நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா? [சீரழியும் தமிழ் சமுதாயம்]/ பகுதி: 03


கணியன் பூங்குன்றனார், 2300 ஆண்டுகளுக்கு முன் தன் புறநானூறு பாடல் 192 இல் "நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை, துன்பமும் ஆறுதலும் கூட மற்றவர் தருவதில்லை, சாதல் புதுமை யில்லை; வாழ்தல் இன்பமென்று மகிழ்ந்தது இல்லை. வெறுத்து வாழ்வு துன்பமென ஒதுங்கியது மில்லை, வானம், மின்னல் வெட்டும் மழையாய் குளிர்ந்த துளிகளைப் பெய்ய, கல், மண் ஆகியவற்றைப் புரட்டிக் கொண்டு பெருகி வரும் பேராற்று நீர்வழி ஓடும் தெப்பம் போல நமது வாழ்க்கை என்கிறார். அப்படித்தான் நமது வாழ்வும், இன்று பலவித கேடுதல்களை, தீமைகளை புரட்டிக் கொண்டு இன்னும் இந்த நவீன, நான்காவது தொழில்துறை புரட்சியாக பெருகி வரும் மின்னணு யுகத்தில் மிதந்து கொண்டு அதன் வழி போகிறோம். ஆனால் எவ்வளவு நாளுக்கு அது தனது பக்க விளைவாக விட்டு செல்லும் சீரழிவிற்கு இடையில் நாம் மிதந்து போக முடியும்? இது தான் இன்றய முதன்மை கேள்வியும் கூட.   
மனித இனத்தின் வாழ்க்கை ஓயாத மாற்றத்திற்கு உரியது. மாற்றத்திற்கு முக்கிய காரணம் காலத்தின் பரிணாம வளர்ச்சி. மாற்றங்களை பொதுவாக எவரும் விரும்புவர். மாற்றங்கள் வளர்ச்சிக்குத் துணை; அரண். ஆனால் அவை வளர்ச்சி பொருந்திய வாழ்க்கை முறையை தரக் கூடியவையாக இருக்கவேண்டும். இந்த உலகம் எப்படி இருந்தது என்று வரலாற்று ரீதியாக எவரும் கூறலாம், பெருமை படலாம். ஆனால், இந்த உலகம் எப்படி இருக்கவேண்டும் என்பதே இன்று எமக்கு உள்ள பிரச்சனை. "சென்ற காலத்தின் பழுதிலாத் திறமும் இனி எதிர்காலத்தின் சிறப்பும் இன்று எழுந்தருளப் பெற்ற பேறிதனால் எற்றைக்கும் திருவருளுடையேம்"  என்று திருஞானசம்பந்தர் மதுரைக்கு எழுந்தருளியபோது பாண்டிய நாட்டின் அமைச்சராக இருந்த குலச்சிறை நாயனார் திருவாக்காக்க காண்கிறோம். சென்ற காலத்தில் பழுது இன்றி நின்ற இயல்பும், எதிர்காலத்தில் வரும் சிறப்புடைய திறமும் என்கிறது. அதாவது, சென்ற காலத்தின் சீரிய திறனை சிந்தையில் நிலைநிறுத்துபவர்களால்தான் எதிர்காலத்தை பெருமிதத்துடன் எதிர்கொள்ள இயலும் என்பதை சொல்லாமல் சொல்கிறது. அதே போல பாரதிதாசனும், "புதியதோர் உலகம் செய்வோம்” என்றான். நாமும் அளவு கடந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி பெற்று இன்று வீட்டிலிருந்த படியே உலகம் முழுவதையும் சுற்றி வர இணையத்தளத்தின் மூலமாக வழி சமைத்தோம். இதன் மூலமாக நன்மைகளும் அதே அளவில் சமுதாயத்தை சீரழிக்கும் தீமைகளும் உள்ளன என்பதை அலசி ஆராய்ந்து பார்க்கும் பக்குவமும், மனப்பான்மையும் அனைவரிடமும் ஏற்பட்டுவிடாது. இதனால், முக்கியமாக