''மே தினம்/தொழிலாளர் தினம்"

Image result for haymarket martyrs' monument"பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர் 
அலகுடை நீழ லவர்."[குறள் 1034 ]


பல அரசுகளின் நிழல்களைத் தமது குடைநிழலின் கீழ் கொண்டு வரும் பெரும் வலிமை பெற்றவர்கள் உழவர்கள் என்கிறார் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வள்ளுவர்.அந்த காலத்தில் உவுத் தொழிலே முக்கியமான முதன்மையான தொழில் என்பது குறிப்பிடத் தக்கது.உதாரணமாக, உலகின் முதலாவது நாகரிகம் என கருதப் படும் சுமேரிய நாகரிகம் உருப்பெறுவதற்கு உழவர் தொழிலாளரே முக்கிய காரணமானவர்கள் ஆகும்.இவர்கள் கால்நடை வளர்ப்பிலும் வயல்வெளியில் விவசாயத்திலும் ஈடுபட்டு,சுமேரிய சமூகத்திற்கு உணவு வழங்கியதாலேயே,அந்த சமுதாயம் ஓரிடத்தில் தங்கி நாகரிகம் அடைந்தார்கள்.அவர்கள் இல்லை என்றால் அந்த பெரிய நாகரிகம் வாழ்ந்து இருக்க முடியாது?சுமேரிய நாகரிகம் இல்லை என்றால் இன்று நாமும் இல்லை!நாம் இன்று கொண்டாடும் மே தினமும் இல்லை!! 

ஒரு மனிதனுக்கு தொழில் வேண்டும்,குடும்பம் வேண்டும் மற்றும் ஓய்வும் வேண்டும்.இந்த மூன்றும் சரியாக அமையும் இடத்தே தான் அவன் வாழ்வு நிலைக்கும்!, அங்கு இன்பம் பொங்கும்!!.ஆனால் பண்டைய காலத்திலும் அதை தொடர்ந்து 1886ஆம் ஆண்டில் கூட,பெரும் பாலான தொழிலார்களை முதலாளித்துவ அடிமையாக [capitalist slavery] கையாண்டார்கள்.இதனால்,ஆகஸ்ட்  20, 1866,இல் "National Labor Union", அமெரிக்காவில் ஆரம்பிக்கப் பட்டது. அதன் முக்கிய நோக்கம் ஒரு தொழிலாளருக்கு எட்டு மணித்தியாலம் பொதுவான வேலை நேரம் என்பதை உறுதிப் படுத்துவது ஆகும்.இனி குறைந்தது 2000 ~2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு சங்க கால தொழிலாளியின் மன நிலையை பார்ப்போம்.    

''புறம் தாழ்பு இருண்ட கூந்தல், போதின்
நிறம் பெறும் ஈர் இதழ்ப் பொலிந்த உண்கண்,
உள்ளம் பிணிக்கொண்டோள்வயின்'', நெஞ்சம்,
''செல்லல் தீர்கம்; செல்வாம்'' என்னும்:
''செய்வினை முடியாது எவ்வம் செய்தல்  
எய்யாமையோடு இளிவு தலைத்தரும்'' என,
உறுதி தூக்காத் தூங்கி, அறிவே,
''சிறிது நனி விரையல்'' என்னும்: ஆயிடை,
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு மாறு பற்றிய
தேய்புரிப் பழங் கயிறு போல,    
வீவதுகொல் என் வருந்திய உடம்பே?
[நற்றிணை 284]

