ஒளிர்வு 86, தமிழ் இணைய சஞ்சிகை - மார்கழி மாத இதழ்[2017]

   தீபம் வாசகர்கள் அனைவருக்கும் குளிர்மையான மார்கழி வணக்கம்.


பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை

பெருகலிற் குன்றல் இனிது.                            என்கிறார்.

அதாவது, நல்ல பண்பு இல்லாதவர்கள் அன்பு வெள்ளத்தில் நம்மை மூழ்கடிப்பதுபோல் தோன்றினாலும் அவர்களது நட்பை, மேலும் வளர்த்துக் கொள்ளாமல் குறைத்துக் கொள்வதே நல்லது.
இது நண்பர்களுக்கு மட்டுமல்ல சகலவிதமான உறவுகளுக்கும் பொருந்தும் என்பதே எமது கருத்து. அப்பொழுது தான் ஏமாற்றங்களையும், தேவையற்ற சச்சரவுகளை யும்  தவிர்த்துக்கொள்ளலாம்.
அமைதியாக வாழ்வோம், ஆனந்தமாக வாழ்வோம்.
- தீபம்.




பொங்கலோ பொங்கல்


தேவதாசி அவச்சொல்லாக்கப்பட்ட கொடூரம்


கோவில் திருப்பணிக்காகவும், சேவைக்காகவும் தங்களை முழுமையாக அர்பணித்துக் கொண்டவர்கள் தான் தேவதாசிகள் என கூறப்படும் தேவர் அடியார்கள்.

இவர்கள் ஆன்மீக இலக்கியம் கோலோச்சி இருந்த ஆறாம் நூற்றாண்டிலிருந்தே மிக மரியாதையாக பார்க்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

காலப் போக்கில் இவர்களது பெயர் மட்டுமின்றி இவர்களது மரபும், கலாச்சாரமும் மரியாதையும் கூட மருவிவிட்டது.

போதிய அங்கீகாரம் மற்றும் கவனிப்பு இல்லாமல் போனதால் தேவதாசிகள் மிகக் கீழ்த்தரமான முறையில் சித்தரிக்கப்பட்டனர்.

தமிழ் மரபு தேவதாசிகள் தமிழ் கலாச்சாரத்திற்கும், கலைகளுக்கும் செழுமை சேர்த்த ஓர் சமூக மரபு கொண்டிருந்தவர்கள்.

தேவதாசி

தேவதாசி என்பவர்கள் கடவுள் அல்லது கோவிலுக்காக அர்பணிக்கப்பட்ட பெண்கள் ஆவர்கள். இவர்கள் கோவில் மற்றும் கடவுளுக்கு திருப்பணிகள் செய்வதற்காக தானம் கொடுக்கப்பட்டவர்கள்.

தேவதாசி ஆவதற்கு சடங்கு தேவதாசியின் வாழ்க்கை என்பது ஆர்வம் நிறைந்த சுவாரஸ்யமான கதையாகும்.

ஒரு பெண் தேவதாசியாக வேண்டும் எனில், அவள் சில சம்ஸ்காரங்கள் அல்லது வழிச்சடங்குகள் சிலவற்றின் ஊடாகப் பயணித்து வர வேண்டும் எனப்படுகிறது.

தேவதாசி ஆவதற்கு சடங்கு சடங்குகள்

 

சடங்கு பூர்வமான திருமணம்
அடையாளப்படுத்தும் புனித நிகழ்வு
நிகழ்த்து கலைகளில் ஈடுபடுத்த முன்முயற்சி எடுத்தல்
அரங்கேற்றம்
கடமைகள் மற்றும்
இறுதிச் சடங்காசாரக் கௌரவங்கள்

கி.பி. 900

பல கல்வெட்டுகளில் தேவர் அடியார்கள் எனப்படும் தேவதாசிகள் பெருமான் கோயிலில் கலைகளை காத்து வந்தவர்கள் என்றும். நடனம் மற்றும் பாடல்கள் இயற்றுதல் போன்றவற்றில் ஈடுபட்டு வந்தனர் என்றும் பல கல்வெட்டுகளில் கூறப்பட்டுள்ளன.

கி.பி. 1230

கி.பி 1230-40-க்கு இடைப்பட்ட காலத்தில் இப்போது மகாராஷ்டிரா என அழைக்கபப்டும் நிலத்தை ஆண்ட மன்னன் ராகவாச்சாரியார் தனது குறிப்புகளில் தேவதாசி என குறிபிடப்பட்டுள்ள தகவல்கள் தான் தேவதாசிகளின் தொடக்கமாக கருதப்பட்டு வருகிறது.

மேகதூத்

தேவதாசி எனும் இந்த பெயர் முதன் முதலில் காளிதாஸ் எழுதிய மேகதூத் எனும் படைப்பில் தான் குறிப்பிடப்பட்டிருந்தது.

