நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா? [சீரழியும் தமிழ் சமுதாயம்] /பகுதி: 01
இன்று பலரால், பல ஊடகங்களால் பேசப்படுவது மனித சமுதாயம் எங்கே போகிறது? இந்த போக்கை அல்லது சீரழிவை நாம் தடுக்க முடியாதா?, அவைகளுக்கான காரணங்கள் தான் என்ன என்ன ? இந்த அழிவை நோக்கிய பயணம் இன்று ஏற்பட்டதா? இல்லை அது என்றோ தொடங்கி ஆனால் இன்று தான் அதன் எதிரொலியை நாம் உணருகிறோமா? ஏன் நாம் இதுவரை மௌனமாக இருந்தோம்?, இப்படி பல பல கேள்விகள் எம்மில் இன்று எழுகின்றன.
  இவைகளுக்கு எம்மால் இயன்ற பதில்களை தேடி அலச முன்பு, நாம் இரண்டு விடயங்களை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். ஒன்று சமுதாயம் என்றால் என்ன?, வீழ்ச்சியடைகிறது அல்லது சீரழிகிறது என்றால் என்ன?

ஒரு சமுதாயம் [Society / குமுகாயம்] என்பது தனிப்பட்ட ஒரு இனங்கள் ஒன்றாக வாழும் ஒழுங்காக உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு எனலாம். உதாரணமாக உறுப்புகள் பல ஒன்று சேர்ந்து உடல் அமைவது போல, ஒரு இனங்கள் பல சேர்ந்து உருவாகுவதே சமுதாயம் ஆகும். எனவே சமுதாய கட்டுக்கோப்பிற்குள் வாழ்க்கை நெறிகள் அல்லது ஒழுக்கங்கள், கட்டுப்பாடுகள், நம்பிக்கைகள், மூடநம்பிக்கைகள், இப்படி பல பல இருக்கும். அதேவேளை சமூகம் (Community] என்பது ஒரே இடத்தில் வாழும் ஒரு மக்கள் தொகுதியையோ அல்லது பொதுவான சிறப்பியல்புகளை கொண்ட ஒரு மக்கள் கூட்டத்தையோ குறிக்கும். என்றாலும் சமூகம், சமுதாயம் ஆகிய இருசொற்களையும், பெரும் பாலும், ஒரே பொருளைக் குறிக்கப் பயன்படுத்துவதும் வழக்கம். ஆனால் அவை உண்மையில் வேறுபட்டவை. அதாவது  சமுதாயம் (Society) என்பது மனித இனத்தின் சமூக - பொருளாதார - அரசியல் ஈடுபாடுகளினால், தொடர்புகளினால் இயங்கிவரும் ஓர் அமைப்பாகும். இவ்வமைப்பு ஒரு குறிப்பிட்ட நாகரிக அமைப்பிற்குள் இயங்கி வருகிறது என்றும் சமூகவியலாளர் கூறுவர். இன்னும் ஒரு முக்கிய பண்பையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும், அதாவது உயிர் இனங்களில் மனிதன் மட்டுமே ஒரு மாறிவரும் சமுதாயத்தில் [evolving societies] வாழக்கூடியது. ஏனென்றால் சுற்றுச்சூழல் நிலைமைகளின் மாற்றங்களுக்கு மட்டும் அல்ல, மாறிவரும் பொருளாதார நிலைமைகளுக்கும் [evolving economic conditions] ஏற்றவாறும் தனது சமுதாயத்தின் கட்டமைப்பை சரிபடுத்தக் கூடியது.