Image result for May Day celebration in  jaffna
பொருள் தேடச் செல்லும்,உழைக்கும் சங்க கால தொழிலாளரான ஒரு  தலைவனின் அறிவு இடை வழியில் அங்கும் இங்கும் பாய்கிறது ..... அவனின் தலைவி,காதலி முதுகுப் புறம் இருண்டு தொங்கும் கூந்தலை கொண்டவள் . பூ மொட்டு போல் இரண்டு கண்களை உடையவள். அவன் உள்ளத்தைக் கொள்ளை கொண்டவள் .அவன் நெஞ்சு அல்லாடுகிறது.நெஞ்சே! நம் வறுமை தீரப் பொருள் தேடச் செல்லலாம்,உழைக்கலாம்  என்னும் எண்ணம் ஒருபுறம் இழுக்கிறது.செயல் முடியாவிட்டால் என்ன,என் குடும்பத்துடன் இன்பமாக பொழுது கழிக்க  திரும்பிவிடலாம், என்னும் எண்ணம் மற்றொருபுறம் இழுக்கிறது.பொருள் ஈட்டாமல் திரும்புதல் கேளிக்கூத்து,நானும் என் குடும்பமும் முதல் உயிர் வாழ வேண்டும் ,அதற்கு பணம், செல்வம் வேண்டும் என்னும் எண்ணம் இன்னொருபுறம் இழுக்கிறது......இப்படி உறுதி இல்லாமல் அவன் அறிவு ஊசலாடுகிறது. பொருள் தேடச் செல்லலாமா,தொடர்ந்து பல நேரம் வேலை செய்யலாமா?அல்லது தொழிலை,செல்வம் தேடுதலை இடை நடுவில் நிறுத்தி விட்டு,  காதலியிடம் திரும்பிவிடலாமா, என்று ஆட்டுகிறது ...... இதற்கு இடையில் அவன் உடம்பு கொஞ்சம் கொஞ்சமாக அறுபட்டுக் கொண்டே   இருக்கிறது. யானையைக் கட்டிவைத்திருக்கும் புரி தேய்த்துபோன கயிறு போல அவன் உயிர் அறுந்து உடல் மாய்ந்துவிடும் போல இருக்கிறது...... என்கிறான் அந்த சங்க கால தொழிலாளி!இவனை தேற்றத் தானோ என்னவோ ""We want to feel the sunshine; we want to smell the flowers;We're sure that God has willed it, and we mean to have eight hours.We're summoning our forces from shipyard, shop and mill:Eight hours for work, eight hours for rest, and eight hours for what we will."" என்ற தொழிலாளர் பாடல் உருவானதோ!

குறைந்தது 4500 ஆண்ட்டிற்கு முற்பட்ட  சுமேரிய படைப்பு காவியத்தின் படி,ஒரு கால கட்டத்தில்,பூமியில் எந்த ஒரு மனிதரும் வாழவில்லை. அங்கு தெய்வங்கள் மட்டுமே வாழ்ந்தார்கள்.இந்த தெய்வங்கள் கூடுதலான வேலை செய்ய வேண்டி இருந்தது.குறிப்பாக,பெண் தெய்வங்கள் படைக்கப் பட்டதும்,அவர்களை மகிழ்ச்சியாக வைக்கும் பொருட்டு அவர்கள் மேலும் நிலத்தை நன்கு உழுது, தோண்டி, மண்ணை விதை முளைப் பதற்கும், பயிர் விளைச்சலுக்கும் ஏற்றவாறு பக்குவப்படுத்தி தயார் செய்யவேண்டி இருந்தது.அதே போல சுரங்கத்தில் இருந்து கனிமங்கள் எடுப்பதற்கும் கடும் வேலை செய்ய வேண்டி இருந்தது.இதனால் அவர்கள் மிகவும் ஆத்திரப்பட்டார்கள்.தமக்கு மனைவியுடன் குடும்பத்தாருடன் இன்பமாக களிக்க ஓய்வு தேவை என கருதினார்கள்.எனவே, பூமியில் இந்த ஆண் கடவுள்களின் வாழ்க்கை எளிதாக இருக்கவில்லை.அங்கு கண்டு எடுக்கப்பட்ட ஒரு முத்திரை இப்படி கூறுகிறது: 

"மனிதனைப் போன்ற கடவுளர்கள்  
வேலையில் மனச்சலிப்பு அடைந்து 
உடல் வேதனை அடையும் போது,
அவர்களின் உழைப்பு கடுமையாயிற்று,
வேலை கனமாயிற்று,துன்பம் அதிகரித்தது" 
"When the gods like men 
Bore the work and suffered the toll 
The toil of the gods was great, 
The work was heavy, the distress was much."

