தமிழுக்கு இடம் தேடும் தமிழன் :-பறுவதம் பாட்டி

அன்று சனிக்கிழமை காலை  ஆகையால் படுக்கையில் இருந்து எழும்ப மனமின்றி போர்வையால் இறுக மூடி படுத்திருந்தேன்.
வழக்கம் போல் மாமிவீட்டில் வாழும் அண்ணாமலைத் தாத்தாவின் தொலைபேசி அழைப்பு மணி பக்கத்தில் இருக்கும் அறையில் ஒலிக்கவே அங்கு படுத்திருந்த பறுவதம்பாட்டியும் ஸ்பீக்கர் பொத்தானை அழுத்திக்கொண்டார்.
''கேட்டியே பறுவதம்.டொரோண்டோ வில நடந்த தமிழ் நாட்டில இருந்து வந்த பேச்சாளர் சேது பங்குபற்றின கலந்துரையாடல் ஒண்டுக்கெல்லே நேற்று நான் போனனான்.'' தாத்தா ஆரம்பித்துக் கொண்டார்.

''என்ன சொல்லுறாங்கள்.'' பாட்டியும்  ஆவலுடன் கேட்டுக்கொண்டார்.

''அமெரிக்க ஹார்வார்டு பல்கலைக் கழகத்தில தமிழ் மொழியையும் இருக்க செய்யிறத்திற்கு அலுவல்கள் ஆரம்பிக்க பல மில்லியன் டொலர் தேவைப்படுகிறதாம். அதுக்கு அதில ஆர்வம் உள்ளவை நிதி சேர்த்து உதவி செய்யட்டுமாம்.''

''இதென்ன அநியாயமாய் இருக்கு.!''பாட்டி ஆச்சரியத்துடன் அழுத்திக் கொண்டார்.

''ஏன்   பறுவதம் இத அநியாயம் எண்டு சொல்லுறாய். எங்கட தமிழ் மொழியில்லே. அதுவும் அமேரிக்காவில இருக்க செய்யினம்  ஏண்டா பெருமை எல்லே.''தாத்தாவும் தன்  ஆர்வத்தினை வெளிப்படுத்திக் கொண்டார்.

'' கொஞ்சம் பொறுங்கோ! சொந்த நாட்டில தமிழ் நாட்டில என்ன நடக்குது எண்டு முதல்ல பாருங்கோ. இலங்கையில தமிழர் பெரும்பான்மையினர் அழிக்கப்பட்டும், அகற்றப்பட்டும் விட்டனர் .அங்கு தமிழ் வாழ முடியாமலே அரசியல் ஆப்பு  வைத்துவிட்ட்து. தமிழ்நாடு எண்டு மொழி ரீதியாக பிரித்துக் கொடுக்கப்படட மாநிலத்தில கூட தமிழர் தமிழ் படிக்க , பேச தயாரில்லை. தொலைக்காட்சி ஊடகங்கள் போட்டி போட்டுக்கொண்டு தமிழை அழிச்சுக்கொண்டு இருக்கினம்.தமிழரை கண்டா தமிழில பேச தமிழனுக்கு மனமில்லை. பிள்ளைகள் ஆங்கிலம் பேசுவோராகவே மாறிவிட்ட்னர். குமுதம், விகடன் முதலான பல  சஞ்சிகைகள் பார்த்தால் ஆங்கிலத்தை தமிழில் எழுதி இரண்டையும் கொலை செய்கிறார்கள். புலம் பெயர் நாடுகளில் வாழுற தமிழர்களும் அவர்களின் பிள்ளைகளை தமிழர்களாய் இனி பார்க்க முடியாது என்பதால் அவர்களுடன் தமிழர் முடிவை அடைஞ்சிடும்.அரச ரீதியாக தமிழ் வளர, வாழ வழி இருந்தும் அங்கை தமிழ் நாட்டில தமிழை அழிச்சுக்கொண்டு இனி அமெரிக்காவில் இருத்தப்போயினமே. இனி என்ன அழிவின் கிட்ட வந்த மொழியெண்டு மியூசியத்தில வைக்கப்போகினமே? '' பாட்டி  சற்று சத்தமாக ஒரு பிரசாங்கமே பண்ணிவிடடார்.

''நீ சொல்லுறது உண்மைதான் பறுவதம். ஆனால்  உந்த பிலிப்பையின் காரரை  பார். அவங்கட நாட்டில பள்ளிப்படிப்பு  எல்லாம் ஆங்கிலம் தான்.பள்ளிக்கூடத்தில் அவங்கட  மொழி கதைக்க தடையும்தண்டமும் எண்டு சொல்லுறாங்கள்.அப்பிடி இருந்தும் வெளியில அவங்களுக்குள்ள ஆங்கிலம் ஒண்டும் கலவாமல் தங்கட மொழியில தான் கதைப்பாங்கள்.''என்று தாய் மொழிப்பற்றுக்கு உதாரணம் கட்டிக்கொண்டார் தாத்தா.

''கேட்டுக்கொண்டு வந்தனீங்கலெள்ளே! நான் ஏன்டா அதிலையே எழும்பிக் கேட்டிருப்பன்.''

''நாங்க 2,3 பேர் நினச்சு என்ன பிரயோசனம் பறுவதம். இப்பிடி ஒரு சில தமிழரைத் தவிர ஒட்டு மொத்த தமிழ் சமுதாயமே தாய் மொழியை கைவிடத் தயாராகிவிட்டினம். இதெல்லாம் காலம் கடந்தும் ஞானம் வரேல்லை. . சரி பிறகு கதைப்பம்.''என்றவாறே பேச்சினை முறித்துக்கொண்டார் தாத்தா.

அம்மாவின் வழமையான தேவாரம் ஆரம்பிக்கவே நானும் காலைக் கடன்களுக்காக எழுந்து செல்ல ஆரம்பித்தேன்.


                                                                                                                   

0 comments:

Post a Comment