ஆதி மனித சமுதாயம் ஒரு வேட்டுவ உணவு திரட்டியாக [hunter-gatherer] இருந்தனர். தங்களை சுற்றி இருக்கும் நிலத்தில் கிடைக்கும் உணவிலேயே இவர்கள் தங்கி இருந்தனர்.
 எனவே இவர்கள் அதிகமாக உறவினர்களை கொண்ட சிறிய குழுக்கள் குழுக்களாக [kinship group] இருந்தனர். தொழிலாளர் பிரிவு [Division of labour] இங்குதான் முதலில் ஏற்பட்டதாக நாம் கருதலாம். வேட்டையாடுதல் ஆண்களாலும், உணவு தயாரித்தல், ஆடை மற்றும் குழந்தை வளர்ப்பு பெண்களாலும் நடைமுறைபடுத்தப்பட்டன. விதைகளை நாட்டல் மற்றும் கால்நடை வளர்ப்பு [seed planting and animal husbandry] அறிமுகம் செய்யப்பட்டதும், மனித சமுதாயத்தின் அமைப்பு மாறியது.
அவர்கள் இப்ப, பல குடும்பங்கள் ஒன்று சேர்ந்த ஒரு கிராம குடியிருப்புகளில் [village settlements] வாழத் தொடங்கினார்கள். இவைகளுடன் தொடர்புடைய சமூக அமைப்பான விவசாய சமுதாயம் [agricultural society], பல்வேறு வடிவங்களை இம்மாற்றங்களால் ஏற்படுத்திக் கொண்டது. இங்கும் தொழிலாளர் பிரிவு தொடர்ந்தது. உதாரணமாக ஆண்கள் நிலத்தை உழுது பயிர்கள் பயிரிட்டனர், பெண்கள் வீட்டு வேலைகளை கவனித்தனர்.
இவைகளை தொடர்ந்து, தொழில்நுட்பத்திற்கும் சமுதாயத்திற்கும் இடையிலான, தொடர்புகளின் தாக்கத்தால்  நகர்ப்புற சமுதாயம் [urban society] ஒன்று எழுச்சி பெற்றது. இதனால் மேலும் பல தொழிலாளர் பிரிவு எற்பட்டது. அதுமட்டும் அல்ல மக்கள், முன்பு இருந்ததை விட, அளவு அல்லது தொகை கூடிய சமூகங்களில் /குழுக்களில் வாழ்த் தொடங்கினர். அதாவது பெரிய நகரங்கள் உருவாகின, ஆனால், அதன் உள்கட்டமைப்புகளை தொடர்ந்து பராமரி ப்பதற்கு, அந்த பெரிய நகரங்களுக்கு சிறப்பு நிர்வாக திறன்கள் மேலும் தேவைப் பட்டது. இது வர்க்கங்கள் [classes] உள்ளடக்கிய சமூக அடுக்குகளை [பாகுபாடுகளை / படிநிலைகளை /stratification] ஏற்படுத்தியது எனலாம். அத்துடன் தொழில் நுட்ப கண்டுபிடிப்பு ஒரு வர்த்தக வாய்ப்புகளையும் அவர்களுக்கு வழங்கியது. என்றாலும் பல பல காரணங்களால், வர்த்தக நடவடிக்கைகளில் ஆண்களே பெரும் பாலும் ஈடுபட்டு, செல்வங்களை / பணத்தை வீட்டிற்கு கொண்டு வந்தனர். எனவே நகர்ப்புற சமுதாய வளர்ச்சி, பெண்கள் ஆண்களில் பொருளாதாரத்திற்கு சார்ந்து இருக்கும் ஒரு நிலைமையை [economic dependence] அதிகரித்தது. அடிப்படை சமூக உறவான [Basic social relationship] திருமணம், செல்வத்தையும் பலத்தையும்  அடைவதற்கான ஒரு கருவியாகவும் இங்கு பெருபாலும் மாறியது.


18 ஆம் நூற்றாண்டின் தொழில்துறை புரட்சி, நகர்ப்புற சமூகத்தில் மேலும் மாற்றத்தை ஏற்படுத்தியது. தொழில் மயமாக்கல் மேலும் மேலும் முன்னேற்றம் அடைய, அதிகமான மக்கள் தமது நிலத்தை விட்டு வெளியேறவும் தொழிற்சாலைகளில் வேலை தேடுவதற்கும் தள்ளப்பட்டார்கள். இதனால் பெண்கள் முழுமையான பொருளாதாரத்திற்கு, தொழிற்சாலையில் வேலை செய்யும் ஆண்களை மேலும் சார்ந்து இருக்க நேரிட்டது. அது மட்டும் அல்ல, தொழிற்துறை செயல்பாடுகளில் பங்கு பெறாத முதியவர்கள் [பழைய தலைமுறை /The older generations] குடும்பத்திற்கு ஒரு சுமையாகி விட்டது, இவர்களை "முதியோர் இல்லங்களுக்கு" அனுப்புதலும் அதிகரிக்கத் தொடங்கின. 20 ஆம் நூற்றாண்டில் இந்த நிலைமை மீண்டும் மாறியது. பெண்கள் வேலைக்கு போகத் தொடங்கியதும், மற்றும் நவீன முதலாளித்துவ தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும் [The development of modern capitalist technology] பெண்களின் சுதந்திரத்திற்கு- ஒரு உண்மையான சாத்தியத்திற்கு- வழிகோலியது. நவீன முதலாளித்துவம், குடும்பங்களை சிறிய சாத்தியமான உறவினர் அலகுகள் மட்டும் கொண்டவையாகவும் [smallest possible kinship units], உதாரணமாக ஒற்றை பெற்றோர் குடும்பங்கள் மற்றும் இரட்டை பெற்றோர் குடும்பங்கள் [single parent or both parents] போன்றவையாகவும், மற்றும் நிதி ரீதியாக சுயாதீன மானவையாகவும் மாறின. எனவே கூட்டு குடும்பம் [Joint family] இல்லாமல் அதிகமாக போய்விட்டது. எனவே அவர்கள் தமது குறைந்தபட்ச நாளாந்த மனவெழுச்சி களுக்கு ஆதரவாக [emotional support] கைத் தொலை பேசி, கணனி போன்றவைகளை அதிகமாக பாவிக்க தொடங்கினர். இப்படித்தான் சமுதாயம் வளர்ச்சி அடைந்து இன்றைய நிலையை அடைந்தது எனலாம்.