Image result for Eight hours for work, eight hours for rest
இதனால் கடவுள்கள் தமது நிலை குறித்து வருந்தினர்.குறை தெரிவித்தனர், தம்மை வஞ்சித்து விட்டதாக கருதினர்,தலைமை கடவுளுக்கு எதிராக கிளர்ச்சி செய்தனர்.ஒரு தொழிலாளர் புரட்சி வெடித்தது.எனவே இவர்களை கடும் உழைப்பில் இருந்து,முற்றாக விடுவிக்கும் பொருட்டும்,ஒரு மனித இனத்தை தலைமை கடவுள் படைத்தார்! இப்ப,கடவுளுக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் ,தேவையான உணவு,உடை,இருப்பிடம் போன்றவற்றை கொடுப்பது மக்களின் வேலையானது. இதனால்,கடவுள் நிரந்தரமாக உழைப்பதில் இருந்து விடுபட்டார்.மனிதனின் இந்த தோற்றுவாய் கதை அல்லது கூற்று அடிமை தொடர்பானதாக உள்ளது.அன்று நிலவிய சுமேரிய பொருளாதாரத்தில்,அரசனுக்கும் மதகுருக்கும் நன்மை பயக்க, அடிமைகளின் இடைவிடா உழைப்பு தேவைபட்டதை இது காட்டுகிறது எனலாம்.ஒரு முதலாளித்துவ அடிமைகள் உருவாக்கப் பட்டதாக கருதலாம்?அது அன்றுடன் நின்று விட வில்லை.அது இன்னும்,கடவுளிற்கு பதிலாக,அரசன்,அதன் பின் சர்வாதிகாரி,பின் முதலாளிமார் பெயரில் தொடர்கிறது.இப்ப மனிதன் வேலையில் மனச்சலிப்பு அடைந்தான்.உடல் வேதனை அடைந்தான்.முதலாளி மாருக்கு எதிராக புரட்சி செய்தான்.அந்த புரட்சியின் எதிர் ஒலியே இந்த மே தினம் (may day) என நாம் கூறலாம்? 

மேதினக் கொண்டாட்டமானது, ஐரோப்பிய மக்கள் பல தெய்வங்களை வணங்கி வந்த பேகன் ஐரோப்பியாவில்(Pagan Europe),ஒரு பேகன் மத விழாவாக முதலில் ஏற்பட்டது.அவர்கள் இளவேனிற் கால ஆரம்பத்தை ,முதன் முதலில் , ஒரு விழாவாகக் கொண்டாடினார்கள்.ஆதிகால செல்ட்ஸ் மற்றும் சாக்சன்[Celts and Saxons ] நெருப்பின் தினமாக (the day of fire) மே 1ஆம் திகதியைக் கொண்டாடினார்கள்.சாக்சன் [Saxons ] ஏப்ரல் 30 மாலை /பின்னேரம்  விழாவைத் தொடங்குவர். விளையாட்டு, கேளிக்கைகள்,மற்றும்  விருந்துடன் கூடிய விழாவாக இது இருந்தது. பனிக்காலம் முடிந்து இளவேனிற்காலம் வருவதை வரவேற்பதற்காகக் கொண்டாடப்பட்டது. மற்றும், இந்த நாள் ஒரு வருடத்தை சம பாதியாகப் பிரிக்கிறது என்று கருதினர் (மே 1முதல் அக்டோபர் முடிய 6 மாதம், நவம்பர் 1 முதல் ஏப்ரல் முடிய ஆறு மாதம்),எனினும்  இந்த விழாவை கத்தோலிக்க தேவாலயம் சட்டத்தால் தடை செய்தது (outlawed by the Catholic church) என்றாலும் அங்கு வாழ்ந்த மக்கள்,இந்த விழாவை, 1700 வரை கொண்டடிக் கொண்டு தான் இருந்தனர். ரோமானியர்கள் [Romans] பிரிட்டிஷ் தீவுகளுக்கு (British Isles) குடியேறியபொழுது, மே தினத்தை விமரிசையாகக் கொண்டாடினர். இந்த விழா பூக்களின் தேவதையான ஃப்லோராவிற்கான (Flora)  ஒரு வழிபாடு.இது  ஏப்ரல் 28 முதல் மே 2 வரை  நடைபெறும்.காலக்கிரமத்தில் இந்த கொண்டாட்டம்   செல்ட்ஸ் மற்றும் சாக்சன்[Celts and Saxons] இனத்தாருடைய கொண்டாட்டத்திலும் சேர்த்துக்கொள்ளப்பட்டது.இரண்டாயிரம்  ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்கத் தமிழரும் இளவேனிற் கால ஆரம்பத்தை இந்திர விழா அல்லது காமன் விழாவாக கொண்டாடினார்கள்.எல்லா விதமான தொழிலுக்கும் ஓய்வு கொடுத்து,ஆணும் பெண்ணும் காதற்பெரு விருப்போடு களிகொள்ளும் விழாவாக இது இருந்தது என்பது குறிப் பிடத் தக்கது.உதாரணமாக: 

