ஈ.வே.ரா. பெரியாரின் இருமுகம்



இந்தியாவின் புகழ் வாய்ந்த ஈ. வே. ரா. பெரியார் மிகச் சிறந்த சமூக ஆர்வலர்.  இவரின் கடவுள் மறுப்பு பிரசாரம், பகுத்தறிவு வாதம், சுய மரியாதை இயக்கம், பெண் அடிமை விடுதலை , சமுதாய விழிப்புணர்வு, சாதி ஒழிப்பு போராட்டம் என்பன மூலம் இருளில் மூழ்கி இருக்கும் அறியா பாமர மக்களை, அறிவூட்டித் தட்டி எழுப்பினார் என்பது யாவரும் அறிந்ததே.

ஆனாலும், இவருக்கு ஒரு மறு பக்கமும் இருக்கின்றது. தமிழையும், தமிழ் மக்களையும்  அவர் கொச்சைப் படுத்தினார் என்று கண்டனங்களும் பலர் தெரிவித்துக் கொண்டு இருப்பதனால், அவரின் பல நற் செயல்களுக்கும் மாசு படர்வது தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.

இவர் தமிழ் பகுதியில் பிறந்த ஒரு தெலுங்கர். அந்தக் காலம் தொட்டு தெலுங்கர்கள் தமிழ் பகுதிகளை ஆண்டு வந்த படியால் இவர்கள் தமிழ் மொழியில் பேசுவது வழக்கம் (தெலுங்கு சோழர்கள் போல).

இவர் திராவிட நாடு கேட்டு வாதாடினார் என்று பெருமைப் பட்டார்கள். திராவிட நாடு தான் கேட்டார்; தமிழ் நாடு அல்ல. என்றால்தானே திரும்பவும் அரசுடமை தெலுங்கரிடம் போகும். வெள்ளையர்கள் இந்தியாவை உருவாக்கி இந்திக்காரரிடம் விட்டுச் சென்றார்கள்; பாக்கிஸ்தான் என்று முஸ்லிம்களிடம் கொடுத்துச் சென்றார்கள். பெரியார் தமிழ் நாட்டினை தெலுங்கரிடம் எடுத்துக் கொடுக்க முயற்சித்தார் என்பதுதான் உண்மை.

கடவுள் நம்பிக்கை, கடவுளை வணங்குவது என்றால் மூடப் பழக்கம் என்று போதித்தார். பிராமணர்களுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தார். கோவில் சிலைகளை எடுத்து, உடைத்து நொறுக்கினார். இந்து நூல்களை எரித்துச் சாம்பல் ஆக்கினார். ஊர், ஊராகச் சென்று மத எதிர்ப்புப் பிரசாரங்கள் செய்தார்.  

ஆனால், இவ்வளவு எதிர்ப் பிரச்சாரங்களும் இந்துக் கடவுள்களுக்கும், இந்து பூசகர்களுக்கும் எதிராக மட்டும் தான். அந்நிய மதங்கள் மீது கை வைத்தது மிகவும் குறைவு. இதன் காரணத்தினால், எதோ அந்தச் சமயங்கள் எல்லாம் சிறந்தது என்று எண்ணி, பல இந்துக்கள் அம்மதங்களுக்குள் இழுக்கப்படுவதற்கு காரணியாக இருந்திருக்கிறார்.

இவர் இந்தித் திணிப்பை எதிர்த்தது தமிழை வளர்க்க அல்ல; ஆங்கிலத்தை வளர்த்து, வெள்ளையனைக் குஷிப்படுத்தவே என்று குற்றம் சாட்டுகிறார்கள். 'தமிழ்' என்ற சொல்லோடு எந்த ஒரு அமைப்பையும் அவர் உருவாக்க விரும்பவில்லை. அவருக்கு 'திராவிடம்' தான் அவர் உயிரில் இருந்தது.