ஒவ்வொரு நாட்டின் தூண்கள் எனப்படும் இளைஞர்கள் இவற்றின் மூலம் எந்தளவு உயர்ந்திருகின்றனரோ அதே அளவில் சமுதாயத்தில் சீர்கேட்டும் உள்ளனர் என்பதை புள்ளி விபரங்கள் காட்டுகிறது. இலட்சிய பாதையில் செல்லவேண்டிய இளைஞர்கள் வழி தவறி சமுதாய சீர்கேடு என்னும் புதைமணலை தேடி அறியாமல் வாழ்க்கையினை இழக்கின்றனர். இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்ல பல வாய்ப்புக்கள் இருந்தாலும் அவர்களை எளிதில் அடையக்கூடிய இணையத்தின் மூலமாகவே அதிக அளவில் தவறான பாதையை நாடுகின்றனர். அன்றைய காலங்களில் தொழில்நுட்ப சாதனங்கள் அதிக அளவில் இல்லாத காரணத்தினால் இவர்களை கண்காணிப்பது எளிதாகவே இருந்தது. ஆனால் இவற்றின் அபார வளர்ச்சியினால் அவர்களை கண்காணிப்பது அரிதாகிவிட்டது. எனவே எதிர்காலத்தின் சிறப்பும் பெற்று, புதியதோர் உலகமும் பெற்றதோடு நிற்காமல் பக்க விளைவாக சமுதாயத்தை சீரழிக்கும் தீமைகளையும் பெற்று விட்டோம் என்பதே இன்றைய உண்மையும் பலரின் குமுறல் ஆகும். 
இன்றைய நவீன யுகம் தொழில் நுட்ப வளர்ச்சி என்ற மரத்தின் நுனியில் அதாவது அதன் உச்சாணிக் கொம்பில் இருக்கிறது. ஆனால் ஒழுக்கம் பண்பாடு போன்ற விடயங்களில் மிக மிக பின் தள்ளி  காணப்படுகிறது. நமது தொழில் நுட்ப வளர்ச்சி நமக்கு ஒழுக்கத்தை பண்பாட்டை கற்றுத் தரவில்லை. மாறாக நமது வளர்ச்சி குறுகிய மனப்பான்மையை, அவசரத் தன்மையை, அதிவேக வளர்ச்சியை, குரோதத்தை, தன் மேல் அதீதமான நம்பிக்கையை வளர்த்திருக்கிறது. இதனால் அதிகமாக, இரக்கத்தன்மை இல்லாதொழிந்து தனக்காக, தன் தேவைக்காக யாரையும் வெறுக்கவும், வேரறுக்கவும் தொடங்கி விட்டது மனித இனம். வேர்களை வெறுக்கும் விழுதுகளாய்! பெற்றோர்களை மதிக்காத ஒரு தலைமுறை இன்று தலையெடுத்திருக்கிறது. இவர்கள் பெற்றோர்கள் தங்களுக்கு அறிவுரை செய்வதை வெறுக்கிறார்கள். குறிப்பாக மாணவர் சமுதாயம் தான் செய்த தவறுகளுக்காகக் கூட ஆசிரியர்கள் தங்களைக் கண்டிப்பதை விரும்புவதில்லை. தன்னை ஹீரோவாக நிலை நிறுத்திக் கொள்ள எதையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள். பாடசாலைகளில், வாழ்வியல் பண்புகள் குறித்து சரியாக கற்பிக்கப்படுவதில்லை. சமுதாயத்தில், ஒழுக்கம் நிறைந்தவர்கள் போற்றப்படுவதில்லை. தீய ஒழுக்கம் உள்ளவர்கள் உயர்த்தி பிடிக்கப்படுகின்றனர்.
 "தெருவோர மதகில் இருந்து,
ஒருவெட்டி வேதாந்தம் பேசி,
உருப்படியாய் ஒன்றும் செய்யா,
கருங்காலி தறுதலை நான்
 ...... 
ஊருக்கு கடவுள் நான்,
பாருக்கு வழிகாட்டி நான்,
பேருக்கு புகழ் நான்,
பெருமதிப்பு கொலையாளி நான்
 ......
குருவிற்கு குரு நான்,
குருடருக்கு கண் நான்,
திருடருக்கு பங்காளி நான்,
கருவிழியார் மன்மதன் நான்."

