கு துரத்தினார்கள்.பின் அவர்களால் எழுதப்படட வேதம்,புராணங்கள் எல்லாம் இவர்களை அசுரர்களாக வர்ணித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும்
சோமபானம், சுரபானம் குடித்த ஆரியர் உயர்ந்தவர்களாகச் சித்தரிக்கப்பட்டார்கள் என்றும் அவற்றை அன்பு,அருள்,காருண்யம்,ஒழுக்கம் காரணமாக வெறுத்து ஒதுக்கியவர்கள் அசுரர்கள் என்று இழித்துரைக்கப் பட்டார்கள் என்றும் அறிகிறோம்.ஆகவே தீபாவளி என்ற பெயரில்,உண்மையில் ஒரு இறப்பை கொண்டாடுகிறார்கள்.அதுவும் ஒரு திராவிட[தமிழ்] அரசனின் மரணத்தை விழாவாக கொண்டாடுகிறார்கள்!ராமர் என்ற தனியொருவரை தீபத்துடனும் புத்தாடையுடனும் சிறந்த உணவுகளுடனும் கொண்டாடட்டும்.அதே போல கிருஷ்ணாவையும் கொண்டாடட்டும்.அதில் ஒருவருக்கும் ஆட்சேபம் இல்லை.ஆனால்,ஏன் ஒரு மரணம் கொண்டாடப் படவேண்டும்?.காலிஸ்தானார்கள் இந்திரா காந்தியின் படு கொலையை விழாவாக கொண்டாடினால்,அதற்கு நீங்கள் எவ்வாறு முகம் கொடுப்பீர்கள்?சீக்கியர்களுக்காக காலிஸ்தான் என்ற தனிநாடு கோரி,ஆயுதம் ஏந்திய தீவீரவாதிகள் அமிர்தசரஸ் பொற்கோயிலில் புகுந்துகொண்டனர்.பொற்கோயிலிலிருந்து அவர்களை அகற்ற இந்திரா காந்தியின் உத்தரவில் ராணுவம் எடுத்த நடவடிக்கையின் போது பொற்கோயில் சேதம் அடைந்தது.மற்றும் தீவீரவாதிகளும் யாத்ரிகர்களும் குருத்வாரா ஊழியர்களும் உட்பட 492 பேர் இறந்தனர்.இதனால் ராணுவத்தை ஏவிய நடவடிக்கைக்காக இந்திரா காந்தியை மன்னிக்க சீக்கியர்களில் பலர் தயாராக இல்லை.அவர்களுக்கு இந்திரா காந்தி ஒரு மோசமான பெண்.மறவர்களுக்கு அவள் ஒரு நல்ல பெண்.ஆகவே கொலை மற்றும் எதிர் கொலை போன்றவை ஒரு கொண்டாட்ட நிகழ்வாக மாறக்கூடாது.இது,இருதரப்பினர்களுக்கும் இடையில் அவர்களின் பகையான உறவை  ஞாபகப்படுத்தவே  உதவும்.

