'நாமும் வாழ்வும்' கனடாவிலிருந்து ஒரு கடிதம்....


                                                     05-10-2019




அன்புள்ள அப்புவுக்கு,    

உங்களின் நினைவுகளை தாங்கியவண்ணம் நான் இங்கு நலமுடையேன்.அதுபோல் உங்கள் சுகமும் ஆகுக.
உங்கள் கடிதம் கிடைத்தது.அனைத்தும் அறிந்தேன்.
 அப்பு, நான் ஊரில் வாழும் காலத்தில்  "வார்த்தைகளை  சிந்துவது சுலபம்.ஆனால் அவற்றினை திருப்பிப் பொறுக்கி எடுத்துவிட முடியாது."என்று பலமுறை என்னிடம் கூறியுள்ளீ ர்கள். அதனை உணரும் வாய்ப்பு அண்மையில் கிட்டியது.
அப்பு,அது என்ன நடந்தது என நீங்கள் அறிய ஆவல்படுவது என்னால் உணர முடிகிறது.நடந்தது,இதுதான்.

நான் வேலை செய்யும் அலுவலகத்தின் அருகில் நீண்ட காலமாக வேலை செய்யும் அத்தமிழர்  அவரைக் காணும் போதெல்லாம் ஏனோ தெரியவில்லை,எனக்கு அவர்மேல் இனம்தெரியாத வெறுப்புணர்வினால் கோபம் வரும். அவர் ஏதாவது கூறினால் அவர் மீது ஒரு இனம்தெரியாத எரிச்சல் வரும். ஆனால் சந்தர்ப்பம் கிடையாததனால் அவரை எதிர்த்துப் பேசாது பொறுத்துக் கொண்டேன்.

ஒருநாள்,4.00 மணிக்கு வேலை முடிந்து வெளியில் வரும்போது வெளியில் வெப்பநிலை -40. தாங்கமுடியாத குளிர்..கைவிரல்கள்,கால்கள் விறைத்து வலிக்கும் குளிரது. காரினை எடுக்க வந்து பார்த்தபோது ஒரு ரயர் காற்றுப் போய் இருந்தது. அக் கடுமையான குளிரில் நான் திகைத்து நிற்கநான் யாரை எதிரியாக நினைத்தேனோ அவர் தாமாக வந்து என்னுடைய மேலதிக ரயரை மாற்றி உதவி செய்தார்.
குற்ற உணர்வுடன் நன்றி கூறிய நான் அன்று முழுவதும் இச்சம்பவத்தினை எண்ணிப் பார்த்தேன். நான் அவரை அனாவசியமாக ஏசியிருந்தால் அவ்வார்த்தைகளை உதவிக்காக  வாபஸ் பெற்றிருக்க முடியாது. வீணாக ஒரு எதிரியினை சம்பாதிப்பதுடன் அவசரத்திற்கு அவர் உதவியினை பெற்றுக்கொள்ள முடிந்திராது. அதேவேளை நாங்கள் இருவரும் அன்றிலிருந்து நண்பர்களாகி விட்டோம்.

அப்பு நீங்கள்  கதையோடு கதையாக "ஒரு உறவினை  இழப்பது சுலபம்.ஆனால் அதைப் பெற்றுக்கொள்ள நாங்கள் கடுமையாக நீண்ட காலம் உழைக்கவேண்டி இருக்கிறது" என்று நீங்கள்  கூறக்  கேட்டிருக்கிறேன். அந்த ஒன்று, பணமாகவோ, நற்குணமாகவோ, நற்பெயராகவோ,  நல்ல நண்பனாகவோ அல்லது வேறு உறவுகளாகவும் இருக்கலாம் தானே! அதனை என் அனுபவத்தின் மூலம் உணர்ந்து கொண்டேன்.

அப்பு,காலம் காலமாக கணவனுக்காக உழைத்த செல்லாட்சி மாமிகனடா வந்து சிலவருடங்களாகிய  நிலையில் சின்னத்துரை மாமாவை விவாகரத்து செய்து தனிமையில் வாழுகிறா.காரணம்  கேட்டால் தேத்தண்ணிசாப்பாடிலையிருந்து மருந்துக்குளிசை வரைக்கும் அந்த மனுஷனுக்கு  மனுஷனுக்கு இருக்கிற இடத்திலை குடுத்துக்கொண்டு இருக்கவேணுமாம். ஒரு கோயில்,குளமெண்டு அங்காலை இங்காலை போக வழியில்லையாம். எப்படியிருக்கிறது மாமாமியின் மாற்றம். எல்லாம் வெள்ளிக்காசு செய்யும் வேலை.

இந்த நாட்டில வந்து சும்மாதானே குந்தி இருக்கும் மாமா கொஞ்சம் எண்டாலும்,உடம்பை அசைச்சிருக்கலாம் தானே. உடம்புக்கும் பயிற்சியாய் இருந்திருக்கும். வருத்தங்களும் குறைஞ்சிருக்கும். மருந்துகளும் குறைஞ்சிருக்கும்.

