கடவுள் ஒருநாள்....


கோடை  காலத்துக் கொடும் வெயிலுக்குப் பயந்த பறுவதம் பாட்டி, அன்று அதிகாலையிலேயே "ஒருக்கா நடக்கப் போறன் பிள்ளை" என்றவாறு வீட்டை விட்டு நடக்கத் தொடங்கினார்.
ஒரு சில நிமிடங்கள்தான் கடந்திருக்கும்.
"பாட்டி சுகமா இருக்கிறீங்களா?" என்ற குரல் கேட்டு சுற்று,முற்றும் பார்த்தார் பாட்டி.
கண்ணுக்கெட்டியவரை எவரும் புலப்படவில்லை.
அனுபவப் பழமாய் இருந்தாலும்,பாட்டியை சற்று பயம் பற்றிக் கொள்ளவே எட்டி நடக்க ஆரம்பித்தார் பாட்டி.மீண்டும் அதே குரல்.
"பாட்டி,கவனம்.மெல்ல நடவுங்கோ!"
மீண்டும் ஒருமுறை சுற்றுமுற்றும் பார்த்த பாட்டி,யாரையும் காண முடியாமல் மனம் குழம்பினாலும் சற்று தைரியத்தினை வரவழைத்துக் கொண்டே,
"ஆர் தம்பி அது."
நான் கடவுள்."
பாட்டி மௌனமானார்.
"ஏன் பாட்டி,நம்பிக்கையில்லையா?"
"இல்லை,வந்து..." என்று பாட்டி தயங்கிக்கொண்டார்.
"..கடவுளை நீங்க நம்பமாட்டியளா?"
குறுக்கிட்ட பாட்டியோ"இல்லை,எந்தக் கடவுள் எண்டுதான்...." என்று என்று இழுத்துக்கொண்டார்.
"பாட்டி,என்ன கூறுகிறீர்கள்"
"இல்லை,வந்திருக்கிறது சிவனா?,பிள்ளையாரா? அல்லது ஜேசுநாதரா?,அல்லாவா?
கலகலவென்று சிரித்தார் கடவுள்.
பாட்டி மீண்டும் மௌனமானார்.
“"பாட்டி,அப்பெயரெல்லாம் மனிதர்கள் தங்களைப்போல் கடவுளின் உருவங்களை  கற்பனை பண்ணி வைத்த பெயர்களே."
“அப்போ,மதங்கள்?"
"அவற்றையும் மனிதரே  உருவாக்கினர்.அவர்களே அவற்றுடன் மோதிக்கொள்கின்றனர்.அவர்களே மடிகின்றனர்.”
“அப்போ,கோயில்,வழிபாடு,நேர்த்தி,விரதம் இவையெல்லாம் தேவையில்லை என்கிறீர்களா?"
"பாட்டி,கோயில் வழிபாடு,விரதமெல்லாம் எம்மைச் சாட்டி மனித உடலையும்,உள்ளத்தையும் பண்படுத்த மனிதனால் மனிதனுக்காக ஏற்படுத்திக் கொண்ட பயிற்சிகளாகும்.அதில் அவர்கள் செய்யும் முயற்சியின் பலனுண்டு.
ஆனால் இக்காலத்தில் கடவுளுக்கு என்று செய்யப்படும் நேர்த்தி முதலானவை எல்லாம் எம்மைச் சாட்டி சிலர் தம் பணப்பையை நிரப்ப மனிதன் ஏற்படுத்திக் கொண்ட உபாயங்களாகும்."
“அப்போ,புராணக் கதைகளும் உண்மையில்லை என்கிறீர்களா?"
"ஜோடிக்கப்பட்ட சிறு சம்பவங்கள்."
“அப்பிடியெண்டா?”
"பாருங்க பாட்டி.ஞானசம்பந்தரின் இறுதிக் கதையினை ஒருமுறை சொல்லுங்கோ பார்ப்போம்."
"அது வந்து,ஆலயத்தில் நிகழ்ந்த ஞானசம்பந்தரின் திருமணவிழா முடிவில சிவன் சோதி வடிவாய் காட்சியளித்து அனைவரையும் அச்சோதியிலை கலக்கும்படி வேண்ட அனைவரும் அச்சோதியில் கலந்தார்கள்."
"அதுதான் இல்லைப் பாட்டி."
அதிசயத்துடன் தலையை நிமித்திய பாட்டி,”அப்ப என்ன நடந்தது?”
“சமணர்களை கழுவில் ஏற்றிக் கொன்றதினால்,ஆத்திரம் அடைந்திருந்த சமணர்கள் சம்பந்தரின் திருமண வைபவம் நடந்த ஆலயத்தினை தீ வைத்து ஆலயத்தினுள் இருந்த அனைவரையும் தீயிட்டுக் கொன்றனர். இதே போலவே அனைத்து கதைகளும் மனிதர்களினால் தத்தம் கற்பனைகளுக்கு இரையாக்கப்பட்டுள்ளன.”
ஆச்சரியத்துடன் அருகில் இருந்த கல்லில் அமர்ந்தார் பாட்டி.
"கடவுள் ஒருநாள் உலகைக் காண த்தனியே வந்தாராம்,
கண்ணில் கண்ட மனிதரை யெல்லாம் நலமா என்றாராம்."