ராமர் ராவணனை கொல்வதை பற்றியும் கிருஷ்ணன் நரகாசுரனை கொல்வதை பற்றியும் புரிதல் வடக்கு தெற்கு இந்தியாவில் மாறுபட்டு காணப்படுகிறது.அது போல இலங்கையும் காணப்படுகிறது.தீபாவளி விழா தீபத்துடனும் புத்தாடையுடனும் வழிபாட்டுடனும் நின்றுவிட வில்லை.ராவணனின் கொடும்பாவி எரிப்பும் நடைபெறுகிறது.இது ஒரு கவலைக்குரிய நிகழ்வாக இருப்பதுடன்  குறிப்பாக கேள்வி ஒன்றையும் எழுப்புகிறது.சிலருக்கு உருவ பொம்மை எரித்தல் வெடி கொழுத்துதல் போன்றவைக்கு எதிரான காரணம் ஒரு சுற்றாடல் விடயமாக இருக்கலாம்.ஆனால் பலருக்கு இது வந்தேறு குடிகள்,பழங்குடி சமூகத்திற்கு எதிராக செய்த அட்டுழியங்களையும் மற்றும் கொலைகளையும் நினைவு படுத்தும் நிகழ்வாக இருக்கும்.சிந்து சமவெளி நாகரிகம் பொது யுகத்துக்கு முன் 3300–1500  வரையிலான காலகட்டத்தில் நகரமயமாகி உச்சத்தை எட்டியது.பொது யுகத்துக்கு முன் 1500 அளவில் கைபர் கனவாய் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்த ஆரியர்களின் படையெடுப்பால் இவர்கள் தெற்கிற்கு துரத்தப்படடார்கள்.அதுமட்டும் அல்ல அமைப்பு முறையான சாதி பாகுபாடு போன்றவை அங்கு நிறுவப்பட்டன.இவற்றை ரிக் வேதத்தில் தாராளமாக காணலாம்.இவைகளின் விளைவே வென்றவர்களால்,பழங்குடிகளை இழுவுபடுத்தி,எழுதப்பட இதிகாசம், புராணங்கள் ஆகும்.இதன் அடிப்படையிலேயே இந்த தீபாவளி கொண்டாடப்டுகிறது என்பது குறிப்பிடத் தக்கது.ஒரு தேசமோ ஒரு தேசத்தின் ஒரு பகுதியோ ராமரின் பிறந்த தினத்தையோ அல்லது முடிசூட்டு விழாவையோ கொண்டாடுவதில் ஒரு தவறும் இல்லை.ஆனால் ராவணன் உருவப் பொம்மை ஏன் எரிக்க வேண்டும்?திராவிடர்கள் ராவணனை தங்கள் பிரதிநிதியாக கருதுகிறார்கள்."செங் கயல்போல் கரு நெடுங் கண், தே மரு தாமரை உறையும்,நங்கை இவர் என நெருநல் நடந்தவரோ நாம்? என்ன" என்று ராமர் வர்ணிக்கும் ராவணனின் தங்கை சூர்ப்பனகையின் காதுகளையும்,மூக்கையும்,முலையையையும் ராமரின் ஏவல் மூலம்,இலட்சுமணன் அரிந்ததிற்கு எதிர் நடவடிக்கையாகவே சீதையை ராவணன் கவர்ந்தான் என நாம் கருதலாம்.மேலும் ராவணன் எந்த சந்தர்ப்பத்திலும்  சீதையை கெடுக்க வில்லை.சூர்ப்பனகையையும் சீதையையும் அவர்கள் கண்ணியம் மற்றும் சுய மரியாதை,சம உரிமை உள்ள பெண்ணாக பார்க்கிறார்கள்.ஏன் ராவணனை மட்டும் பூதாகரமாக சித்தரிக்க வேண்டும்?.தீய,கொடூரமான மனம் படைத்தவர்கள் மட்டும்தான்  மரணத்தை விழாவாக கொண்டாடுவார்கள்.ஒரு பல் கலாச்சார தேசம் ஒன்றில்,இறப்பை இன்றி பிறப்பை வழிபாடும் உரிமையை நாம் எல்லோரும் பாதுகாக்க வேண்டும்.நாம் படைப்பாற்றல் மற்றும் உற்பத்தித் திறன் போன்றவற்றை கொண்டாட்ட வேண்டும் ,அழிவை அல்ல.இந்த தீபாவளியில்,நாம் என்னத்தை கொண்டாடுகிறோம்?, நன்மையின் அல்லது தீமையின் வெற்றி என்று நாம் கூறும் போது நாம் என்னத்தை கருதுகிறோம்?அல்லது தங்கள் நாட்டையும் இறைமையையம் பாதுகாக்க,தங்கள் உயிரை தியாகம் செய்தவர்களின் மரணத்தை தான் நாம் கொண்டாடுகிறோமா? என்பதை நாம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். 