இவர் பெண் விடுதலைக்காக மிகவும் போராடினார். இளம் வயது பெண்களை திருமணம் செய்வதைக் கண்டித்தார். சீதனம், சாதிக் கொடுமைகளினால் பெண்கள், அடிமைப்படுத்தப் படுவதையும், கொலை செய்யப்படுவதையும் நிறுத்தப் போரிட்டார்.  விதவைகள் மறுமணம்  செய்ய வேண்டியதை வலியுறுத்தினார். அவர்களின் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தினார்.

ஆனால், இவர் தனது 17 ஆவது வயதில் 13 வயது பெண்ணை மணந்தார். அவர் இறந்ததும், தனது 72 ஆவது வயதில் 26 வயது பெண்ணை மணம் செய்தார். அவரின் கொள்கைகளினை மீறியது  இந்த செயல். காரணம் கூறினார்,  தனது சொத்துக்கள் இயக்கத்திற்குப் பாதுகாப்பாகப் போய் சேருவதற்கான ஒரு வழி இது என்று.

தமிழில் சில சீர் திருத்தங்களைக் கொண்டு வந்தார். ஆனால், என்றென்றும் அழியாது இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி என்றார். திருக்குறள் என்பது ஒரு மலம் என்றார். சிலப்பதிகாரம், தொல்காப்பியம் எல்லாம் ஆரிய அடிமைகளின் படைப்பு என்றார்.

தமிழர் மரபுகள், சம்பிரதாயங்கள், இலக்கிய படைப்புகள்  என்னவாக இருந்தாலும் ஒவ்வொருவர் பார்வையிலும் பல/சில சரிகளும், பல/சில தவறுகளும் காணப்படலாம்; அதைக் கண்டு கருத்து  நாமும் சொல்லலாம், பெரியாரும் சொல்லலாம். பழையனவென்றால் எல்லாம் சரியென்றோ, புதியனவென்றால் எல்லாம் பிழை என்றோ சொல்லிக் கொள்ள முடியாது.

அரசன்மார்களை உச்சி குளிரப் பண்ணி பரிசு பெறலாம் என்ற நோக்கத்தில் ஏழைப் புலவர்கலால் பாடப்பட்ட  பழையனவற்றினுள் பல பொய்கள் இருக்கலாம் என்பதை மறுக்க முடியாது. அதற்காக எல்லாமே குப்பைகள் என்று அவர் சொல்லும் வாதம் ஏற்றுக்கொள்ள இயலாது.

அதே போல, பெரியாரின் கூற்றுகளும், நடத்தைகளும் 100 வீதமும் சரியாய் இருக்க வேண்டும் என்று நாமும் நினைக்கப் படாது; பெரியாரும் அதை எதிர்பார்க்கக் கூடாது.

எவை என்றாலும், எப்போதென்றாலும், என்ன சொன்னாலும் தற்கால நடைமுறைக்கு ஒத்துப் போகும் விடயங்களை மட்டும் எடுத்துக் கொண்டு மீதமுள்ளவகைகளை தூக்கி எறிந்து விட வேண்டும்.
                            ✍→செ.சந்திரகாசன் 
📖📖📖📖📖📖📖📖📖📖📖📖📖📖📖📖📖📖📖📖

3 comments:

  1. பெரியவர்கள் சொல்வதெல்லாம் மற்றவர்களுக்கு மட்டுமே தமக்கல்ல






    ReplyDelete
  2. எம் ஆர் ராதாவும் ,தமிழ்நாட்டில் தான் ஒரு மத எதிப்பு வாதியாகக் காட்டிக்கொண்டவர் ,மலேசியாவில் ஒரு நிகழ்வு ஒன்றில் பேசும்போது இஸ்லாமிய மதத்தினை வாயாறப் புகழ்ந்து போற்றினார். அங்கு அவர் கொள்கை தவறினார்.

    ReplyDelete
  3. வாழ்ந்து அனுபவித்து பின் சமுதாயத்திற்கு நல்வழி கூறியவர்கள் சித்தர்கள். இவர்களில் 'உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்' என்று பாடிய திருமூலர் முதல் சிவவாக்கிய சித்தர் , கொங்கண சித்தர் என பலர் உதாரணத்துக்கு உரியவர்கள்.அவர்கள் மட்டுமே பெரியோர் எனப்படுவர்

    ReplyDelete