புழுவாய்ப் பிற!.............

                                                  
காற்றினிலே மிதந்து வந்த அந்தப் பேச்சொலியை நம்ப முடியாத மண்புழு, புல் தரையின் ஊடாகத் தன் தலையை உயர்த்தித் தன் உணர்விகளை அந்த ஒலி வந்த பக்கம் திருப்பியது. புழு  இனத்தின் பெயரைத் தன்னிச்சியாகப் பயன்படுத்தி, முழுப்  புழுக் குலத்தையுமே இழிவு படுத்தும் அந்த ஆவேச உரை எங்கிருந்து வருகிறது என்று அறியும் ஆவலில், தலையை சற்று அதிகமாகவே உயர்த்தியது. இத்தருணம். ஒரு இரக்கமற்ற மனித இராட்சத பாதமொன்று  அதன் மேல் அழுத்தவே, அது சட்டென்று தலையை உள்ளே இழுத்தாலும், தலைதான் தப்பியது, வால் சற்று துண்டிக்கப்பட்டது. ஆனாலும், அது தானாகவே குணமாகிவிடும் என்பதால், அந்த  வேதனையையும் பொருட்படுத்தாது, மீண்டும் உயர்ந்து  உன்னிப்பாகச்   செவி மடுத்தது.

தூரத்தில் பல்லாயிரக் கணக்கான பக்தர்களின் மத்தியில் சிவசீலர் சிவானந்தர் அவர்கள், தாம் மானிட ஜென்மம் கிடைத்த பெரும் பாக்கியம் பற்றி விளாசிக் கொண்டிருக்கிறார். அவர் தன் உரையில், ".........இறைவன் எங்களைக் கிடைத்ததற்கும் அரிய, ஆறறிவு கொண்ட மானிடராகப் படைத்திருக்கிறார். கேவலம் ஈனப் புழுக்களாகவோ  அல்லது காட்டு மனிதர், விலங்குகள் ஆகவோ படைக்காது, எங்களை  இந்த  உயர்குல  ஜீவனாகப்  படைத்தது நாம் செய்த புண்ணியமே.  இப்பிறவி அவர்  கொடுத்ததன் நோக்கம், இறைவனை வணங்கி முத்தி இன்பம் பெறுவதற்கே ஆகும். ஆதலால், நாம், ஆணவம் விடுத்து,  பேராசை நீக்கி, கொலை, களவு, பொய் விடுத்து, பிறர்மேல் அன்பு செலுத்தி,   பிற  உயிர்களை   நம்முயிராய் மதித்து, தான தர்ம கைங்கரியங்களில் ஈடுபட்டு  இறைவனின் பாதங்களை அடைவோமாக ....."

'அட கடவுளே' என்று புழு ஒலியுனர்விதனை அமுக்கிக்  கொண்டது. "யார், யார் எவரைப் பற்றி, என்னதான் கதைப்பது என்று விவஸ்தையே இல்லாமல் போய் விட்டது. கேவல குணங்கள் முழுவதும் செறிந்து  அடங்கிய மனிதன் தன்னைத் தானே புகழ்ந்து தம்பட்டம் அடிக்கிறான். விலங்குகள் கொண்டிருக்கும் அபரிதமான புலனறிவுகளில் ஒரு சிறிதளவே கொண்டுள்ள மனிதன் எந்த வகையில் சிறந்தவனாம்? "  புழு புழுங்கியது.  "ஆறறிவாம் ஆறறிவு! எம்மக்குள்ள  மெய்யறிவு அவனுக்குள்ளதா? நாம் மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை கொண்டு தினந்தோறும் அலைந்தோமா? பல் சுவை உணவு தேடி ஊர் ஊராய் திரிந்தோமா? மண்தானே நம் உணவு.  நாம் கொள்ளையும் அடிப்பதில்லை. கொலையும் செய்வதில்லை.பெரும்பதவி தேடிப்  பன்னாடும் செல்வதில்லை. பெரு மனையும்  தேவையில்லை. பெருமூர்தி கொண்டதில்லை. விலை  உயர்ந்த துணிகளும்  தான், அணிகளும்  தான் எம்மவர்க்குத் தேவை இல்லை.  மதுவகையைத்   தொட்டதில்லை.  பிறர் மாதைத்  தீண்டவில்லை. புகைப்பழக்கம்  எதுவுமில்லை. ஆணவம் கொண்டதில்லை. மாயையில் விழுந்ததில்லை. நாம் எல்லாம் ஒரு குலமே. எல்லோரும் அன்பர்களே. தாயுமானவரும், அருணகிரியாரும் கூறியவாறு எந்தவொரு  துர்க்குணமும் இல்லாது சும்மாவே இருப்பதனால் நாம் தானே நிச்சயமாய்  சிவகதியை அடைந்திடுவோம்! தம் விதியை அறியாத பெருமூளை சுமந்திருக்கும் வெறும்  மனிதன்  பிதற்றுகிறான்,  'ஈனப்புழு'  என்று உயர் இனமாம் எமை நோக்கி! “
இந்த வேளையில் ஒரு சின்ன இராட்சதம் தடியொன்றை வீசவே புழு இரண்டு பட்டது. அதையும் பொருட்படுத்தாத புழு  இறைவனை நோக்கி வேண்டியது:
"இந்தப் பேராசை கொண்ட, வெறி பிடித்த, சுயநலம் மிக்க  இந்த அரைகுறை அறிவுடை  மனித ஜெந்துகள், பற்பல பிறப்புகள் கண்டு,  கடைசியில் நற்புழுவாக  உயர் ஜென்மம் எடுத்து,  சிவகதி  அடைய  அளுள் செய்வாய் என்  இறைவா"  எனக்கூறியபடி தன இனத்தவருடன் சும்மா இருக்க  மண்ணினுள் மறைந்தது.
"பேராசை கொண்ட அரை மனிதன் நல் வாழ்க!" - புழுப்புராணம் 48 . 
.. - செ.சந்திரகாசன்

0 comments:

Post a Comment