பொதுவாக புராண இலக்கியங்கள்,மேலாதிக்க வர்க்க மக்களால்,தங்கள் ஆதிக்கத்தை தக்கவைக்கவும்,அதே நேரம் வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாளத்தை இல்லாமல் ஒழிக்கவும் எழுதப் பட்டவை என்பது எமக்கு தெரியும்.ராவணன் திராவிடர்களின் தமிழரின் பிரதிநிதி என்ற கருத்து வலுப்பெற்று வருகிறது.ராமாயணத்தைப் பற்றி பலவிதமாக படிக்கிறார்கள்,கதாபாத்திரங்களின் தன்மையை பல தரப் பட்ட முறையில் புரிந்து கொள்கிறார்கள்.அப்படியே ராமரையும் ஆகும்.அப்படியே தர்மம் அதர்மம் போன்றவற்றின் கருத்தும் குழுக்களுக்கும் குழுக்களுக்கும் இடையில் வேறுபடுகின்றன.ஆகவே ராமரை வழிபட விரும்புபவர்களுக்கும் அந்த உரிமை உண்டு.அது போல,ராவணனை வழிபட விரும்புபவர்களுக்கும் அதே உரிமை உண்டு.

நரகாசுரன் என்ற ஓர் அசுரனைக் கிருஷ்ணன் கொன்றதற்காக மகிழ்ச்சி அடைதலைக் குறிப்பதற்காக வேறு சிலர் தீபாவளி பண்டிகை கொண்டாடுகிறார்கள்.ராவணன் போல நரகாசுரனும் திராவிடர்களின் அல்லது தமிழர்களின் பிரதிநிதியாகும்.அவன்  ஒரு மாவீரன். புராணங்களிலும்,இதிகாசங்களிலும் கூறப்படும் ஹிரண்யன்,ஹம்சன்,இடும்பன்,பகவன்,ஹிரன்யச்சதா,அன்டாகசுரர் உள்ளிட்ட பல அரக்கர்களையும் இப்படி இந்து தெய்வங்கள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சூழ்ச்சியாலும் தந்திரங்களாலும் யுத்த தர்மத்திற்கு எதிராக கொன்றுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.மீண்டும் கேட்க்கிறேன்,ஏன் மரணம் கொண்டாடப் படவேண்டும்?ராஜிவ் காந்தியின் படு கொலையை சிலர் விழாவாக கொண்டாடினால்,நீங்கள் எப்படி முகம் கொடுப்பீர்கள்?பலர்  இன்னும் இலங்கையின் பல மரணங்களுக்கு மற்றும் பேரழிவிற்கு இவரே காரணம் என இன்னும் நம்புகிறார்கள்.21 அக்டோபர் 1987,யாழ்பாண மருத்துவமனையில்,அதுவும் தீபாவளி அன்று 68 மருத்துவர்கள்,பணியாளர்கள்,அதிகாரிகள்,நோயாளிகள்  சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.இலங்கையில் இழப்புக்களை சந்தியாதவர்களுக்கு ராஜிவ்  காந்தி ஒரு நல்ல மனிதர்,ஆனால் மற்றவர்களுக்கு அவர் ஒரு கொடூர மனிதர்.இது அவர் அவர்களின் நிலையையும் புரிதலையும் பொறுத்தது.

ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
[பி கு :"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா?"என்ற  தீபத்தில் Friday, November 13, 2015 இல் வெளியிடப்பட்ட  எனது கட்டுரையை தொடர்ந்து,அதன் [http://www.ttamil.com/2015/11/13] விரிவாக இக்கட்டுரை எழுதப்பட்டு உள்ளது] 
பகுதி;02 தொடரும்...

1 comments:

  1. இராம-இராவண யுத்தம் ஏற்கனவே நடந்த ஒரு முள்ளிவாய்க்கால் போன்ற ஒரு இன அழிப்பே. அன்று ஒரு இராவணனோ அல்லது கூடவே சில வீரர்களோ மட்டும் கொ ல்லப்பட வில்லை . .மக்களும் அழிக்கப்படடார்கள்..இன்றய தலைவர் பிரபாகரன் தமிழருக்கு தலைவன் .ஆனால் இந்தியா/இலங்கை அரசு இன்றய மொழியில் [அரக்கன் என்று கூறாது] பயங்கர வாதி என்று கூறுகிறது. எதிர்காலத்தில் ஒரு இந்திய சுவாமிஜி இப்பயங்க்ர வாதி இறந்த தினத்தினை ஒரு தீபாவளி போல் கொண்டாட வேண்டிக்கொண்டால் அதையும் இத் தமிழர் கொண்டாட தயங்க மாடடார்கள்

    ReplyDelete