கடவுள் என்பவர்..... கருதப்பட வேண்டியவர்




சைவ சமயத்தினர் கடவுளை  ஒரு முடிவிலா ஆற்றல் கொண்ட, முற்றிலும் உணர்ந்த, இயல்பான பாசமுள்ள, இயற்கையாகவே உணர்வு கொண்ட, இன்பம் தந்து தன்பால் ஆன்மாக்களை ஈர்த்து எடுக்கும் மகாசக்தி படைத்த தூயவர் என்று வர்ணிக்கின்றனர். இப்படியானவர், நிச்சயமாக மனித குலத்திலும் பார்க்க மிக மிக உயர்ந்த திணையினைக் கொண்டவராக இருத்தல்  வேண்டும். மிருகங்கள், பறவைகள் மற்றும் பொருட்கள் எல்லாம்அஃறிணை ஆகவும், மனித இனம் உயர்திணை ஆகவும் கொண்டால், இறைவர் (ன்?) என்பவர் நிச்சயமாக உயர்திணையிலும் பார்க்க இன்னமும் ஒரு கூடிய ஒரு தரத்தில் விளிக்கப்பட வேண்டியவர். ஆனால், இவரை நம்மோர் பொதுவாக, மனிதனிலும் குறைந்த ஒரு பொருளாக மதித்து, அவரைஅஃறிணை ப் படுத்திக் கதைப்பது வழக்கமாகி விட்டது.
முதலாவதாக, கடவுளரை  இறைவன், சிவன், விநாயகன், பிரமன், முருகன், வேலன், கந்தன், கிருஷ்ணன், இராமன் என்று 'அவன்' 'இவன்' என்று மரியாதையற்ற  'ன்' போட்டு அழைப்பது சற்று மனசுக்கு நெருடலாக இருக்கிறது. இதைவிடக் கேவலம், கோவிலில் 'சுவாமி' என்று கூறும்போது, சுவாமியை அஹ்ரிணையாக்கி, 'சுவாமி வருது' 'சுவாமி சுத்துது' ' சுவாமி வடிவாய் இருக்குது' என்று, அந்த இறைவர் உறைந்திருக்கும் கற்சிலையை தெய்வமாக உள்ளத்தில் நோக்காது, அது வெறும் கல்லாகவே பார்க்கப்பட்டு 'அது' 'இது' என்று தம்மை அறியாமலேயே கூறிக் கொள்கிறார்கள். இன்னமும் வேடிக்கை என்னவென்றால், மனிதராய் வாழும் 'சுவாமி' என்பவர்களை 'வருகிறார்' என்று கூறிக்கொண்டு, எல்லாம் வல்லவர் என்று நம்பப்படும்  இறைவர் ஒரு குறைந்த நிலையில் வைத்து நோக்கப்படுகிறார்.
சில வேற்று மொழிகளில், நாம் அஃறிணைஎன்று வைத்திருக்கும் பொருட்களைக் கூடி ஆண், பெண் என்று வகைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். உதாரணமாக இத்தாலிய மொழியில் புத்தகம், மாணவர், நாட்கள் எல்லாம் ஆண்பால். மோட்டார் வண்டிகள், காலங்கள் எல்லாம் பெண்பால். 
ஆனால், நம்  தமிழ்  மொழியில் இருக்கும் சில மரியாதைக்குரிய சொற்களை, கௌரவபபடுத்தப்பட வேண்டியவர்களைக் குறிப்பிடுவதற்கு தவறி விடுகிறோம். 'அது'  'இது' என்பன கீழ்மட்ட விளித்தல். 'அவன்' இவன்' என்பன சற்று மேலே. 'நீர்' என்றால் அதைவிட மேலே. 'நீங்கள்' என்பது இன்னமும் மேலே. 'தாங்கள்' என்றால் அரச, தெய்வீக மட்டத்தில் உள்ளவர்களை அழைக்கும்.
Written by S. Santhiragasan
ஆனால் இறைவரைக் குறிக்க இவைகளை விட உயரிய தனித்துவமான விளிச்சொல் இல்லாதவிடத்து, இனியாவது மரியாதையற்ற  'அவன்' 'இவன்' 'வருது' 'போகுது' என்று பேசுவதை விடுத்து, 'அவர்', இவர்,  'வருகிறார்', போகிறார் என்று  அழைத்து, அவரின் தொழிலுக்கு  ஏற்ற ஒரு சிறு கௌரவமாவது கொடுக்கக் கூடாதா? இப்படி ஒரு அகௌரவமான விளித்தல் நம் சமுதாயத்தில் வேரூன்றி இருப்பது யாருக்காவது புலப்பட்டிருகிறதா?
சிந்திக்காது சித்தத்தை சிதைத்தவர்கள் சிக்கலின்றிச் சிறப்படைந்து சிரிப்பதற்கும், சிவனாரைச் சேர்வதற்கும் சீரான சினமற்ற சிந்தனைக்கு!
  🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺


4 comments:

  1. ஆனால் நாங்கள் வெள்ளைக்காரன் கொண்டுவந்ததனால் ஜேசுவை ஆண்டவர் என்றுதான் அழைப்போம்.

    ReplyDelete
  2. இந்த விஷயத்தை ஒருத்தரும் இதுவரை சொன்னதில்லை!

    ReplyDelete
  3. It is good that some has some time to think. Giving lot of information and looking for justification. Is there anything called God???

    ReplyDelete