தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?] பகுதி:34


[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] 
"பண்டைய சுமேரியாவில் பெண்களின் பங்கு"

பண்டைய சுமேரியாவில் பெண்களின் உரிமையும் பங்கும்,அவர்களின் சமுதாய நிலமை  அல்லது அந்தஸ்துவைப் பொறுத்து மாறுபடுகின்றன.அரச குடும்ப பெண்கள் கணிசமான சக்தியை அல்லது பங்கை அரசியல்,பொருளாதார முறையில் கொண்டு இருந்தாலும் பொது மக்கள் அவ்வாறு இல்லை.அவர்கள் இலக்கிய,அரசியல் வாழ்க்கையில் ஈடுபடுவதில்லை.

மத குரு அல்லது அரச குடும்பத்தில் உள்ள உயர் அந்தஸ்து பெண்கள் எழுதவும் படிக்கவும் கூடியதாக இருந்தார்கள். இந்த உயர் வகுப்பு பெண்களுக்கு சில நிர்வாக அதிகாரமும் கொடுக்கப்பட்டிருந்தன.கீழ் குடியில் பிறந்த பெண்கள் பிள்ளை வளர்ப்பிலும் குடும்பத்தை ஓட்டுவதிலும் பங்கு ஆற்றினார்

மெசொப்பொத்தேமியா பெண்கள் ஆணுக்கு நிகராக கருதப்படவில்லை.அது மட்டும் அல்ல நகரத்தின் நிலையை பொருத்தும் காலத்தை பொருத்தும் அவை மாறுபட்டன.ஆரம்ப காலத்தில் பெண்கள் அதிகமாக மதிப்பளிக்கபட்டதுடன் பல உரிமைகளையும் கொண்டிருந்தனர்.உதாரணமாக,முன்னைய மெசொப்பொத்தேமியா சமுகம், மூத்தோர்கள் சபையால்["council of elders"] ஆளப்பட்டதாகவும்,அந்த அவையில் ஆணும் பெண்ணும் சரிசமமாக இருந்தனர் எனவும், எனினும் காலப்போக்கில், பெண்களின் நிலமை[அந்தஸ்து] குறைந்து ஆண்களின் நிலமை கூடியது என "Thorkild Jacobsen"[Thorkild Jacobsen (7 June 1904 – 2 May 1993) was a renowned historian specializing in Assyriology and Sumerian literature.]னும் மற்றவர்களும்
ஆலோசனை கூறுகிறார்கள்.மேலும் மிகவும் பலம் வாய்ந்த பெண் தெய்வங்கள் அங்கு வழிபடப்பட்டன . அது மட்டும் அல்ல சில நகரங்களில் பெண் தெய்வங்களே முதன்மை தெய்வமாகவும் இருந்தன. உதாரணமாக,உருக் நகரத்தின் காப்பாளராக பெண் தெய்வம் ஈனன்ன /இஷ்தார்[Inanna/Ishtar] இருந்தார்.இவர் போர்,காதல் தெய்வம் ஆகும்.பொதுவாக பல அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்து என்வென்றால்,எல்லா அரசர்களும்(ensis or ens) அல்லது பெரும்பாலான அரசர்கள் ஆண்கள் ஆகும்.என்றாலும் சிலவேளை தற்செயலாக பெண்ணுக்கு "என்"["ஏண்"] [EN = (king/ruler)] என்ற பட்டம் வழங்கப்பட்டு உள்ளது ஏண் உடு அன்னா[Enheduanna] அதற்கு சாட்சியாக உள்ளார்.இவர் ஒரு பெண்குரு,எழுத்தர்,பெண் கவிஞர், இளவரசி ஆவார்.இவர் முதன்மை குருவாக கி மு 3000 ஆண்டளவில் பணியாற்றி உள்ளார்.மேலும்  சார்கோன் (Sargon) எனும் பேரசனின் புதல்வியும் ஆவார்.ஈனன்னா தெய்வத்தினை தனிப்பட்ட முறை யில் போற்றும் பல பாடல்கள் உட்பட ஒரு இலக்கியத் தொகுப்பை ஏண் உடு அன்னா விட்டுச் சென்றுள்ளார்.