‘‘மல்கிய துருத்தியுள் மகிழ் துணைப் புணர்ந்து, அவர்,
வில்லவன் விழவினுள் விளையாடும் பொழுதன்றோ’’ (கலித்தொகை, 35) 

மூன்று பக்கம் நீர் சூழ்ந்து நிலம் துருத்திக்கொண்டிருக்கும் மேட்டில் மகளிர் தன் துணையைத் தழுவிக்கொண்டிருப்பர். அங்கு வில்லேந்திய காமனும், அவன் மனைவி ரதியும் விளையாடுவது போன்ற காமாண்டிக் கூத்து நிகழும் என்று கூறுகிறது.மேலும் சிலப்பதிகாரம்:

"வெள்ளி மால் வரை , வியன் பெரும் சேடி 
கள் அவிழ் பூம் பொழில் காமக் கடவுட்கு 
கருங் கயல் நெடுங்கண் காதலி தன்னொடு
விருந்தாட்டு அயரும் ஓர் விஞ்சை வீரன்"

பெரிய வெள்ளி மலையிலே,அகன்ற பெரிய வட சேடிக் கண்ணே [சேடி-வித்தியாதர நாடு] , தேன் ஒழுக மலரும் பூக்களையுடைய தோர் சோலையிடத்தே,கரிய கயல்போலும் நீண்ட கண்களையுடைய காதலியுடன் இணைந்து காமனுக்கு விருந்து படைக்குறாராம் ஒரு வீரன் என்று வர்ணிக்கிறது  .

எது எப்படியாயினும்,நாம் தற்போது கொண்டாடும் மே தினம், மதம் மற்றும் மற்றவைகளை கடந்து ஒரு உலக தொழிலார் நாளாக ஏற்படக் காரணம் 1886ஆம் ஆண்டு மே 1ஆம் திகதி, அமெரிக்காவில் தொழிலார்கள், எட்டு மணி நேர வேலை வேண்டி  நடத்திய போராட்டமே ஆகும்.இந்த போராட்டம்  Haymarket என்ற இடத்தில் நடத்தியதின் நினைவாகவே தற்போது மே தினம் கொண்டாட்டப்படுகிறது.இந்தப் போரட்டம் Knights of Labour என்று அழைக்கப்பட்டது.கிட்டத்தட்ட 1600 போரட்டங்கள் நடந்ததாகவும் 600,000 தொழிலாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது. 1889ஆம் ஆண்டு பாரிஸ், மே 1ஆம் தேதியைத் தொழிலாளர்களின் விடுமுறை நாளாக,ஹேமார்கெட் போராட்டத்தில் உயிர் துறந்தவர்களை கௌரவிக்கும் வகையில் (in commemoration of the Haymarket Martyrs) அனைத்துலக தொழிலாளர்களின் ஒன்றியம் (International Workingmen's Association) அல்லது முதலாவது அனைத்துலகம் (First International) அறிவித்தது.தொழிலாளர்கள்  சிந்திய குருதியின்  ஞாபகமாக சிகப்பு நிறக் கொடியை தேர்ந்து எடுத்து அதை  சின்னமாக்கினர்.

