நல்லாட்சி அரசாங்கமும் நெருக்குவாரங்களால் “நடுங்கும”; தமிழர்களும்….

மகிந்தா என்னும் அரக்கனை அகற்றிவிட்டு மைத்திரி என்னும் அன்பு நிறைந்தவரை ஆட்சிக்கு கொண்டு வந்து விட்டோம் என்று வடக்கிலும் தெற்கிலும் உள்ள தமிழ்த் தலைவர்கள் “தம்பட்டம் அடித்தார்கள். இந்த தலைவர்களில் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தொடக்கம் தற்போது நல்லிணக்க அமைச்சராக விளங்கும் மனோ கணேசன் வரையும் பலர் உள்ளார்கள். மைத்திரி என்னும் ஜனாதிபதி வடக்கு மாகாணத்திற்கு வருகை தந்தபோது, எமது தமிழ்த் தலைவர்களும் அவர் அருகே சென்று செங்கம்பள வரவேற்பில் கலந்து கொள்கின்றார்கள்.
இவ்வாறு நல்லாட்சி நடக்கின்றது என்று கூறி எமது மக்களை நம்ப வைத்தவர்கள் அவர்கள் ஏமாற்றப்பட்டதாக தாங்களாகவே சிந்தித்து கருத்துக்களை பகிர முற்படுகின்றபோது, அவர்களது வார்த்தைகளை அக்கறையுடன் கேட்பதற்கு தலைவர்கள் தயாராக இல்லை. இன்னும் அவகாசம் கொடுங்கள் என்று மக்களிடம் கேட்கின்றார்கள். ஏனென்றால் அவர்களால் கேட்க மட்டுமே முடியும். ஏன் வாக்குகளைக் கூட அவர்கள் கேட்டுத்தானே பெற்றுக்கொண்டார்கள்.
நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழ் பேசும் அமைச்சரான திரு மனோ கணேசன் நல்லிணக்கம் தொடர்பான விவகாரங்களுக்கும் பொறுப்பாக உள்ளார். அவரால் கூட எதனையும் செய்ய முடியாமலும் எதனையும் கண்களால் பார்க்க முடியாமலும் அவரது அமைச்சர் பதவியின் பதவிகள் தொடர்கின்றன. கண்களை அலங்கரிக்க கறுப்புக் கண்ணாடிகள் இருக்கும் போது வெளியே நடக்கும் அநீதிகள் அவருக்கு தெரியாமல் போகலாம் என்ற நம்பிக்கை அவருக்கு உள்ளது போலும்.

இலங்கையில் வடக்கிலும் கிழக்கிலும் வாழும் தமிழ் மக்களுக்கு பல பிரச்சனைக்ள உள்ளன. அவர்கள் தினமும் எதிர்நோக்கும் பல பிரச்சனைகள் உள்ளன. ஆண்டுகள் பலவாய் தொடரும் வேறு பாரிய பிரச்சனைகளும் உள்ளன, எம் மக்களுக்கு. காணமல்போனவர்கள் மற்றும் அரசியல் கைதிகள் போன்ற விடயங்கள் எமது மக்களை சாதாரண வாழ்வை அவர்கள் தொட முடியாதவர்களாக மாற்றி விட்டது. உண்பதும் உறங்குவதும் அவர்களில் பலருக்கு மறந்து போய்விட்ட ஒன்றாகவே உள்ளன. தமது உறவுகளை இழந்தவர்கள் அல்லது பறிகொடுத்தவர்கள் என அவர்கள் தூக்கம் இன்றி துன்பத்தை எண்ணியவர்களாகவே இங்கு வாழ்கின்றனர். எமது மக்களை வாட்டும் பிரச்சனைகளில் முக்கிய பிரச்சனையாக உள்ளது காணிப்பிரச்சனை ஆகும். ஆனால் எமது மக்களின் வலிகள் தெரியாமல் தென்னிலங்கை அரசியல்வாதிகள் பாராளுமன்றத்திலும் வெளியிலும் எமது மக்களின் கோரிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்த வண்ணமே உள்ளனர். முக்கியமாக தங்கள் இருப்பிடங்களுக்கு செல்லும் வகையில் தமக்குச் சொந்தமான காணிகளை விடுவியுங்கள் என்று அவர்கள் வேண்டுகின்றபோது அந்த காணிகளை இராணுவத்தின்ருக்கு மட்டுமே சொந்தம் என்று விதண்டாவாதம் பேசுகின்றார்கள்.
எமது மக்களின் காணிகள் அவர்களுக்கே மீண்டும் வழங்கப்பட வேண்டும் என்று கோசமிடும் அல்லது பாராளுமன்றத்தில் பேசும் உறுப்பினர்களைப் பார்த்து நியாயமற்ற வகையில் பேசி வருகின்றார்கள் தென்னிலங்கையின் பேரினவாதப் போக்கு கொண்ட அரசியல்வாதிகள். அண்மையில் கூட மகிந்தா ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர் ஒரு பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது வடக்கிலும் கிழக்கிலும் இராணுவ முகாம்கள் அமைந்துள்ள காணிகள் இராணுவத்தினருக்கே சொந்தம் என்று வாதிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில் பிரபாகரன் காலத்தில் அவரால் பிடிக்கப்பட்டிருந்த காணிகளை இராணுவத்தினர் போர் செய்து மீண்டும் கைப்பற்றியுள்ளார்கள். பிரபாகரனின் பிடியிலிருந்த காணிகளை தமக்குத் தாருங்கள் என்று அப்போது கேட்காதவர்கள் இப்போது ஏன் கேட்கின்றார்கள் என்று விதண்டாவாம் பேசுகின்றார்கள் எமது மக்களின் வலிகள் தெரியாத ஒரு வகை அரசியல்வாதிகள்.

இவ்வாறு நல்லாட்சி அரசாங்கத்தில் எமது தமிழ் மக்கள் நடுங்கும் நிலையில் வாழ்ந்து வருவது நன்கு தெரிந்திருந்தும் அவர்களின் பிரச்சனைகளை செவிமடுத்துக் கேட்பதற்கு கூட தயாராக இல்லாத அரசியல்வாதிகளா நாட்டு மக்களுக்கு என்ன பயன் என்றே நாம் கேட்கின்றோம்.
-நன்றி:உதயன் 

0 comments:

Post a Comment