மேலும் பெண் பாடகர்கள் ஆலயத்தையும் அரண் மனையையும் ஊடுருவி இருந்தார்கள்.ஆலயத்தில் இவர்கள் இசை குருக் களாக[musical priestesses] இருந்தார்கள்.அப்பொழுது ஆலயத்தில் பண்ணிசைத்து பாடுதற்கு  முன்னணி பொறுப்பாளராகவும் யாழ் போன்ற இசை கருவியை[ lyre] வாசிப்பவராகவும் இருந்தார்கள்.மேலும் இவர்கள் ஓரளவாவது புனித பாலியல் சடங்குடன்[ sacred sexual rituals] தொடர்புடையவர்களாகவும்  காணப்பட்டார்கள். சுமேரியாவில் இப்படியான சடங்குகள் பொதுவானவை ஆகும்,புகழ் பெற்ற சங்க இலக்கியத்தில் படம் பிடித்து காட்டப்பட்டு உள்ள பண்டைய தமிழ் சமுகத்தை நீங்கள் ஆய்வு செய்தால், அவர்களும், சுமேரியன் சமுகம் மாதிரி,ஆண் சார்ந்த சமுகம் என ஆணித்தரமாய் உடனடியாக முடிவு எடுப்பீர்கள்.
 
"வினையே ஆடவர்க்கு உயிரே வாண் நுதல்
மனை உறை மகளிர்க்கு ஆடவர் உயிரென
நமக்கு உரைத்தோரும் தாமே
அழாஅல் தோழி அழுங்குவர் செலவே."(குறுந்தொகை -135)
[NB:மனை உறை மகளிர் – house residing women]

என்று கூறுகிறது பழைய சங்க இலக்கியம். இதன்  பொருள் என்ன தெரியுமா? ஆண்மக்களுக்குத் தொழில்தான் உயிர் என்பது இதன் பொருள்.அது  மட்டும் அல்ல பெண்ணை "மனை உறை  மகளிர்" என மேலும் வருணிக்கிறது.அதாவது சங்ககாலக் குடும்ப அமைப்பில் ஆணைச் சார்ந்தே பெண் இருந்தாள்.என கூறுகிறது.அதாவது,வீட்டின் நீங்கி வெளியே சென்று பொருளீட்டுதல்.போர் உடற்றுதல் முதலிய
 வினைகளை ஆடவரே  மேற்கொள்ள வேண்டும்.மகளிர் வீட்ட ளவில் தங்கி, வீட்டுவினைகளை மட்டுமே ஆற்ற வேண்டும் என இப் பாடல் குறிப்பிடுகின்றது.மனையுறை மகளிர் என்னும் தொடர்,மனையில்  தங்கியிருப்பதற்கு மட்டுமே மகளிர் உரிமை படைத்தவர்கள் என்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. இக்கருத்தை,மேலும் புறநானூறு - 314:“மனைக்கு விளக்காகிய வாள்நுதல் கணவன் முனைக்கு வரம்பாகிய
 வென்வேல்  நெடுந்தகைஉறுதி செய்கின்றது. அதாவது எம் தலைவன், இல்லத்திற்கு விளக்குபோல் விளங்கும் ஒளி பொருந்திய நெற்றியையுடைய பெண்ணின் கணவன்.அவன், போரில் தன் படைக்கு எல்லையாக  நின்று காக்கும் வெற்றி பொருந்திய வேலையுடையவன் என்கிறது.

அது மட்டும் அல்ல புகழ் பெற்ற திருக்குறள் கூட  தனது குறள்  67,69,70 இல்:"தந்தை மகற்காற்றும் நன்றி  அவையத்து முந்தி இருப்பச் செயல்" [67] அதாவது தந்தை தன் மகனுக்கு செய்யவேண்டிய நல்லுதவி அவர்களை அறிஞர்கள்  அவையில் புகழுடன்
 விளங்குமாறு ஆக்குதலே ஆகும் என்கிறது.அப்படியே  "ஈன்ற பொழுதினும் பெரிது உவக்கும்-தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்[69] எனவும்  "மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான்  கொல்எனும் சொல்[70] எனவும்  கூறுகிறது.அதே நேரத்தில்,அதே திருக்குறள் ஒரு பெண்ணின் கடமையை குறள் 51 இல் இப்படி கூறுகிறது: "மனைத் தக்க மாண்பு உடையள் ஆகி, தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத்
 துணை." என்கிறது அதாவது, இல்லறத்திற்குத் தக்க  ஒழுக்கத்துடன், நற் குணங்களுடன், பெருமையுடன, தன்னை மணந்து கொண்டவரின் பொருள்  வளத்திற்குத் தக்கவாறு, இல் வாழ்வை நடத்துபவளே, அவளின் கணவனின் வாழ்க்கைக்குத் துணை ஆவாள்  என்கிறது.மேலும் குறள் 55 இல்:"தெய்வம்  தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை" அதாவது,கணவனையே தெய்வமாகத் தொழுகின்ற பெண்கள் மேகத்தைப்
 பார்த்து 'பெய்' என ஆணையிட்டால் மழை உடனே பெய்யும் என்று ஒரு போடு போடுகிறது.