என்று  தமிழ் வானொலியில் சற்று சத்தமாகவே பாடிக்கொண்டிருந்த சினிமாப்பாடல் என் நித்திரையை குழப்பிடவே,கண்ட கனவினை எண்ணி மறுபக்கம் புரண்டு படுத்துக்கொண்டேன்.
                                                                               

1 comments:

  1. கந்தையா தில்லைவிநாயகலிங்கம்Sunday, July 21, 2013

    "அருவமான,பெயரற்ற ஒன்றே கடவுள்" என பறுவதம் பாட்டிக்கு பதில் கூறுவது போல காரைக்கால் அம்மையாரும் மாணிக்கவாசகரும் அன்றே சொல்லி வைத்தார்கள் போலும்.

    கி.பி. 300-500 கால பகுதியில் காரைக்கால் அம்மையார் கடவுளைப் பார்த்துக் கேட்கின்றார்:

    "அன்றும் திரு உருவம் காணாதே ஆட்பட்டேன்
    இன்றும் திரு உருவம் காண்கிலேன் - என்றும் தான்
    எவ்வுருவோன் உம்பிரான் என்பார்கட்கு என் உரைக்கேன்
    எவ்வுருவோ நின் உருவம் ஏது."

    மிகவும் எளிய பாடல் இது .

    அன்று உன் திரு உருவம் காணாமலே உன்மேல் காதல் கொண்டேன்.

    இன்றும் உன் திரு உருவம் காண்வில்லை

    என்னிடம், "உன்னுடைய தலைவனின்,இறைவனின் உருவம் என்ன " என்று கேட்பவர்களுக்கு நான் என்ன சொல்லுவேன்.அதாவது எது தான் உன் உருவம் என்று இறைவனிடமே கேட்கிறார் அம்மையார் இங்கு.

    கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் திருவாசகம் இப்படிச் சொல்கிறது:

    "திருமாலும் பன்றியாய்ச் சென்று உணராத் திருவடியை
    உரு நாம் அறிய ஓர் அந்தணனாய் ஆண்டு கொண்டான்
    ஒரு நாமம் ஓர் உருவம் ஒன்றும் இல்லாற்கு ஆயிரம்
    திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ"

    நாம் பலவேளை "நமக்கோ அனேக கடவுளர்கள்" என்று சொல்பவர்களுக்குப் பதில் சொல்லத் தெரியாமல் விழிக்கிறோம்.இதற்கெல்லாம் விடை கூறுவது போல மாணிக்கவாசகர்:
    ஒரு பெயரும்,ஒரு உருவமும் இல்லாத பரம்பொருளை ஆயிரம் பெயர்களால் துதிக்கிறோம். எத்தனையோ ஆயிரம் வடிவங்கள் கொண்டாலும் இறைவன், "உருவமும் அருவமும் ஆய பிரான்" என விளங்குகிறான் என்கிறார்