Related image
இந்தியாவில் முதலாவது மே தினம்,தமிழர்கள் வாழும்  சென்னை மாநகரில் கொண்டாடப்பட்டது. பொதுவுடைமைவாதியும் தலைசிறந்த சீர்திருத்த வாதியும் ம. சிங்காரவேலர் 1923 -இல் சென்னை[Madras] உயர்நீதிமன்றம் அருகே உள்ள கடற்கரையில் இந்த முதலாவது தொழிலாளர் தின விழாவை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத் தக்கது.அங்கு இரண்டு பொதுக்கூட்டங்களும் நடை பெற்றன. தொழிலாளரின் குறைகள், உரைகளின் பேச்சுப் பொரு ளாக அமைந்தன. தமிழில் முன்னரே வெளியிட்ட கட்சி அறிவிப்பின்படி தொழிலாளர் -விவசாயிகள் கட்சி அமைக்கப்பட்டது என அக் கூட்டங்களில்  அறிவிக்கப்பட்டது. தொழிலாளரும், விவசாயி களும் கூட்டத்தில் இருந்தனர். சொற்பொழிவுகள் தாய்மொழியில் ஆற்றப்பட்டன என்பதும் குறிப்பிடத் தக்கது.அது போல இலங்கையிலும் முதலாவது மே தினம் 1927  இல்,கௌரவ அலெக்ஸாண்டர் ஏக்கநாயக்க குணசிங்க [Alexander Ekanayake Gunasinha] தலைமையில் காலி முக திடலில் [ Galle Face Green] நடைபெற்றது.

ஹவாயில் (Hawaii) மே தினம்,Lei ( garland or wreath) என்ற மரபு வழி வந்த விழாவுடன் இணைத்து கொண்டாடப்படுகிறது.லேய் என்பது மலர்களாலான ஒரு மாலை அல்லது நெக்லஸ் ஆகும்.இது கிட்டத்தட்ட 46 செ.மீ. நீளம் இருக்கும்.ஜெர்மனியில் முதல் முறையாக,1933ஆம் வருடம் தொழிலாளர் தினம் விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.போலண்ட் 1990ல் தொழிலாளர்கள் தினத்தை அரசாங்க விடுமுறையாக["State Holiday"] மாற்றியது 

மேலும் இன்று உலக நாடுகள் எல்லாம் பொதுவாக மே 1ஆம் திகதியை கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர்.ஆஸ்திரேலியாவில், எல்லைக் கேற்ப, தொழிலாளர்கள் தினம் வெவ்வேறு நாட்களில், கொண்டாடப்படுகிறது.பல  பொதுவுடமை நாடுகளில்,மே தினம் ஒரு முக்கியமான அரசாங்க விடுமுறை.அத்துடன் அங்கு, மிக விமர்சையாக ராணுவ அணிவகுப்பு காட்சியுடன் இது கொண்டாடப்படுகிறது.என்றாலும் நியூசிலாந்தில் [New Zealand ] தொழிலாளர் தினம் அக்டோபர் மாதம் நான்காவது திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. இதற்கு மூல காரணமானவர் சாமுவேல்  டன்கன் பர்னெல் [ Samuel Duncan Parnell ] என்னும் தச்சு வேலை செய்பவர் ஆகும்.இவர் 1840ல் 8 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்ய மறுத்ததுடன்,மற்ற தொழில் செய்பவர்களையும் அப்படி செய்யவேண்டாம் என தூண்டிவிட்டார்.அக்டோபர் 1840ல் தொழிலாளர்கள் கூட்டம்,ஒருநாளைக்கு 8 மணி நேர வேலை என்ற ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.இதன் 50வது வருடத்தை,அக்டோபர் 28 1890ஆம் வருடம் ஒரு அணிவகுப்பின் மூலம் கொண்டாடியது.இதன் தொடர்ச்சியாக,இதன் பின் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் நான்காவது திங்கட்கிழமை கொண்ட்டாடுவது அங்கு வழமையானது.மேலும் 1899ல் அரசாங்கம், 1900 ஆண்டு முதல்,இந்த நாளைப் பொது விடுமுறையாக அறிவித்தது. இப்படியாக ஒவ்வொரு தேசமும் தமது மே தினத்தைக் கொண்டாடுகின்றன.

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] 

0 comments:

Post a Comment