சிலர் இப்படித்தான், சிலர் வெளிநாட்டில் பலகாலம் வாழ்ந்தாலும் ஊரில் இருந்த மாதிரி மனுசி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், எல்லோரிடமும் அதிகாரம் செலுத்தவேண்டும் அவர்கள் தங்களுக்கு கீழ் அடங்கி வாழவேண்டும் என்ற எதிர்பார்ப்பினால் தாங்கள் வாழவேண்டிய காலத்தினைத் தொலைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
அப்பு,உங்கள் சுகத்தினையும் ,தேவைகளையும் எழுதுங்கள்.
                   வேறு புதினமில்லை.
இப்படிக்கு
அன்பு மகன்
செ.மனுவேந்தன் 📧

1 comments:

  1. கந்தையா தில்லைவிநாயகலிங்கம்Saturday, February 16, 2013


    "வார்த்தைகளை சிந்துவது சுலபம்.ஆனால்அவற்றினை திருப்பிப் பொறுக்கி எடுத்துவிட முடியாது."

    ஆமாம் நண்பரே . வார்த்தைகளை வெளிப்படுத்துவதற்கு முன்பு அது மற்றவரை எப்படி காயப்படுத்தும் என்று யோசித்த பின்பு தான் பேச வேண்டும்

    நாம் கோபத்தில் எரிச்சலில் அவசரத்தில் அள்ளிக் கொட்டிய வார்த்தைகளை திரும்ப பெற முடியுமா? முடியாதில்லையா ? அப்படியென்றால் நாம் வெளிப்படுத்தும் வார்த்தைகளுக்கு எப்படி ஒரு சக்தி இருக்க வேண்டும் ? இதை நாம் உணர வேண்டும் .

    தவறை உணர்ந்து நாம் கேட்கும் மன்னிப்பும் அதற்கு நாம் கூறும் காரணங்களும் ஏற்றுக்கொள்ளப்படுமே தவிர மறக்கப்பட மாட்டாது.அது மனதின் ஒரு மூலையில் ஒதுங்கி இருக்கும் .ஒரு சந்தர்ப்பத்தில் அது மீண்டும் வெளி வரலாம் ?ஆகவே அது ஒரு முடிவு அல்ல .இதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் .

    அது மட்டும் அல்ல ,மன்னிப்பதும் கூட மன்னிப்பவர்களின் பெருந்தன்மைதானே யொழிய உண்மையாக காயத்தின் வலி குறைந்தமையால் அல்ல .காயத்தின் வலி தற்காலிகமாக மறைக்கப் பட்டுள்ளது என்பதே உண்மை .

    ஆகையால்.... பேசுவதற்கு முன்பே யோசிப்போம் . யோசித்தப்பின் பேசுவோம்.அத்துடன் வள்ளுவர் கூறுவது போல் "இடம் பொருள் ஏவல்" அறிந்து பேசுவோம்.

    "சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும்
    இம்மையும் இன்பம் தரும்."-குறள் எண்: 98

    கலைஞர்
    சிறுமைத்தனமற்ற இனியசொல் ஒருவனுக்கு அவன் வாழும் போதும், வாழ்ந்து மறைந்த பிறகும் புகழைத் தரக்கூடியதாகும்.

    மு. வரதராசனார்
    பிறர்க்குத் துன்பம் விளைக்கும் சிறுமையிலிருந்து நீங்கிய இனிய சொற்கள் மறுமைக்கும் இம்மைக்கும் வழங்குவோனுக்கு இன்பம் தரும்.

    சாலமன் பாப்பையா
    பிறர்க்கு மனத்துன்பம் தராத இனிய சொல் ஒருவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் இன்பம் தரும்.

    ஆகவே இனிய சொற்க்ள் இன்பத்தை வழங்கும் என்பதை உணர்ந்தவர் அதற்கு மாறாக எதற்காகக் கடுஞ் சொற்களைப் பயன்படுத்த வேண்டும்?ஒரு சந்தர்ப்பம் கிடைத்து, அப்படி கடுஞ் சொற்களை பாவித்திருந்தால் ஒரு நல்லவரை இழந்திருக்க நேர்ந்திருக்கும் .அல்லது அதற்கு மாறாக அவரின் பெரும் தன்மையை அறிய நேர்ந்திருக்கும் , ஏனென்றால் அவர் அப்படி பேசிய பின்பும் கட்டாயம் அந்த உதவியை செய்திருப்பார் என்றே என்கிறேன்.


    "இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
    வன்சொல் வழங்கு வது."-குறள் எண்: 99
    கலைஞர்
    இனிய சொற்கள் இன்பத்தை வழங்கும் என்பதை உணர்ந்தவர் அதற்கு மாறாக எதற்காகக் கடுஞ் சொற்களைப் பயன்படுத்த வேண்டும்?.

    மு. வரதராசனார்
    இனிய சொற்கள் இன்பம் பயத்தலைக் காண்கின்றவன், அவற்றிற்கு மாறான வன்சொற்களை வழங்குவது என்ன பயன் கருதியோ?.

    சாலமன் பாப்பையா
    பிறர் சொல்லும் இனிய சொற்கள், இன்பம் தருவதை உணர்ந்தவன், பிறர்க்கும் தனக்கும் துன்பம் தரும் கடும் சொற்களைப் பேசுவது என்ன பயன் கருதியோ?.

    நன்றி

    ReplyDelete