தொடரி திரைப்படம் - ஒரு நோக்கல் ;


தொடரி, தனுஷ்- கீர்த்தி நடிப்பில் வெளியாகியுள்ள, ஓர் ஓடும் தொடரியில்  எடுக்கப்படட ஒரு திரைப்படம்.

முதலில், train என்ற ஆங்கில வார்த்தைக்கு அழகான ஒரு சின்ன வார்த்தையை தமிழருக்குப் பரிச்சயம் ஆக்கியது பாராட்டப்படக்கூடியது. புகையிரத வண்டி, தொடர் வண்டி, தொடருந்து என்று சொல்வதிலும் பார்க்க தொடரி என்பது இலகுவாக உள்ளது. சினிமாவில் வந்ததால் இந்தச் சொல் நிச்சயம் நிலைத்து நிற்கும்.

தமிழ் படத்துக்கு தமிழில் பெயர் வைத்தால் வரி இல்லை என்று மக்கள் வரிப்பணத்தை (நலிவுற்றிக்கும் படத்  தயாரிப்பாளருக்கு!)  விட்டுக் கொடுத்ததால் கிடைத்த ஒரு பலன் இதுவென்றும் எடுத்துக் கொள்ளலாம். ஆங்கிலப் (பெயர் கொண்ட) படங்களுக்கு மேலதிக வரி என்று அரசு அறிவித்தாலும் இதே பலன் கிடைத்து, மக்கள் வரிப்பணமும் மீதமாகி இருக்கும்.

சரி, படத்தைப் பற்றி சொல்லவேண்டும் என்றால் முன்பாதி நகைச்சுவை, காதல் என்று மெதுவாக ஓடும் தொடரியில் கதை நகர்கிறது. பின்பாதி, சாரதி இன்றிக் கட்டுப்பாடடை இழந்து 150-160 கி.மீ. அசுர வேகத்தில் பாய்ந்துகொண்டிருக்கும் தொடரியை நிற்பாட்டுவதற்குச் செய்யும் முயற்ச்சிகள், தடைகள், வதந்திகள், தோல்விகள், அசட்டுத்தனங்கள், காதல் டூயட்டுகள், சண்டைகள்  என்று மிகவும் பரபரப்பாக எடுக்கப்பட்டிருப்பது, எதோ ஒரு தரமான ஆங்கிலப் படம் ஒன்றைப் பார்ப்பது போன்ற உணர்வைத் தந்து, அடுத்தது என்ன நடக்குமோ என்ற ஆவலுடன் விழித்து இருக்க வைக்கின்றது.
தமிழ் படங்களின் வழக்கமான formula வுடன் (அதாவது, படியாத ஊர்சுற்றி, ஒரு படித்த, பெரிய இடத்து அழகிய பெண்ணைக் காதலித்து வெற்றிகொள்வது என்று )  எடுக்கப்படாவிட்டால் அவை தோலிவியில்தான் முடியும். இப்படத்தில், கதாநாயகன் கான்டீன் சேவகன். ஒரு பிரபல நடிகையின் அறைக்கு உணவு பரிமாறச் செல்கின்றான். அங்கு அந்தப் பெண்ணைக் கண்டதும் காதல் கொள்கின்றான். மன்னிக்கவும்; வழக்கமான கதைபோல்  நடிகையைத்தான் என்று எண்ணவேண்டாம்!  அவன் காதல் கொண்டது நடிகையின் மேக்கப் போட உதவி செய்யும் பெண்ணையேதான்!

கதையில் அரசியல் வாதிகள், பட்டி மன்றங்கள், நேர்காணல்கள், போலீஸ் படையினர், தீயணைப்புப் படையினர், கொள்ளைக்காரர்கள், வில்லன்கள், தொலைக்காடசி, வானொலிச்செய்தியாளர்கள் என்று பலரும் வருகின்றனர்.

இப்படத்தில்,

தொட்டவை:
*அற்புதமான, விறுவிறுப்பான ஓடும் தொடரின் படப்பிடிப்பு.
* பழைய இரும்புப் பாலத்தினூடே செல்லும்போது பாலம் உடைந்து கொண்டிருப்பதாக காட்டிய கணினி ஜாலம்.
* வதந்திகள் எப்படி எல்லாம் உருவாகும் என்று காட்டிய விதம்.
* அழகான இயற்கை சுற்றாடல்களினூடே படப்பிடிப்பு.
* 'போன உசுரு வந்திருச்சு ' பாடல் வரிகளுக்கு, கீர்த்தி காட்டிய, இன்னும் நெஞ்சுக்குள் பதிந்திருக்கும் முகபாவம்.

விட்டவை:
* பயங்கரமாக ஓடும் தொடரியின் மேலே எந்தவித பயமும் இல்லாது டூயட் பாடுவது.
* இவர்களும், திருடர்கள், வில்லன்களும் மேலே ஏறி, ஏறி இறங்குகின்றார்களாம்; பாதுகாப்புப் படையினரால் மட்டும் ஏனாம் முடியவில்லை.
* ஓடும் தொடரியின் எஞ்சினைப் பெட்டியிலிருந்து அதன் இழுவைக் கொழுக்கியில் இருந்து தனுஷ் கழட்டுகிறாராம். இது எதோ என்னை நானே தூக்கி என் தோளில் மேல் வைப்பது போல இருக்கின்றதே!
* பெரிய ஒரு நடிகையை கீர்த்தி அருகில் வைத்துக்கொண்டு, சினிமாவில் பாட, வைரமுத்துவை காண தனுஷை நாடுவது.

தொடரியை நிறுத்த இப்படிச் செய்திருக்கலாமோ? அதன் முன்னால் தூரத்தில் இரண்டு  இணைக்கப்பட்ட எஞ்சின்களை ஓடவைத்து, கொஞ்சம் கொஞ்சமாக தொடரியின் சமீபத்திற்கு கொண்டுவந்து, சேர்ந்து ஓடி, சிறிது, சிறிதாக வேகத்தைக் குறைத்துக்கொண்டு வந்தால், அதன் எதிர் விசை காரணமாக அதை நிலைக்கு கொண்டு வரலாம்.  சிலவேளை தடம் பிரழுமோ அவர்களுக்குத்தான் தெரியும்.

ஆங்கிலப் படங்களில் அளவுக்கு மிஞ்சிய நம்ப முடியாத பல விடயங்களைக் காட்டும்போது அவற்றைக் கை தட்டிப் பாராட்டி ரசிப்பது என்பது உண்மை. ஆதலால், இந்தப் படத்திற்கு பல விமர்சகர்கள் மிகவும் குறைந்த புள்ளிகளே கொடுத்திருந்தாலும்,  என் பார்வையில்  தொடரி  தமிழ் திரை உலகில் ஒரு வித்தியாசமான முயற்சி என்றுதான் கூறுவேன்.

நோக்கலும் ஆக்கலும் :செல்வதுரை சந்திரகாசன் 
சினிமா விமர்சனம் 

0 comments:

Post a Comment