தேவரடியார்கள் எனும் பெயரின் பொருளானது தேவர் (இறைவன்) + அடியவர்கள் (சேவகர்கள்), அதாவது இறைவனுக்கு சேவை செய்து வந்தவர்கள் ஆகும்.

அர்ச்சகர்கள்

தேவதாசிகள் என்பவர்கள் சமூகத்தில் பெரும் புகழ் மற்றும் மரியாதையுடன் காணப்பட்டவர்கள்.

கோவிகளில் அர்ச்சகர்களுக்கு அடுத்த இடத்தில் வைத்து பார்க்கப்பட்டவர்கள் இவர்கள் எனவும் வரலாற்று குறிப்புகள் மூலம் அறியப்படுகிறது.

சமூக சேவைகள்

தேவதாசிகள் அவர்களது கலைக்கு கிடைத்த பரிசுகளை மக்களுக்கு நல்ல சேவைகளும் செய்து வந்துள்ளனர்.

கால்வாய் அமைப்பது, கிராமப்புற சேவைகள் செய்வது என நல்ல வாழ்க்கையை நடத்தி வந்தவர்கள் தான் இந்த தேவதாசிகள்.

விண்ணமங்கலம்

விண்ணமங்கலம் என்ற கிராமத்தின் நீர்த்தேக்கம் ஆண்டு தோறும் ஆழப்படுத்தப்பட்டு மராமத்துப் பணிகளும் செய்து வரப்பட்டன.

நாற்பத்தி எண்ணாயிரம் பிள்ளை மற்றும் அவருடைய சகோதரி மங்கையர்க்கரசி ஆகிய இரண்டு தேவதாசிகள் ஏரி நீரில் மூழ்கியிருந்த நிலங்களைத் தங்களின் செலவில் மறுபயன்பாட்டிற்குக் கொணர்ந்துள்ளனர்.

அன்னாடு

அன்னநாடு என்ற இடத்திலும் அவர்கள் திருந்திகை நதியை மூடச்செய்து, நீர்த்தேக்கத்தைத் தோண்டி ஆழப்படுத்தி, கால்வாய் அமைத்து பின் நிலத்தை மீட்டெடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆங்கிலேயே படையெடுப்பு

சமூகத்தில் புனிதமாக காணப்பட்டு வந்த இவர்கள், ஆங்கிலேயே படையெடுப்பிற்கு பிறகு தான் களங்கப்படுத்தப்பட்டனர் என்றும் கூறப்படுகிறது.

அரசர் கொடுமைகள்

சில அரசர்கள் மற்றும் சாம்ராஜியத்திலும் கூட கடவுள் திருப்பணிக்காக அர்பணிக்கப்பட்ட இவர்கள், தனிப்பட்ட அரசர்கள் அல்லது பெரும் நபர்களின் இச்சைக்காக இரையாக்கப்பட்டனர் எனக் கூறப்படுகிறது.

சாதிப்பிரிவுகள்

சாதி பிரிவுகள் வரத் துவங்கிய காலக்கட்டத்தில் இவர்கள் இக்காரணம் கண்டு கீழ் சாதி பிரிவில் சேர்க்கப்பட்டனர். மேலும், இவர்கள் காமத்திற்காக மட்டும் காணப்படுபவர்கள் எனும் சாயம் பூசப்பட்டது.

அவச்சொல்


கடவுளுக்கு இறைப்பணியாற்ற அர்பணிக்கப்பட்ட இவர்கள், சிலரது இச்சை பசிக்கு இரையாகி, இப்போது இவர்களது பெயரே சமூகத்தில் ஓர் அவச்சொல்லாக மாறியிருக்கிறது.

மௌனமாய்......

சுழல் காற்றில் சிக்கிய
ஒற்றை இலையாய் இருக்க
என் நினைவு சோலையிலே
உதிராமல்  காயங்கள் இருக்கையிலே
என் இதயம் மௌனமாய்  கொதிக்கிறது
என் விதி மீது கோபம் வந்து போகையிலே
என் கண்களில் மின்னல் பட்டு தெறிக்குதே!

வாய் நோக கத்தினாலும்
யார் தான் கேட்பார் என் வேதனையை
உயிர் வறண்ட மண்உயிர்க்க
மழையைவேண்டி நிற்பது போல
இனிமை இன்றி
என் தனிமையும் விடியலையே
நிழல் தேடிபுலம்பும் என் மனம்
கை நீட்டுகிறது வாழ்வுக்காய்!

உதிர்ந்து போகும் காலங்களில்
மரணித்து போகும் வாழ்வில்
மிஞ்சி வருவது தான் என்னவோ!