இந்த தனி மனிதர்களை உள்ளடக்கிய சமுதாயம் இன்றைய நிலைக்கு வளர்ச்சி அடைவதற்கு கட்டாயம் அவர்களுக்கு ஏதாவது தூண்டுகோல் இருந்திருக்கும். அவை சமூக நன்மைகளை தரும் தூண்டுகோல்களாகவோ, காரணிகளாகவோ அல்லது தீமைகளை தரும் காரணிகளாகவோ கூட இருக்கலாம். ஒரு விளக்கை சரியாக தூண்டும் போது அது பிரகாசமான ஒளியை தந்து இருளை போக்கும், அதே சமயம் அந்த விளக்கை தவறாக தூண்டினால் அந்த நெருப்பானது பெரும் அழிவை கூட ஏற்படுத்தும் வலிமை கொண்டது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. நம்மை சுற்றி நடக்கின்ற நிகழ்வுகள்தான், இப்போதெல்லாம் ஒரு தனி மனிதனை தூண்டி வழிநடத்துகிறது என்பதை மறுப்பதற்கு இல்லை. எனவே ஒரு சமுதாயத்தைத் தூண்டி சரியான வள்ர்ச்சி பாதையில் அழைத்து செல்வதில் ஊடகங்கள் பங்கு இணையற்றது. எனவே மக்களுக்கு உற்சாகம், நம்பிக்கை கொடுக்க கூடிய செய்திகளை முன்னிலைப் படுத்தி செய்தி வெளியிடுங்கள். இதனால் மக்கள் மனம் உற்சாகபடும், ஒரு நம்பிக்கை பிறக்கும் சமுதாயம் சரியான பாதையில் கண்டிப்பாக தூண்டபடும் என்பது என் நம்பிக்கையாகும். அதே வேளையில் மக்களாகிய நாமும் சற்று பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும், இன்று நம் கையிலே எண்ணற்ற தகவல்கள், வாட்ஸ் அப், டுவிட்டர், முகநூல் போன்ற ஊடகங்கள் மூலம் எதிர்மறை எண்ணங்களை தூண்டும் செய்திகளை பரப்புகிறது. ஆகவே உங்கள் மனதிற்க்கு ஒப்பாத ஓரு செய்தி அல்லது தகவலை அவற்றின் உண்மை நிலை அறியாமல் பரப்பாதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். “எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கயிலே, அது.... அன்னை வளர்ப்பிலே...” என்றான் ஒரு கவிஞன். ஆகவே மனிதர்களை உள்ளடக்கிய சமுதாயமும் அப்படியே என்பதை நாம் கட்டாயம் உணரவேண்டும். அப்பத்தான் நாம் ஒரு அன்னை போல் இருந்து ஒரு வலிமையான சமுதாயத்தை கட்டமைக்க முடியும். அதன் வீழ்ச்சியில் இருந்து அல்லது சரிவில் இருந்து அதை நிமிர்த்த முடியும். அதுவே எம் முக்கிய இன்றைய கடமை என்று எண்ணுகிறேன். 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

பகுதி: 02  தொடரும்......
⌛⌛⌛⌛⌛⌛⌛⌛⌛⌛⌛⌛⌛⌛⌛⌛⌛⌛⌛⌛⌛⌛

0 comments:

Post a Comment