    அந்த "உருவமும் அருவமும் ஆய பிரான்" இடம் பாட்டி கேட்ட ஐயம்: “அப்போ,கோயில், வழிபாடு,நேர்த்தி,விரதம் இவையெல்லாம் தேவையில்லை என்கிறீர்களா?" இதற்கும்
    திருநாவுக்கரசர் அன்றே கூறிவைத்துவிட்டார்

    கி.பி ஏழாம் நூற்றாண்டு திருநாவுக்கரசர் தேவாரம் இப்படி உரைக்கிறது:

    "கங்கை ஆடில் என்? காவிரி ஆடில் என்?
    கொங்கு தண் குமரித்துறை ஆடில் என்?
    ஓங்கு மா கடல் ஓத நீர் ஆடில் என்?
    எங்கும் ஈசன் எனாதவர்க்கு இல்லையே."

    கங்கை நீரில் ஆடினால் என்ன?
    காவிரி நீரில் ஆடினால் என்ன?
    மணமும் குளுமையும் உடைய குமரியில் ஆடினால் என்ன?
    ஆங்கு பெருங்கடலின் நீரில் ஆடினால் என்ன?
    "எல்லாவிடத்தும் ஈசன் உள்ளான்" என்றெண்ணாதவர்க்கு அது கிட்டாது என்று அழுத்தமாக சொல்கிறார் திருநாவுக்கரசர்.

    “அப்போ,புராணக் கதைகளும் உண்மையில்லை என்கிறீர்களா?" என்ற பாட்டிக்கு "ஜோடிக்கப்பட்ட சிறு சம்பவங்கள்." என்ற விடையுடன் நான் ஒன்றை மேலும் சொல்ல விரும்புவது:

    புராண இதிகாசங்கள் ஒரு அதிசயமான விடயம். எல்லா காலகட்டத்திலும் மக்கள் துயரம் அடைந்து, அதன் காரணம் தேடும்போது அதை தீர்க்க ஞானிகள் சொல்லிய கதைகள்.உண்மையான காரணம் சொன்னால் பல மக்களுக்கு புரியாது. அதை எளிமைப்படுத்தி சொல்லும் போது பலருக்கு புரிகிறது.ஆனால் உண்மை மறைந்து விடுகிறது.இதுதான் இன்றைய கோலம்?

    என் சிறுவயதில் ஒரு நிகழ்ச்சி:

    கொட்டும் மழை. அதனால் விளையாட நினைத்த என் திட்டம் பாழானது.என் தந்தை ஒரு நிபுணர். அவரிடம் ஏன் மழை பெய்கிறது என்று கேட்டேன். அவர் கடல் தண்ணீர் ஆவியாவதில் இருந்து தொடங்கி ஏதோதோ சொல்ல நான் குழம்பி நின்றேன்.

    என் பாட்டி கல்விக்கூடத்தில் படிக்காதவர். அவர் என்னைக் கூப்பிட்டு சொன்னார் ,உன் அப்பனுக்கு இது தெரியாது நான் சொல்கிறேன் கேள் என்றார்.

    சுருக்கமாக சொன்னார், கடவுள் எங்கே இருக்கிறார் என்று கேட்டார்.நான் ஆகாயத்தை காட்டினேன்.(எல்லொரையயும் போல)அவர் கழிக்கும் சிறுனீரே மழை என்றார். எனக்கு எல்லாமே புரிந்து விட்டது.
    நமக்கு வரும்போதெல்லாம் போகிறோமே.அது போல கடவுளுக்கு வரும்போது மழை வருகிறது.
    மிக இலகு .

    அன்றிலிருந்து (சிறு நீரில் தலை நனைவானேன்) மழையில் விளையாடுவதில்லை. ஜுரம் ஜலதோஷம் வருவதில்லை. பாட்டிக்கு ஒரே கல்லில் இரு மாங்காய்.

    இப்படித்தான் புராணங்களும் ?

    மேலும் புராணம் என்ற சொல் தமிழ் இலக்கியத்தில் மணிமேகலையில் தான் முதன்முதலில் வருகிறது. சமயக் கணக்கர்தம் திறம் கேட்ட காதையில் வைணவவாதியைக் குறிப்பிடும் போது, "காதல் கொண்டு கடல்வணன் புராணம் ஓதினான்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    ReplyDelete