-அகிலன்,ராஜா- 




பொங்கலுக்கு வெளியாகும் பெரும் திரைப்படங்கள்

பண்டிகை என்றாலே அதில் திரையரங்குக் கொண்டாட்டமும் தவறாமல் இடம் பிடித்துவிடும். குடும்பத்துடன் பண்டிகை தினத்தின் பாதி நாளை கொண்டாடிவிட்டு திரையரங்கிற்கு படையெடுக்கும் கூட்டம் ஏராளம். அதற்காகவே பண்டிகை தினத்திற்கு பல படங்களை வெளியிடுவார்கள். அந்த வரிசையில் வரவிருக்கிற பொங்கல் தினத்திற்கு என்னென்ன படங்கள் வெளியாகும் என்பதைப் பார்க்கலாம்
தானா சேர்ந்த கூட்டம்:
சிங்கம் 3 படத்துக்குப் பிறகு சூர்யா நடிக்கும் படம் தானா சேர்ந்த கூட்டம். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், செந்தில், கலையரசன், சுரேஷ் மேனன், ஆர்.ஜே.பாலாஜி என பல நட்சத்திரங்கள் நடிக்கும் இந்தப் படம், இந்தியில் வெளியான ஸ்பெஷல் 26 படத்தின் ரீமேக். ஆனால்,திரைக்கதையில் பல மாற்றங்களைச் செய்துள்ளாராம் இயக்குநர்.இதற்கு முன் இரண்டு படங்கள் பொங்கல் பண்டிகையில் வெளியாகியுள்ளதால்,  ‘தானா சேர்ந்த கூட்டம், பொங்கல் பண்டிகையில் வெளியாகும் சூர்யாவின் மூன்றாவது படம். பல வருடங்களுக்குப் பிறகு சூர்யா நடித்த படம் பொங்கலுக்கு வெளிவருவதால் அவரின் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

குலேபகாவலி:
தேவி படம் மூலம் நடிகராக ரீ-என்ட்ரி கொடுத்த பிரபுதேவா, அடுத்ததாக நடித்திருக்கும் திரைப்படம்தான் குலேபகாவலி. பிரபுதேவா, ஹன்சிகா மோத்வானி, ரேவதி, ஆனந்த் ராஜ், மன்சூர் அலிகான், யோகிபாபு என பலர் நடித்திருக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் கல்யாண் இயக்கியிருக்கிறார். தேவி படத்திற்குப் பிறகு பிரபுதேவா நடிக்கும் படங்களுக்கு எதிர்பார்ப்பு இருப்பதால், குலேபகாவலி படத்திற்காக பலர் காத்திருக்கிறார்கள்.
ஸ்கெட்ச்:
நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தனது முதல் படமான வாலுவை ரிலீஸ் செய்த இயக்குநர் விஜய் சந்தர், விக்ரமுடன் கைகோத்திருக்கும் படமே ஸ்கெட்ச். கலைப்புலி தாணு தயாரிக்கும் இந்தப் படத்தில் விக்ரம், தமன்னா, சூரி, ஸ்ரீமன், ராதாரவி, வேல.ராமமூர்த்தி, ஆர்.கே.சுரேஷ் என பலர் நடித்திருக்கின்றனர். தமன் இசையமைத்திருக்கும் இந்தப் படம், ஜனவரி 12ஆம் தேதி வெளியாகிறது.
மன்னர் வகையறா:
நடிகர் விமல் நடிக்கும் 25ஆவது படம்தான் மன்னர் வகையறா. பூபதி பாண்டியன் இயக்க விமல், கயல் ஆனந்தி, சாந்தினி, பிரபு, சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடிக்கும் இந்தப் படத்தை நடிகர் விமலே தயாரிக்கிறார். ஜல்லிக்கட்டு போராட்டம், பிக் பாஸ் மூலம் பிரபலமான ஜூலியும் இந்தப் படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வாராவாரம் வெள்ளிக்கிழமைகளில் விமல் படம் ரிலீஸான காலம் போய், நீண்ட நாள்களுக்குப் பிறகு விமல் படம் ரிலீஸாவதால் எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே இருக்கிறது. 
மதுரவீரன்:
சகாப்தம் படத்திற்குப் பிறகு விஜயகாந்தி    ன் இளைய மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் படம் மதுரவீரன். ஒளிப்பதிவாளராக இருந்த பி.ஜி.முத்தையா இயக்குநராகக் களமிறங்கும் இந்தப் படத்தில், சண்முகபாண்டியன், மீனாட்சி, சமுத்திரக்கனி, வேல.ராமமூர்த்தி, தேனப்பன், பால சரவணன் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜல்லிக்கட்டை மையமாக வைத்து பொங்கலுக்கு ரிலீஸாவதால் படத்திற்கான எதிர்பார்ப்பு வேற லெவலில் இருக்கிறது. டீசர், ட்ரெய்லரும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.