சித்தர் சிந்திய வாக்கியம் -அவைகளில் நான்கு/ 10

சிவவாக்கியம்-091

 

உடம்பு உயிர் எடுத்ததோ உயிர் உடம்பு எடுத்ததோ
உடம்பு உயிர் எடுத்தபோது உருவம் ஏது செப்புவீர்
உடம்பு உயிர் எடுத்தபோது உயிர் இறப்பது இல்லையே
உடம்பு மெய் மறந்து கண்டு உணர்ந்து ஞானம் ஓதுமே!!!


உடம்பானது உயிர் எடுத்து வந்ததாஅல்லது உயிரானது உடம்பு எடுத்துக் கொண்டு வந்ததாஉடம்புதான் உயிர் எடுத்ததென்றால் உயிர் உயிர் வந்த பிறகுதானே உடம்பே தோன்றுகிறதுஉடம்பில் உள்ள உயிருக்கு உருவம் ஏது சொல்லுங்கள். உடம்பும் உயிரும் கூடிய மனிதன் இறந்த பின்னும் அவன் ஆன்மா அழிவது இல்லையே. ஆகவே இவ்வுடம்பு உண்மையல்லஎன்பதை உணர்ந்துஆன்மாவே மெய் என்பதை அறிந்து உடம்பில் மெய்ப் பொருளாக இறைவன் இருப்பதைக் கண்டு தன்னை மறந்த தியான நிலையிலோ இருந்து உணர்ந்து கொண்டு ஞானம் போதியுங்கள்.

 *******************************************

சிவவாக்கியம்-099

கடலிலே திரியும் ஆமை கரையிலே ஏறி முட்டையிட்டுக்
கடலிலே திரிந்தபோது ரூபமான வாறு போல்
மடலுலே இருக்கும் எண்கள் மணியரங்க சோதியை
உடலுலே நினைத்து நல்ல உண்மையானது உண்மையே!

கடலில் வாழும் ஆமையானது கரையில் ஏறி முட்டையிட்டு மணலைப் போட்டு மூடிவிட்டு கடலுக்கே சென்று விடும்.  பின் கடலில் திரிந்து கொண்டே நினைவாலே அடைகாக்கும். அதனால் முட்டைகள் பொறித்து அவை ரூபமாக வெளிவரும். அதன் பின்னரே தாயுடன் சேர்ந்து ஆமை குஞ்சுகளும் கடலில் திரயும். அவை ரூபம் அடைவதற்கு தாய் ஆமையின் நினைவே காரணமாய் இருந்தது போல்நம் உள்ளமாகிய தாமரையில் இருக்கும் மணியாக விளங்கும் அருட்பெருஞ் சோதியான ஆண்டவனை உடலுக்குள்ளேயே  மெய்ப் பொருளாக இருப்பதை எண்ணி நினைத்து தியானியுங்கள்.

 *******************************************

சிவவாக்கியம்-113

மலர்ந்த தாது மூலமாய் வையகம் மலர்ந்ததும்
மலர்ந்த பூ மயக்கம் வந்து அடுத்ததும் விடுத்ததும்
புலன்கள் ஐந்தும் பொறிகலங்கி பூமிமேல் விழுந்ததும்
இலங்கலங்கி நின்ற  மாயம் என்ன மாயம் ஈசனே!!!!


மூலமான வித்திலிருந்து இயங்கும் நாத வித்து எனும் தாதுக்களால் இந்த பூமியும் உயிர்களும் தோற்றியது. இவ்வுலக வாழ்வில் வரும் இன்ப துன்பங்களின் அனுபவங்களால் இறைவனை அடுத்தும், விடுத்தும் வாழ்ந்து, மலர்ந்த பூக்கள் உதிருவது போல் வாழ்வு முடிந்ததும் ஐம்புலன்களும் பொறிகளும் கலங்கி பூமியில் மரணமடைகின்றனர். பிறப்பு, இறப்பு எனும் இவ்வுலக மாயையில் சிக்கி உழலும் மனிதர்கள் உடம்பில் நீ நின்று ஆட்சி செய்யும் மாயம் என்ன மாயம் ஈசனே!!!!

*******************************************

சிவவாக்கியம்-117

வீடெடுத்து வேள்வி செய்து மெய்யரோடு பொய்யுமாய்
மாடு மக்கள் பெண்டிர் சுற்றம் என்றியிருக்கும் மாந்தர்காள்
நாடு பெற்ற நண்பர் கையில் ஓலை வந்து அழைத்த போது
ஆடு பெற்றதவ்விலை பெறாது காணும் இவ்வுடல்.


உண்மையினையும் பொய்யினையும் பேசி சம்பாதித்து புது வீட்டைக் கட்டி யாகங்கள் செய்து குடி புகுந்து செல்வம், மக்கள், மனைவி, சுற்றத்தினர் என்று மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கும் மாந்தர்களே! உயிர் போகும் ஓலையின்படி உங்கள் உயிரை கொண்டு போக எமன் வந்து அழைத்துப்  போகும்போது அவையெல்லாம் கூட வருமா?ஒன்றுக்கும் உதவாமல் உதிர்ந்துபோகும் இலைகள் கூட ஆடு, மாடுகள் தின்பதற்காவது உதவும். ஆனால் இந்த உடலைவிட்டு உயிர்போய் விட்டால் ஒன்றுக்கும் உதவாது போகும் இவ்வுடல் என்பதை உணர்ந்து உங்கள் உயிரில் உள்ள ஈசனைக் கண்டு தியானியுங்கள்.

 

******** அன்புடன் கே எம் தர்மா.

0 comments:

Post a Comment