எமனாகும் மருத்துவம்

இந்தியாவில் பாதி மருத்துவர்கள் தகுதியற்றவர்கள் என்கிறது உலக சுகாதார நிறுவனம். தமிழக தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இத்தகைய ஒரு தகுதியற்ற மருத்துவரைத் தயாரிக்கும் செலவு ஒரு கோடி ரூபாயைத் தாண்டி விட்டது.
முப்பது வருடங்களுக்கு முன்னர் அரசு மருத்துவமனைகள்தான் முதலமைச்சர்களே சிகிச்சை பெறும் முக்கியத்துவத்தைப் பெற்றிருந்தன. இன்றோ தினக்கூலியில் வாழும் தொழிலாளிகளே தனியார் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய நிலைமை. சிசு மரணமும் சிகிச்சையின்றி மரணமும் அரசு சுகாதார மையங்களின் யோக்கியதையைக் காட்டுகின்றன.

இந்தியாவில் பாதி மருத்துவர்கள் தகுதியற்றவர்கள் என்கிறது உலக சுகாதார நிறுவனம். தமிழக தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இத்தகைய ஒரு தகுதியற்ற மருத்துவரைத் தயாரிக்கும் செலவு ஒரு கோடி ரூபாயைத் தாண்டி விட்டது. இக்கல்லூரிகளின் மருத்துவமனைகளில் சோதனைச்சாலை எலிகளாகும் பாக்கியம் மட்டும் மக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றது. அமெரிக்காவின் பில்கேட்ஸ் மெலிந்தா அறக்கட்டளையும் கேட்பாரின்றி இந்திய மக்களை எலிகளாக சோதித்து வருகிறது.

இந்திய மருத்துவ நிறுவனங்கள் தயாரிக்கும் மலிவு விலை புற்று நோய் மருந்துகளை செத்து மடியும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு அனுப்ப இயலாது. ஏனெனில் உலக வர்த்தகக் கழகம் உருவாக்கியிருக்கும் வணிக காப்புரிமை ஏழை நாடுகளின் எமனாக நிலைபெற்றுவிட்டது.

அரசு நிதியை பெறுவதற்காக ஏழை மக்களின் கண்களை பறித்த ஜோசப் கண் மருத்துவமனை இருப்பது ஆப்பரிக்காவில் அல்ல, தமிழகத்தில். தரத்தின் சின்னமாக காட்டப்படும் அப்பல்லோ மருத்துவமனைதான் புதுதில்லியில் ஏழைகளின் சிறுநீரகங்களை பறிப்பதிலும் ஈடுபடுகிறது.

அமெரிக்காவிலோ உங்கள் காப்பீடு குறைவு என்றால், தொகைக்கேற்ப கையில் உள்ள ஐந்து விரல்களுக்கு பதில் இரண்டு விரல்களுக்கு மட்டும் சிகிச்சை கிடைக்கும். தமிழகத்திலோ அரசின் காப்பீடு அட்டை. தனியார் மருத்துவமனைகளும் தனியார் காப்பீட்டு நிறுவனங்களும் அள்ளும் இந்தப் பணம் மக்களிடமிருந்து அரசு வசூலிக்கும் வரிப்பணம்.

மராத்திய விவசாயிகளை தற்கொலைக்குத் தள்ளும் மிக முக்கியமான காரணியாக கண்டறியப்பட்டிருக்கிறது தனியார் மருத்துவக் கொள்ளை தோற்றுவிக்கும் கடன். உயிர் காக்கும் மருத்துவம் உயிர் பறிக்கும் எமனாக மாறியிருக்கிறது என்பதுதான் மருத்துவம் தனியார்மயம் என்பதன் உண்மையான பொருள்.

புதிய கலாச்சாரம்.[அனுப்பியவர்-கயல்விழி]

0 comments:

Post a Comment