சங்க இலக்கியத்தில் எப்படி எப்படி ஒரு ஆண்ணின் பங்கு வர்ணிக்கப் பட்டு உள்ளது என்பதை நாம் பார்க்கும் போது,நாம் காண்பது:அவன் அறிஞர்கள் அவையில் ஒரு கல்விமானாக இருக்கிறான்,போர் களத்தில் ஒரு வீரனாக இருக்கிறான், பொருள் சம்பாதிப்பதில் ஒரு வணிகராக இருக்கிறான்.மேலும் அவன் உயர் கல்விக்காக,இராணுவ சாகச பயணத் திற்காக,தூதராக வீட்டை விட்டு வெளியிடம் போகிறான்.ஆனால் ஒரு
 பெண்ணின் கடமை இயற்கையாகவே வீட்டிற் குள்ளும் குடுப்பத்திற்குள்ளும் அமைவதை காண்கிறோம்.மேலும் சங்க இலக்கியம் அறிவு, நிறை, ஓர்ப்பு, கடைப்பிடி ஆகியன ஆண்பாலர்க்கு உரிய குணங்களாக வழங்கப்படும் எனவும்.அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகிய நான்கும் ஒரு பெண்ணிற்கு இருக்க வேண்டிய அடிப்படை குணங்கள் எனவும் பொதுவாக கூறுகிறது.அதாவது ஆண் அறிவையும் பலத்தையும் பெற உரிமை உடையவன் எனவும்,அதே நேரத்தில்,பெண் ஞானம் குறைந்தவளாகவும்[ஆகவே முட்டா ளாகவும்],பலம் குறைந்தவளாகவும்[ஆகவே வலுவற்ற வளாகவும்] கூறுகிறது.

மேலும் சங்க இலக்கியத்தில் பல சொற்கள் பெண்ணை குறிக்க கையாண்டு உள்ளனர்.அவைகளில் பேதை,மடந்தை, மடவார் போன்றவை ஒரு முட்டாளை/மூடரை குறிக்கிறது.மறுபுறத்தில் ஆண்,ஆண்மை உடன் தொடர்பு உடையது. ஆண்மை என்பது வீரம்,துணிவு, தைரியம் என பொருள் படும்.மனை, மனைவி, இல்லாள் என்பவை வீடுடன் தொடர்பு உடையவை.கணவன் என்பது,கண் + அவன் என பொருள் படும்.அதாவது மனைவிக்கு கண் ஆனவன் ஆகும்.பெண்
 புத்தி பின்  புத்தி என்ற பழ மொழியும், தையல் சொல் கேளேல் என்ற ஆத்திசூடி63 ம் இதை மேலும் தெளிவு படுத்துகிறது. மனைவியின் புத்தி கேட்கும் ஆணை,பொதுவாக இன்னும் பொட்டையன் அல்லது பெண்டாட்டி தாசன் என அழைப்பதை கேள்விபட்டு இருப்பீர்கள்.இனி கீழே தரப்பட்ட சொற்களை கவனியுங்கள்.1]அறிஞன்,2]சான்றோன்,3]வைத்தியன், 4] ஆசான் 5]அமைச்சன்,இவைகளுக்கு பெண்பால் சொற்கள் உண்டா என
 பாருங்கள்.இப்படித்தான் சங்க காலத்திலும் பெண்களின் நிலைமை பொதுவாக இருந்து உள்ளது.