என ஒரு முறை நான் கவிதை எழுதியது ஞாபகம் வருகிறது. இன்றைய இளைஞர்களுக்கு எதையும் நின்று நிதானித்து யோசிக்க அவகாசமில்லை. சரியான புரிதல்களும் தெளிவான சிந்தனைகளும் காலம் கடந்த பின்னரே கவனத்துக்கு வருகின்றன. நற்சிந்தனை எனும் விதைகளை நட்டால் நல்ல கனிகளை உண்ணலாம். விஷ விதைகளை துாவி வைத்தால், விஷத்தையே நம் அடுத்த தலைமுறைக்கும் விட்டு செல்கிறோம். விஷமா, அமிர்தமா? எல்லாம் நம் கையில் தான் இருக்கிறது.

சமுதாய சீரழிவு  குடும்ப சீரழிவு இவற்றுக்கு மூலகாரணம் ஒரு தனி மனிதன் தன் கட்டுப்பாடற்ற ஒழுக்ககேடான முறையற்ற வழியில் வாழ்வது ஆகும். கம்பராமாயணம்/ பால காண்டம்/ நாட்டுப் படலத்தில் பாடல்  38 இல் "பிலம் சுரக்கும் பெறுதற்கு அரிய தம்குலம் சுரக்கும் ஒழுக்கம் குடிக்கு எலாம்.", அதாவது சுரங்கங்கள் நல்ல இரத்தினங்களைக் கொடுக்கும்; பெறுவதற்கு அரியதாகிய குலம் ஒழுக்கத்தைக் கொடுக்கும் என்கிறார் கம்பர். மேலும் 53 ஆம் பாடலில் "உண்மை இல்லை, பொய் உரை இலாமையால்; வெண்மை இல்லை, பல் கேள்வி மேவலால்", அதாவது பொய் பேசுவோர் இல்லாமையால் உண்மையின் பெருமை தெரிய வழியில்லை; கேள்வி ஞானம் மிகுந்திருப்பதால் அங்கு அறியாமை சிறிதுமில்லை என்று கோசல நாட்டு சமூகத்தை புகழ்கிறார். என்றாலும் அந்த கோசல நாட்டு மன்னர் இராமன் தன், மனைவியை தீக்குளிக்க செய்ததும், மீண்டும் கர்ப்பணி மனைவியை பன்னிரண்டு ஆண்டுகள் வனவாசம் அனுப்பியதும், அதன் பின் மீண்டும் ஒரு முறை  தீயில் குளிக்க கட்டாயப் படுத்த அவள் பூமிக்குள் பாய்ந்து தற்கொலை செய்ததும் இந்த கோசல நாட்டில் தான். இங்கு நாம் ஆணாதிக்கத்தையும் ஒற்றை பெற்றோரையும் கூட காண்கிறோம். இங்கு அமிர்தத்தையும் காண்கிறோம், விஷத்தையும் [நஞ்சையும்] காண்கிறோம்.

ஆமாம், பல கலாச்சார மற்றும் சமூக மதிப்புகள் அல்லது விழுமியங்கள் காலப்போக்கில் இன்று பெருமளவு சிதைந்துவிட்டன, மேலும் மக்களின் இதயங்களில் இவைகளின் குடியிருப்பும்  குறைந்து குறைந்து போகின்றன. நாம் நேர்மையாக சிந்தித்தால் அல்லது பார்த்தால், இதைப் பற்றி நிறைய உண்மைகளை நாம் காணமுடியும். இந்த குமுறல்கள் எம் சொந்த மனதில், நம்மைச் சுற்றியுள்ள மக்களின் மனதில் இன்று பெரிதாக ஒலிக்கிறது. ஆனால் ஒன்று மட்டும் உண்மை, அவைகளில் பல இன்று நேற்று எம்மத்தியில் தோன்றியவை இல்லை. இந்த மின்னணு [electronic] யுகத்திற்கு ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளிற்கு அல்லது அதற்கும்  முன்பே ஆரம்பித்து விட்டது. இனி அந்த சீரழிவுகள் அல்லது குமுறல்கள் என்ன என்னவென்று விரிவாக பார்ப்போமா ? அதற்கு முன் நான் முன்பு எழுதிய பாடல் ஒன்றும் ஞாபகம் வருகிறது. அதை கீழே தருகிறேன்: 

"பூமியில் வந்ததில் இருந்து போகும் வரை,வஞ்சகி
உனக்கு ஏனடி பாசாங்கு,ஏதுக்கடி போலி வாழ்வு?
மனிதனின் உண்மை தேவையை,பாசாங்கு உணராது வஞ்சகி
பொய் நம்பிக்கை விதைத்து இன்பத்தை கெடுக்கும், பெண்ணே!"

"அறிவியலா? ஆன்மிகமா? எதில் மனிதன் அதிபதி, வஞ்சகி?
விஞ்ஞானத்தால் விரக்தியை உண்டாக்கவா,பேரழிவை உண்டாக்கவா
மனித நேயமற்ற நீர்க்குமிழி விவகாரங்களை கட்டுப்படுத்தவா,வஞ்சகி?
கட்டாயம் அது நிரந்தர நித்திய ஆன்மாவை அல்ல,பெண்ணே! "

"உண்மையில் மனிதன் பெரும் கடலல்ல,ஒரு துளியே, வஞ்சகி ?
கற்றது கையளவு ஆனால் நீயோ உலகளவு தெரியும் என்கிறாய்
உன்செயலே மனிதனின் குறுகிய மனப்பான்மையை காட்டுது,வஞ்சகி?
உன் அறியாமை,நீ உண்மையில் குருடியே என்கிறது, பெண்ணே!"

"மனிதனின் இறுதித் தீர்ப்பு,நிலையற்ற இறப்பே,வஞ்சகி ?
நீ நீர்க்குமிழி வாழ்வை விட்டு அங்கையே போகிறாய்
நீ முடிகின்ற ஒன்றில் வல்லுநராகி, எதைசாதிப்பாய், வஞ்சகி ?
உனக்கு மரணம் காத்திருக்கிறது என்பதை அறியாயோ, பெண்ணே!"

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

பகுதி: 04  தொடரும் …………..

0 comments:

Post a Comment