விவசாயம் வளர்ச்சி அடையும் போது அங்கு உடல் பலம் தேவை பட்டது.அது ஆண்களிடம் நிறைய இருந்தது பெண்களின் அவசியத்தை குறைத்தது.ஆகவே பெண்கள் சிறு சிறு பண்ணைகளை  நடத்தியதுடன் வீட்டுக் கால் நடைகளில் இருந்து பெரும் பால் மூலம் தயிர்,பாலாடைக் கட்டி போன்றவற்றின் உற்பத்தியிலும் ஈடு பட்டார்கள். பண்டைய சுமேரியா சிற்பங்கள் ஆண்கள் மந்தைகளை வைத்துப் பராமரிப்பதையும் பால் கறப்பதையும் காட்டு கிறது.அது போல் பெண்கள் பால் கடைதலையும் காட்டுகிறது.அத்துடன் தானியங்களை அரைப்பதற்கும் ஆடை நெசவிற்கும்  பொறுப்பாக இருந்தார்கள்.

பிற்காலத்தில் பெண்கள் வீட்டுடன் இருந்தாலும் ஆரம்ப காலத்தில் அல்லது பண்டைய சுமேரியாவில் அவர்கள் சந்தைக்கு கம்பளி வாங்க போக முடியும்.அது மட்டும் அல்ல கழுதை ஓட்டுநர்களுடன்  தமது 
 புடைவைகளை  எடுத்து செல்ல பேரம் பேசக்கூடியதாகவும் இருந்தது. பெண்கள் உடமை வைத்திருக்கவும் ,தமது கணவர் இல்லாத நேரத்தில் சட்டம் தொடர்பான விடயங்களில் ஈடு படவும் முடியும்.
பகுதி 35 வாசிக்க →
Theebam.com: தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?] பகுதி :35.
ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக →Theebam.com: தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?]பகுதி:01:

3 comments:

  1. கந்தையா தில்லைவிநாயகலிங்கம்Sunday, November 02, 2014

    தீபம் வாசகர்களுக்கு ஒரு வேண்டு கோள்:

    தீபத்தில் ஒவ்வொரு வெள்ளியும் வரும் "தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?]" என்ற தமிழ் ஆங்கில கட்டுரையை அப்படியே சொல்லுக்கு சொல் மாறாமல் அதே படங்களுடன் அது தனது கட்டுரையாக என கூறிக்கொண்டு வெவ்வேறு தலைப்புகளில், உதாரணமாக தமிழர்களின் வரலாறு.../History of Tamil people... என 2 அல்லது 3 அல்லது 4 பகுதிகளை ஒன்று சேர்த்து இது வரை 11 பகுதிகளாக எமது 32 பகுதிகளை தொகுத்து வெளியிட்டு உள்ளார். இவரின் face book :Yalarivan Jackson Jackie & e mail :jacksan jackie ;ஆகும்.அது மட்டும் அல்ல தனித்தனியாகவும் முதல் 16 பகுதிகள் வெளியிடப்பட்டு உள்ளது.பல தடவை இப்படி செய்ய வேண்டாம் ,"தீபத்திற்கு நன்றி கூறி" வெளியிடும் படி கூறியும் இது வரை ஒரு பயனும் இல்லை.ஆகவே தான் இதை உங்கள் அனைவருக்கும் தீபத்திற்கும் தாழ்மையாக தெரிவித்து கொள்கிறேன்.

    ReplyDelete
  2. -சந்திரகாசன்Monday, November 03, 2014

    திருடர்கள் ஜாக்கிரதை! ஆராய்ந்து, தேடி எடுத்து அழகாக எழுதியவருக்கு நன்றி சொல்லாது விடுவது சுத்த அநாகரிகம்!

    அறிவுபூர்வமான தொடர். தொடரட்டும்.

    பண்டைய கலாச்சாரங்களில் நல்லவற்றை மட்டுமே பொறுக்கி எடுத்துப் பெருமைப் படுபவர்களே அதிகம். தற்போதைய சூழலுக்கு ஒத்துக் கொள்ளாத பலவற்றையும் எங்கள் பழைய பெரியோகள் சொல்லியும்தான் வைத்துள்ளார்கள்.

    ReplyDelete
  3. தமிழர் பழம் பெருமை பேச வெளிக்கிட்டவர்களால் அடுத்தவர் தங்களை பெருமைப் படக் கூடியதாக நாகரிகமாக நடந்து கொள்ள முடியவில்லையே!சிறுமைத்தனம் கொண்ட இவர்கள் பழம் பெருமை பாடத் தகுதியற்றவர்கள்.

    ReplyDelete